கோவில்களால் தொற்றும் கரோனா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

கோவில்களால் தொற்றும் கரோனா!

கரோனா தொற்றுப் பரவலைத்தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது, இது அனைத்து மத வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருந்தும். ஆனால், இங்கே நிலைமை அப்படி அல்ல. நாடு முழுவதும் கோவில்கள் திறந்துவைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டுக்குச் சென்று கொண்டு இருந்தனர். முக்கியமாக சித்திரை முதல் நாள் தமிழகத்தில் பல கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தது. சென்னை மயிலாப்பூரில் இதைப் படமெடுத்த பெண் ஊடகவியலாளர் கோவில் நிர்வாகிகளால் தாக்கப்பட்டார். கோவில் வியாபாரம் தடைப்பட்டு விடக் கூடா தல்லவா! 


இந்த நிலையில் மதுரையில் அர்ச்சகர் ஒருவருக்குக் கரோனா தொற்று உருவாகி, அவர் மூலமாக அவரது அன்னையாருக்கும், பிறருக்கும் பரவியதில் அவரது அன்னையார் மரணமடைந்தார். இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது, ஆனால், இன்றுவரை முழு அடைப்பின்போது கோவிலை ஏன் திறந்தீர்கள் என்று யாரும் கேள்வி கேட்கவே இல்லை. முதலில் தொடங்கி வைத்தவர் ஓர் அர்ச்சகர்தான், அந்த அர்ச்சகர் மூலமாக பரவிய கரோனா தொற்றின்மூலம் இன்று மதுரையில் 5,000 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி விட்டனர்.


மே 12 ஆம் தேதி முதல் மெல்ல மெல்ல அனைத்துத் தளர்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜூன் 8 ஆம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டன, கோவில்கள் திறந்த மறுநாள் காளஹஸ்தி சிவன் கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட ஊழியர்கள் பலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது, இதனை அடுத்து கோவில் மூன்று நாள் மூடப்பட்டது, அதனைத் தொடர்ந்து கீழ்திருப்பதி கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட ஊழியர்கள் பலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது.


ஜூலை முதல் வாரம் திருப்பதி கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவில் மூடப்படவில்லை.  கோவிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தொடர்ந்து மக்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக  கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இருப்பினும் பக்தர்கள் வருகை தொடர்ந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அர்ச்சகர்கள், மொட்டை அடிக்கும்  ஊழியர்கள் உள்ளிட்ட பல மக்கள் தொடர்பு ஊழியர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. ஆகையால் அவர்களுக்குப் பாதுகாப்புக் கவச உடைகள் கட்டாயம் தேவைப்படும். ஆகவே,  பொதுமக்கள் பகவானுக்குக் கவச உடைகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. (என்ன சாமர்த்தியம் பாருங்கள்)


இதனை அடுத்து பல நிறுவனங்களின் முதலாளிகள் தேவஸ்தானத்திற்குக் கவச உடைகள் வழங்க முன்வந்துள்ளனர். முதல்படியாக மொட்டை அடிக்கும் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இந்தக் கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல கவச உடைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கோவிலுக்கு வழங்க பலர் முன்வந்துள்ளனர் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. 


இதேபோல் ஜூன் 23 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தை, நீதிபதிகளையே மிரட்டி தீர்ப்பெழுத வைத்தனர். இந்த நிலையில் கோவில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர் ஒருவருக்கு, தேரோட்டம் நடந்த அன்றே கரோனா தொற்று உறுதியானது, அதன் பிறகு தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்ற விழாவின் மூலமாக நூற்றுக்கணக்கா னோருக்கு தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


பூரி தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ஒடிசாவில் 5000ஆக இருந்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது அங்கு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  கோவில் திரு விழா மற்றும் அதில் கலந்துகொண்டவர்கள் மூலமாக ஒடிசாவில் வெறும்  10 நாட்களில் 6 ஆயிரம் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. 


இதேபோல் கருநாடக மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவலுக்குக் கோவில்கள் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது, அங்கும் ஜூன் எட்டாம் தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. கோவில்கள் திறந்த பிறகு Ôமுக்கிய நாட்களில்Õ மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர், விளைவு ஜூன் எட்டாம் தேதிவரை 6000 தொற்றுகளோடு கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 29,000-மாகத் தாவியது.


அங்கு ஒரே மாதத்தில் 20,000த்திற்கு மேல் கரோனா தொற்று பரவியதற்கு கோவில்கள் முக்கியக் காரணியாக மாறிவிட்டன.


மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு கணபதி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை எதிர்த்து இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே மராட்டிய மாநிலத்தில் கரோனா தொற்று


2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் அங்கு கணபதி திருவிழா நடைபெற்றால் தொற்று எண்ணிக்கை மும்பை நகரத்தில் 60 விழுக்காடு மக்களைப் பாதிக்கும் என்றும், இதன் மூலம் மரண எண்ணிக்கை மும்பையில் மட்டுமே லட்சத்தைத் தொடும் என்றும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


13 காவலர்களை சுட்டுக் கொன்ற பார்ப்பன ரவுடியான விகாஸ் துபேவிற்கு அடைக்கலம் கொடுத்தது மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரின் காலபைரவர் கோவில்தான். (கடைசி செய்தி இன்று காலை அவன் காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டான்.) கோவில்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரம் மட்டும் அல்ல, கரோனா பரப்புபவர்களின் அடைக்கல மய்யமாகவும் மாறிவிட்டது.


விதி என்று விதித்து விட்டு, விதிவிலக்குக் கோயில்களுக் கென்றால் - விபரீதம் இப்படித்தான். ஒன்று மட்டும் உறுதி - இந்தக் கரோனா தொற்று - இளைஞர்கள் மத்தியில் நாத்திக உணர்வை வளர்க்கும் என்பதில் அய்யமில்லை.


No comments:

Post a Comment