குலக்கல்வியின் மறுபதிப்பான -  ஆர்.எஸ்.எஸ். திட்டமான தேசியக் கல்விக் கொள்கையை முற்றாகப் புறக்கணிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 2, 2020

குலக்கல்வியின் மறுபதிப்பான -  ஆர்.எஸ்.எஸ். திட்டமான தேசியக் கல்விக் கொள்கையை முற்றாகப் புறக்கணிப்போம்!

தலைமைச் செயற்குழுத் தீர்மானங்கள்



சென்னை, ஆக.2 இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் குலக் கல்வித் திட்டத்தின் மறுபதிப்பான புதிய தேசியக் கல்வித் திட்டத்தை முற்றிலும் புறக்கணிப்பது உள்பட 7 தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நேற்று (1.8.2020) மாலை நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம் (தனியே காண்க)


 தீர்மானம்  எண் 2:


தலைவர்களின் சிலைகள் அவமதிப்பும் - சமூக வலைதளங்களில்


அவதூறுப் பிரச்சாரமும் - கழகத்தின் நிலைப்பாடும்!


தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர், மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட சமூகநீதித் தலைவர்களின் சிலைகள் திட்டமிட்டு அவமதிக்கப்படுகின்றன.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் காவல்துறையில் புகார்கள் கொடுத்து வருகின்றனர். இரண்டொரு இடங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட் டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவேயில்லை.


இந்தச் சூழலில், இந்த அநாகரிகமான வன்முறையைத் தூண்டும் காரியங்களில் தொடர்ந்து ஈடுபடும் காவிகள்- காலிகளுக்கு எதிர்வினையாற்றுதல் என்ற பெயரில் கழகத் தோழர்கள் எந்தவித நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. சட்டம் ஒழுங்கு நம்மால் கெடுகிறது என்ற நிலைக்கு நாம் காரணமாக இருக்கத் தேவையில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.


பாபர் மசூதி இடிப்பின்போது இந்தியா முழுவதும் வன் முறைகளும், கலவரங்களும் ஏற்பட்ட நிலையிலும், தமிழ்நாடு ஒன்று தான் அமைதிப் பூங்காவாக இருந்தது. இதற்குக் காரணம், தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் என்றே அன்றைய ஏடுகளும் பாராட்டியுள்ளன. அப்படிப்பட்ட அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் அமளி ஏற்படுவதற்கு நாம், நம்முடைய எதிர்வினைகள் காரணமாகிவிடக் கூடாது என்பதினாலேயே, நமது தோழர்கள், எவ்வளவு ஆத்திர மூட்டப்பட்டாலும், தலைமையினுடைய குரலுக்குக் கட்டுப் பட்டு அமைதி காக்க வேண்டுகின்றோம்.


தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இந்தப் பிரச்சினையில் நடந்துகொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளுக்கு அவை பதில் சொல்லவேண்டிய அவசியமும், காலமும் ஏற்படும். இதே நிலை நீடித்தால், அதற்குரிய கடும் விளைவையும் இன்னும் சில மாதத்தில் வரும் பொதுத் தேர்தல் காலங்களில் தமிழக மக்கள் பிரதிபலிப்பார்கள் என்பது உறுதி.


சமூக வலைதளங்களில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் அழி - பழியான - ஆபாசமான பரப்புரைகளும், பொய் மூட்டைகளும் நாள்தோறும் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. இதைப்பற்றியெல்லாம் கவனிப்பதற்கும், தக்க நட வடிக்கைகள் எடுப்பதற்கும் காவல்துறையில் ஒரு தனிப்  பிரிவு இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்குக் காவல்துறையின் போக்கு மிகவும் கவலையளிப்பதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருக்கிறது என்பதையும் இச் செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.


சங் பரிவார்களைச் சேர்ந்த - பா.ஜ.க.வில் முக்கிய பொறுப் புகளில் இருப்பவர்களேகூட வன்முறையைத் தூண்டும் வகையில் நரகல் நடையில் பேசுவதெல்லாம் நாகரிக உலகில் நாடு பயணிக்கிறதா - ஓர் ஆட்சிக் கட்டமைப்புக்குள் - நிர்வாகத்துக்குள்தான் மக்கள் வாழ்கிறார்களா என்று எண்ணத் தோன்றும் வகையில் இருப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.


இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும், அமைப்பு களும் அவ்வப்போது கண்டனம் தெரிவித்திருந்தும்கூட, தமிழ்நாடு அரசு கேளாக் காதினராக இருப்பது - கட்சியின் பெயரில் வைத்துள்ள அண்ணாவுக்குப் பெருமையளிக்கக் கூடியதல்ல என்பதை அண்ணா தி.மு.க. அரசுக்கு இச் செயற்குழு முக்கியமாகச் சுட்டிக்காட்டுகிறது.


அதேநேரத்தில் ஏதோ இந்து மதத்தைப் புண்படுத்து கிறார்கள் என்று புகார் கொடுத்தால், அவர்களை உடனடியாக ஓடி ஓடி வேட்டையாடுவது போன்று மின்னல் வேகத்தில் செயல்படுவது  - பா.ஜ.க.வின் மதவாதப் போக்கில் அண்ணா தி.மு.க. ஆட்சி சங்கமித்துவிட்டதோ அல்லது ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க.வினரைத் திருப்திபடுத்த இப்படி நடந்துகொள்கிறதோ என்று கருத வேண்டியுள்ளது.


தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பக்கமும் சாயாது செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் எண் 3 :


தேசிய கல்விக் கொள்கையைப் புறக்கணித்திடுக!


பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேசிய புதிய கல்வித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முன்வந்துள்ளது.


(அ) மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்காமல், நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்திற்கு வாய்ப்பு தராமல், தன்னிச்சையாக இப்படியொரு முடிவை எடுத்திருப்பது - மாநில உரிமைகளை நசுக்குவது மட்டுமல்ல - ஜனநாயகப் பண்பை சீர்குலைப்பதாகும்.


(ஆ) ஆர்.எஸ்.எஸின் கோட்பாடான ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்தத் தேசியக் கல்வி உருவாக்கப்பட்டுள்ளது.


மாநிலத்திற்கு மாநிலம் மொழி, பண்பாடு, இயற்கை வளம், உணவுமுறை, தட்பவெப்பம், தொழில் முறைகள் போன்றவற்றில் கடும் வேறுபாடுகள் இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே!


ஒத்திசைவுப் பட்டியலில் (கன்கரண்ட் லிஸ்ட்) உள்ள கல்வியை எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசின் பட்டியலில் (யூனியன் லிஸ்ட்) இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுவது அரசமைப்புச் சட்ட விரோதம் அல்லவா!


இது வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டின் உயிரைக் குடிப்பதாகும்.


(இ) மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் அரசமைப்புச் சட்டம் வற்புறுத்தும் சமூகநீதி- இட ஒதுக்கீடுபற்றி எதையும் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டதிலிருந்து இட ஒதுக்கீட்டிற்கு இந்தக் கல்வித் திட்டம் ஏற்புடையதல்ல என்பதை மறைமுகமாக நாட்டிற்கு அறிவிப்பதாக உள்ளது.


(ஈ) இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்ட வணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் மூன்றாவது மொழியாக, இந்தி, சமஸ்கிருதம் என்று பாடத் திட்டத்தில் திணிக்கப்படுவது ஏற்புடையது அல்ல.


இந்தியாக இருந்தாலும் சரி, சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி - இவை வெறும் மொழி மட்டுமல்ல - பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பும், பண்பாட்டுப் படையெடுப்புமேயாகும்.


மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம்  என்ற   இருமொழிக் கொள்கையை முதலமைச்சர் அறிஞர் அண்ணாவால்  சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 50 ஆண்டுகாலமாக அமலில் இருக்கும் ஒரு கல்வித் திட்டமாகும். இங்கே மூன்றாவது மொழிக்கு இடமில்லை என்று சட்ட ரீதியாக தமிழ்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தச் சட்டத்தை அலட்சியப்படுத்தி மூன்றாவது மொழியைத் திணிப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. இதில் தமிழக அரசு தனது உறுதியான நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தவேண்டும்.


(உ) கல்வித் திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி. என்ற நிறுவனம் தயாரிக்கும் என்பது ஆபத்தான போக்காகும். ஏற்கெனவே என்.சி.இ.ஆர்.டி. உருவாக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றவை - வகுப்புவாதத்தையும், மதவாதத்தையும் மய்யப் புள்ளியாகக் கொண்டவை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்தியா முழுமைக்குமான பாடத்திட்டத்தை அந்த நிறுவனத்திடமே ஒப்படைப்பது - ஆர்.எஸ்.எஸ்.சின் அஜெண்டாவைத் திணிக்கும் மறைமுகமான முயற்சியேயாகும்.


(ஊ) 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்பதும், சின்னஞ் சிறுவர்களிடத்தில் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கல்வியாளர்களின் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்துவதாகும்.


(எ) கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றைத் தேசிய தேர்வு முகமை நடத்தும் (NTA - National Testing Agency) என்பதன்மூலம் முதல் தலைமுறையாகக் கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் - வரலாற்று ரீதியாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டதாரியாக ஆக முடியாமல் தடுக்கும்  வெளியேற்றும் சூழ்ச்சிப் பொறியே!


இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் அனைத்து மாணவர் களும் தொடர்ந்து கல்விப் பயணத்தை மேற்கொள்ள முடியா மல் இடைநிற்றல் (Drop Outs) பெருகும் என்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இதில் இருக்கிறது.  பல கட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு என்பது பயிற்சி நிறுவனங்களை (Coaching Centres) நடத்தும் கார்ப்ப ரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் ஏற்பாடும் ஆகும். ஏழை, எளிய மக்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகப் படிப்பு என்பது இனி எட்டாக் கனியே என்ற ஏமாற்றத்தையே அது  ஏற்படுத்தும்.


‘நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற சமூகநீதிக்குரல் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலகட்டத்தில், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் சேர்வதற்கும் பல நுழைவுத் தேர்வு என்பது - பட்டப்படிப்பு எல்லாம் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே எனும் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.


(ஏ) ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, குருகுலக் கல்வி என்பதெல்லாம் 1952களில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பே என்று இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.


(அய்) மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும், கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு நிலவும் ஒரு சூழலில், இப்படியொரு மக்கள் விரோத - பார்ப்பனீய - சனாதன - ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகள் அடங்கிய கல்வித் திட்டம் தேசிய அளவில் மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது.


(ஒ) சில அறிவிப்புகள் சிறந்தவை என்று கூறப்படுவ தெல்லாம் - தோற்றமளிப்பது எல்லாம் அடிப்படையில் மதவாத, சமூக அநீதி நஞ்சை உள்ளே வைத்து, மேலால் தேனைத் தடவி மக்களை ஏமாற்றும் தந்திரம் - நயவஞ்சகப் போக்கு என்பதை நாட்டு மக்கள் உணரத் தவறக்கூடாது என்றும், மத்திய அரசு விரிக்கும் வஞ்சக வலையில் வீழ்ந்துவிடக் கூடாது என்றும் இச்செயற்குழு எச்சரிக்கிறது.


(ஓ) கல்வித் துறையில் பெரும்பாலான மக்களை வஞ்சிக்கும், வீழ்த்தும் மத்திய அரசின் தேசிய கல்வித் திட்டத்தை இச்செயற்குழு எதிர்க்கிறது - புறக்கணிக்கிறது. அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் மட்டுமன்றி, சிறுசிறு சமுதாய அமைப்புகளும், பல்வேறு துறையினரும்கூட தங்களின் கண்டனத்தை - புறக்கணிப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று இச்செயற்குழு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.


(அவ்) மக்கள் விரோத மத்திய அரசின் இந்தத் தேசிய கல்வித் திட்டத்தை எதிர்த்து முறியடிக்கும் வகையில், மக்கள் கருத்தை உருவாக்கவும், ஒன்று திரட்டவும், மத்திய அரசை மறுசிந்தனைக்கு ஆட்படுத்தவும் தேவையான - அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து களம் அமைத்துச் செயல்படும் பணியில் திராவிடர் கழகம் முன்னின்று ஈடுபடும் என்று இச்செயற்குழு அறிவித்துக் கொள்கிறது.


(ஃ) அண்ணாவின் பெயரில் நடைபெறும் தமிழக அண்ணா தி.மு.க. அரசு, மத்திய அரசு திணித்திருக்கும் புதிய தேசியக் கல்வித் திட்டத்தை முற்றிலும் புறக்கணிப்பதில் சற்றும் தயக்கம் காட்டக்கூடாது என்று இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.


தீர்மானம் எண் 4 :


புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA)  வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்


Environmental Impact Assessment என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக் கொள்கை வரைவொன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. 


பொதுவாக சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்குப்பிறகே நிலக்கரி மற்றும் இதர கனிம சுரங்க வேலைகள் நீர், அனல் மற்றும் அணு மின்சாரத் திட்டங்கள், சாலைகள், பாலங்கள், அணைகள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் போன்ற அனைத்துத்திட்டங்களும்  மேற்கொள்ளப்படவேண்டும்.


தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இந்த இ.அய்.ஏ. கொள்கை வரைவு பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது.


எந்தவித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், கருத்துக் களைக் கேட்காமல், பாதிப்புகளை அறியாமல் அறிவிக்காமல், திட்டங்களை தொடங்கி நடத்த வழிவகை செய்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு குறிக்கின்ற திட்டங்களைப் பற்றிய எந்தத் தகவல்களும், அவற்றால் விளையும் சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட எந்த தகவல்களும் பொதுவெளியில் வைக்கப்பட மாட்டாது. கட்டுமானத் திட்டம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்கள் உட்பட ‘பொதுமக்கள் கருத்து கேட்பு’ என்ற விதிமுறையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஈரோடு அருகில் எட்டு வழிச்சாலைக்கு கருத்துக் கேட்பு இனி அவசியமில்லை.


15 லட்சம் சதுர அடி, அதாவது ஏறக்குறைய 34 ஏக்கர் பரப்பளவுக்குக் குறைவான கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேடு மதிப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. முன்னர் 2006 இல் இருந்த வரைவு அறிக்கையில் மாற்றம் என்ற பெயரில், சுற்றுச்சூழலை அழித்து, பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு, நாட்டின் வளத்தை கொள்ளையடிக்க வகை செய்யும்  இந்த வரைவு அறிக்கையை, மக்கள் முற்றிலுமாக நிராகரிக்கவேண்டும் என பொதுமக்களை இத்தலைமைச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் எண் 5 :


சென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்றம் - வழக்காடு மொழியாக தமிழ் -மத்திய அரசுக்கு வேண்டுகோள்!


சென்னை உயர்நீதிமன்றத்தை Ôதமிழ்நாடு உயர்நீதி மன்றமாகÕ பெயர் மாற்றம் செய்யவோ, தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கவோ, அலுவல் மொழியாக்கவோ  இயலாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அறிவித் திருப்பது அதிர்ச்சிக்குரியது.


இந்தியத் தேசியத்தில் மாநில உரிமைகளுக்கு அங்கீகாரம் - உரிய மதிப்பு இதுதான் என்றால், இது மிகவும் கண்டனத்துக்கும், கவலைக்கும், கிளர்ச்சிக்கும் உரியதாகும்.


மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை ஏற்று, ‘மெட்ராஸ் அய்க்கோர்ட்' என்பதை ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில்  அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் தமிழைப் பயன்படுத்தப்படுவதற்கு உரிய அனுமதி அளிக்கவேண்டும் என்றும் மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் எண் 6:


அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களுக்கு வரவேற்பு


தி.மு.க. ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சி காணொலி (27.7.2020) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இச்செயற்குழு வரவேற்று - செயல்படுத்துவது என்று தீர்மானிக்கிறது.


தீர்மானம் எண் 7 :


‘விடுதலை' வாசகர்களின்


எண்ணிக்கையை விரிவுபடுத்துக!


கரோனாவால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டதன் காரணமாகவும்  86 ஆண்டுகால வரலாறு படைத்த ‘விடுதலை' இணையத்தின் வழியாக நான்கு பக்கங்கள் அளவில் நடத்தப்படும் ஒரு சூழலில் - இணையத்தின் வழியாகப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் பணியை முக்கியமாகக் கருதி செயல்படுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


 


இரங்கல் தீர்மானம்


புரட்சிக்கவிஞர் மகன் சு.மன்னர் மன்னன் (6.7.2020), வரியியல் அறிஞரும், பெரியார் மணியம்மை அறக்கட்டளையின் தலைவருமான ச.இராசரத்தினம் (வயது 92, மறைவு 18.7.2020), கல்வி அறிஞர் முனைவர் எஸ்.வி.சிட்டிபாபு (29.3.2020), லோக் ஜனசக்தி அகில இந்தியத் துணைத் தலைவர் சந்திரசேகரன் (மறைவு 10.4.2020), ஆந்திர மாநிலம் கோரா நாத்திக மய்யம் டாக்டர் விஜயம் (மறைவு 22.5.2020, உடற்கொடை), மேனாள் எம்.பி., ராம் அவேதேஷ் சிங் (மறைவு 20.7.2020), இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமான் (மறைவு 26.5.2020), சிங்கப்பூர் கே.திருச்சி இராமசாமி (27.4.2020), ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற செயலாளர் கே.பக்தவச்சலம் (மறைவு 30.6.2020), பொறியாளர் சோம.பொன்னுசாமி (2.6.2020), தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், மேனாள் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் குழந்தை தமிழரசன் (வயது 64, மறைவு 9.7.2020), பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் (27.6.2020), பேராசிரியர் அர.ஜனகன் (வயது 92, மறைவு 4.7.2020), தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் பாவலர் மீனாட்சி சுந்தரம் (மறைவு 27.4.2020), மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மு.அம்பிகாபதி (14.7.2020), லோக்ஜனசக்தி கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சந்திரகேசன் 10.4.2020, திமுக தொழிற்சங்கம் சிங்கார ரத்தினசபாபதி-11.6.2020, இனமானப் பேராசிரியர் அவர்களின் மகள்.மணமல்லி (வயது 70) 13.6.2020, வல்லம் நகர திமுக செயலாளர் டிகேஎஸ்.ஜி.கல்யாணசுந்தரம் தந்தையார் வல்லம் டிகேஎஸ். கோவிந்தப்பிள்ளை 14.4.2020, புதுக்கோட்டை திமுக மாவட்ட அவைத்தலைவர் பே.மாரியய்யா 25.7.2020, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக பகுத்தறிவு கலை இலக்கியப்பேரவை மாவட்ட அமைப்பாளர் ஆதிமாறன் தாயார் சந்திரா முனுஆதி 28.7.2020 ஆகியோர் மறைவுக்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
மண்ணச்சநல்லூர் அ.அனந்தம்மாள் 11.3.2020  உடற்கொடை, பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் 13.3.2020 உடற்கொடை, புலவர் கடவுள் இல்லை (எ) மு.வேங்கடசாமி (வயது 68) 17.3.2020, குமரி மாவட்டம் கோ.வெற்றிவேந்தன் தந்தையார் தா.கோவில் பிள்ளை (வயது 83) 19.3.2020, திருச்சி உய்யக்கொண்டான் தமிழ்மணி (வயது 83)  29.3.2020, கல்வி அறிஞர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு 29.3.2020,  முதல்கரை ஆறுமுகநயினார் 5.4.2020, பேராவூரணி சின்னையன் (வயது 80) 5.4.2020,  பட்டீஸ்வரம் இரா. கலைவாணி (வயது 62) 7.4.2020, விருகம்பாக்கம் (குடந்தை)  நாதன் (வயது 83) 7.4.2020, இராமநாதபுரம் மாவட்டம் முனியாண்டி (வயது 85) 14.4.2020, காவேரிப்பட்டினம் தா.திருப்பதி (வயது 88) 14.4.2020, ஈரோடு மின்னப்பாளையம் க.வள்ளியம்மாள் (வயது 74)17.04.2020, மேலமெஞ்ஞானபுரம் த.புஷ்பராணி (வயது - 71)20.4.2020, நெய்வேலி லட்சுமியம்மா (வயது 74) 22.4.2020,  சிங்கப்பூர் கே.இராமசாமி 27.4.2020, குரோம்பேட்டைச.விசாலாட்சி (வயது80) 7.5.2020, செம்பியம் கி.சரோஜா (வயது 78) 9.5.2020, புலியூர் எஸ்.டி.குப்புசாமி 13.5.2020, முத்தூர் சு.சிதம்பரம் 13.5.2020, பாவலர் மீனாட்சிசுந்தரம்(வயது 90) 14.5.2020,  திருவையாறு ஆர்.மங்கையர்க்கரசி 15.5.2020, காவேரிப்பட்டணம் குமுதா 15.5.2020, மயிலை கா.கர்ணம்மா(வயது84) 18.5.2020, திருச்சி சைவராஜ் (வயது75) 18.5.2020,  திருப்பூர் மிசா இரா.முருகேசன் 20.5.2020, கோமதி திருவாசகம் 21.5.2020, ஆவடி பவுனம்மாள் 21.5.2020, செங்கம் கு.ராஜா 22.5.2020, வவ்வாலடி கிருஷ்ணன் (வயது 92) 24.5.2020, தச்சங்குறிச்சி கு.ரொக்கப்புலி (எ)நடராஜன்  24.5.2020, கரூர் காமராஜ் (வயது 53) 26.5.2020, சட்டஎரிப்புப்போராட்ட வீரர் கோமாக்குடி முத்தண்ணா (வயது 87) 27.5.2020,  ராஜம் அரங்கசாமி (வயது 87) 27.5.2020, பட்டீசுவரம் சோழன் மாளிகை நா.முத்து(வயது 85) 29.5.2020, தஞ்சை புதுமாத்தூர் பெரியசாமி(வயது89) 1.6.2020,  ஷாகினா 1.6.2020, பொறியாளர் சோம.பொன்னுசாமி 2.6.2020, கே.என்.ஜெகதீசன் (வயது87) 3.6.2020, மயிலாடுதுறை போலீஸ் நா. சாமிநாதன்(வயது75) 5.6.2020, பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி தி.க.ரவி (வயது 53) 5.6.2020, செய்யாறு செல்வி அம்மாள் (வயது 80)7.6.2020, கடலூர் கோ.குப்புசாமி (வயது 85) 13.6.2020, ராயகிரி முத்துக்குமாரசாமி (வயது 46) 17.6.2020, சட்ட எரிப்பு வீரர்  விக்கிரபாண்டியம் கோ.கணேசன் 18.6.2020, கண்டாச்சிபுரம்  எ.ஏழுமலை (வயது50) 21.6.2020, ஆலங்காயம்  புலவர் அண்ணாமலை 23.6.2020, கீழ்ப்பென்னாத்தூர் வி.தேவராசன் 23.6.2020, பொன்னேரி மாரியம்மாள் 26.6.2020, வடலூர் கிருஷ்ணகாந்தம்  2.7.2020, மதுரை பவுன்ராசா (வயது 58) 4.7.2020,  சி.பால் (வயது96) 10.7.2020, வடகரை கிருஷ்ணவேணி (வயது85) 11.7.2020, லால்குடிவே.சுசீலா 13.7.2020, ராஜூ(வயது72) 25.7.2020, திங்கள்சந்தை பெ.சுப்பிரமணியம் (வயது91)25.7.2020, சென்னை வியாசர்பாடி ஏ.தணிகாசலம் (வயது91) 27.7.2020,  தருமபுரி வகுத்துப்பட் ருக்கு அம்மாள் (வயது 85) 28.7.2020, இராஜபாளையம் இல.ஜெயலட்சுமி  29.7.2020, டாக்டர் ஆர்.ஷ்யாம்சுந்தர் 29.7.2020  ஆகிய கருஞ்சட்டைக் குடும்பங்களைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் மறைவிற்கு இச்செயற்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களின் அரும்பெரும் இயக்கத் தொண்டுக்கு இச்செயற்குழு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.


No comments:

Post a Comment