ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 11, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்

சிறப்புக் கேள்வி



ஆ.வந்தியத் தேவன்,


அமைப்புச் செயலாளர்,


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்


தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கம்!


கேள்வி 1: விடுதலையாகும் நாள் தெரியாமல், கொடிய மிசாச் சிறையில் இருந்த போதும், கொரோனா தீங்கு எப்போது ஒழியும் என்பது தெரியாமல் உள்ள இக் காலத்திலும் தங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது?


பதில் : நன்றி தோழர் வந்தியத் தேவன் அவர்களே!


மிசா அன்றும் நம்பிக்கை இழக்கவில்லை. இன்றும் கொரோனா காலத்திலும் அப்படியே. எதுவரினும் எதிர் கொள்ளும் துணிச்சலை பெரியார் தந்த புத்தி எனக்கு கற்றுத் தந்துள்ளதால் எதுவும் துச்சமே! பயப்படுவதோ, கவலைப்படுவதோ எப்போதும், எப் பிரச்சினையையும் தீர்த்ததாக வரலாறே கிடையாது. பகுத்தறிவாளர்கள் வெற்றிக்கு இதுவே மூல காரணம்.


கேள்வி 2: ஆட்சி பீடத்தில் இந்துத்துவா சக்திகள்; ஆமாம் சாமி போடும் எடப்பாடி அரசு; இன எதிரிகளின் துள்ளல்; விபீஷணக் கூட்டத்தின் துரோகம் இவற்றை எதிர்நின்று கொள்கைகளை வென்றெடுக்க, திராவிட இயக்க அரசியல் கட்சிகளுக்கு ‘தாய்க் கழகத்தின்’ தலைவரான தங்களின் அறிவுரை - வழிகாட்டுதல் என்ன?


பதில்: திராவிட இயக்க அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையில் கூட்டாக நின்று, நம்பிக்கை தளராமல், கொண்ட கொள்கையால் சமரசமின்றி, வாக்கு வங்கியின் பலவீனத்தை ஒதுக்கி, வீரத்தோடு களத்தில் நின்றால் வெற்றி நமதே! நாளையும் நாளை மறுநாளும் கூட நமதே! நமதே!



கேள்வி: பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் அவர்களுடனான உங்களின் இளமைக்கால நட்பு, நினைவுகள்...       - அ.தமிழ்க்குமரன், ஈரோடு


பதில்: மாணவப் பருவத்தில், கடலூரிலிருந்து புதுவைக்குச் சென்று, புரட்சிக் கவிஞர் அவர்களை அவரது பெருமாள் கோவில் வீதி இல்லத்தில் சந்திக்கும் போதெல்லாம் மன்னர்மன்னன் அவர்களுடன் நட்புறவுடன் பழகும் வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது.


திராவிட மாணவர் கழகப் பிரச்சாரத்திற்கு சேலம் மாவட்டத்திற்கு நாங்கள் சென்றபோது (1945, 46 ஆக இருக்கலாம்) பரமத்தி வேலூர் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியராகப் புரட்சிக் கவிஞர் மருமகன்  கண்ணப்பர் பணியாற்றினார். (புரட்சிக் கவிஞரின் மூத்த மகள் சரஸ்வதி அவர்களது வாழ்விணையர்).  புரட்சிக் கவிஞர் அவர்கள், காவிரி ஆற்றங்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் இரவு 12 மணி வரை பேசிக் கொண்டிருந்தார் - ஆற்று மணலில் அமர்ந்து பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டமோ குறைந்தது என்றாலும் கூட! நமது தலைவர் பொத்தனூர் க.சண்முகம் போன்றோர் ஒரு துண்டு சீட்டில் ‘கூட்டம் போய்விட்டது. மணி 12. பேச்சை நிறுத்தினால் நலம்’ என்று எழுதி, அதை கோபதி(மன்னர் மன்னன்)யிடம்தான் கொடுத்து அனுப்பினர்.


புரட்சிக் கவிஞர் அதையே பல மணித் துளிகள் ஆகியும் பார்க்கவில்லை. மன்னர் மன்னன் பின்னால் நின்று அழைக்க, கோபம் வந்தது புரட்சிக் கவிஞருக்கு! மேலும் சத்தமாக “போறவன் போறான்; இருக்கிறவன் கேட்பான். நீ போய் உட்காரு" என்ற சிங்கக் கர்ஜனை மறவாத ஒன்று. கடைசி வரை மாறாத நட்பு இருந்தது. வாய்ப்புக் கிட்டும்போது சந்தித்துள்ளோம்! பண்பாளர் - புரட்சிக்கவிஞர் போலவே மிடுக்கானவர்!


கேள்வி: ‘மருத்துவக் கல்வியில் சமூகநீதி’ என்ற தலைப்பில் காணொலி வாயிலாக தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாற்றினீர்கள். தங்களால் 87 வயதில் எப்படி முடிகிறது?             - சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.


பதில்: மூத்திர பாட்டிலை பிளாஸ்டிக் குவளையில் வைத்து ஆறு கால்களுடன், 94ஆம் ஆண்டிலும் - வலியையும் பொறுத்துக் கொண்டு, தொண்டு செய்த அந்த ஒப்பற்ற தலைவரின் ஓய்வறியா முழக்கத்தின் முன் இது எம்மாத்திரம்? அவர் தந்த புத்தி, அவரிடம் கற்ற உழைப்பு - பெற்ற அறிவே முக்கிய காரணம்.


கேள்வி: சீனாவின் 59 செல்போன் செயலிகளைத் தடை செய்வதால் இந்திய எல்லையில் பதற்றம் நீங்குமா?               


                - ஆ.ஆதவன், தேரழுந்தூர் 


பதில்: எதிலும் நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும். வரும் முன்னர் காப்பதே சீரிய செயல் முறையாகும்.


கேள்வி: கோயில்களில் நடக்கும் நிகழ்வுகளை ஒளிபரப்ப தெய்வீக டிவி ஆரம்பிக்கப் போவதாக அரசு அறிவிப்பு வந்துள்ளதே?


                - ‘பெல்’ ஆறுமுகம், திருச்சி.


பதில்: கடவுள் சக்தியும், மதமும் அறிவியலுக்கு முன் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டு மண்டியிட்டுக் கொண்டுள்ளன என்பதற்கு சாட்சியாகும்.


கேள்வி: கீதையைப் பற்றி ஆய்வுரை என்ற பெயரில் இழிவு செய்யும் தாங்கள் குர்-ஆனையோ, பைபிளையோ ஏன் ஆய்வு செய்து பேசுவதில்லை?


- சர்வம் கிருஷ்ணார்ப்பணம் (ஜூம் செயலி மூலம் கேட்கப்பட்ட கேள்வி)


பதில்: ஆய்வுரையில் எங்கள் மீதான இழிவு நீக்கம்! ‘பாவயோனியில் வைசியர், சூத்திரர், பெண்கள் பிறந்தவர்கள்’ என்று கீதை சுமத்தும் இழிவு, ஏனோ தங்களைப் போன்ற 'சர்வங்களுக்கு'ப் புரியவில்லை - சர்வம் அர்ப்பணத்தில் ‘அறிவும்’ கூடத்தானே என்கிறீர்களா? ஓ... சரி, சரி!


குரானிலோ, பைபிளிலோ எதிலாவது சூத்திரச் - வேசியாக்கி, எங்களைத் தாசி புத்திரர்களாக்கியுள்ள சில பகுதிகளைக் காட்டுங்கள், அதையும் எதிர்த்துக் கடுமையாகப் பேசுவோம்.


மூட்டு உடைந்து, காயம்பட்ட இடத்திற்குத்தான் அறுவை சிகிச்சை.


எஞ்சியவற்றுக்கு ஏன் தேவை?


பரவாயில்லை அந்தப் பணியை நீங்கள் வேண்டுமானால் தாராளமாக எடுத்துச் செய்யுங்கள் - உங்கள் குருஜி ஆணைப்படி! எங்களுக்கு முன்னுரிமை எங்களது மானமும் அறிவும் - புரிகிறதா ‘சர்வங்களே‘?


கேள்வி: ஜாதி-தீண்டாமையிலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் பரிந்துரைக்கும் வழி என்ன? ஜாதியையும், தீண்டாமையையும் உருவாக்கிக் காப்பாற்றும் இந்து மதத்திலிருந்து, மதம் மாறாமல் இதைச் சாதிக்க முடியுமா? ஏன் திராவிடர் கழகம் மதமாற்றத்தைப் பிரச்சாரம் செய்வதில்லை?


                - டாக்டர் பூபதி ஜான் (ஜூம் செயலி மூலம் கேட்கப்பட்ட கேள்வி)


பதில்: மிக எளிய வழி. திராவிடர் கழகத்தில் சேருங்கள். கறுப்புச் சட்டை அணியுங்கள் - முழு மனிதனாவீர்கள்! நீங்கள் ஜாதி, மதம் இல்லாத மனிதம் உள்ள மனிதனாகவே, சுதந்திரமான, பகுத்தறிவு வாழ்வு உங்களுக்குச் சொந்தமாகும். ஒரே ஒரே குடும்பம் - அதில் உறுப்பினர் ஆவீர்!


கேள்வி: அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் அடிமைமுறையை ஒழிக்க பாடுபட்டவர்களுக்கும் நம் நாட்டில் வருண, ஜாதி முறையை எதிர்த்த சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் உள்ள ஒற்றுமை - வேற்றுமை என்ன?


                  - கிருபாகர் ராஜ், பெருங்களத்தூர்   


பதில்: ஒற்றுமை - சமத்துவ சமுதாயம் நோக்கிய லட்சியப் பயணம்


வேற்றுமை - கறுப்பினப் போராட்ட வீரர்கள் சந்திக்காத அளவு எதிர்நீச்சல், அடக்குமுறை, உயிர்த் தியாகம் - எல்லாம்!


கேள்வி: தங்களின் பொதுவாழ்க்கைக்காக தங்களின் இணையர் மோகனா அம்மையார் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தாங்களே பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி சொல்லியிருக்கிறீர்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காக நீங்கள் விட்டுக் கொடுத்தது உண்டா? எந்த வகையில்?             - ச.ஞானம், ஆலங்குளம்


பதில் 8: இல்லை என்பதுதான் வெட்கத்தோடு கூடிய வெளிப்படையான எனது பதில். ஒப்புதல் வாக்குமூலமும் கூட! காரணம் என்னை நான் முழுமையாகப் பெரியாரிடம் ஒப்படைத்துக் கொண்டேன். அவர் தனனை என்னிடம் ஒப்படைத்துக் கொண்டார்; இதுபற்றி இதற்கு மேல் என்ன சொல்ல...?


No comments:

Post a Comment