0 சதவீதம் - 50 சதவீதம் தீர்ப்பும்,வரவேற்பும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

0 சதவீதம் - 50 சதவீதம் தீர்ப்பும்,வரவேற்பும்

கோ.கருணாநிதி



மருத்துவக் கல்வியில், ஒவ்வோர் ஆண்டும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை தங்கள் மருத்துவக் கல்லூரிகளின் பட்டப் படிப்பு இடங்களில் 15 சதவீதமும், பட்ட மேற்படிப்பு இடங்களில் 50 சதவீதமும், அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கும் திட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பது போல், ஓபிசி பிரிவினர்க்கு (பிற்படுத்தப்பட்டோர்க்கு) இட ஒதுக்கீட்டைத் தராமல் மத்திய அரசு மறுத்து வந்தது.


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள், விடுதலையில் மே மாதம் 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்தன. உடன் நீதிமன்றத்தையும் அணுகினார்கள். சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2020 அளித்த தீர்ப்பில், அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.


இந்தத் தீர்ப்பைப் பலரும் வரவேற்று உள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஓபிசி பிரிவினர்க்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரியது சரியா? 27 சதவீதம் கேட்டிருந்தால், நீதிமன்றம் உடனே அளித்திருக்குமா? போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.


அகில இந்தியத் தொகுப்பு பற்றிய சில செய்திகள், நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படையில் சில விவரங்களை நாம் தெரிந்து கொண்டால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடையாக அமையும்.


அகில இந்தியத் தொகுப்பின் வரலாறு:


வெளிமாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், 1984-ல், உச்சநீதிமன்றம், “அகில இந்தியத் தொகுப்பு” ALL INDIA QUOTA என்ற முறையை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் உருவாக்கியது. 1984-ல் மத்திய அரசுக்கு எதிராக, பிரதீப் ஜெயின், தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தான், இந்தத் திட்டம் துவங்கப்பட்டது.   இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், அதன்பிறகு வந்த தீர்ப்புகளின் அடிப்படையிலும், தற்போது மருத்துவக் கல்வி பட்டப் படிப்பில் அதாவது எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில், 15 சதவீத இடங்களையும், முதுநிலை மருத்துவக் கல்வியில், அதாவது எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். (MD/MS, MDS)  ஆகிய படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளித்திட வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கியது.


இவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களில் இட ஒதுக்கீடு கிடையாது. முழுவதும் தகுதி அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறியது.


2007ல் அபய்நாத் எதிர் ஒன்றிய அரசு வழக்கில், மத்திய அரசு விண்ணப்பித்ததன் அடிப்படையில், அகில இந்தியத் தொகுப்பிற்கான மருத்துவ மேற்படிப்பில் SC,ST ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டு முதல், மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்புக்கு எஸ்.சி. பிரிவினர்க்கு 15 சதவீதமும், எஸ்.டி. பிரிவினர்க்கு 7.5 சதவீதமும் தரப்பட்டது. 2008-09 கல்வி ஆண்டு முதல், பட்டப்படிப்பில் இந்த இட ஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு நீடிக்கப்பட்டது.


சரியாக இதே காலத்தில் தான், 2006ம் ஆண்டு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்


பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி இடஒதுக்கீடு 27 சதவீதம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட் டது. ஆனால், அந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தடை செய்தது. இறுதியாக, ஏப்ரல் 2008-ல் தான் சட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வந்தது.


மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில், 2009 முதல் அதுவும் தவணை முறையில், ஒவ்வோர் ஆண்டும் 9 சதவீதம் என்ற அளவில், பெரும்பாலான கல்வி நிலையங்கள் நடைமுறைப்படுத்தின.


அப்போதும் கூட, மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு குறித்து எந்தவிதச் சட்டமும் மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை.


இந்தச் சூழலில், 2010 மற்றும் 2012ல் மருத்துவக் கல்விக் கழகம், இருக்கின்ற விதிகளில் சில திருத்தங்கள் செய்து, மருத்துவம், பல் மருத்துவக் கல்விகளுக்கு, “நீட்” என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், அதில் மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தது.


இந்த விதியின்படி, அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும்போது, அந்தந்த மாநில இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஆனால், இந்தக் கலந்தாய்வை நடத்தும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் மத்திய பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம் (DGHS), மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) ஆகியன இதனைப் பின்பற்றவில்லை.


எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு, 15 மற்றும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்துவிட்டு, மீதம் உள்ள இடங்களை, பொதுப்போட்டி என அறிவித்து விட்டனர். ஓபிசி பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்ட சதவீதம் பூஜ்யம் மட்டுமே.


இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில், 2013 முதல் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் தந்த இடங்கள் 72,491. இதில் ஓபிசி பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்ட சதவீதம் பூஜ்யம்.


அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும் விவரமே,


2018-ல் தான் பொதுவெளியில் தெரிந்தது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள், இது குறித்துப் பிரச்சினையை வெளிக் கொணர்ந்தனர். அதன் அடிப்படையில், அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், ஓபிசி பிரிவினர்க்கான நாடாளுமன்றக் குழு தலைவர் திரு.கணேஷ் சிங், மக்களவையில் மார்ச் 2018-ல் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறையின் இணை அமைச்சர், ஓபிசி பிரிவினர்க்கு, மத்திய அரசு மருத்துவக் கல்வி நிலையங்களில், 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்று பதிலளித்தார். அகில இந்தியத் தொகுப்பு பற்றி ஒன்றும் கூறவில்லை. தொடர்ந்து அவ்வப்போது பல உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினாலும், இதே பதிலைத்தான் அமைச்சர்கள் தந்தனர்.


இறுதியாக, நவம்பர் 1, 2019-ல் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் பி.வில்சன் எழுதிய கடிதத்திற்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், 18.12.2019 அளித்த பதிலில், இப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சலோனி குமாரி என்பவர் தொடுத்த வழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதற்குப் பின்னர், நடப்பு கல்வி ஆண்டில், மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பில் றிநி-2020-க்கான தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, 2020 ஏப்ரல் மாதத்தில் மத்திய பொது சுகாதாரச் சேவை இயக்குநரகமும் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவும் வெளியிட்டன.


இதில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் மரியாதைக்குரிய ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள், 8.5.2020 அன்று அறிக்கை வெளியிட்டார்கள். தொடர்ந்து, எங்களது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில், மத்திய அரசு வெளியிட்ட பட்டியலை ஆராய்ந்து, மாநில வாரியாக எத்தனை இடங்கள் தரப்பட்டுள்ளது என்ற விவரத்தையும், ஓபிசி பிரிவினர்க்கு பூஜ்ய சதவீதம் என்ற விவரத்தையும் வெளியிட்டோம்.


அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2020-21), 7981 இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. பூஜ்யம் என்ற நிலையை நாங்கள் சுட்டிக் காட்டினோம்.


இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகம், தி.மு.க. மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இப் பிரச்சினையைக் கிளப்பின. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு தற்போது தீர்ப்பு வந்துள்ளது.


வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக நீதிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன்,



  1. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது.

  2. தகுதி அடிப்படையில் மட்டும் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

  3. மருத்துவ மேற்படிப்புகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பது தொடர்பாக பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.

  4. அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே எஸ்சி, எஸ்.டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என வாதிட்டார்.


அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:


இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் உத்தரவு பிறப்பிக்கும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் கோரிக்கையை ஏற்க முடியாது.


கொள்கை முடிவு மட்டுமல்லாமல், 50 சதவீத இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு, தெளிவான சட்ட வடிவத்தைக் கொண்டுவர வேண்டும்.


மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களைப் பெற்றபோது, அவற்றில் மத்தியக் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஆட்சேபணை தெரிவிக்காத எம்.சி.அய்., மத்தியக் கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. மத்தியக் கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும், ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை.


மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக்கூடாது என எந்த விதிகளும் இல்லை. இட ஒதுக்கீடு சட்டத்தை, மத்திய அரசு விரைவாகக் கொண்டு வர வேண்டும். இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது.


மத்தியக் கல்வி நிறுவனங்கள் இல்லாத கல்வி நிறுவனங்களில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கலாம் என உத்தேசித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எவ்விதச் சட்டத்தையும் உருவாக்கவில்லை.


எனவே, இட ஒதுக்கீடு குறித்து மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஆகியோர் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.


இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:


தீர்ப்பு அளித்த நாள்: 27.7.2020



  1. மாநில சட்டங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளித்திட, இந்திய மருத்துவக் குழு இயற்றிய விதிகள் [(9(4), 5(5)], அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீட்டை மறுக்கவில்லை. (பாரா 85).

  2. மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர்க்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு இந்திய மருத்துவக் குழு, எந்த விதியையும் குறிப்பிட இயலவில்லை. (பாரா 86).

  3. ஓபிசி பிரிவினர்க்கான இடஒதுக்கீடுக் கொள்கையை சட்டமாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை. (பாரா 87)

  4. இளநிலை / முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாநிலங்கள் பங்களித்த அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு வழங்க எந்தச் சட்டமும் அல்லது அரசியலமைப்பும் தடையாக இல்லை. (பாரா 90).

  5. இந்திய மருத்துவக் குழு, மாணவர் சேர்க்கைக்கான தரங்களை நிர்ணயிக்க முடியும், ஆனால் இடஒதுக்கீடுக் கொள்கை அரசாங்கத்தின் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவு மூலமாகவோ செய்யப்பட வேண்டும். (பாரா 97)

  6. சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான முந்தைய வழக்கு களில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளை விசிமி மற்றும் மத்திய அரசு புறக்கணிக்க முடியாது. (பாரா 102).

  7. இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது, இது இப்போது அவசியமாக உள்ளது. (the entire constitutional obliga tion to take a decision by the Central Government is evidently a necessity - ð£ó£ 104)

  8. மத்திய அரசின் சுகாதாரச் செயலாளர், எம்.சி.அய். மற்றும் தமிழக அரசின் சுகாதார செயலாளர் ஆகியோர் கொண்ட ஒரு குழு, இட ஒதுக்கீடுச் சதவீதத்தை முடிவு செய்ய அமைக்கப்பட வேண்டும்.

  9. செயல்படுத்தல் தற்போதைய கல்வியாண்டில் அல்ல, எதிர்கால ஆண்டுகளிலும் செய்யலாம். (பாரா 105)

  10. இடஒதுக்கீடுச் சதவீதத்தை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் வழி முறைகளை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும். (பாரா 106)


ஆகவே, ஒரு துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு மறுத்த நிலையில், நீதிமன்றம், சட்டம் இயற்றிட தடை இல்லை என தெளிவாகக் கூறியுள்ளது.


எனவே இதை வெற்றிப் படிக்கட்டாக பார்க்கிறோம்.


அடுத்து இந்த வழக்கு குறித்த சில செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


திராவிடர் கழகம், திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் 50 சதவீத இட ஒதுக்கீடு கோருவது எதன் அடிப்படையில்?


முன்னர் கூறியது போல், மத்திய அரசின் சுகாதாரத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மருத்துவக் குழு (MCI) மருத்துவப் படிப்பு ஒழுங்குப்படுத்துதல் விதியில் (Medical Education Regulations - PG and UG) 21.12.2010 அன்று ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது.


அதன்படி, மாநிலங்களில் கடைப்பிடிக்கும் இட ஒதுக்கீட்டு முறைப்படி, மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


“The reservation of seats in Medical Colleges/institutions for respective categories shall be as per applicable laws prevailing in States/Union Territories.” (Regulation enacted by the Health Ministry on 21.12.2010)


மேற்குறிப்பிட்ட விதியைச் சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில், அகில இந்தியத் தொகுப்பில் இட ஒதுக்கீடு அளித்திருந்தால், தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டத்தின்படி, பிற்படுத்தப்பட்டோர்க்கு 50 சதவீத இடங்கள் கிடைத்திருக்கும். இந்த ஆண்டு மொத்தம் தமிழ் நாட்டில் இருந்த தரப்பட்ட 941 இடங்களில், 472 இடங்கள் பிற்படுத்தப்பட்டோர்க்கு கிடைத்திருக்கும்.


அகில இந்திய தொகுப்புக்கு தமிழ் நாடு அளித்த இடங்கள் = 941


பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடங்கள் = பூஜ்யம்


 


மத்திய அரசின் எம்.சி.ஐ (Medical Council of India) இயற்றிய விதியின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு குறித்த சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்படி 50 சதவீத இட ஒதுக்கீடு, ஓபிசி பிரிவினர்க்குத் தர வேண்டும் என்பதைக் கோரி, தி.க., திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.


கீழ்காணும் தீர்ப்பு இதனை உறுதி செய்கிறது.


Para 103: once the constitutional mandate enabling the State to frame a law has been crystallised by the framing of a particular law by the State Government, then its applicability vis-a-vis All India quota to the extent the percentage is permissible cannot be ignored.


இதன் தமிழாக்கம்:


பாரா 103: ஒரு குறிப்பிட்ட சட்டத்தை, மாநில அரசு அரசமைப்புச் சட்டத்தின்படி இயற்றிய பிறகு, அதனை அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் அனுமதிக்கப்பட்ட சதவீதத்தின் அடிப்படையில் பொருத்துவதை ஒதுக்கிவிட முடியாது.


Para 104. The proposal as committed is already in place as professed by the fourth respondent in his affidavit and legally supportable by a State law.


இதன் தமிழாக்கம்:


பாரா 104: மத்திய அரசு தனது வாக்குமூலத்தில் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. அதேபோன்று, மாநில அரசு இயற்றிய சட்டமும் உள்ளது.


இதுமட்டுமல்லாமல், தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே, பாரா 38-லும் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியது.



  1.  We are of the view that the writ petitions can be entertained in view of the aforesaid developments and also the clarification of the order of the Apex Court dated 13.07.2020, where the Apex Court has clearly indicated that the issue involved in the present writ petitions can be proceeded with by the High Court and the pendency of the case of Dr.Saloni Kumari and another v. Director General, Health Services and others (supra), would not be an impediment to the same for the reason indicated in the order itself that is extracted herein above.  


இதன் தமிழாக்கம்.


பாரா 38: மேலே கூறப்பட்ட வழக்கு தொடர்பான விவரங்களின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் தனது 13.7.2020 தேதியிட்ட ஆணையின் மூலம் தந்த விளக்கத்தின் அடிப்படையிலும், மனுதாரர்களின் மனுக்களை நாங்கள் அனுமதிக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு (சலோனி குமாரி), இந்த வழக்குக்கு இங்கு தொடரப்பட்ட வழக்குக்கு எந்தவித தடையும் ஏற்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. 


ஆகவே தான், தி.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது.


27 சதவீத இட ஒதுக்கீடு ஏன் கோரவில்லை?



  1. தற்போது, மத்திய அரசின் கல்வி நிலையங்களில், மத்திய அரசு கல்வி நிலையங்கள் சட்டம், 2006-ன்படி, ஓபிசி பிரிவினர்க்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது.


ஆனால், மாநிலங்களில் இருந்து பெறப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களில், இட ஒதுக்கீடு தர எந்த சட்டமும் மத்திய அரசால் இயற்றப்படவில்லை.


ஆகவே, 27 சதவீத இட ஒதுக்கீடு கேட்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.



  1. மற்றொன்று, உச்ச நீதிமன்ற வழக்கு எண்: 1226 /2020 முகேஷ் குமார் எதிர் உத்தரகாண்ட் மாநில அரசு - தீர்ப்பு -தேதி. 7.2.2020.


(Civil Appeal No. 1226 of 2020)


எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ் - ஹேமந்த் குப்தா அளித்த தீர்ப்பில்,


“It is settled law that the state government cannot be directed to provide reservations for appointment in public posts.


“No mandamus can be issued by the court directing the state government to provide reservations,” (Supreme Court judgement dt 7.2.2020).


இதன் தமிழாக்கம்:


’நிறுவப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசின் நியமனங்களில் இடஒதுக்கீட்டை நிறைவேற்றிட நீதிமன்றம் வலியுறுத்த முடியாது’. 


’இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்க முடியாது’ என தெளிவாக தெரிவித்துள்ளனர்.


இந்த தீர்ப்பின் அடிப்படையிலும், அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட் டோர்க்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


ஆகவே தான், தி.க, திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசு வகுத்துள்ள விதியின் படி, இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என வலியுறுத்துவது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது.


மாறாக, 27 சதவீத இட ஒதுக்கீடு ஏன் தரவில்லை என்பது கோரிக்கை. நீதிமன்றம் இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை  கோரிக்கையாக கேட்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது.


முன்னது நிறைவேற்றவில்லை என்ற வழக்கு. 27 சதவீதம் என்பது கோரிக்கை. கோரிக்கையை நீதிமன்றத்திடம் வைக்க முடியாது. அரசிடம் தெரிவிக்கலாம். இதுதான் வேறுபாடு.


மத்திய அரசு இட ஒதுக்கீட்டிற்கு சாதகமாகத்தான் உள்ளது. அவர்கள் தந்த அபிடவிட் அடிப்படையில்தான் தீர்ப்பே வந்துள்ளது என்பது சரியா?


மத்திய அரசு தாக்கல் செய்த அபிடவிட். அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Para 63 - clause 24: "It is submitted that if these writ petitions are allowed, medical admissions across India would get greatly affected and interest of the medical community and the public at large would be greatly affected”.


இதன் தமிழாக்கம்:


பக்கம் 63, பத்தி 24ல், இந்த ஒதுக்கீடானது பெருவாரியான மக்களுக்கு, மருத்துவ சமுதாயத்திற்கு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வாதத்தை முன்வைக்கிறது மத்திய அரசு.


Para 63 - clause 25: “It is submitted that in larger public interest too, this batch of writ petitions deserve to be dismissed, to prevent anomalous situations and confusions from arising in medical admissions in India”


இதன் தமிழாக்கம்:


பக்கம் 63 : பத்தி 25 : பொதுநலன் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ளிஙிசி ஒதுக்கீடு கோரும் இம்மனுவானது தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று மத்திய அரசு கோருகிறது.


தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசின் சார்பில் எடுத்த வைத்த வாதத்தை நிராகரித்து தந்துள்ளது.


எனவே, மத்திய அரசு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகச் செயல்பட்டது என்பதெல்லாம் பொய்யான வாதம்.


அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?


ஏற்கனவே, தலைவர்கள் பலரும் தெரிவித்தது போல், இதற்கு மூன்று மாத கால அவகாசம் தேவையில்லை. உயர்ஜாதியினர்க்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படி ஜெட் வேகத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தினார்களோ, அதேபோல, இதிலும் மத்திய அரசு செயல்பட வேண்டும்.


தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சிகளுக்கும், ஏனைய மாநிலத்தில் உள்ள தலைவர்களுடனும் தொடர்பு கொண்டு, இப்பிரச்சினையில் ஆதரவு வேண்டும் என திமுக தலைவர் 26.7.2020 அன்று கடிதம் எழுதி, தொலைபேசியிலும் வலியுறுத்தியுள்ளார்.


இந்த வழக்கு நடைபெறும்போதே, இதே முறையில், திராவிடர் கழகத் தலைவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் 10.6.2020 அன்றே கடிதம் எழுதினார்.


தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள ஓபிசி பிரிவினர்க்கும் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்; சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, அனைவரும் கொண்டு செல்வோம். மத்திய அரசு விரைந்து செயல்பட அனைவரும் ஒன்றுபட்டு அழுத்தம் தருவோம்.


தமிழக அரசு இது குறித்து தெளிவான விளக்கம் அளித்து, தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத சட்டத்தின் அடிப்படையில், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கால தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


(கட்டுரையாளர் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளராகவும்,


அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.)


No comments:

Post a Comment