'சமூகநீதி - விடுதலைக்கு முன்பு மக்கள் போராட்டத்தினால்! விடுதலைக்கு பின்பு சட்டப் போராட்டத்தினால்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

'சமூகநீதி - விடுதலைக்கு முன்பு மக்கள் போராட்டத்தினால்! விடுதலைக்கு பின்பு சட்டப் போராட்டத்தினால்!'

கர்நாடக சமூகநீதி வரலாறுபற்றி தமிழர் தலைவரின் தொடர் பொழிவு - 4



'மூன்று  நூற்றாண்டுகளில் சமூகநீதி' - ஒரு வரலாற்றுப் பார்வை' எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆற்றி வரும் தொடர் நிகழ்வின் நான்காம்  பொழிவினை 26.8.2020 அன்று மாலை காணொலி வாயிலாக வழங்கினார். முந்தைய பொழிவுகளில் மராட்டிய மண்ணின் சமூக நீதி வரலாறு பற்றி எடுத்துரைத்ததன் தொடர்ச்சியாக நேற்றைய பொழிவில் கர்நாடகத்தில் சமூகநீதி வரலாறு பற்றிய செய்திகளை தமிழர் தலைவர் விரிவாக கூறினார்.


மொழிவழி மாநிலங்கள் தோன்றுவதற்கு முன்பு - நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இன்றைய கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகள் சென்னை ராஜதானியில் இருந்தன. அந்த வகையில் சென்னை ராஜதானியில் ஏற்பட்ட சமூகநீதிக்கான உணர்வு வெளிப்பாடுகள், சமூக ஆதிக்கவாதிகளான பார்ப்பன எதிர்ப்பு உணர்வுகள் கர்நாடகப் பகுதியிலும் எழுந்தன. கூடுதலாக விடுதலைக்குப் பின்னர் ஏற்பட்ட மைசூர் அரசாங்கம், அதற்கு முன்னர் மைசூர் மன்னராட்சியின் கீழ் இருந்தது. கோல்காபூர் மன்னர் சத்ரபதி சாகுமகராஜ் அவர்களைப் போலவே  மைசூர் மன்னர் பரம்பரையினர் சமூகநீதி உணர்வுடன் ஆட்சி செய்து வந்தனர். அதற்கும் முன்பாக 12ஆம் நூற்றாண்டிலேயே லிங்காயத் எனப்படும் வீரசைவர் சமுதாய பிரிவினர், பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து தாங்கள் வைதிக மதத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என தனித் தன்மை யுடன் வாழ்ந்த வரலாறும் கர்நாடக மண்ணில் உண்டு.


மைசூர் மன்னராட்சியில்


சமூகநீதிக்கான மில்லர் அறிக்கை


மைசூர் மன்னராட்சியில் இருந்த பொழுது 1921ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்கள் மன்னரைச் சந்தித்து கல்வியிலும், வேலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய விகிதத்தில் இடம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததையொட்டி அன்றைய நீதிபதி சர் லெஸ்லி மில்லர் தலைமையில் அதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திட மன்னர் உத்தரவிட்டார். அந்த அறிக்கையின்படி 50 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப் பட்டது. அதனை எதிர்த்து சட்டமன்றத்தில்  பொது மக்களைப் பிரதிநிதிப்படுத்திய பார்ப்பன உறுப் பினர்கள், சமூகநீதிக்கு எதிராக கருத்தினை தெரிவித்தனர். இடஒதுக்கீட்டினால் தகுதி, அரசுப் பணியில் திறமை போய்விடும்; அரசுப் பணி என்பது பிரதிநிதித்துவ அமைப்பு அல்ல என்று இடஒதுக்கீட்டு எதிராகக் கருத்தினை வெளிப்படுத்தினர். அன்றைய மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த விஸ்வேஸ் வரய்யாவும் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டைஎதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பாசாங்கு செய்தார். இந்தக் குறிப்புகள் அனைத்தும் 1917இல் உருவாக்கப்பட் பிரஜா மித்ர மண்டலி அமைப்பினைச் சார்ந்த தலைவர்கள் ஒடுக்கப்பட்டோர் உரிமைபற்றி அரசிடம் முறையிட்ட பொழுது மில்லர் அறிக்கையில் பரிந்துரைத்தவாறு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


மூத்த வழக்கறிஞர் எல்.ஜி. ஹாவனூர் தலைமையில் பின்னர் அமைக்கப்பட்ட முதலாம் பிற்படுத்தப் பட்டோர் ஆணைய அறிக்கையில், இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


கர்நாடகத்தில் பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் லிங்காயத் எனப்படும் வீர சைவர்களும் (15%), ஒக்கலிகா கவுடா வகுப்பினருமே (11%), ஆவர். பார்ப்பனர் அல்லாதா ருக்கு இடஒதுக்கீடு பெறுவதில் இந்த இரு சமுதாயத் தலைவர்களும் அளப்பரிய பங்களிப்பினை வழங்கி யுள்ளனர்.


1954ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட காகாக லேல்கர் எனும் மராத்தியப் பார்ப்பனர் தலைமையில் அமைக்கப்பட்ட நாடு தழுவிய முதலாவது பிற்படுத் தப்பட்டோர் ஆணைய அறிக்கையில் 'ஜாதி அடிப் படையில் இடஒதுக்கீடு கூடாது' என சமூகநீதிக்கு எதிராகப் பரிந்துரைக்கிறார். அந்த அறிக்கை நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை. சமூகநீதிக்கு எதிரான காகாகலேல்கர் பரிந்துரையினை எதிர்த்து 1956ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் ராணி பெலு பகுதியில் எல்.ஜி. ஹாவனூர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத் தப்பட்ட மக்களைக் கூட்டி மாநாடு நடத்துகிறார். காகாகலேல்கரின் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்தும், ஜாதிஅடிப்படையில்தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. மாநாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தலைவர்கள் பீமப்ப நாயக்கர், பகவலிங்கப்பா ஆகியோர் கலந்து கொண்டு சமூகநீதிக்கான குரலை வலிந்து எழுப்பினார்கள்.


1956க்குப் பிந்தைய மாநில அரசு


மொழிவழி மாநிலங்கள் ஏற்பட்டதற்குப் பின்னர் மைசூர் அரசாங்கத்தில் இடஒதுக்கீட்டிற்கான சட் டங்கள் உருவாக்கப்பட்டன. சமுதாயத்தில் பார்ப்பனர் தவிர மற்ற அனைவரும் பிற்படுத்தப் பட்டவர்கள் என அறிவிக்கப்படுகிறார்கள். இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்து வழக்குத் தொடுக்கின்றனர். நாடு விடுதலை பெறு வதற்கு முன்னர் மக்கள் போராட்டத்தின் மூலம் சமூகநீதி பெற்று வந்த நிலைமைகள் மாறி சட்டப் போராட்டத்தின் மூலம் சமூகநீதி பெறக் கூடிய நிலை மைகள் உருவாகின. சமூகநீதி பற்றிய வியாக்கியா னங்களை நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறு விதமாக   தந்தனர்; இன்னும் தந்து கொண்டிருக்கின்றனர். அரசியல் சட்டத்தில் உள்ள சமூகநீதி பற்றிய விதிகள் தெளிவாக உள்ள நிலையில் அதுகுறித்து விளக்கங்கள் தெளிவில்லாமல் குழப்பம் தருவதாக நீதிமன்றங்கள் வழங்குகின்றன என எல்.ஜி. ஹாவனூர் தனது அறிக்கையில் பின்னாளில் குறிப்பிடுகிறார். மைசூர் மாநில அரசு பிறப்பித்த சமூகநீதிக்கான சட்டங்களை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றத்திற்குச் சென் றார்கள். அடுக்கடுக்காகத் தொடர்ந்து வழக்குகளைத் தொடுத்தனர். 1963இல் பாலாஜி வழக்கு 1985இல் கே.சி. வசந்தகுமார் வழக்கு என மைசூர் மாநிலத்தை மய்யப் படுத்தி உச்சநீதி மன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற்றனர். உச்சநீதிமன்றத்தில் இருந்த பெரும்பான்மையான நீதிபதிகள் உயர்ஜாதிப் பார்ப்பனர்களே. விடுதலை அடைந்த பின்னர் உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக வந்தவர். தமிழ்நாட்டில் செய்யாறு அருகே உள்ள வாழ்குடை கிராமத்தைச் சார்ந்த பார்ப்பனர் பதஞ்சலி சாஸ்திரி ஆவார். அந்நாள் தொடங்கி இந்நாள் வரை சட்டமன்றங்கள் சமூகநீதிக்குச் சாதகமான சட்டங்களை இயற்றினாலும், தங்களது வியாக்கியானங்களின் மூலம் சமூகநீதி வழங்குவதைத் தடைப்படுத்திடும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமூகநீதி சார்ந்த சட்டப் போராட்டத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து தொடுக் கப்பட்ட, மேல் முறையீடு செய்யப்பட்ட  வழக்குகளே பெரும் பாலானவை. அந்த வகையில் இடஒதுக்கீட் டிற்கு பலவித சட்டங்களை, அரசாணைகளைப் பிறப்பித்த மாநிலம் கர்நாடகம்.


தேவராஜ் அர்ஸ் நியமித்த


பிற்படுத்தப்பட்டோருக்கான முதலாம் ஆணையம்


கர்நாடக மாநில சமூகநீதி வரலாற்றின் சாதனையாக தேவராஜ் அர்ஸ் (1972-1977 & 1978-1980) முதலமைச் சராக இருந்தபொழுது பிற்படுத்தப்பட்டோருக்கான முதலாம் ஆணையம் எல்.ஜி. ஹாவனூர் தலைமையில் அமைக்கப்பட்டது. அது தனது ஆய்வுப் பூர்வமான அறிக்கையினை 1975ஆம் ஆண்டில் கர்நாடக அரசிடம் அளித்தது.


சென்னை ராஜதானியில் 1916இல் தோன்றிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சியைப் போலவே, அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு எழுச்சி பெறத் தொடங்கியது. மைசூர் சமஸ்தானத்தில் ஆட்சி செய்த மன்னர்களும், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர் களும் அனைவருக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூகநீதி கிடைத்திட வழி ஏற்படுத்தினர். இருப்பினும் ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்கள் தங்களுக்குள் உட்பிரிவுகள் இருந்தாலும் ஒரே வகையினராகவும் (Homogeneous) பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரேவித அடக்குமுறைக்கு ஆளானாலும் தங்களுக்குள்ள பிரிவுகளின்படி பல வகையினராக (Heterogeneous) இருந்து வந்தது, இன்னும் தொடர்ந்து வருவது ஆதிக்கவாதிகளான பார்ப்பனர் களுக்கு சாதகமாக இருக்கிறது. அவர்களது ஏகபோக ஆளுமைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இந்தநிலை மாறி ஒடுக்கப் பட்டோர் அனைவரும் ஓர் அணியில், ஓர் குடையின் கீழ் செயல்பட்டால்தான் சமூகநீதி முழுமையாகக் கிடைக்கும்.


மேற்கண்டவாறு தமிழர் தலைவர் தான் ஆற்றிய பொழிவில் குறிப்பிட்டார்.


வழக்கம்போல பொழிவில் கூறப்பட்ட செய்திகள், குறிப்புகள் குறித்த விளக்கங்களை காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற தோழர்கள் தமிழர் தலைவரிடம் கேட்டு விரிவான பதில்களைப் பெற்றனர்.


தமிழர் தலைவர் ஆற்றிய பொழிவுகள் முழுமையாக 'விடுதலை' ஏட்டில் பின்னர் வெளி வரும்.


தொகுப்பு: வீ. குமரேசன்


No comments:

Post a Comment