*தந்தை பெரியார்
தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே! வணக்கம்.
இன்றைய தினம் "இந்து மதமும் புத்தர் கொள்கையும்" என்ற பொருள் பற்றி நான் விளக்கி கூறப் போவதில் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில், இதுவரை அவர்கள் இதனுடைய உண்மையை அறியாதவர்களாவும் அறிந்து கொள்ள முடியாதபடி சிலரால் செய்யப்பட்டவர் களாக இருப்பதாலும் இப்பொழுது நான் அவ்வுண்மை களைப் கூறும் பொழுது அதிசயமாகத்தான் இருக்கும். அன்றியும், பெரும்பாலும் பொதுத் தொண்டில் ஈடுபட்டு உண்மையான முறையில் நடந்து உண்மையை எடுத்துக் கூறுகிறவர்கள் ஓரிருவர்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் யாவரும் இதை கை முதலாகக் கொண்டு, இதனால் லாபம் வருகின்ற வழியிலேயே செல்ல ஆசைப்படுவதால் உண் மையை எடுத்துக்கூற முடியாதவர்களாக இருக்கிறார்கள். மற்றும் சிலர், நாம் ஏன் இதைப் பற்றிக் கூற வேண்டும். நம்முடைய காரியம் மட்டும் நன்முறையில் நிறைவேறினால் போதும் என்று அவரவர் களுடைய நலனை மட்டும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வித மனப்பான்மை கொண்டவர்களும் உங்களிடையே பிரச்சாரம் செய்வதால் நீங்கள் எவ்வித உண்மையும் அறிய வாய்ப்பின்றிப் போய் விடுகிறது.
ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் என் கழகத்தின் துணை கொண்டு நான் எவ்வித லாபத்தையும் எதிர்பார்ப்பவனல்ல. மக்களிடம் உண்மையை மறைத்துக் கூறி அவர்களிடம் நான் நல்ல பிள்ளை என்ற பெயர் வாங்கி புகழடைய வேண்டும் என்று கருதுபவனல்ல. எனவேதான், நான் எதையும் உள்ளதை உள்ளபடி அடிப்படையை அலசி ஆராய்ந்து அதில் கண்டவற்றை எடுத்துக் கூறத் தக்க வசதி யேற்படுகிறது. அதன் பயனாகத்தான் ஜாதித் துறையிலும், மதத் துறையிலும், கடவுள் துறையிலும், சமுதாயத் துறை யிலும் நான் ஆதாரபூர்வமாகக் கண்ட உண்மைகளை பச்சையாக வெளியிடத் துணிகிறேன்.
இன்றைய காலம் அறிவியல் காலமாகவும், புரட்சிஇயல் காலமாகவும் இருந்தும் கூட, நான் கூறுகிற இவற்றைக் கேட்டும் அறிவிற்குப் பொருந்தாத பழமையைக் கைவிட வும், மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் மறுப்பவர் களும் இருக்கிறார்கள். காட்டுமிராண்டிக் காலத்தில் பழமை யான பொருள்களை கண்காட்சி சாலைகளில் பார்க்க வேண்டிய காலம் இது! மனதிலும் சிந்திக்க முடியாத அநேக அதிசய அற்புதங்கள் தோன்றுகிற காலம் இது! இன்னும் காலம் செல்லச் செல்ல ஆச்சரியப்படும்படியான விதவித மான புதுப்புது எண்ணங்கள், கண்டுபிடிப்புகள், புதுப்புது சாதனங்கள் ஏற்படப் போகின்றன. ஆகவே, பழமையில் உள்ள குறைகளை நீக்கி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
மற்றும் தோழர்களே, புத்த மதம் என்று கூறுவது சரியல்ல. ஏனென்றால், மதம் என்பதற்கு என்ன அடிப் படைத் தத்துவமென்று பார்க்கும்போது யாரோ ஒருவர் கூறியதை, அது புத்திக்கு ஏற்றதா? இல்லையா? என்று சிந்திக்காமல் அவரிடம் இருக்கும் பக்தியைக் கொண்டு நம்பிவிட வேண்டும் என்பதுதான். இதன்றி, கூறியதை ஆராய்ந்து, ஏன்? எப்படி? என்ன? எதற்காக? என்று அதில் கண்டவற்றுக்கு விவரம் கேட்டால் அப்படிக் கேட்பவன் மதத் துரோகி. இதுதான், அதாவது வெறும் நம்பிக்கை வைப்பதுதான் மதம் என்பதன் உட்கருத்து. பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச்சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: "எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள்" என்பதாகும். இன்னமும் விளக்கமாக, "நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட மானிடன் அல்லன்" என்றும் கூறியிருக்கிறார். எனவே, எப்பொருள் யார்யார் வாய்க் கேட் பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பது பவுத்தம்.
அதுபோலவே, பகவான், ரிஷிகள், அவர், இவர், சிவன், பிரம்மா, விஷ்ணு, கிருஷ்ணன் - வேதத்தில், சாஸ்திரத்தில், கீதையில்.. கூறினார்கள். ஆதலால், அதை அப்படியே நம்பி ஆகவேண்டும். அந்தப்படி நடந்தாக வேண்டும் என்பது (இந்து) மதம். ஆகவே, (இந்து) மதத்தின் அடிப்படைத் தத்து வத்துக்கும் (பவுத்தம்) கொள்கை என்பதன் அடிப்படைத் தத்துவத்துக்கும் காணப்படும் பேதம் இதுதான். இதை அடிப்படையாகக் கொண்டுதான் நான் சொல்லுகிறேன் - புத்தக் கொள்கைகளைப் புத்த மதம் என்று கூறுவது முற்றிலும் பிசகு என்பதாக.
அன்றியும் பவுத்தத்திற்கு அநேக உண்மை ஆதாரங்கள் உண்டு. புத்தர் பிறந்தார் என்பதற்கும் அவர் என்ன கூறினார் என்பதற்கும் சரித்திர ஆதாரம் உண்டு. வருடம், மாதம், தேதி முதல் சரித்திர வாயிலாகக் காண முடியும்.
ஆனால், இந்து மதத்திற்கு அப்படிப்பட்ட சரித்திர சம்பந்தப்பட்ட ஆதாரம் ஒன்றுகூடக் கிடையாது. அது ஏற் பட்டது யாரால்? எப்பொழுது? என்பதற்கு ஒருவித ஆதார மும் கிடையாது. அப்படி ஏதாவது யாரும் கூறுவார்களே யானால், அவை ஏதோ போதையில் உளறிய அல்லது கூறிய அர்த்தமற்ற வார்த்தைத் தொகுப்புகளைத்தான் கூறக் கூடும். அவர்கள் இந்து மதக்காரர்கள் கூறுகிறபடி, இந்து மதத்துக்கு வயது கிடையாது. எண்ணிக்கையற்ற பலப்பல சதுர்யுகங்களும் கோடி கோடி வருஷங்களுக்கு முன்பாக ஏற்பட்டது என்பதும், அது மனிதனால் ஏற்பட்டதல்ல என் பதும், கடவுள் கூறினார், தேவரால், ரிஷிகளால் எழுதப் பட்டது என்ற ஆதாரமற்ற அறிவுக்கொவ்வாத அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசுவர். இவ்வித முறையில் இந்து மதம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மற்றும் இந்தக் கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள் என்பவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஒழுக்க வழக்கங்கள் என்ன? என்பதைப் பார்த்தால் அவை மிக மிக ஆபாசமாக, யோக்கியமற்றதாகவே பெரிதும் காணப்படும்.
பவுத்தத்திற்கு அதில் காணப்படுபவர்களுக்கு இப்படிப் பட்ட ஆபாசம், அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளை யோக் கியமற்ற தன்மைகள் தென்பட மாட்டாது. இரண்டையும் ஆய்ந்து பார்த்தால் பவுத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு.
அதாவது, பவுத்தத்திலும் கடவுள் கிடையாது. இந்து மதத்திலும் கடவுள் கிடையாது. பவுத்தத்தில் கடவுள் என்பதாக ஒன்று இருக்க முடியாது; அது தேவை இல்லை. சர்வம் புத்தமயம் என்றே தோன்றும். அப்படியே புத்தர் கூறினார்.
அதுபோலவே இந்து மத ஆதாரமான வேதம் என்பதி லும் கடவுள் கிடையாது. அதில் எங்கும் நிறைந்த எல்லாமு மாய் இருக்கிற சர்வ சக்தியும் சர்வ நடப்புக்குக் காரண மாகவும் இருக்கிற உருவமற்ற ஒரு கடவுள் உண்டு என்ப தான, ஒரு கடவுள் எங்கும் காணப்படுவதில்லை.
வேதத்தில் பல தேவர்கள் உண்டு. அவர்களுக்கு உருவம், தனித்தனி தொழில், அதிகாரம் உண்டு. மனைவி மக்கள் உண்டு. ஒழுக்க ஈனமான பல காரியங்களைச் செய்தவர்கள், செய்கிறவர்கள் என்பதாகத்தான் பெரிதும் காணப்படும்.
இப்படிப்பட்ட தேவர்கள்தான் அவதாரமெடுப்பதாகவும் பிள்ளை குட்டிகளைப் பெறுவதாகவும் காணப்படுகின் றனவே ஒழிய, மற்றபடி கடவுள் தன்மைக்கு உரிய தத்து வத்தோடு கடவுள் என்பதாக ஒன்று இல்லை.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வேதத்தில் தேவர்கள் என்பதாக 30 அல்லது 38 பெயருடைய தேவர்கள்தான் உண்டு. அவர்கள் வேதகால மக்களுடைய ஆசாபாசங்களுக்கு ஏற்ற வண்ணம் குணங்களைக் கொடுத்து அவர்களை ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு அதிகார தேவனாக ஆக்கி அவர்களை தங்கள் இச்சைக்கு ஏற்ப பயனளிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்திருக்கிறதாகவேதான் காணப்படுகிறது.
அந்த 33 பேர்களில் (ஒவ்)வொருவர்தான் இந்திரன், வருணன், வாயு, அக்கினி, ருத்திரன், சூரியன், பிரம்மா, சந்திரன், விஷ்ணுமித்திரன், சாவித்திரி, புஷன் உஷை, அரியமான், அஸ்வினி தேவன், மின்னல் தேவர், பிரசண்ட மாருதத்திற்குத் தேவனான மாருதர் தேவர் என்பவர்களும் மற்றும் இவர்கள் போன்ற இன்னும் சிலரையும் சேர்த்து 33 தேவர்களையே வேதத்தில் பிரார்த்தனை செய்திருக்கிறார் கள்.
அவர்களில் சிலரை கடவுள்களாகவும், சிலரை தேவதை களாகவும்தான் இன்றைக்கும் நமக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றனவே ஒழிய, நமக்கு வேதத்தின்படியோ, சாஸ்திரங்களின்படியோ இந்து மதம் மூலம் எவ்வித கடவுளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.
ஆகவேதான், இந்த அடிப்படையைக் கொண்டு பவுத் தத்திலும் கடவுள் இல்லை; இந்து மதத்திலும் கடவுள் இல்லை என்று சொன்னேன்.
அடுத்து புத்தர் கூறி இருப்பதில் இந்து மதம் என்பதில் மனித உடலுக்குள் ஆத்மா என்பதாக ஒன்று உண்டு என்று சொல்லப்படுவதை மறுத்து அப்படியாக ஒன்று கிடையாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மற்றும் பவுத்தம் அனீச்சுவரம் (கர்த்தா இல்லை), அனாத்மம் (ஆத்மா இல்லை), அநித்தியம் (நித்தியவஸ்து என்பதாக எதுவும் இல்லை. எல்லாம் மறையக் கூடியதே) என்பதான இவற்றை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.
(14.2.1955 அன்று சீரங்கம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 20.2.1955)
No comments:
Post a Comment