மத்தியத் தொகுப்பிற்கு (All India Quota) மருத்துவப் படிப்பு இடங்களை மாநிலங்கள் தர  வேண்டியது தற்காலிக ஏற்பாடே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 3, 2020

மத்தியத் தொகுப்பிற்கு (All India Quota) மருத்துவப் படிப்பு இடங்களை மாநிலங்கள் தர  வேண்டியது தற்காலிக ஏற்பாடே!

மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகக் காணொலி நிகழ்ச்சி


உச்சநீதிமன்ற தீர்ப்பினைச் சுட்டிக் காட்டி தமிழர் தலைவர் விளக்கவுரை



மருத்துவக் கல்வி திராவிட மாணவர் கழகம் ஏற்பாடு செய்த காணொலிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் பொழுது, மத்தியத் தொகுப்பிற்கு (All India Quota)  மருத்துவப் படிப்பு இடங்களை மாநிலங்கள் அளிக்க வேண்டியது தற்காலிகமான ஏற்பாடே; நிரந்தரமாக மாநிலங்கள் தொடர்ந்து அளிக்க சட்டம் வலியுறுத்தவில்லை என உச்சநீதிமன்றத் தீர்ப்பினைச் சுட்டிக் காட்டி தமிழர் தலைவர் விரிவாக விளக்கவுரை ஆற்றினார்.


தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்ற திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக 2.8.2020 அன்று மாலை காணொலிக் கூட்டம் நடைபெற்றது. ஏறக்குறைய 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மாணவ மருத்துவர்கள், பேராசிரியர்கள் பலரும் திரளாகக்  கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு சென்னை-போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவர் எழில்.மங்கை தலைமை தாங்கினார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் டாக்டர்.


சி. தமிழ்அருவி கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னிலை வகித்தோர் சார்பாக திருச்சி - எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலமருத்துவர் டாக்டர். கு. முத்துக்குமார் உரையாற்றினார். அடுத்து இமாச்சலபிரதேசம்-சிம்லா இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர் கீழப்பாவூர் உ. இரா. மானவீரன் விரிவான தொடக்க உரையாற்றினார்.


திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், திராவிட மாணவ்ண கழகத்தின் மாநில அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன் உரையாற்றினர்.  நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்: டாக்டர். க. ஹர்சினி (திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி), டாக்டர். இரா. முகில் (கோவை இராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி), டாக்டர். சு. கவுதமன் (அரசு மருத்துவக் கல்லூரி, கோவை), டாக்டர். இ.சூரியகலா (சத்யசாய் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி), டாக்டர். வெ.பூவிழி (அரசு மருத்துவக் கல்லூரி, கோவை).


காணொலி நிகழ்ச்சியினை தொழில்நுட்ப கட்டமைப்பு ஒருங்கிணைப்புடன் திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தினார். தமிழர் தலைவரது உரைக்குப் பின்னர் - விளக்கம் வேண்டுதல், அய்யப்பாடு களைதல், வினா-விடையளித்தலுக்குப் பின்னர் நிறைவாக சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் டாக்டர் பா. தங்கமலர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசப் பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள், மருத்துவச் சேவை வழங்கி வரும் மருத்துவர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.


தமிழர் தலைவரின் மருத்துவக்


கல்வியில் சமூகநீதி உரை


05.07.2020 அன்று நடைபெற்ற மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் சமூகநீதி என்ற தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றி யிருந்தார். அந்தத் தலைப்பின் இரண்டாம் பொழிவினை - மருத்துவக் கல்வியில் சமூகநீதி குறித்து விரிவாகவும், சட்ட நுணுக்கங்கள் பற்றி விளக்கமாகவும், மருத்துவக் கல்வியில் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களான - தாழ்த்தப்பட்ட, பழங்குடிவகுப்பின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமை களை வலியுறுத்தியும், கடந்த காலப் போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறியும் விளக்கமாகச் சிறப்புரை ஆற்றினார். தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:


மகிழ்ச்சியும் பெருமையும்


வரவேற்புரை தொடங்கி, தலைமை உரை, முன்னிலை உரை, தொடக்கவுரை ஆற்றிய, மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆற்றிய ஆழமான புரிதலுடன் கூடிய உரையினைக் கேட்கும்பொழுது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; பெருமைப்படவும் செய்கிறோம். உணர்வும் அறிவும் கலந்து மாணவர்கள் ஆற்றிய உரையினைக் கேட்ட பின்னர், எமக்கு வயது வெகுவாகக் குறைந்தது போன்ற நினைப்பில் இருக்கிறோம். தந்தை பெரியார் வளர்த்து எடுத்து வழங்கிய சமூக நீதிக் கொள்கையின்பால் உணர்வு மேலும் உயர்ந்துள்ளதாக நினைக்கிறோம். அந்த அளவிற்கு மாணவர்கள் உற்சாகமாக உரையாற்றினார்கள். முதலில் அவர்கள் அனைவருக்கும் வணக்கம்; வாழ்த்துகள்.


மாணவர்கள் பற்றிப் பெரியார்


தந்தை பெரியாருக்கும், மற்ற தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது. பிற தலைவர்கள், பேச்சாளர்கள், கேட்பவர் விரும்புகின்றவற்றை மட்டுமே பேசுவார்கள். ஆனால் தந்தை பெரியார், கேட்கின்றவர் விரும்புவன வற்றையும், விரும்பாதவற்றையும் கேட்பவர் பயன்கருதிப் பேசக் கூடியவர். ஒருமுறை மாணவர் கூட்டத்தில் தந்தை பெரியார் உரையாற்றும் பொழுது குறிப்பிட்டார்.


மாணவர்களான உங்களைப் பார்க்கும்பொழுது, உங்களது பேச்சை காது கொடுத்துக் கேட்கும்பொழுது எங்களுக்கு-இயக்கத்திற்கு நம்பிக்கை பிறக்கிறது; உற்சாகம் பெருகுகிறது. மாணவர்களாகிய நீங்கள் உணர்வு உந்தப்பட்ட படை வீரர்களாக  (soldiers) இருக்க வேண்டும். ஆனால் படை வீரர்களை வழிநடத்தக் கூடிய தளபதிகளாக (commanders) இந்நிலையில் இருக்க முடியாது. உணர்வு உந்தப்பட்ட நிலையில் உள்ள நீங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை சிறப்பாகப் பின்பற்ற வேண்டும். பின்னாளில் தளபதிகளாக வரமுடியும். சரியான வழிகாட்டுதலுடன் செயல்படுங்கள் என்பதாகத் தந்தை பெரியார் குறிப்பிட்டார்.


இன்று, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய காணொலியில் நீங்கள் ஆற்றிய ஆழமான புரிதலுடன் கூடிய உரையினைக் கேட்ட பொழுது, உங்களில் பலர்  commanders ஆக, தளபதிகளாக வழிநடத்திச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்திடும் பொழுது, கேட்கும் பொழுது மகிழ்ச்சியுடன் பெருமையும் கொள்கிறோம்.


கரோனா கிருமி போன்ற மனுதர்மம்


மருத்துவப் படிப்பில், மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு உரிமை சட்டப்படி செல்லும்; அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வார காலத்திற்கு முன் (ஜூலை 27) தீர்ப்பு வழங்கியுள்ளது. கரோனா தொற்று பரவி யுள்ள காலத்தில் உரிமையை உறுதிப்படுத்தும் தீர்ப்பு வந் துள்ளது. கரோனா கிருமி பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. கரோனா கிருமி (COVID-19) கண்ணுக்குத் தெரியாது. ஆனால் மனித குலத்தையே அழிக்க வல்லது. கரோனா கிருமிபோல மற்றொரு கண்ணுக்குத் தெரியாத கிருமி உள்ளது. பன்னெடுங்காலமாக நிலவி வருகிறது. மனிதகுலப் பாகு பாட்டை வலியுறுத்தி வரும் கண்ணுக்குத் தெரியாத இன்னும் நடைமுறையில் உள்ள கிருமி மனுதர்மம்.


மனுதர்மம் கடந்த காலம் சார்ந்தது என அதனால் பலன் பெறுகின்ற ஆதிக்கவாதிகள் கூறி வருகிறார்கள், அது உண்மையல்ல. இன்றும் தொடரும் தொற்றுக் கிருமி, மனுதர்மம். மனுதர்மத்தில் உள்ள விதிகள் இன்றைக்கும் இந்துச் சட்டங்கள் (Hindu Laws)  என்று நடைமுறையில் உள்ளன. வழக்குகள் வருகின்ற பொழுது நீதிமன்றங்கள், மனுதர்ம விதிகளின் அப்பட்டமான இந்து லா அடிப் படையிலேயே தீர்ப்புகள் வழங்கி வருகின்றன. சில நேரங்களில் நியாயங்களின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவக் கோட்பாடு (அனைவரும் சமம்; அனைவருக்கும் சமவாய்ப்பு) அடிப்படையில் நாட்டில் உயர்ந்த நீதிமன்றமான உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும், அது நடைமுறைக்கு வராது. எடுத்துக்காட்டாக, அனைத்துப் பெண்களும் கேரளா சபரிமலைக் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்; இந்துக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அது நடைமுறைக்கு வரமுடியவில்லை. அனைத்துப் பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குச் சென்று வழிபட முடியவில்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்த சட்டத் தடையும் இல்லை; நியமிக்கப்படலாம் என இறுதித் தீர்ப்பு வந்து அய்ந்து ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழகத்தில் ஒப்புக்கு இரண்டு அர்ச்சகர்கள் மட்டுமே நியமனம் பெற்றுள்ளார்கள். சட்டப்படி, உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய நிலையில் அது நடைமுறைக்கு வந்து விடக் கூடாது எனும் ஆதிக்கவாதிகளுக்கு ஆதாரமாக இருப்பது மனுதர்மமே; மக்களின் நியாயமான உரிமைக்கு தடையாக இருப்பது மனுதர்மமே; மனித குலத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருப்பது மனுதர்மமே. மனுதர்மத்தின் ஆதிக்கம் கண்ணுக்குத் தெரியாதவகையில் நமது சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் பரவிக் கிடக்கிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத, மனிதரைப் பாகுபடுத்தி அடக்கி வைத்திடும் கிருமியான மனுதர்மத்தை ஒழிக்க வல்ல மாமருந்து தந்தை பெரியாரின் கொள்கைகளே; அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திட முயன்று வருவது பெரியார் இயக்கமே.


சட்டம் அளித்த உரிமைகளைப் பெற, பயன்பெறத் தடையாக இருப்பது மனுதர்மமே. சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பெறுவதற்கே நாம் போராட வேண்டியுள்ளது. இதுதான் இன்றும் தொடரும் அவலநிலை.


லோக குருவாம் சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்


ஒரே மதம் என கூறிக்கொண்டு அந்த மத - மடபீடத்தில் இருந்து கொண்டு, அந்த மதத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களின் உரிமையை மறுக்கின்ற, தட்டிப் பறிக்கின்ற செயலை காஞ்சி சங்கராச்சாரியார் செய்தார். இந்த சங்கராச்சாரி ஜெயிலுக்குப் போன ஜெயேந்திர சரஸ்வதி அல்லர்; அவருக்கும் சீனியரான மகா பெரியவாள் என பார்ப்பனர்களால் குறிப்பிடப்படுபவர்; சந்திரசேகரேந்திர சரஸ்வதி - லோககுரு எனும் அடைமொழியுடன் பார்ப்பனர்களால் அழைக்கப் பட்டவர். ஒரு மதத்திற்குள்ளே, மிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களின் நலனுக்குப் பரிந்து பேசி, கவலைப்படுபவர், மதத்தைக் கடந்து, பல மதங்கள், மத நம்பிக்கையுள்ளவர்கள், மத நம்பிக்கையே இல்லாதவர்கள் உள்ள உலகத்திற்கே குருவாம்; லோக குருவாம். கல்லைத் தூக்கி வைத்து அதுதான் சாமி என நம்ப வைத்த கூட்டம் ஆயிற்றே அந்தக் கூட்டம்.


சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியவைகள், (அவாள் மொழியில் உபதேசம் செய்தவைகள்) தெய்வத்தின் குரல் எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. மத பீடத்தின் தலைவர் தெய்வமாம். கல்லையே சாமியாக்கியவர்களுக்கு மனிதனைத் தெய்வமாக்குவது ஒன்றும் கடினமல்ல. தெய்வத்திற்கும் மேலானவர்கள் என தங்களைக் கூறிக் கொள்பவர்களுக்கு, ஒருவரைத் தெய்வமாக்குவது ஒன்றும் பெரிய விசயமில்லை. மகா பெரியவாள் சங்கராச்சாரி கூறுகிறார், வர்ணாஸ்ரம தர்மம் நீடிக்க வேண்டுமாம்; நியாயப்படுத்துகிறார். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் வகைப்பாடு சமுதாயத்தில் இருக்க வேண்டுமாம். ஒரு பிரிவினர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலைத்தான் செய்ய வேண்டுமாம். வேறு தொழிலுக்குப் போகக் கூடாதாம். ஒவ்வொருவருக்கும் ஒரு தர்மம் இருக்கிறது என குல தர் மத்தைத் தெய்வத்தின் குரலாக வலியுறுத்துகிறார் சங்கராச்சாரி.


மேலும் கூறுகிறார் மகா பெரியவாள்; நான் சற்று கம்யூனலாக (communal)  பேச விரும்புகிறேன். பிற சமுதாயத் தில் நலிந்தவர்களைக் காக்க அந்த சமுதாயத் தலைவர்கள் இருக்கிறார். ஆனால் பிராமண சமுதாயத்தில் வசதியானவர்கள் இருந்தாலும், நலிவடைந்த பிராமணரைக் காக்க யாரும் முன்வருவது இல்லை.


நலிவடைந்தவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய இந்து மட பீடாதிபதி எப்படி ஒரு சாராருக்கு - பிராமணர்களுக்கு ஆதரவாகப் பேசிக், கவலைப்படுகிறார். ஒடுக்கப்பட்டவர்கள் இந்த 'தெய்வத்தின் அருள்வாக்கை' அவசியம் படிக்க வேண்டும்.


பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சியின் முயற்சியில் கொண்டு வரப்பட்ட வகுப்புரிமை ஆணை (Communal G.O.)கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நிலவிய பார்ப்பனர் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியது; ஆனால் அவர்களது பிரதிநிதித்துவத்தை மறுக்கவில்லை. அப்படிப் பட்ட கம்யூனல் ஜி.ஓ.வை எதிர்த்து போராடப் பார்ப்பனர்களை ஊக்குவிக்கிறார். காலம் காலமாக பார்ப்பனர்கள் செய்துவரும் தந்திரத்தையும் கையாளுகிறார். முன்னேறிய ஜாதியினரையும் இணைத்துப் போராட அழைக்கிறார். ஆனால் பார்ப்பனர் அல்லாத இந்துக்களில் அந்த முன்னேறிய ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.


தனித்து நின்று, எதிர்த்துப் போராடிய வரலாறு பார்ப்பனர் களுக்கு கிடையாது. அவர்களது ஆதிக்கத்திற்கு இராமயணத்தில் வாலியைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கு சேவை செய்திடும் வகையில் அனுமார்களை உருவாக்குவார்கள். அதே அணுகுமுறையைத்தான் லோககுரு எனப்படும் சங்கராச்சாரியாரும் கம்யூனல் ஜி.ஓ. எதிர்ப்பில் முன்னேறிய ஜாதியினருக்கும் அழைப்பு விடுக்கிறார். ஒரு ஆன்மீகவாதி எப்படி செயல்பட்டார் என்பதைக் கவனிக்க வேண்டும்.


வகுப்புரிமை ஆணையினை எதிர்த்து காந்தியார் வரை சென்றார்கள்


1928-ஆம் ஆண்டில் வகுப்புரிமை ஆணை நடை முறைக்கு வந்து படிப்படியாக விரிவாக்கம் பெற்றது. ஒடுக்கப் பட்டவர்களுக்கு முழுமையாக இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 1947-ஆம் ஆண்டு திருத்தப்பட ஆட்சியாளர்கள் முயற்சி எடுத்தனர். அப்படி முயற்சி எடுத்தவர் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரி (முதலமைச்சர்)யாக இருந்த ஒழுக்க சிலர், நேர்மை யாளர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள். வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். சமூக நீதியின் பால் அக்கறை மிக்கவர் என்பதால், ஆதிக்கவாதிகளான பார்ப் பனர்களால் தாடியில்லாத ராமசாமி என விமர்சனம் செய்யப் பட்டனர்.


1928-ல் நடைமுறைக்கு வந்த வகுப்புரிமை ஆணையின்படி ஒவ்வொரு 12 பணி காலியிடங்களுக்குமான பிரதிநிதித்துவ எண்ணிக்கை அறிவுறுத்தப் பட்டிருந்தது. 1947-ல் கொண்டு வரப்பட்ட வகுப்புரிமை ஆணையின்படி ஒவ்வொரு 14 காலியிடங்களுக்குமான பிரதிநிதித்துவத்திற்கு ஆணையிடப் பட்டிருந்தது. 1947-ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கென தனியாகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்த இரண்டு வகுப்புரிமை ஆணைகளிலும் பார்ப்பனர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. 1928-ல் பார்ப்பனர்களுக்கு ஒவ்வொரு 12 காலி யிடங்களுள் 2 இடங்கள் (16%) பிரதிநிதித்துவம், அளிக்கப் பட்டது. 1947-ஆண்டு ஆணையில் ஒவ்வொரு 14 காலியிடங் களுள் 2 இடங்கள் (14%) பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்டது. மக்கள் தொகையில் 3 விழுக்காடு அளவே உள்ள பார்ப்பனர்களுக்கு அதற்கு மேலாகவே இரண்டு வகுப்புரிமை ஆணைகளிலும் அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஏகபோகமாக அனுபவித்து வந்த பார்ப்பனர்களுக்குத் தங்களுடைய ஏகபோகம் குறைக்கப்பட்டு உள்ளதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.


சென்னை மாகாணப் பார்ப்பனர்கள் தூதுக் குழுவாக பம்பாய் சென்று காந்தியார் அவர்களைச் சந்தித்து எழுத்துப் பூர்வமாக முறையிட்டனர். காங்கிரசு கட்சியின் சென்னை மாகாணப் பிரதம மந்திரியாக இருந்த ஓமந்தூர் ராமசாமி அவர்களிடம் விளக்கம் கேட்டு காந்தி கடிதம் அனுப்பினார். காந்தியும் வர்ணா ஸ்ரமதர்மத்தில் நம்பிக்கை உள்ளவர். காந்தியின் கவனத்திற்கு, அரசின் புள்ளி விபரங்களைச் சேகரிக்கச் சொல்லி பார்ப்பனர்கள் எவ்வளவு அதிகமாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளார்கள் என விரிவாக ஓமந்தூரரர் பதில் அனுப்பினார். காந்தியார் பதிலைப் படித்துப் பார்த்தார். உண்மை நிலையைப் புரிந்து கொண்டார். ஏற்கனவே முறையிட்ட பார்ப்பனர் தூதுக் குழு மறுபடியும் காந்தியாரைச் சந்தித்து தங்களது முறையீட்டின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனக் கேட்டனர். அதற்கு பதிலளிக்கிறார் காந்தியார்: 'வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணர் களாகிய நீங்கள் வேதம் படித்து, புரோகிதம் பண்ணிடும் வேலையை செய்வதுதானே! நீங்கள் எதுக்கு மருத்துவம் மற்றும் பிற கல்வியைக் கற்க வேண்டும், அரசாங்க வேலைக்கு செல்ல விருப்பப்படலாமா? வர்ணாஸ்ரம தர்மத்தின் படி நடந்து கொள்ளுங்கள்' என்றாராம்.


காந்தியார் உண்மைநிலை புரிந்து, விழித்துக் கொண்டதைப் பார்ப்பனர்கள் உணர்ந்து கொண்டனர். இனி காந்தியார் பார்ப்பனருக்கு ஆதரவாக இருக்க மாட்டார் என தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்வு நடந்தது 1948-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஓராண்டு முடிவதற்குள் காந்தியார் மராட்டிய பார்ப்பனர் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியாரை எதிர்த்து வந்த தந்தை பெரியார், காந்தியார் கொல்லப்பட்ட பின்னர் இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டும் என தெரிவித்தார். அதுவரை எதிர்த்து வந்த காந்தியாரை, பெரியார் போற்றியதற்கு காரணம் என்ன என விமர்சனம் வந்த பழைய எதிர்க்கப்பட்ட காந்தியார் வேறு; இறந்த காந்தியார் வேறு என ரத்தினச் சுருக்கமாகக் கூறி முடித்தார் தந்தை பெரியார். பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட, மற்றவர்களைச் சூழ்ச்சி செய்து அடக்கி வைத்திட எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு வகுப்புரிமை ஆணை விசயத்தில் எப்படி காந்தியார் வரை சென்றார்கள் என்பதுவும் சமூக நீதி இந்த மண்ணில் திராவிட இயக்கம், தந்தை பெரியாரால் வேரூன்றியது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


அண்ணா தலைமையிலான


தி.மு.க. ஆட்சியில் மருத்துவப் படிப்பில் விடுதலையின் வேண்டுகோள் நிறைவேற்றம்


அறிஞர் அண்னா அவர்கள் 1967-ஆம் ஆண்டில் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற மருத்துவப் படிப்பு (M.B.B.S., B.D.S.) சேர்க்கைக்கான தகுதியில் குறைந்த பட்ச பள்ளி இறுதித்தேர்வு மதிப்பெண் தேவையில்  அதுவரை இருந்த 50லிருந்து 60ஆக உயர்த்தப்பட முயற்சிகள் நடை பெற்றன. குறைந்தபட்ச மதிப்பெண் உயர்வைக் குறிப்பிட்டு விண்ணப்பம், விளக்கப்படிவங்கள் கூட அச்சடித்த நிலையில் இது குறித்து அறிந்த திராவிடர் கழகம், விடுதலை ஏட்டில் தலையங்கம் தீட்டியது. குறைந்தபட்ச மதிப்பெண்ணை உயர்த்துவதால் கிராமப்புறத்து ஒடுக்கப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போய்விடும். பழைய நிலையிலே மதிப்பெண் தகுதி இருக்க வேண்டும் என தலையங்கம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விடுதலை தலையங்கத்தைப் படித்த முதல்வர் அண்ணா, நிலைமை உணர்ந்து உரிய அதிகாரிகளிடம் மாற்றிடக் கூறுகிறார். விண்ணப்பங்கள் அச்சாகி வழங்கப்படும் நிலையில் மாற்றம் சாத்தியமில்லை என அதிகாரிகள் கூறியதற்கு, முதல்வர் அண்ணா, பரவா யில்லை; மீண்டும் அச்சடித்து, பழையபடியே குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியுடன் விண்ணப்பிக்க ஆவண செய் திடுங்கள் என உத்தரவிட்டார். மருத்துவக் கல்வியில் சேர்ந்திட தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண் தொடர்வதில் - அதனால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்திடும் - என விடுதலை ஏடு சமூக நீதிக்குக் குரல் கொடுத்து சாதித்த நிகழ்வுகளும் உண்டு.


சமூக நீதி வழங்கலை தவிர்த்திடும் தேசிய கல்விக் கொள்கை 2020


ஏறக்குறைய நூறாண்டு காலமாக சமூக நீதிக் கொள்கை வலியுறுத்தப்பட்டு, வளர்ச்சி பெற்று வருகின்ற வேளையில், வழங்கப்படும் சமூக நீதியை தவிர்த்து, அதனை மறுக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி தேசிய கல்விக் கொள்கையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி எனும் நடைமுறையினை நேரடியாக மறுக்காமல், அதனை பலவீனப்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


நீட் தேர்வும், கலைஞர் ஆட்சியின் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்ற சட்டமும்


மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயில, அனுமதி பெற நீட் தேர்வினை வெகு தந்திரமாக, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு செய்து வருகிறது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக அணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் நுழைவுத் தேர்வினை எதிர்த்து வருவது அனைவருக்கும் தெரியும். கரோனா காலத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, 21 நாள் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு பரப்புரையினை, கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை திராவிடர் கழகம் நடத்தியது. நீட் தேர்வு நடத்திட மருத்துவ கவுன்சில் ஆணையினைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கலைஞர் தலைமயில் தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வே தேவையில்லை என ஒரு தனிச்சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு இன்றும் நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சியின் பொழுது தவறான வழிகாட்டுதல் காரணமாக நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. 21 ஆண்டுகள் தொடர்ந்து போராடி நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டது. இன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கூடிய சட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு நுழைவுத் தேர்வே தேவையில்லை என சட்டம் இருந்தாலும் நீட் தேர்வு, மருத்துவ கவுன்சிலின் ஆணையின் படி நடத்தப்படுகிறது. இது சட்டத்தையே மதிக்காத தன்மையில்லையா?


மருத்துவ கல்வி பயில மட்டும் நுழைக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் மூலம் அனைத்து கல்லூரிக் கல்விக்கும் நுழைவுத் தேர்வு எழுதிட வேண்டும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது. மாநில அரசு நடத்திடும் பள்ளி இறுதித் தேர்வுகளை தேசிய கல்விக் கொள்கை மதிப்பற்றதாக ஆக்கிவிடும். எனவே தேசிய கல்விக் கொள்கை முழுவதுமாக எதிர்க்கப்பட வேண்டும்.


நீதிமன்றத் தீர்ப்புகளால் தடைப்படும் சமூக நீதி


மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்படும் சமூக நீதியினை வழங்கிட இயற்றப்படும் இட ஒதுக்கீட்டு சட்டங்கள், பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் ஆதிக்க சக்திகளால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவது வழக்கமான வாடிக்கை ஆகிவிட்டது. நீதி வழங்கக் கூடிய நிலையில் உள்ள உயர்ஜாதி நீதிபதிகளும் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துகின்ற வகையில், மறுக்கின்ற வகையில் தீர்ப்புகள் வழங்கி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிக்கான இடங்களில் 32 இடங்கள் நிரப்பப்பட்டு அதில், தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண் நீதிபதி அண்மையில்தான் பணிநிறைவு பெற்றார். தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நீதிபதியையும், மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நீதிபதியையும் தவிர்த்தால் இதர நீதிபதிகள் அனைவரும் பார்ப்பன, உயர்ஜாதியினைச் சார்ந்தவர்களே. இது சமூக நீதிக்குப் புறம்பான நிலைமையாகும். மாவட்ட நீதிபதி நியமனம் வரை இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள நிலையில் உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு மூலம் நியமனம் நடந்தால்தான் முழுமையான சமூக நீதி, தடை ஏதுமின்றி கிடைக்கும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் பிற அரசு பதவிகளுக்கான இட ஒதுக்கீடு போலவே சமூக நீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதி செயல்பாட்டாளர்களின் கோரிக்கை. அதுவே ஒடுக்கப்பட்ட மக்களின் முழுமையான உயர்வுக்கு, மற்றவர்களுடன் அவர்களும் சமநிலை அடைவதற்கு வழிவகுக்கும்.


மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பு நடைமுறை தற்காலிகமானதே;


மருத்துவக் கல்வியில் மத்திய தொகுப்பிற்கு ( All India Quota) ) ஒவ்வொரு மாநிலமும் தங்களது மாநில மருத்துவக் கல்லூரி இடங்களிலிருந்து வழங்கிடும் முறை 1984-ல் வழங்கப்பட்ட உச்ச மன்ற தீர்ப்பின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டம் இயற்றப்படவில்லை மருத்துவ கல்லூரி அனுமதி பற்றிய மருத்துவ கவுன்சில் சட்டமும் திரும்பப் பெறப்பட்டு, தேசிய மருத்துவ ஆணைய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய தொகுப்பினை நீட்டிக்கச் செய்திடும் சட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.


1984-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி நீதிமாண்பமை முனைவர் ஏ.கே. ராஜன் எழுதி அண்மையில் வெளியிட்ட ' Penalty for Progress ' எனும் ஆங்கில புத்தகத்தில் விரிவாக, விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் நீதிமாண்பமை ஏ.கே. ராஜன், அவர்கள் மாவட்ட நீதிபதி, சட்டங்களை இயற்றிடும் அதிகாரம் மிக்க சட்டத் துறையின் செயலாளராகப் பணியாற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். நீதித் துறையிலும், சட்டத் துறையிலும் ஆழ்ந்த, தெளிந்த சிந்தனை, செயல்பாடு மிக்க நீதிமாண்பமை ஏ.கே. ராஜன் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.


1984-ஆம் ஆண்டில் பிரதீப் ஜெயின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசமைப்புச் சட்ட பிரிவு 142-ன் கீழ் மருத்துவக் கல்லூரி இடங்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை மாநில அரசு மத்திய அரசு வசம் அளித்திட வேண்டும் என்று கூறியது. பின்பு இது குறித்து பாராளுமன்றம் சட்டம் இயற்றிட வேண்டும் என அரசமைப்புச் சட்ட விதி குறிப்பிடுகிறது.


பின்னர் இயற்றப்பட்ட மருத்துவ கவுன்சில் சட்டத்தில் மருத்துவக் கல்லூரி அனுமதி பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தது. பின்னர் மருத்துவ கவுன்சில் சட்டமும் திரும்பப் பெறப்பட்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உருவாக்கப்படுகிறது. அந்தச் சட்டமும் மருத்துவக் கல்லூரி அனுமதி குறித்தே விளக்குகிறது.


உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவுறுத்திய மாநிலங்களின் தங்களது மருத்துவக் கல்லூரி இடங்களை மத்திய அரசுக்கு அளிப்பது பற்றிய விபரம் எதுவும் மருத்துவ கவுன்சில் சட்டத்திலும், பின்னர் தேசிய மருத்துவ ஆணைச் சட்டத்திலும் குறிப்பிடப்பட வில்லையாதலால், மாநிலங்கள் மத்திய தொகுப்பு மருத்துவக் கல்லூரி இடங்களை அளிப்பதற்கான பாராளுமன்ற சட்ட உருவாக்கம் நடைபெறவே இல்லை என்பது தெளிவாகிறது.


இந்த விளக்கத்திலிருந்து மத்திய அரசுக்கு மாநிலங்கள் அளிக்க வேண்டிய மருத்துவ கல்லூரி இடங்கள் குறித்த சட்டம் உருப்பெறாததால் மாநிலங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றாகிறது. அந்த வகையில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய மாநிலங்கள் மருத்துவ கல்லூரி இடங்களை அளிப்பது (மத்திய தொகுப்பு) நிரந்தர மாக்கப்படவில்லை. தற்காலிக நிலையாகத்தான் நீடிக்கிறது என்பதே உண்மைநிலை.


சமூக நீதி, கொடை அல்ல; உரிமையே!


சுதந்திரம் பெற்றதாக கூறும் 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள சமூக நீதியை நடைமுறைப்படுத்தும் இட ஒதுக்கீடு உரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை; சட்டப்படி அளிக்கப்படுவதற்கும் தடைகள் பல உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அளிக்கபடும் பிச்சை அல்ல; சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய உரிமை. இதை மருத்துவ மாணவர்களாகிய, பேராசிரியர்களாகிய நீங்கள் ஊன்றிப் படித்து கருத்துத் தெளிவு பெறுங்கள்; பின்னர் கருத்துகளைப் பிரச்சாரம் செய்யுங்கள் - உங்களது மாணவர் தோழர்களிடம் பிரச்சாரம், வீதிப் பிரச்சாரம்; திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் சமூக நீதிக் கருத்துக்களை எடுத்துச் செல்லுங்கள். களம் இறங்கிப் போராட வர வேண்டாம். அதை திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை முழுமையாக பெற்றிட அமைதிவழியில், சட்ட ரீதியான போரில் ஈடுபடுவோம். வெற்றி பெறுவோம். வாழ்க சமூக நீதிக் கொள்கை! முழுமையாகப் பெறுக இட ஒதுக்கீடு உரிமை!


காப்போம் மாநிலங்களின் உரிமைகளை!


வாழ்க தந்தை பெரியார்! வாழ்க பகுத்தறிவு!


இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு தமிழர் தலைவர் விளக்கமாக பதிலளித்தார். மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழக காணொலிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று, பங்கேற்றோர் சமூக நீதிக்கான கருத்து ஊக்கம் பெற்றனர். நன்றி கூறிக் கலைந்தனர்.


செய்தித் தொகுப்பு: வீ. குமரேசன்


No comments:

Post a Comment