மறைந்த திரு. எஸ்.ராஜரத்தினம் அவர்களுக்கு புகழ் மாலை ஆர்.வி.ஈஸ்வர், டில்லி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 20, 2020

மறைந்த திரு. எஸ்.ராஜரத்தினம் அவர்களுக்கு புகழ் மாலை ஆர்.வி.ஈஸ்வர், டில்லி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி


கடந்த பல பத்தாண்டு காலத்தில்,  வருமான வரி சட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய  பல அறிஞர்களைப் பற்றி பேசும்போது,   அதில் தனித்த அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரே ஒருவர் என்ற முறையில் திரு. எஸ்.ராஜரத்தினம் அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.  கடந்த சனிக்கிழமையன்று தனது 93 ஆவது வயதில்  தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட திரு. எஸ். ராஜரத்தினம் அவர்கள் இந்திய வரு வாய்த் துறையிலும், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திலும் பணியாற்றியவர் ஆவார்.


துறை வல்லுநர்களால் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பாடு செய்து நடத்தப் பட்ட ஆய்வுக் கூட்டங்களில், ஒன்றில் கூட கலந்து கொள்ளாமல் திரு. ராஜ ரத்தினம் அவர்கள் இருந்தை நான் பார்த்ததே இல்லை என்று இன்று காலை இந்த செய்தியை எனக்கு தெரிவித்த  எனது வழக்குரைஞர் நண்பர் ஒருவர் கூறினார்.



புதிது புதிதாக கற்றறிந்து கொள்வ திலும், தான் கற்றறிந்தவைகளை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் அவர் கொண்டிருந்த பேராவல் அத் தகையதாக இருந்தது. ஒரு கருத்தையோ அல்லது ஒரு கருத்தின் விதையையோ முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல் அவர் எப்போதுமே நிராகரித்தது இல்லை.  இந்திய வருவாய்த் துறை யிலும், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திலும்  பணியாற்றிய தனது நீண்டகால சேவையில் எவ்வாறு ஆணைகளைப் பிறப்பித்தாரோ அதைப் போலவே, அக் கருத்தினைப் பற்றி மிகமிக ஆழமாக சிந்தித்து, நீரூற்றி உரமிட்டு போற்றி பாதுகாத்து வளர்த்து, ஒரு முழுமை பெற்ற கோட்பாடாகவே அக்கருத்தினை அவர் செய்துவிடுவார். வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப் பாயத்தில் அவர் பணியாற்றிய காலம், குறிப்பாக இளம் வழக்குரைஞர்களுக்கு ஒரு பொற்காலமாகவே அமைந்ததாகும். வழக்குரைஞர்கள் முன் வைக்கும் கருத்தை அவர் முழுவதுமாக மோப்பம் பிடித்துவிடுவார்.  நீங்கள் எழுந்து நின்றாலே போதும். வழக்கு பற்றிய உங்களது வாதங்கள் அனைத்தையும் எதிர்பார்த்து, அவற்றை உங்களுக்காக அவரே தொகுத்து அளித்துவிடுவார். வழக்கில் உள்ள அனைத்து உண்மை களையும், அவற்றுடன் தொடர்புடைய சட்டங்கள் அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வார். வழக்கமான சம்பிரதாய நீதிமன்ற நடைமுறையை அவர் எப்போதுமே ஆதரிக்காதவர். அவரது ஒரே நோக்கம்  நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுதான். தேவைக்கும் அதிகமான பொறுமையைக் கொண் டவர் அவர். அவர் ஒரு முறை கூட முகம் சுளித்ததோ அல்லது ஒரே ஒரு கடுமையான சொல்லைப் பேசியதோ கிடையாது.


திரு. ராஜரத்தினம் அவர்களின் அறிவார்ந்த ஆலோசனைகள் இனி வருவாய்த் துறைக்கும், வழக்குரைஞர் தொழிலுக்கும் கிடைக்காது என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. அவர் விரும்பி, ஆதரித்து, கடைப்பிடித்த மதிப்பீடுகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியவையாகும். மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே, தனது அகண்ட அறிவினை அவர் களுடன் பகிர்ந்து கொள்வது ஒன்றே அவரது வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது என்றே எனக்குத் தோன்று கிறது.


நன்றி: 'தி இந்து' 19-07-2020


தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment