'நீட்' தேர்வு எதிர்ப்பு: போராட்டத்துக்குத் தயாராவீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 2, 2020

'நீட்' தேர்வு எதிர்ப்பு: போராட்டத்துக்குத் தயாராவீர்!

28.6.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலி மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில்  நீட், சமூக நீதி - சட்ட நிலை - நீதித்துறை குறித்து பல்வேறு கருத்துகளையும், தகவல்களையும் தெளிவாக விளக்கிக் கூறினார். அப்போது 'நீட்' தொடர்பாக மாணவர்களுக்கு ஓர் அறப்போர் அறிவிப்பினைக் கொடுத்தார்.


'நீட்' தேர்வு என்பது அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் - குறிப்பாகக் கிராமப் புறக் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாகக் கல்விக் கூடங்களில் நுழைந்தவர்கள்- தங்கள் குடும்பத்தில் ஒரு டாக்டர் வர மாட்டாரா என்று ஏங்கித் தவித்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு மரணவோலை எழுதிய திட்டமிட்ட சதியாகும்.


இதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை; 'நீட்' இல்லாத கால கட்டத்தில் இம்மக்கள் பெற்ற இடங்கள் எத்தனை - 'நீட்' என்னும் வாளால் கழுத்தை அறுத்த போது - இம்மக்களுக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை - இவற்றைப் பட்டியலிட்டுப் பார்த்தாலே, இதன் பின்னணியில் இருக்கும் பார்ப்பனச் சதியின் ஆழம் எத்தகையது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.


2016ஆம் ஆண்டில் 'நீட்' வருவதற்கு முன் திறந்த போட்டியில் - குறிப்பாக உயர்ஜாதியினரும், அதிக மதிப்பெண்கள் பெறும் மற்ற ஜாதியினரும் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் 108; 'நீட்' வந்த பிறகு 2017இல் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 353 (கூடுதலாகப் பெற்ற இடங்கள் 245).


பிற்படுத்தப்பட்டவர்கள் 'நீட்' வருவதற்கு முன் 2016இல் பெற்ற இடங்கள் 1,781, 'நீட்' வந்த 2017இல் பெற்ற இடங்கள் 1,501 - பிற்படுத்தப்பட்டவர்கள் இழந்த இடங்கள் 280. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 2016இல் 'நீட்' வருவதற்கு முன் பெற்ற இடங்கள் 859, 'நீட்' வந்தபின் 2017இல் பெற முடிந்த இடங்கள் 820, (இழந்த இடங்கள் 39), தாழ்த்தப்பட்டவர்கள் 'நீட்' வருவதற்கு முன் 2016இல் பெற்ற இடங்கள் 572, 2017இல் 'நீட்' வந்த பின் பெற முடிந்த இடங்கள் 557 (இழந்த இடங்கள் 15).


இந்தப் புள்ளி விவரங்கள் கூறும் உண்மை என்ன? 'நீட்'டால் உயர்ஜாதியினர் அதிகப் பலன் பெற்றுள்ளனர்; ஒடுக்கப்பட்ட மக்கள் இடங்களை இழந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற இடங்கள் வெறும் மூன்றே மூன்றுதான். 2019ஆம் ஆண்டிலோ அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் பூஜ்யமே!


தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிப்போர் 98 விழுக்காடு, சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடத்திட்டத்தில் படிப்போர் வெறும் இரு விழுக்காடே!


ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு 'நீட்' தேர்வு மூலம் கிடைத்திட்ட இடங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றன. மாநிலக் கல்வித் திட்டத்தில் தேர்வு எழுதிய 98 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 63 விழுக்காடு; சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வேறு கல்வி திட்டத்தில் பயின்ற இரு சதவீதத்தினருக்குக் கிடைத்த இடங்களோ 37 விழுக்காடாகும்.


'நீட்' தேர்வை திராவிடர் கழகம் ஏன் எதிர்த்து வருகிறது என்பதற்கான நியாயத்தை இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.


'நீட்' தேர்வினை இந்திய மருத்துவக் குழு (MCI) அறிமுகப்படுத்திய அந்த முதற்கட்டத்திலேயே (2012) திராவிடர் கழகம் கடுமையாக எதிர்ப்புக் குரலை உயர்த்தியது - கண்டனத்தை அழுத்தமாகவும் தெரிவித்தது.


'நீட்' தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 வழக்குகள் பதிவாயின; தி.மு.க.வும் வழக்குத் தொடுத்ததுண்டு.


நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், விக்ரம் ஜித்சென், அனில்தவே அடங்கிய அமர்வில் முதல் இரு நீதிபதிகள் 'நீட்' தேர்வுக்குத் தடை விதித்தனர். மூன்றாமவர் மாறுபட்ட தீர்ப்பினை எழுதினார் (18.7.2013).


இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (MCIக்கு) தேர்வு நடத்தும் அதிகாரமே கிடையாது என்று அந்தப் பெரும்பான்மை தீர்ப்பை அறுதியிட்டுக் கூறியிருந்தனர் - இது எல்லாம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (UPA) நடைபெற்ற நிகழ்வுகள்


'நீட்' தேர்வுக்கு முடிவு ஏற்பட்டு விட்டது என்று சமூக நீதியாளர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்ட நிலையில், மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பி.ஜே.பி. தலைமையிலான - நரேந்திர மோடி பிரதமரான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மீண்டும் இடி விழுந்தது.


'நீட்' செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய பி.ஜே.பி. அரசும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


நீதிபதிகள் அனில்தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய சாசன அமர்வு ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக 'நீட்' தேர்வை நடத்திட அனுமதியளித்தது.


இதில் குறிப்பிட்டதக்கது என்னவெனில், 2013இல் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, 'நீட்டுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த அதே அனில்தவேதான் இந்த அய்ந்து நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வுக்குத் தலைவர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.


சமூகநீதி எத்தனை எத்தனைத் தடைகளையும், கண்ணி வெடிகளையும் தாண்டிவர வேண்டியுள்ளது என்பதை எண்ணும் போது இரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டும்.


+2 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான முன்னெடுப்புப் பாடப் பகுதிகள் இதில்தான் உள்ளன என்பதை அறிய மாட்டார்களா? எல்லாம் தெரியும்.


கிராமத்தைச் சேர்ந்த அனிதாக்கள் எல்லாம்கூட 1200 மதிப்பெண்களுக்கு 1,176 பெற முடிகிறது. அந்த அளவுக்கு மேலே வந்து விட்டனர்; இதனை வளர விட்டால் தங்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகத் திணிக்கப்பட்ட ஆரியச் சதிதான் இந்த 'நீட்'.


1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்.


அதனைத் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்தது; போராட்டங்களையும் நடத்தியது. அந்த நுழைவுத் தேர்வு காரணமாக கிராமங்களைச் சேர்ந்த வர்கள் மருத்துவக் கல்லூரியில் வெறும் 15 விழுக்காடு அளவே இடங்களைப் பெற முடிந்தது.


இடையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களின் பரிந்துரைகளை ஏற்று அதன் அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தால், நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்தினை அவர் ஏற்றுச் செயல்படாததால் நீதிமன்றத் தீர்ப்பு எதிராக அமைந்து விட்டது.


2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வரலாறு. (அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஜெ.ஏ.கே.சம்பத்குமார்)


சமூகநீதியில் தமிழ்நாட்டுக்கு என்று உள்ள இந்த வரலாறு இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எங்கும் காணப்பட முடியாத ஒன்று.


இந்த நிலையில் இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியின் கண்களைக் குரூரமாகக் குத்தும் - கொத்தும் இந்த 'நீட்' தேர்வை மறுபடியும் ஒழித்துக் கட்ட திராவிடர் கழகம் களம் அமைக்கும்; அதன் களம் இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கும் நீளும் என்பதில் அய்யமில்லை.


இப்பொழுது மாணவர்களுக்கு ஓர் அறப்போரை அறிவித்துள்ளார் சமூகநீதி இயக்கத்தை இந்தியாவிலே வழி நடத்தியிருக்கும், நடத்தவிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.


அறப்போராட்டத்துக்கு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


மாணவர்களே களம் காணத் தயாராவீர்! தயாராவீர்!


No comments:

Post a Comment