கொரோனாவுக்குப் பிந்தைய இவ்வுலகம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களும்,
ஆய்வு நிறுவனங்களும் முன்வைக்கும் கருத்துகளை நமது ஊடகங்கள் தொடர்ந்து பரப்புரை செய்கின்றன.
உலகப் புகழ்பெற்ற பல்துறை அறிஞரும், தத்துவஞானியுமான நோம் சோம்ஸ்கி கொரோனா காலத்தில் “உலகில் பல அரசுகள் மக்களின் உரிமைகளைப் பறித்துத் தங்களை மென்மேலும் வலிமை பொருந்தியவையாக மாற்றிக் கொள்ளும்” எனக் கூறியுள்ளார். அவருடைய அவதானிப்பு இந்தியா, அமெரிக்கா உட்பட சில நாடுகளில் செயல்வடிவம் பெற்று வருவதைக் காணமுடிகிறது. கொரோனாவின் கொடிய பாதிப்பிற்கு உலக நாடுகள் உள்ளாகித் தவித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், பன்னாட்டளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு, சிக்கல் குறித்து பொருளாதார நிபுணர்கள் புள்ளி விபரங்களுடன் பல செய்திகளை முன்வைத்த வண்ணமுள்ளனர்.
எதிர்வரும் ஆண்டுகளில் உலக அளவில் குறிப்பாக, தெற்காசிய நாடுகளில் பெருமளவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு பட்டினிச் சாவுகள் உச்சத்தை எட்டுமென உலக சுகாதார நிறுவனம் கருத்துக் கூறியுள்ளது. மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உணவுப் பண்டங்களின் விலை விண்ணை முட்டுமென
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார். உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகளைக்கூட அத்தியாவாசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
இவர்கள் அனைவரும் எச்சரித்தது போல ஒரு தேக்கநிலை உருவானால் மக்கள் அச்சூழலை எவ்வாறு எதிர் கொள்வர் என்பது குறித்து யோசித்தபோது இக்கதை நினைவிற்கு வந்தது. அசைவ உணவான இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலை ஒரு நகரத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை விளக்கும் கதையிது.
பல வெளிநாட்டு இலக்கியப் படைப்பாளிகளால் எழுதப்பெற்ற சிறந்த சிறுகதைகளை விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமார் அவர்களின் மொழியாக்கத்தில், எழுத்தாளர் இமையம் அவர்களின் முன்னுரையோடு, 2014-ல் மணற்கேணி பதிப்பகத்தார் ‘மாமிசம்’ எனத் தலைப்பிட்டு ஒரு சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் கதையின் பெயர் ‘மாமிசம்’. இதுவே தொகுப்பின் தலைப்புமாகும்.
இச் சிறுகதையை எழுதியவர் கியூபா நாட்டைச் சேர்ந்த விர்ஜீலியோ மினாரா. இடித்துரைக்கும் அரசியல் அங்கதச் சுவையுடன் இக்குறியீட்டுச் சிறுகதையை எழுதியுள்ளார். கொரானாவைக் காரணம் காட்டி நாட்டடங்கையும், ஊரடங்கையும் பிறப்பித்து, மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துவிட்டு தங்களது வர்க்க நலன் சார்ந்த,
மக்கள் விரோத நிகழ்ச்சி நிரல்களை அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகின்றன.
ஜனநாயகப் போராட்ட வடிவங்களெல்லாம் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்
“தெருவுக்கு விடிஞ்சா திண்ணைக்கும் விடியமில்ல” நமக்கெதுக்கு வம்பு என ஒதுங்கி நிற்கும் மனப்பான்மை அதிகரித்துவிட்ட ஒரு காலநிலையில் இச்சிறுகதை சிறு சலனத்தையேனும் ஏற்படுத்தும்
என நம்புவோம். கதைக்குச் செல்வோம்.
No comments:
Post a Comment