ஆன்மீகவாதிகளை அழைத்துக் கூட்டம் நடத்தினீர்களே, அதனால் பயன் உண்டா?
காணொலிமூலம் வாசகர் கேள்விகளுக்கு ‘விடுதலை' ஆசிரியர் அளித்த பதில்
சென்னை, ஜூலை 4- நான் எப்பொழுதுமே பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன். சொந்த புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாதவன். பெரியார் தந்த புத்தி என்பது, எந்தவிதமான சோதனைகள் வருகின்ற பொழுதும், தடங்கல்கள், தடைகள் வருகின்றபொழுதும் இன்னும் வேகமாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘விடுதலை' வாசகர்களின் கேள்வியும் -
ஆசிரியரின் பதிலும்!
கடந்த 1.6.2020 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே உரையாற்றி முடித்ததும், வாசகர்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக் குப் பதில் அளித்தார்.
அக்கேள்வி - பதில் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
வாட்ஸ் அப் மூலமாக ‘விடுதலை' பரப்புவதால், ‘விடுதலை' சந்தாக்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
ச.ரெகுநாகநாதன், போடி
கேள்வி: 1971 ஆம் ஆண்டிலிருந்து ‘விடுதலை' வாசகராக இருக்கிறேன். அன்றைக்கெல்லாம் ‘விடுதலை' தபாலில் வரும்பொழுது, கிட்டத்தட்ட இரண்டு நாள்கள், மூன்று நாள்கள் ஆகிவிடும்.
பின்னாளில், ஆன்லைனில் வெளியிட்டவுடன் அதனை உடனே பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இப்பொழுது வாட்ஸ் அப் மூலமாக ‘விடுதலை' நாளிதழை எல்லோருக்கும் பரப்புகின்றோம். அப்படி பரப்புவதால், ‘விடுதலை' சந்தாக்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா அய்யா? வருமானம் குறையக்கூடிய வாய்ப்பு வருமா? என்பதுதான் என்னுடைய சந்தேகம் அய்யா!
ஆசிரியர்: வருமானத்தைவிட, தன்மானமும், இனமானமும்தான் நமக்கு முக்கியம். நிச்சயமாக நமக்கு வருமானம் குறையத்தான் செய்யும், அதிலொன்றும் சந்தேகமில்லை.
இப்பொழுது எல்லோருக்கும் இலவசமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதனால், நட்டம்தான் ஏற் படும். பரவாயில்லை, மக்களிடம் போய்ச் சேரட்டும். பிறகு அவரவர்களே, தானாக நன்கொடைகள் கொடுப்பார்கள்.
அய்யா அவர்கள் சொன்னதுபோல, அந்த நன்கொடை கள் தானே வரும், தோழர்களுடைய ஆதரவினால்! நட் டத்தைச் சமாளிக்கலாம். முதலில் நம்முடைய கருத்துகள் போய்ச் சேரட்டும். நிச்சயமாக நட்டம்தான் வரும். ஏனென்றால், எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கிறோம்.
‘விடுதலை'க்காகப் பணியாற்றக் கூடியவர்கள் இருக் கிறார்கள். நட்டம் ஏற்பட்டாலும், கொள்கைகள் போய்ச் சேருகின்றது என்பதுதான் நமக்கு மிகப்பெரிய வெற்றி.
‘விடுதலை' மக்களிடம் செல்லச் செல்ல, தோழர்கள் அவரவர்களாகவே நன்கொடைகள் கொடுப்பார்கள்; அந்த நன்கொடைகளின் மூலமாகவே அந்த நட்டத்தை சமாளிக்கக் கூடிய வாய்ப்பு வரும்.
ஆன்மீகவாதிகளை அழைத்துக் கூட்டம் நடத்தினீர்களே, அதனால் பயன் உண்டா?
வா.மு.சே.திருவள்ளுவன், சென்னை
கேள்வி: தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம். ‘விடுதலை' நாளிதழ்தான் வாழ்வியலையும், உளவியலை யும், பகுத்தறிவையும் கொடுக்கின்ற நாளிதழாக இருக்கிறது.
இன்றைக்குத் தன்மானத்தோடு தன்னுடைய 85 வயதை முடித்து நூற்றாண்டை நோக்கிப் போய்க் கொண் டிருக்கிறது.
தமிழர் தலைவரின் குரலைக் கேட்காமல் எங்களுக்கு ஏக்கமாக இருந்தது. முதலில் இந்த வாய்ப்பை ஏற்படுத்திய திராவிடர் கழகப் பெருமக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனை உரைகள், எத்தனை சிந்தனைகள் அய்யா அவர்கள் 87 வயதில், முதிர்ந்த நிலையில், உங்கள் குரலை கேட்பதும், உங்களுடைய உருவத்தைப் பார்ப்பதும் எனக்குப் பேரின்பமாக இருக்கிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக ஆன்மீகவாதிகளை அழைத்து, பெரியார் திடலில் நிகழ்ச்சிகளை நடத்தினீர்கள். அதனுடைய விளைவு என்னவாக இருக்கிறது? அல்லது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறதா?
ஆசிரியர்: அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக வேண்டும் என்கிற பிரச்சினையில், அவர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்குரிய அளவு பயனுள்ளதாகத்தான் இருக்கிறது.
ஆரிய இனத்தைத் தவிர, பார்ப்பனீயத்தைத் தவிர, மீதியுள்ள அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். தமிழர்கள் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.
நம்மை எது பிரிக்கிறது என்பது முக்கியமல்ல - நம்மை எது இணைக்கிறது என்பதுதான் முக்கியம் என்பது அய்யா சொன்ன தத்துவமாகும்.
அதன்படியே, நாம் இணைக்கிறோம். அது உடனடி யாகப் பலன் கொடுத்தாலும் சரி, அல்லது கொஞ்ச காலம் சென்று பலன் வந்தாலும் சரி - நம்முடைய இனமானம் என்று பார்க்கின்றபொழுது, அவர்களை எல்லாம் ஒன்று சேர்ப்பது என்பது மிகவும் முக்கியம்.
அது மொழி உணர்வு - இன உணர்வு - பண்பாட்டு அடிப்படையில் நாம் ஒன்றிணைக்கிறோம்.
சமஸ்கிருத மயமாக்குவதை எதிர்க்கிறோம் - அப் பொழுது தமிழ்ப் புலவர்கள், உணர்வாளர்கள் ஒன்றிணை கிறார்கள். ஆகவேதான், எந்தெந்த காரியத்திற்கு, எந்த அளவு பயன்பட்டாலும் நமக்கு லாபம்தான்.
அது பூஜ்ஜியத்திலிருந்து ஒன்று என்று வந்தாலும், அது நமக்கு லாபம் என்று கருதக்கூடியவர்கள் நாம். ஆகவே தான், ஒன்று, பத்தாகலாம்; பத்து நூறு ஆகலாம். நூறு ஆயிரம் ஆகலாம். பொறுமையாக இருக்கவேண்டும். அதற்கு வேண்டிய விதையை நாம் விதைத்திருக்கின்றோம். நம்முடைய உழைப்பு நிச்சயமாக வீண் போகாது; தமிழர்களை ஒன்று சேர்க்கவேண்டும்.
எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல -
எது நம்மை இணைக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.
அந்த அடிப்படையில்தான் அவர்களைச் சேர்த்திருக்கி றோம். பயன் தருகிறது, அதிலொன்றும் சந்தேகமில்லை.
‘விடுதலை' செய்தியாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?
இளந்திரையன், விருத்தாசலம்
கேள்வி: அய்யா வணக்கம். ‘விடுதலை'யின் 86 ஆம் ஆண்டில், ‘விடுதலை' செய்தியாளர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? ‘விடுதலை' வளர்ச்சிக்கு அவர்களு டைய பங்கு என்ன?
ஆசிரியர்: ‘விடுதலை' வளர்ச்சி அடைய வேண்டியது, விளைச்சலை எப்படிப் பெருக்கவேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.
‘விடுதலை'யில் என்ன சொல்லுகின்றோமோ, அந்தப் போராட்டத்திற்கு மக்களை ஆயத்தப்படுத்தக் கூடிய அளவிற்கு, அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். என்னென்ன உத்திகள் இளைஞர்களுக்குத் தோன்றுகிறதோ, அதனை முனைப்பாக செய்யவேண்டும்.
நம்முடைய பயணங்களில் ஏற்படும் தடைகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. குறைந்தபட்சம், ‘விடு தலை'யை வாட்ஸ் அப் மூலமாக அனுப்புகின்ற பணியை வேகப்படுத்துவதுதான் உடனடியாகச் செய்யவேண்டிய பணி. அதை உடனடியாகச் செய்யவேண்டும்.
அடுத்தபடியாக, எந்தப் பிரச்சினையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமோ, அதைக் கொஞ் சம் கொஞ்சமாக, இந்த ஊரடங்கு முடிந்தவுடன் செய்ய வேண்டும்.
உங்களது மணவிழாவின்போது
எதிர்ப்பு இருந்ததா?
கலைமணி அம்மா
கேள்வி: அய்யா வணக்கம். மோகனா அம்மையாரைத் திருமணம் செய்யும்பொழுது, உங்களுக்கு எதிர்ப்பு எப்படி இருந்தது?
ஆசிரியர்: எந்த எதிர்ப்பும் கிடையாது. அய்யா அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் வீட்டில் என்ன சொல்வார்கள்?' என்று கேட்டார்.
உங்களிடம் என்னை ஒப்படைத்துவிட்டார்கள் என்ற உணர்வோடுதான் இருக்கிறார்கள் என்றேன்.
அம்மா மணியம்மையாரை அனுப்பி வைத்து சொன்னீர்கள் என்றால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றேன்.
அதேபோன்று மணியம்மையாரும், எங்கள் வீட்டில் வந்து சொன்னபொழுது,
‘‘அய்யாவிடம் அவனை ஒப்படைத்துவிட்டோம்; நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை'' என்று என்னுடைய அப்பா சொல்லிவிட்டார்.
பிறகு எங்களுடைய திருமணம் நடைபெற்றது. அந்த மணவிழாவில் அண்ணா, புரட்சிக்கவிஞர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எங்களுடைய வீட்டில் திருமண வரவேற்பு நடை பெற்றது - அந்த விழாவில் அய்யாவும் கலந்துகொண்டார்.
எங்களுடைய மணவிழாவில், எந்தவித எதிர்ப்போ, சங்கடங்களோ கிடையாது.
பேச்சாளர்கள் எதைப் பேசக்கூடாது?
முனைவர் வா.நேரு, மதுரை
கேள்வி: அய்யா வணக்கம். வாழ்த்துகள்! நம்முடைய பேச்சாளர்கள், கூட்டத்தில் உரையாற்றும்பொழுது, என்ன பேசவேண்டும் என்பதைவிட, என்ன பேசக்கூடாது? எழுத்தாளர்கள் முதன்முதலில் எழுதும்போது, எதைக் கடைப்பிடிக்கவேண்டும்?
ஆசிரியர்: பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ, நம்முடைய கருத்துள்ளவர்களோ இவர்கள், ‘விடுதலை' யைப் பற்றியும், நம்முடைய கொள்கைளைப்பற்றியும், நம்முடைய நிலை என்ன என்பதைப்பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அந்த அடிப்படைக்குக் கோளாறு இல் லாமல், தங்களுடைய உரைகளையும், எழுத்துகளையும் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
தங்களுக்கு ஒரு பெருமை என்பதைவிட, இயக்கத்தை, கொள்கையை முன்னிலைப்படுத்தி, தங்களைப் பின்னாலே வைத்துக்கொண்டு சிந்தித்தால், எப்பொழுதும் அவர்கள் இயக்கத்திற்குப் பயன்படுவார்கள். இந்த அடிப் படையை வைத்துக் கொள்ளவேண்டும்.
அதேபோல, பேச்சாளர்கள், எதைப் பேசக்கூடாது என்று சொல்லவேண்டும் என்று கேட்டீர்கள்; அது மிகவும் முக்கியம்தான்.
அடுத்த கூட்டம் போடும்போது, நிச்சயமாக அதுபற்றி பேசலாம். உங்களுடைய கருத்துக்கு நன்றி!
இட ஒதுக்கீடு பறிபோன விஷயத்தில் பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையே!
சண்முகவேல் பிரபாகரன்
கேள்வி: அய்யா வணக்கம். வாழ்த்துகள்! உங்களோடு பேசக்கூடிய வாய்ப்புக்கு நன்றி.
மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கான இடங்கள் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட தலைவரும் பேச்சளவில்கூட கண்டனத் தைத் தெரிவிக்கவில்லை. ஊடகங்களும் பேசவில்லை.
ஏனென்றால், இன்றைக்கு இருக்கிற பார்ப்பன ஊட கங்கள், அவர்களை கபளீகரம் செய்துவிட்டதா? என்கிற ஒரு அய்யம் இருக்கிறது.
திராவிட இயக்க நிகழ்ச்சிகளுக்கு, திராவிட இயக்கத் தைச் சார்ந்த இளைஞர்கள் வருவதில்லை. எனக்கு 26 வயது ஆகிறது. என்னைப் போன்ற இளைஞர்களுக்கு, நம்முடைய இயக்கம் என்ன மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறது?
மருத்துவக் கல்லூரி மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வர்களுகக்கான இடங்கள் பறிபோயிருக்கின்றன - அதற் காக நாம் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்?
ஆசிரியர்: ‘விடுதலை'யில் அதைப்பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறோம். நேற்றுகூட நம்முடைய கருத்துகள் பரவியதால்தான், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் நம்முடைய கருத்துகளை ஏற்றுக்கொண்டு, மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு இருப்பதைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு, பிரச்சாரத்தை ‘விடுதலை'யின் வாயிலாகத்தான் நாம் செய்ய முடியும். ஆகவேதான், ‘விடுதலை'யை வாட்ஸ் அப் மூலம் பரப்புங்கள் என்று தெளிவாகச் சொல்கிறோம்.
மற்ற பத்திரிகைகளை நம்ப முடியாது; ஏனென்றால், அவர்கள் நம்முடைய கொள்கைகளும் செய்திகளும் தமிழர்கள் நடத்துகின்ற பத்திரிகைகளிலேயே நம்முடைய செய்திகள் வருவதில்லை.
‘விடுதலை' என்ற ஆயுதம் நமக்கு இல்லை என்றால், நாம் இல்லை என்றாக்கியிருப்பார்கள்; அதனால்தான், ‘விடுதலை'யைப் பலப்படுத்தவேண்டும்; பரப்பவேண்டும் என்கிறோம்.
தோழர்கள் அதைத் தெளிவாகச் செய்யவேண்டும். இளைஞர்கள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள்.
‘விடுதலை'யைத் தொடர்ந்து நீங்கள் படித்தீர்கள் என்றால், பிரச்சினையே இல்லை. இளைஞரணித் தலை வர்கள், மாணவரணி தலைவர்களோடும், மற்றவர்களோ டும் தொடர்பு கொள்ளுங்கள்.
மருத்துவக் கல்லூரிகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட பிரச்சினையில், அகில இந்திய அளவில் வேர் பிடித்திருக்கிறது. நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இயக்கம் சாராத நண்பர்கள்
நிறைய பேர்களுக்கு....
ஏ.வி.எம்.குணசேகரன், தஞ்சை
கேள்வி: அய்யா வணக்கம்.
உங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க ‘விடு தலை'யை வாட்ஸ் அப் மூலம் பலருக்கு அனுப்புகிறேன்.
வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், கத்தார் போன்ற நாடுகளில் என்னுடைய நண்பர்கள் இருக்கிறார் கள். இயக்கம் சாராத நண்பர்கள் நிறைய பேர். அவர்கள் எல்லோரும் இப்பொழுது ‘விடுதலை'யை வாட்ஸ் அப்பில் அனுப்புவதற்கு தாமதமானால், ஏன் ‘விடுதலை' வர வில்லை என்று கேட்கிறார்கள்.
ஆசிரியர்: இந்தப் பணியை தொடருங்கள்!
வடமாநிலங்களில் பெரியாருடைய தாக்கம் அதிகமாக இருக்கிறது
உருத்திரன், பழனி
கேள்வி: அய்யா வணக்கம். இந்த ஊரடங்கில், அதிக நேரம் புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பெரியார் நூல்களையும், உங்களுடைய நூல்களையும், திராவிடர் கழக நூல்களையும் படித்திருக்கிறேன்.
எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், முதலில் இருந்ததைவிட, இப்பொழுது வடமாநிலங்களில் பெரியாரு டைய தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
‘விடுதலை' பத்திரிகையை அவர்களுக்குப் புரியும்படி செய்யவேண்டும்; தமிழ்நாட்டில் ஒரு பெரியார் அய்யா போன்று அவர்களுக்கு இல்லை. அம்பேத்கர் அவர்கள் இருந்தார். இப்பொழுது இல்லை என்பதனால், நம்முடைய ‘விடுதலை'யின்மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா?
ஆசிரியர்: உங்களுடைய கருத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கெனவே தோழர்கள் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு இருக்கிறார்கள். இந்தி மொழியில் விளம்பரப்படுத்தினால்தான், அவர்களிடம் போய்ச் சேரும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் மத்தியில், ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்' பத்திரிகையின் மூலம் நம்முடைய கருத்து களைப் பரப்புகின்றோம். இந்தி மொழியிலும் நம்முடைய கருத்து களைப் பரப்புகின்ற அளவிற்கு, ஒரு வாய்ப்பை ஏற் படுத்தலாம்.
‘விடுதலை' கலந்துரையாடலில், அந்தக் கருத்தை விதைத்திருக்கிறார்கள். நிச்சயமாக அது முளைத்து வரும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வோம்.
வடபுலத்தில் இருப்பவர்கள் பெரியாரைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பீகார், அசாம் போன்ற மாநிலங்களிருந்து குரல்கள் வருகின்றன.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், இந்தியிலும் நம் முடைய கருத்துகளைப் பரப்புவதற்கான முயற்சிகளை செய்வோம். உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி!
- தொடரும்
No comments:
Post a Comment