'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறதா?
மனித உரிமை ஆணையம் கேள்வி
சென்னை,ஜூலை8 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மகனை காவல்துறையினர் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் ஏற்கனவே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவின்படி சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின் றனர். இதனை கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் வழக் கில் தொடர்புடைய காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணையை தற்போது சி.பி.அய். ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி தூத்துக் குடியைச் சேர்ந்த மக்கள் மேம்பாட்டுக் கழக அமைப்பாளர் அதிசய குமார் என்பவர், காவல் நிலையங்களில் உள்ள, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதால் அந்த அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரனுக்கு புகார் மனு அனுப்பினார்.
இந்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள, ‘பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? காவல் துறையினரின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? மனித உரிமை மீறல்களில் ஈடுபடும், ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பினரை நிரந்தரமாக தடை செய்ய கோருவதில் நியாயம் உள்ளதா? என கேள்விகள் எழுப்பி, இது குறித்து, நான்கு வாரங்களில் விளக்க மளிக்க தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் சாத்தான்குளம் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment