சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் - தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 2, 2020

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் - தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கீது

புதுடில்லி,ஜூலை2, ‘சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆறு வாரத்திற்குள் தமிழக டி.ஜி.பி., தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சிறைத்துறை அய்.ஜி. ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’ என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


இது பற்றி மதுரை உயர்நீதிமன்றக் கிளை, தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.


இந்நிலையில், இச்சம்பவம் பற்றி அடுத்த 6 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக டி.ஜி.பி,, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சிறைத்துறை அய்.ஜி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதற்கான தாக்கீதையும் அவர்களுக்கு அனுப் பியது. காவல்துறையினரால் தந்தை, மகன் அடித்துக் கொல்லப் பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி இரு தினங்களுக்கு முன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் திமுக.வின் தூத்துக்குடி எம்பி கனிமொழி புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


தந்தை-மகன் கொலை வழக்கில் காவல்துறை ஆய்வாளர் உட்பட 5 பேர் கைது


சி.பி.சி.அய்.டி. காவல்துறை அய்.ஜி. சங்கர்  தலைமையில் விசாரணை


தூத்துக்குடி,ஜூலை2, சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


இது தொடர்பாக கோவில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவின் படி சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப் பதிவு செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தந்தை-மகனை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் 302-ஆவது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.


இதையடுத்து,  நேற்று இரவு காவல்துறை உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், சி.பி.சி.அய்.டி .காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார். இன்று காலை மற்றொரு காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அதேபோல், சாத்தான் குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சிறீதரும் இன்று காலை விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 காவலர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய காவல்துறையினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.அய்.டி. அய்.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment