புரட்சிக்கவிஞரின் ஒரே மகனான மானமிகு தோழர் சு.மன்னர் மன்னன் என்றழைக்கப்பட்ட கோபதி அவர்கள் உடல்நலக் குறைவால் தமது 92 ஆவது வயதில் புதுவையில் நேற்று (6.7.2020) பிற்பகல் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந் தோம்.
தமது முதுமைப் பருவத்தில் தோற்றத் தில்கூட புரட்சிக்கவிஞர் போலவே மிடுக் குடன் காட்சி அளித்த அவர், திராவிடர் இயக்கக் கொள்கையாளர் இறுதி வரையில்! அவரின் இளமை காலந்தொட்டு நாம் அவரை அறிவோம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் மற்றும் திராவிடர் இயக்கத் தலைவர் களிடமும், கல்வி வள்ளல் காமராஜர், புதுவைவாழ் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அன்புடன் பழகியவர். சீரிய பகுத்தறிவாளர், பண்பாளர்.
சிறந்த நூலாசிரியர்; 50 நூல்களுக்குமேல் யாத்துள்ளார். நல்ல கருத்தாளர். புதுவை வானொலியில் பணியாற்றியவர். புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு தனிக் கட்டடம் உருவாக மிகுதியும் உழைத்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது செல்வங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீரவணக்கம்!
குறிப்பு: நேற்று மாலை நடைபெற்ற காணொலிப் பொழிவு தொடங்கும் முன்பே அவரைப்பற்றி 10 மணித்துளிகள் இரங்கல் உரையாற்றி, வீர வணக்கம் நம்மால் செலுத்தப்பட்ட பிறகே நிகழ்ச்சிகள் தொடர்ந்தன!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
7.7.2020
No comments:
Post a Comment