ராமன் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படுவாரா?
ஆகஸ்டு 5இல் அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அந்த விழாவில் பங்கு கொண்டு அடிக்கல்லை நாட்டுகிறார்.
மதச் சார்பற்ற அரசில் பிரதமர் ஒருவர் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாமா என்பது ஒரு முக்கியக் கேள்வியே! அதைவிட சிந்திக்க வேண்டிய ஒன்று - இந்த நிகழ்வுக்காக மத்திய அரசு ரூ.300 கோடியும், உ.பி. மாநில அரசு ரூ.250 கோடியும் ஒதுக்கியுள்ளன என்பது திடுக்கிட வைப்பதாகும்.
மதச்சார்பற்ற அரசின் பணம் - பல மதங்களைச் சேர்ந்த, சேராத மக்களின் பணம். குறிப்பிட்ட ஒரு மத நிகழ்வுக்குச் செலவு செய்யப்படுவது சட்டப்படி சரியானதுதானா?
நாங்கள் நினைத்ததுதான் சட்டம் - வைத்தால் குடுமி - வழித்தால் மொட்டை என்ற மனப்பான்மை ஜனநாயக நாட்டின் மதச்சார்பற்ற ஆட்சியின் அணுகுமுறையாக இருக்க முடியுமா!
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்களுக்குரிய வழிபாட்டுத் தலத்தை ஒரு பட்டப் பகலில் பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்கள், சங்பரிவார்கள், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட காவிக்காரர்கள் கூடி நின்று பகிரங்கமாக இடித்த நிகழ்வு, உலக நாடுகள் மத்தியில் தலை குனிய வைத்த வெட்கக் கேடான நிகழ்வாகும் - வன்முறைத் தாண்டவத்தின் உச்சக் கட்டமாகும்.
அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இந்நாள்வரை தண்டிக்கப்படவே இல்லை - இப்பொழுதுதான் விசாரணைப் படிக்கட்டுகளை மிதிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதைவிட மாபெரும் அதிர்ச்சியும், அநாகரிகமும் என்னவென்றால், அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றவர்கள் எல்லாம் பிற்காலத்தில் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் வர முடிந்தது என்றால், இது நாடுதானா? சட்டமும், நீதிமன்றமும் சாய்ந்த தராசாக நொடித்தது என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டும் தேவையோ!
அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் - இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் மீண்டும் கட்டித் தரப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று?
சட்டத்தையும், ஒழுங்கையும் கேவலமாக மதிப்பவர்கள்தான் இந்த நாட்டின் பெரிய மனிதர்கள் என்றால் சட்டத்தை மதிக்கும் மனோபாவம் சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுமா என்பது முக்கிய கேள்வியாகும்.
நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போவதற்கும், குற்றச் செயல்கள் சர்வசாதாரணமாக தலை தூக்குவதற்கும் - கை முதல் கொடுத்தது - இந்தப் பாபர் மசூதி இடிப்பேயாகும்.
சோமநாதபுரம் ஆலயத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட காலத்தில் எவ்வளவோ அழைப்பு விடுத்தும் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கடைசி வரை மறுத்து விட்டார் என்பது மதச் சார்பற்ற தன்மைக்கான மகத்தான கல்வெட்டாகும்.
ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று வெளிப்படையாகப் பேசுகிறவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்நிலையில், நேரு போன்ற பெருமகனாரின் செழுமையான சிந்தனையை எதிர்பார்க்க முடியுமா?
இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான கேள்வி உண்டு. சோமநாதபுரம் கோயில் கும்பாபிஷேகத்துக்குப் பிரதமர் நேரு செல்லவில்லையென்றாலும், குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டார். ஜனாதிபதி ஆனநிலையில் கங்கையில் பார்ப்பனர்களின் காலைக் கழுவியவர் அவர் என்பது தெரிந்ததே.
அன்று சோமநாதபுரம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்தை அழைத்ததுபோல, நடக்கவிருக்கும் ராம ஜென்மப் பூமி அடிக்கல் நாட்டு விழாவுக்கு இன்றைய குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் அழைக்கப்படுவாரா என்று நாடே எதிர்பார்க்கிறது.
ஏற்கெனவே வடமாநிலங்களில் இரு கோயில்களில் குடியரசுத் தலைவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தடுக்கப்பட்டதும், அவமதிக்கப்பட்டதும் நினைவில் இருக்கலாம்.
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? நாடே எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment