நமது கவிப்பேரரசு வாழ்க பல்லாண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 13, 2020

நமது கவிப்பேரரசு வாழ்க பல்லாண்டு!

கழகத் தலைவர் வாழ்த்து



தமிழ்நாட்டின் பொதுச்சொத்து களில் ஒருவராகவும், திராவிட இனம் பெருமை கொள்ளும் பேராற்றல் பெற்றவராகவும் திகழும் நமது கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்கள் இன்று (13.7.2020) 66 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணுகிறார் என்ற செய்தி வரும்போது மிகுந்த மகிழ்ச்சியும், பூரிப்பும் அடை கிறோம்!


திரைப்படத் துறையில் அவரது சாதனை 7,500 பாடல்கள் எழுதினார் என்பதை இனி அவர் ஒருவர்தான் முறியடிக்க முடியும் என்ற சிறப்புக்குரியவர். சீரிய சிந்தனையாளர். திராவிடர் இயக்கத்தின் விளைச்சல்களில் வீரிய வித்தாக என்றும் திகழ்பவர். சிலர் அவரைக் குறி வைத்து வீண் வம்புக்கு சில நேரங்களில் அழைப்பதே- அந்த விதை மேலும் ‘‘பண்ணையாக’’ வளர இடப்படும் உரம் என்பதை உறுதிப்படுத்தி, தந்தை பெரியார் மொழியில் - வழியில் வாழ்த்துகிறோம்.


‘கலைஞர் என் தமிழ் ஆசான்’ என்பதை எங்கும் என்றும் கூறத் தயங்காதவர்; தமிழ்கூரும் நல்லுலகத்தில் பகுத்தறிவாள ராகவே என்றும் மிளிரும் கவிப்பேரரசு அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், பெருகும் உள்ள வளத்தோடும், இணையற்ற இலக்கியச் செம்மலாகவும், மனிதம் பொங்கும் மானமிகு கவிஞராகவும் என்றும் வாழ்ந்து தொண்டறத்தில் திளைக்க திராவிடர் கழகம் வாழ்த்தி மகிழ்கிறது!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


13.7.2020 


குறிப்பு: கவிப்பேரரசு அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கழகத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment