இந்தியாவுக்கு "ஆன்மிகச் சுற்றுப்பயணம்" செய்ய வந்த வெளிநாட்டு இஸ்லாமியர்களின் வழக்கை முடித்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்திடுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 9, 2020

இந்தியாவுக்கு "ஆன்மிகச் சுற்றுப்பயணம்" செய்ய வந்த வெளிநாட்டு இஸ்லாமியர்களின் வழக்கை முடித்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்திடுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்



இந்தியாவுக்கு "ஆன்மிகச் சுற்றுப்பயணம்" வந்த இஸ்லாமியர்கள் 129 பேர்களை புழல் சிறையிலிருந்து விடுத்து, அவரவர்தம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு அரசையும், மத்திய அரசையும்  வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்


கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கை வருமாறு:


வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு "ஆன்மிகச் சுற்றுப்பயணம்" வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 129 பேர்கள் (இதில் பெண்கள் 12)  விசா விதி மீறல் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.


மத்திய அரசின் விதி முறைகள் -


 உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் என்னாயிற்று?


இத்தகையவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் தேவையான ஆணையைப் பிறப்பித்துள்ளது.


ஆனால் தமிழ்நாடு அரசோ இவை எதனையும் பொருட்படுத்தாமல் புழல் சிறையில் வைத்திருப்பது விதி மீறல் மட்டுமல்ல மனிதநேயத்துக்கும் விரோதமானதாகும்.


பிற மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் கிடையாது. வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் தனியான இடங்களில் வைத்துத்தான் பராமரிக்கப்படுகின்றனர்.


தமிழ்நாடு அரசு வெளிநாட்டுக்காரர்களை ஏனிப்படி 'தண்டிக்கிறது' என்று தெரியவில்லை.


'விசா' மீறல் என்று எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டநிலையில் அவர்களைத் தத்தம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில், முதற்கட்டமாக புழல் சிறையில் அவதிப்படும் வெளிநாட்டு மக்களை அங்கிருந்து விடுவித்து, சிறுபான்மை மக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தங்க வைக்க வேண்டும்.


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி, புழல் சிறையில் வாடும் 129 வெளிநாட்டு இஸ்லாமியர்கள்மீதான வழக்கை முடித்து வைத்து அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.


இதில் வெளிநாட்டு அரசுகளின் மனக்கசப்பைத் தேவையில்லாமல் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என்பது நமது முக்கியமான வேண்டுகோளாகும்.


 


- கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


9.7.2020


No comments:

Post a Comment