‘விடுதலை'யின் சாதனையில் நெம்பர் ஒன் சாதனை எது?
‘விடுதலை' விளைச்சல் விழா - காணொலிமூலம் வாசகர் கேள்விகளுக்கு ‘விடுதலை' ஆசிரியர் அளித்த பதில்
சென்னை, ஜூலை 2- நான் எப்பொழுதுமே பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன். சொந்த புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாதவன். பெரியார் தந்த புத்தி என்பது, எந்தவிதமான சோதனைகள் வருகின்ற பொழுதும், தடங்கல்கள், தடைகள் வருகின்றபொழுது இன்னும் வேகமாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘விடுதலை' வாசகர்களின் கேள்வியும் -
ஆசிரியரின் பதிலும்!
கடந்த 1.6.2020 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே உரையாற்றி முடித்ததும், வாசகர்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக் குப் பதில் அளித்தார்.
அக்கேள்வி - பதில் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
துரை.சந்திரசேகரன், வடலூர்
கேள்வி: ‘விடுதலை' நாளிதழ் ஆயிரம் ஆயிரம் சாதனைகளைப் படைத்திருக்கிறது. அதில் நெம்பர் ஒன் சாதனையாகத் தாங்கள் கருதுவது எது?
ஆசிரியர்: ‘விடுதலை'யைப் பொறுத்தவரையில், அடிப்படையானது சமூகநீதி. கல்வி, வேலை வாய்ப்பு இந்த இரண்டையும் சேர்த்ததுதான் சமூகநீதி.
குலக்கல்வித் திட்ட ஒழிப்பு என்பதை ‘விடுதலை' முன்னின்று சாதித்துக் காட்டியது ஒரு கட்டம்.
அடுத்தபடியாக, 9 ஆயிரம் வருமான வரம்பைப் பற்றி நம்முடைய கழக துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள், அது இரண்டாவது கட்ட வெற்றி.
அதுபோலவே, 27 சதவிகித இட ஒதுக்கீடு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை, நான் மிகப்பெரிய விமர்சனங்களை எதிர்கொண்டு, அவப்பெயர்களையெல்லாம் தாங்கிக் கொண்டு, 5 லட்சத்திற்கு அடிமையாகிவிட்டார் என்றெல் லாம் நமக்கு அவப்பெயர் இருந்தும்கூட, நாம் பார்ப்பன முதலமைச்சர் ஒருவரை, நம்முடைய லட்சியத்திற்குப் பயன்படுத்தினோம். நாம் அவருக்குப் பயன்படவில்லை; அவரை நம்முடைய கொள்கைக்குப் பயன்படுத்திக் கொண்டோம் என்று சொல்வதன் காரணமாகத்தான், 69 சதவிகித இட ஒதுக்கீடு நிலைத்தது.
அய்யா காலத்தில் முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது. இன்றைய நாள்தான் அது.
எனவே, சமூகநீதியில் சாதித்திருப்பது, முதல் அரச மைப்புச் சட்டத் திருத்தம் பெரியார் காலத்திலிருந்து, தொடர்ந்து 9 ஆயிரம் வருமான உச்சவரம்பை நிறுத்தியது - 69 சதவிகிதமாக இட ஒதுக்கீடு வளரக்கூடிய கட்டம் வரை.
பிறகு, மண்டல் கமிசன் போன்றவை வந்து, மூன்று அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் நம்மால் வந்திருக்கிறது என்றால், அதற்கு ‘விடுதலை'யின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.
‘விடுதலை'யினுடைய சாதனைகளில் அவை சிகரம் வைத்ததைப்போல! ஏனென்றால், தந்தை பெரியார் அவர் கள், காங்கிரசை விட்டு வெளியில் வந்ததே, சமூகநீதிக்கா கத்தான்.
எனவே, அந்தப் பணியைச் செய்வதில் ‘விடுதலை' மிகப்பெரிய லாபத்தைப் பெற்றிருக்கிறது, எவ்வளவோ பொருள் இழப்புகளை அது சந்தித்தாலும்!
‘விடுதலை'யில் நீங்கள் எழுதிய
முதல் தலையங்கம் எது?
செல்வி, பொன்னேரி
முதன்முதலில் ‘விடுதலை'யில் நீங்கள் தலையங்கம் என்ன? அந்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?
எந்தத் தலையங்கம் எழுதும்பொழுது, எதிரிகளிட மிருந்து மிரட்டல், உருட்டல்கள் வந்தது?
ஆசிரியர்: ‘விடுதலை'யில் நான் எழுதிய முதல் தலையங்கம், தமிழக பட்ஜெட்டைப்பற்றியதுதான். 1962 ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி.
நான் பொருளாதார மாணவன் என்பதால், மிகச் சுலபமாக அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பு இருந்தது.
அதில் ஒரு கருத்து தெளிவாகப்பட்டது. அதனை தோழர்கள் வரவேற்றார்கள்.
அரசாங்கம் பட்ஜெட் போடுவதற்கும் - தனி நபர் பட்ஜெட் போடுவதற்கும் என்ன வேறுபாடு? என்பதை அந்தத் தலையங்கத்தில் விளக்கியிருந்தேன்.
வரவை முதலில் எதிர்பார்த்து, செலவை நிர்ணயிப்பது தனி நபர் பொருளாதாரம்.
செலவை முதலில் நிர்ணயித்து, வரவை அதற்கேற்ப உருவாக்குவது அரசின் பொருளாதாரம்.
எனவே, தனி நபர் பட்ஜெட் வேறு; அரசாங்கத்தின் பட்ஜெட் என்பது வேறு.
ஆகவே, செலவிற்கேற்ப வருவாயை உருவாக்க வேண்டியதும், நல்ல திட்டங்களுக்காகச் செலவு செய்வ தும் மிக முக்கியமானது என்ற எளிமையான கருத்தை சொன்னபொழுது, நம்முடைய வாசகப் பெருமக்கள் அன்றைக்கு அதைப் பாராட்டினார்கள்.
அடுத்தபடியாக, மிரட்டல் என்பதைவிட, அவதூறு கள்தான் நிறைய வந்திருக்கின்றன.
மிகப்பெரிய அளவிற்கு வந்தது என்னவென்றால், தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த ஒருவர் - இராமச்சந்திர அய்யர் என்பவர் வயதை மாற்றிக் கொடுத்திருந்தார். அவருடைய தம்பிக்கு சஷ்டி யப்த பூர்த்தி முடிந்துவிட்டது. இவருக்கு அவரைவிட குறைவான வயதாம்.
இந்தப் பிரச்சினையை வசந்த் பாய் என்ற கன்னடத்து வழக்குரைஞர் தொடங்கினார். அதற்காக ஒரு வழக்கைத் தொடுத்தார். அதற்குரிய ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டினார். ஈரோடு மகாஜன பள்ளியில் அவர் எப்பொழுது படித்தார் என்ற விவரத்தையும், அவர் பிறந்த தேதி போன்ற விவரங்களையெல்லாம் சேகரித்தார்.
அந்த உண்மைகளையெல்லாம் அழித்து விட்டார்கள். அதை ‘விடுதலை'யில் எழுதி, அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் சென்னை கடற்கரையில் ஒரு கூட் டம் போட்டார்.
‘என்னைகூட நீங்கள் தவறாக பாய் என்று இருந்த தினால், பார்ப்பான் என்று எழுதினீர்களே’ என்று சொன்ன அந்த வழக்குரைஞர், மேலும் சொன்னார், “நான் வழக்குத் தொடர்ந்ததினால்தான் அந்தத் தலைமை நீதிபதி வெளியேறவில்லை. பெரியார் அவர்கள் பேசி, ‘விடுதலை'யில் அதை நீங்கள் எழுதி, பெரியதாக்கியதன் விளைவாகத் தான், அந்தத் தலைமை நீதிபதி ராஜினாமா செய்தார்” என்றார்.
ஒரு தலைமை நீதிபதி பொய்யான வயதைக் கொடுத் தார் என்ற பொழுது, அவர் பதவியை விட்டு ராஜினாமா செய்வதற்கு ‘விடுதலை' காரணமாக இருந்தது முக்கிய மான ஒரு செய்தி.
அந்த நேரத்தில், பலர் மிரட்டினார்கள். நீங்கள் இந்த அளவிற்கு எழுதியிருக்கின்றீர்களே, உயர்நீதிமன்றத்தை இந்த அளவிற்கு விமர்சித்து எழுதியிருக்கின்றீர்களே என்று சொன்னார்கள்.
துணிந்து நாம் செய்தோம். பல நேரங்களில், உயர்நீதி மன்றங்களைப் பற்றியும், உச்சநீதிமன்றத்தைப் பற்றியும் எழுதவேண்டி இருக்கிறது.
பேனாவை எழுத எடுக்கும்பொழுது, என்ன விளைவு ஏற்படுமோ என்று நினைத்துக் கொண்டு எழுதினால், எழுத முடியாது.
என்ன விளைவுகள் வந்தாலும், பரவாயில்லை என்று துணிச்சலோடு எழுதுவதுதான் கொள்கை. இது கொள்கை ஏடு, லட்சிய ஏடு!
நாம் துப்பாக்கியைப் பிடிக்கும்பொழுது, எதிரி மட்டும் தான் நம்முடைய கண்ணுக்குத் தெரியவேண்டுமே தவிர, மற்ற எதுவும் தெரியக்கூடாது.
பின்விளைவுகளைப் பற்றியோ, நம்மைச் சுட்டால் என்ன செய்வது என்று நினைத்தோ ராணுவத்தில் இருப்ப வர்கள் யாரும் நினைக்கமாட்டார்கள்.
அதுபோலத்தான், பேனாவைப் பிடித்து எழுதும்போது, அதிலே தெளிவு இருக்க வேண்டும்; துணிவு இருக்க வேண்டும். விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது.
ஆகவேதான், விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதினோம்; வெற்றி பெற்றோம்.
நாளைக்கும் விலைகளைக் கொடுப்போம்; விளைவு களை ஏற்போம்; பயணத்தைத் தொடர்வோம்.
‘விடுதலை'யில் பெண்களுக்காகவென்று அரைப் பக்கத்தை ஒதுக்க முடியுமா?
சரோஜா இளங்கோவன், அமெரிக்கா
கேள்வி: ‘விடுதலை'யில் பெண்களுக்காக ஒரு அரைப் பக்கமோ அல்லது கால் பக்கமோ பெண்களுக்காக பெண்களே எழுதி, நாள்தோறும் அவர்கள் படிக்கின்ற மாதிரி செய்ய முடியுமா?
ஆசிரியர்: தாராளமாக! ‘விடுதலை'யினுடைய கொள் கையே அதுதான். மகளிர் விடுதலைக்காக எழுதுகிறோம். ஆனால், அவர்கள் போதுமான அளவிற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும். இப்பொழுது ‘விடுதலை' நான்கு பக்கங்களாகக் குறைந்திருக்கிறது. எட்டுப் பக்கங்களாக வரும்பொழுது மகளிருக்கென்று தாராளமாகக் கொடுக்கிறோம். உங்களு டைய கருத்துக்கு நன்றி!
பெண்கள் முன்வரவேண்டும். பெண்களுக்காக ஒரு தனி ஏடு நடத்துவதைவிட, முதலில் ‘விடுதலை'யில் நிச்சய மாகச் செய்யலாம். இப்பொழுதுகூட சிறு சிறு செய்திகளை மகளிர் எழுதி அனுப்பினால், மகளிர் உரிமைகளைப்பற்றி கட்டுரைகளை எழுதி அனுப்பினால், மகளிர் பிரச்சினை களைப் பற்றி செய்திகள் ‘விடுதலை'க்கு வரும்பொழுது, நிச்சயமாக ‘விடுதலை' உரிய இடத்தைக் கொடுக்கும்.
நான்கு பக்கங்களாக இருந்தாலும், செய்தியினுடைய முக்கியத்துவம் பொறுத்து, தேவையைப் பொறுத்து, மகளிர் அதனைப் பயன்படுத்திக் கொண்டால், அதை வரவேற் கிறோம்.
ஏனென்றால், நம்முடைய அடிப்படைக் கொள்கை களில், லட்சியங்களில் பெண்ணடிமையை ஒழித்தல் என்பது ஒன்று.
ஆகவே, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியமும்கூட. உங்களுடைய யோசனைக்கு நன்றி, வணக்கம்!
இளைஞர்களைக் கவர்வதுபோன்ற செய்திகளை ‘விடுதலை'யில் அதிகம் வெளியிடவேண்டும்
பேராசிரியர் நல்.இராமச்சந்திரன், தஞ்சை
கேள்வி: உங்களுடைய அற்புதமான தொண்டறப் பணியில், ‘விடுதலை'யின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளில், ‘விடுதலை'யின் பிடிஎஃப் பார்மெட் மிக அற்புதமாக இருக்கிறது.
நம்முடைய தோழர்கள் எதிர்பார்ப்பதுபோல, இளை ஞர்களை ஈர்ப்பதுபோல, பிடிஎஃப் பார்மெட்டிலேயே அவர்களுக்கு, இந்திய அளவில், தமிழக அளவில் உள்ள வேலை வாய்ப்புகளைப்பற்றி சிறிய தொகுப்புகள் போன்று வெளியிட வேண்டும்.
‘‘இது உண்மையா?'' என்ற தலைப்பில் நீங்கள் எழுது வீர்கள் அல்லவா - அதுபோன்ற செய்திகள் ‘விடுதலை'யில் அதிகம் வரவேண்டும்.
இளைஞர்களைக் கவர்வது போன்ற செய்திகளை ‘விடுதலை'யில் அதிகம் வெளியிடவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் அய்யா!
ஆசிரியர்: மிக அருமையான கருத்து! இளைஞர் களுக்கு, குறிப்பாக கரோனா தொற்று காலகட்டத்தில், பல பேருக்கு வேலை வாய்ப்பு குறைந்து போயிருக்கிறது; புதிய வேலை வாய்ப்பில்லை - இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு புதிய முயற்சியை - உங்களைப் போன்றவர்கள் ஒரு குழு அமைத்துக் கொண்டு அந்தப் பணியை சிறப்பாக செய்தால், ‘விடுதலை' அந்தப் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
எப்படி என்று கேட்டால், நாம் ஒரு பணியில் இருந்தால், அந்தப் பணியை மட்டும்தான் செய்யவேண்டும் என்ப தல்ல. வேறு பணி செய்யவேண்டிய சூழல் வந்தால், நிச்சய மாக செய்யவேண்டும். இப்பொழுது மாற வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அந்தந்த மாநிலத் திற்குச் சென்றுவிட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருக் கக்கூடிய இளைஞர்களை, ஆங்காங்கே இருக்கக் கூடிய நம்முடைய தோழர்கள் ஒரு பட்டியல் தயார் செய்து, அவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை திருப்பூ ரிலோ, மற்ற இடங்களிலோ தேவைப்படுகின்ற தொழிலா ளர்களை - எல்லாப் பணிகளுக்கும் - அவரவர்களுடைய தகுதிக்கு, வாய்ப்புக்கு ஏற்ப, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, தங்களை மாற்றிக் கொண்டு செய்வதற்கு, ஒரு குழு அமைத்து சில கருத்துகளைச் சொன்னால், இந்தக் கரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புதிய வாய்ப்பு கிடைக்கும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாத இடங்களில் எல்லாம், நம்முடைய தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள், தோழர்கள் அந்த இடங்களை நிரப்பவேண்டும். அதற்குரிய ஆயத்தங்களைச் செய்யவேண்டும்.
எந்தந்தத் தொழில்களை அவர்கள் பயிற்சி பெற்றுப் பெற முடியுமோ - அந்தப் பயிற்சிகளை, தேவைப்பட்டால், நம்முடைய இயக்கம்கூட முன்னின்று நடத்தலாம்; அதற்கு ‘விடுதலை' ஒரு நல்ல கருவியாக இருக்கும்.
உங்களைப் போன்றவர்கள், நல்ல தொழில்நுட்ப நிபுணர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு குழு அமைத்துத் தெளிவாகச் சொன்னால், நாங்கள் அதை நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்வோம். அந்தக் கருத்து வரவேற்கத் தக்கது.
நம்முடைய கொள்கைகளைத் தாங்கி
இந்தி மொழியில் இதழ்கள் வருமா?
லெனின், புதுடில்லி
கேள்வி: சமூகநீதிப் போராட்டங்கள் வட இந்தியாவில் நிறைய இருக்கிறது. ‘விடுதலை' தமிழ் மொழியிலும், ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில மொழியிலும் வருகிறது. இந்தியிலோ மற்ற மொழிகளிலோ இதுபோன்ற ஏடுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
ஆசிரியர்: எழுதுகிறவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு கொடுத்து, உங்களைப் போன்ற தோழர்கள் அனுப்பினால், மார்டன் ரேசனலிஸ்ட் இதழில் கூட ஒரு பகுதியை இணைப்பதற்குத் தயாராக இருக்கிறோம். வடபுலத்தில் இதுபோன்ற கருத்துகள் பரவினால் மிகவும் நல்லது.
இ-பத்திரிகை என்று சொல்லக்கூடிய மின் பத்திரிகை யாக முதலில் நான்கு பக்கம், அய்ந்து பக்கம் என்று நியூஸ் லெட்டர் போன்று இந்தி மொழியிலே செய்திகளைத் தயாரித்து அனுப்பினால் வெளியிடலாம்.
நம்முடைய ‘விடுதலை' அலுவலகத்தில்கூட சரவணா ராஜேந்திரன் என்ற ஒரு தோழர் இருக்கிறார். அவர் இந்தி மொழியில் புலமை படைத்தவர்.
இந்தி மொழியில் வருகின்ற செய்திகளை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கிறார். இந்தப் பணிக்காக அவரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களைப் போன்றவர்களின் உதவியைப் பெற்று ஒரு குழு அமைத்தால், நிச்சயமாக அதனைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
முதலில் சிறிய அளவில் ஆரம்பிப்போம். உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலத்தில் வருகின்ற கருத்துகளை இந்தியில் மொழி பெயர்த்து அனுப்பினால், வசதியாக இருக்கும்.
அந்தப் பணியை செய்வதற்கு எந்த அளவிற்கு உதவி செய்ய முடியுமோ, அதனைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
‘‘இதழாளர் பெரியார்'' நூல் கிடைப்பதில்லையே!
பெரியார் மாணாக்கன், சென்னை
கேள்வி: அய்யா வணக்கம்.
ஆசிரியர்: உங்களுக்கு நன்றி, தொடர்ந்து நன்கொடை களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நன்றி!
கேள்வி: இறையனார் அவர்கள் எழுதிய ‘‘இதழாளர் பெரியார்'' என்ற நூலைப்பற்றிச் சொன்னீர்கள். அந்தப் புத்தகம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கிடைப்ப தில்லை. பல ஆண்டுகளாக நான் சென்று கேட்பேன், எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது; ஆனால், மறுபடியும் அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது?
ஆசிரியர்: அவர்களுடைய அனுமதி கிடைக்க வேண்டும்; அந்த நிறுவனம் அரசினுடைய பொறுப்பில் இருப்பதால் கடிதம் எழுதி அனுமதி கேட்டு, மறுபதிப்பு வெளியிடலாம்.
(தொடரும்)
No comments:
Post a Comment