தார்மீகக் கட்சியின் யோக்கியதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 21, 2020

தார்மீகக் கட்சியின் யோக்கியதை!

தன்னைத் தார்மீகக் கட்சி என்று பா.ஜ.க. தம்பட்டம் அடித்துக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால், நடப்பில் தார்மீகத்துக்கும், அவர்களுக்கும் எந்தவித ஒட்டும் இல்லை - உறவும் இல்லை என்பதுதான் வெளிப்படை.


மத்தியப் பிரதேசமாகட்டும், ராஜஸ்தான் ஆகட்டும் - பிஜேபியை கடந்த சட்டப் பேரவையில் மக்கள் தோற்கடித்தனர். அங்கே காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஜனநாயக அடிப்படையில் அய்ந்தாண்டுக் காலம் ஆட்சி நடத்த காங்கிரஸ் உரிமை படைத்தது.


பா.ஜ.க. ஜனநாயகத்தை மதிப்பது உண்மையென்றால், அய்ந்தாண்டுக்காலம் அமைதி காத்து, அதே நேரத்தில் யோக் கியமான எதிர்க்கட்சியாக செயல்படுவதுதான் யோக்கியமான செயலாகும்.


ஆனால், எவ்வளவுக் கேவலமாக, ஜனநாயகத்தின் ஆணி வேரையே வெட்டும் வேலையில் மத்தியப் பிரதேச ஆட்சியில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து சாம, பேத தான, தண்டங்களைப் பயன்படுத்தி மக் களால் தோற்கடிக்கப்பட்ட பா.ஜ.க. இப்பொழுது மத்தியப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாகிவிட்டது.


அதற்கடுத்து, இப்பொழுது ராஜஸ்தானில் தன் கைவரி சையைக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சிப் பிரச்சினையில் அநாகரிகமாகத் தன் மூக்கை நுழைத்து, குதிரை பேரத்தில் ஈடுபட்டு அம்மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியை அமைக்கும் ஜனநாயக விரோத வேலை யில் இறங்கி விட்டது. (ரூ.30கோடி பேரம் பேசப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது.)


காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா செய்தியா ளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சி அளிக்கக் கூடிய தாகும்.


ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கஜேந்திரசிங் ஷெகாவத் காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து சதிச் செயலில் ஈடுபட்டது தொடர்பான ஆடியோ அம்பலத்துக்கு வந்து விட்டது.


பா.ஜ.க. நடத்தும் குதிரை பேரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


இப்பொழுது இந்த ஆடியோவும் கூடுதலாகக் கிடைத்து விட்டதால், இரு பிரச்சினைகள்மீதும் காவல்துறை தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுள்ளது.


இதில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது - அம் மாநிலத்தில் முக்கியச் செய்தியாகி விட்டது.


எங்களுக்கும், காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப் பினர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க. தரப்பில் சொல்லப்பட்டாலும், இந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட அரியானா மாநிலமானாலும் சரி, கருநாடக மாநிலமானாலும் சரி - இரண் டுமே பா.ஜ.க. ஆளும் மாநிலங்களே! இதிலிருந்தே இதன் பின்னணி என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.


Ôஆடியோ டேப்' தொடர்பாக - அதில் சம்பந்தப்பட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் பன்வாரிலால் சர்மாவிடம் விசாரணை நடத்த ராஜஸ்தான் காவல்துறையினர் அரியானா வுக்குச் சென்றபோது, அரியானா காவல்துறை போதிய  ஒத்துழைப்புக் கொடுக்காததோடு மட்டுமல்லாமல் தடுத்தும் இருக்கின்றனர்.


காரணம் அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது; ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ராஜஸ்தான் காவல் துறையினர் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்குச் சென்றபோது அங்கிருந்து அவசரமாக அப் புறப்படுத்தப்பட்டு விட்டனர்.


ராஜஸ்தான் அரசியல் குழப்பத்துக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜ.க. சொல்லுவது உண்மையானால், அதிருப்தியாளர்களுக்கு இவ்வளவு வசதிகளையும், ஏற்பாடு களையும் ஏன் செய்து கொடுக்க வேண்டும்?


அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சியைக்  கவிழ்த்ததும் பா.ஜ.க.வே. இதுபற்றிய வழக்கில், உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஆளாகவில்லையா?


இடையில் குடியரசு தலைவர் ஆட்சி - அதற்குப் பின் பா.ஜ.க. ஆட்சி! இவ்வளவுக்கும் 60 உறுப்பினர்கள் கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரசின் பலம் 47ஆக இருந்தும், குதிரை பேரத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கர்நாடகத்தில் நடந்தது என்ன?


பா.ஜ.க.வின் தார்மீக லட்சணம் என்பது இந்த ரீதியில்தான் இருந்து வருகிறது.


சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று ஆய்வு உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அங்கு கிடைத்த காளை சின்னத்தை ''கிராபிக்'' செய்து குதிரையாக்கிக் காட்டினார்கள். குதிரை பேரம் நடத்துவதில் இவர்கள் கெட்டிக்காரர்கள்தானே!


No comments:

Post a Comment