நாடு முழுவதும் பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு விழுக்காடு அளவு மத்தியப்பிரதேசத்தில் அதிகம், கேரளாவில் குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

நாடு முழுவதும் பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு விழுக்காடு அளவு மத்தியப்பிரதேசத்தில் அதிகம், கேரளாவில் குறைவு

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பதிவாளர் துறை புள்ளி விவரங்கள் வெளியீடு


புதுடில்லி,ஜூலை1,  நாட்டில் அதிக பட்சமாக மத்தியப் பிரேசத்தில் பச் சிளங்குழந்தைகள் இறப்பு பதிவாகி யுள்ளது என்றும், மிகக் குறைவாகக் கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது என்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பதிவாளர் துறை தெரிவித்துள்ளது.


2018-ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மாதிரி பதிவு முறையை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பதிவாளர் துறை நேற்று வெளியிட் டது.


அதில் கூறப்பட்டு இருப்பதாவது:


''இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண் டோடு ஒப்பிடுகையில் பச் சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த 2017-ல் தேசிய சராசரியாக 33 பச்சிளங்குழந்தைகள் இறந்த நிலையில் அது 2018-ம் ஆண்டில் 32 ஆகக் குறைந்துள்ளது.


2018-ம் ஆண்டில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் இருக்கிறது. இங்கு ஆயிரம் பச்சிளங் குழந்தைகளுக்கு 48 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.


நாட்டிலேயே மிகக்குறைவாக கேரளாவில்தான் பச்சிளங் குழந் தைகள் இறப்பு இருக்கிறது. இங்கு ஆயிரம் குழந்தைகளுக்கு 7 குழந்தைகள் இறக்கின்றனர்.


பீகார் மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு 26.2 சதவீதமாகவும், அந்தமான் நிகோபர் தீவுகளில் 11.2 சதவீதமும், சத்தீஸ்கரில் 8 சதவீதமும், டெல்லியில் 3.3 சதவீதமும் இருக்கிறது.


கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டில் 14.9 சதவீதம் இருந்த இறப்பு விகிதம், 2018-ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாகக் குறைந்து விட்டது.


அதிலும் கிராமப்புறங்களில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் பெருவாரியாச் சரிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்திய அளவில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் 7.3 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.


கிராமப்புறங்களில் பச்சிளங் குழந்தைகள் இறப்புவிகிதம் 7.8 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் 5.8 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.


அதேபோல குழந்தைகள் பிறப்பு விகிதமும் கடந்த 40 ஆண்டுகளில் சரிந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு பிறப்புவிகிதம் 36.9 சதவீதம் இருந்த நிலையில் 2018-ம் ஆண்டில் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.


பிறப்புவிகிதத்தை ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் அதிகமாகவும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 11 சதவீதம் குறைந்துள்ளது.


கடந்த 2009-ல் 22.5 சதவீதம் இருந்த பிறப்பு விகிதம், 2018-ம் ஆண்டில் 20 சதவீதமாகவே இருக்கிறது. இது கிராமப்புறங்களிலும் குறைந்து 24.1 சதவீதத்திலிருந்து 21.6 சதவீதமாகச் சரிந்துள்ளது. நகர்ப்புறங்களில் 18.3 சதவீதத்திலிருந்து 16.7 சதவீதமாகக் குறைந்துள்ளது''.


இவ்வாறு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பதிவாளர் துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment