மாநிலப் பிரச்சினைகளில் தலையிடுவதா?
கரோனா நிதி வழங்குவதில் புதுவையை திட்டமிட்டு புறக்கணிப்பதா?
மத்திய அரசுமீது புதுவை முதல்வர் சாடல்
புதுச்சேரி,ஆக.29, நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகள், கல்விக் கொள்கைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று (ஆக.28) காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில முதல் அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத் தினார். இந்த ஆலோசனையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயண சாமியும் கலந்துகொண்டு தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தின் போது முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:- மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துவிட்டு உடனடியாக அமல்படுத்த பார்க்கிறது. இதற்கு தென் மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டு வருகிறது. புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை கரோனா வைரஸ் தொற்றினால் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு தொடர்பாக பிரதமர் 5 முறை காணொலிமூலம் பேசினார். அவரிடம் கரோனா நிவாரண பணிகளுக்கு நிதி கேட்டேன். ஆனால் அதற்கு இதுவரை பதில் இல்லை. புதுவை மாநிலத்தில் கரோனாவுக்காக ரூ.200 கோடி செலவு செய்துள்ளோம். ஆனால் மத்திய அரசு தந்தது வெறும் ரூ.3 கோடிதான். ஆனால் பக்கத்து மாநிலங்களுக்கு எல்லாம் உதவு கிறார்கள். நாங்களும் இந்தியர்கள் தானே. புதுவையை திட்டமிட்டு மத்திய அரசு புறக்கணிக்கிறது.
மாநில பிரச்சினைகளிலும் மத்திய அரசு தலையிடுகிறது. எங்கள் மாநிலத்தில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி அதிக அளவில் கட்டுகிறோம். ஆனால் எங்களுக்கு உரிய பங்கினை தரவில்லை. எங்கள் மாநிலத்தில் வசூலிக்கப்படும் நிதி வெளியே எடுத்து செல்லப்படுகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
No comments:
Post a Comment