புலவர் நன்னன் படைப்புகள் படைக்கலன்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

புலவர் நன்னன் படைப்புகள் படைக்கலன்களே!

பண்பாட்டுப் படையெடுப்பை நன்னன் படைக்கலன்களைத்


தாங்கி முறியடிக்க அவர் பிறந்த நாளில் உறுதி கொள்வோம்!


புலவர் நன்னன் பிறந்த நாளில் தமிழர் தலைவர் சூளுரை


* கலி. பூங்குன்றன்



புலவர் மா. நன்னன் அவர்களின் படைப்புகள் - படைக்கலன்களாகும். பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை -அந்தப் படைக்கலன்களை ஏந்தி முறியடிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


நன்னன்குடி சார்பில் நேற்று காணொலி மூலம் நடைபெற்ற புலவர் மா. நன்னன் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள்  காணொலியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய நிறைவுரை.


பகுத்தறிவுப் பெரும்புலவர் மா. நன்னன் அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளைத் தம் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தபடி வாழ்ந்து காட்டிய பெருமகன் ஆவார்.


70 ஆண்டு நட்பு!


மாணவர் சுற்றுப் பயணம் காலந்தொட்டு 70ஆண்டு காலமாக அவரோடு நட்பாக இயக்கத்துக்காரனாகப் பழகி வந்திருக்கிறேன்.


பெரியார் திடலோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர் - முதல் “பெரியார் பேருரையாளர்” என்ற பட்டத்துக்குச் சொந்தக்கார் நமது புலவர் ந.இராமநாதன். இரண்டாவது பெரியார் பேருரையாளருக்கான அரிய சொற்பொழிவை ஆற்றியவர் நமது புலவர் நன்னன் ஆவார்.


இவர்களுடைய சொற்பொழிவுகள் நூல்களாக வெளிவந்திருக்கின்றன.


தெளிவும் - துணிவும் அவருக்குரியவை. எவரிடம் தெளிவு இருக்கிறதோ அவர்களால்தான் எதையும் தெளிவாகப் பேச முடியும் - எழுதவும் முடியும்.


பகுத்தறிவுப் படைக்கலன்கள்


புலவர் நன்னன் அவர்கள் மறைந்தாலும் அவரால் படைக்கப்பட்ட நூல்கள் நமது இயக்கத்திற்கான படைக் கலன்கள் ஆகும்.


பெரியார் கணினி எனும் பெயரில் அவர் கொண்டு வந்த இரு தொகுதிகளும் மிகச் சிறப்பானவை.


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பாராட்டு


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அற்புதமாக ஓர் அணிந்துரையை வழங்கியுள்ளார் அந்நூலுக்கு.


“1946ஆம் ஆண்டு வாலிபர் வயதில் ஈரோடு Ôகுடிஅரசு’ குருகுலத்தில் அந்த இதழின் துணை ஆசிரி யராக பணியாற்றிய காலத்தில் தந்தை பெரியாருடன் மிக நெருங்கிய உறவு கொண்டிருந்த அவருடைய மாணவர்களில் ஒருவனாக இருந்தவன் நான் என்ற பெருமைக்குரியவனாவேன்.


இன்று நான்  கழகப் பணியாற்றுவதாயிருப்பினும் பொதுப்பணியாயினும், கலைப் பணியாயினும், எழுத்துப் பணியாயினும், ஓய்வு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல், உணவுகூட அருந்தாமல் உழைப்பதற்குப் பயிற்சி பெற்றிருப்பது, ‘குடிஅரசு’ அலுவலகத்திலும், ஈரோடு இல்லத்திலும் அந்தக் கொள்கைக் குன்றான பகுத்தறிவுப் பகல வனிடம்தான் என்பதையெண்ணி இப்போதும் இன்பம் காண் கிறேன்.


அந்தச் சிந்தனைச் சிற்பி இந்த சமுதாயத்தில் எத்தகைய அடிப் படை மாற்றம் ஏற்பட வேண்டு மென்று புரட்சிக் கொடி ஏந்தி னாரோ, அந்தக் கொடியின் நிழலில் அணிவகுத்தவர்களில் ஒருவராகவும், அந்த ஒப்பற்ற மேதையின் உழைப்பையும் உறுதி வாய்ந்த கொள்கை களையும், போற்றுபவராகவும் விளங்கக் கூடியவர் நன்னன் என்பது என் அழுத்தமான எண்ணமாகும்ÕÕ  என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.


பெரியார் பார்வையில்


 மொழி ஒரு போர்க் கருவியே!


மொழியைப் பொறுத்தவரையில், அது ஒரு போர்க் கருவி என்றார் தந்தை பெரியார். அக்கருவி நவீனப் படுத்தப்பட வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கோட்பாடு.


புலவர் நன்னன் அவர்களின் படைப்புகள் - படைக்கலன்கள் - போர்க்கருவிகள்.


அந்தக் கருவிகள் மிகவும் தேவைப்படும் கால கட்டம் இது. என்னதான் ராமன் கோயில் கட்டினாலும், இராமனின் வில்லும், அம்பும் இந்தக் கால கட்டத்தில் எடுபடுமா?


சமஸ்கிருதம் என்னும்


பண்பாட்டுப் படையெடுப்பு


ரஃபேல் விமானம் அல்லவா தேவைப்படுகிறது! இப்பொழுது நம்மை நோக்கி ஒரு படையெடுப்பு-அதுதான் புதிய கல்வி என்ற பெயரால் சமஸ்கிருதத் திணிப்பு என்ற பண்பாட்டுப் படையெடுப்பு. அதை முறியடிக்க புலவர் நன்னன் அவர்களின் படைப்புகளாம் போர்க் கருவிகள் தேவையே.


அந்தப் போர்க் கருவிகளின் முனை மழுங்காது அவற்றை முழுமையாக பயன்படுத்துவோம்.


உறுதி ஏற்போம்!


அவரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாளில் நம் இனத்தை நோக்கி பாய்ந்துவரும் பகையை முறியடிப்போம்!


வாழ்க புலவர் நன்னன்!


என்று கூறி முடித்தார் திராவிடர் கழகத் தலைவர்.


நன்னன்குடி சார்பில் புலவர் மா.நன்னன் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நன்னன்குடி சார்பில் (குடும்பத்தினர்) காணொலி மூலம் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.


250-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டது சிறப்புக்குரியது.


புலவர் மா. நன்னன் அவர்களின் மூத்த மகள் வேண்மாள் அறிமுகவுரையாற்றினார்.


"எனது தம்பி டாக்டர் அண்ணல் மிகச் சிறந்த டாக்டராகப் பரிணமித்தார். வெறிநாய்க் கடிக்கான மருத்துவ முறையில் மிகச் சிறந்த ஆய்வை மேற்கொண்டவர் - அவர் புகழ் நாடெங்கும் பரவியது -அந்தக் கால கட்டத்தில் தனது 36ஆம் வயதில் மறைவுற்றார்.


அந்தத் துயரத்தில் இருந்து எங்கள் குடும்பம் மீளவே முடியாத நிலையில் அப்பா நன்னன் அவர்கள்தான் எங்களை எல்லாம் ஆற்றுப்படுத்தினார்.


‘நன்னன்குடி’ என்ற அறக்கட்டளையை நிறுவினார்.


தமிழைப் பரப்புதல், தந்தை பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்புதல், மருத்துவ உதவிகள், சுயமரி யாதைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஊக்கப் பரிசு, சிறுகதை, கவிதைப் போட்டி என்று நன்னன்குடி சார்பில் எங்கள் பணி தொடர்கிறது. அதன் மூலம் ஆறுதல் அடைந்தோம்" என்று தன் அறிமுகவுரையில் கூறினார்.


இரண்டாண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த விழாவில் புலவர் நன்னன் ஆற்றிய வரவேற்புரை சிறிது நேரம் ஒலி பரப்பப்பட்டது. இது பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியுறச் செய்தது.


புலவர் மா. நன்னன் அவர்களின் இரண்டாம் மகள் அவ்வை இணைப்புரை வழங்கினார். திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்த வாழ்த்தினைப் படித்தார். "எங்கள் தந்தையார் ஊட்டிச் சென்ற, எடுத்துச் சொன்ன பகுத்தறிவு வழியில் எங்கள் பயணம் தொடரும்" என்று உறுதியளித்தார்.


தொடர்ந்து புலவர் நன்னன் அவர்களின் கொள்ளு பெயரன்கள் கவின், வினயன், பெயர்த்தி அனிமலர் ஆகியோர் மழலைச் சொற்களால் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்தனர்.


நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி. லெனின்


நக்கீரன் இதழின் பொறுப் பாசிரியர் கோவி.லெனின் 20மணித்துளிகள் சிறப்புரை யாற்றினார்.


நன்னன்குடி நன்னன் காட்டிய வழி என்ற ஒன்றை புலவர் நன்னன் நம்மிடையே விட்டுச்சென்றுள்ளார். அரசுத் தொலைக்காட்சியில் தமிழ்ப் பாடம் அவர்நடத்திய பாணி தனித் தன்மையானது. எதிரே யாரும் கிடையாது. ஆனால் எதிரே மாணவர்கள் இருப்பது போல் பாவித்து அவர் நடத்திய அந்த முறை - அவருக்கே உரித்தான தனித் தன்மை வாய்ந்ததாகும்.


எதிலும் தனித் தன்மையாக பெரியாரியல் சிந்தனைவாதி அவர். வணக்கம் என்று சொல்லுவது தமிழ் மரபன்று. வாழ்த்துவதுதான் நம் மரபு. வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்று கூறியவர் புலவர் நன்னன் என்று குறிப்பிட்டார்.


பேராசிரியர் சுப.வீரபாண்டியன்


திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:


1972இல் முதல் சந்திப்பு நடந்தது. 1985ஆம் ஆண்டு முதல் பல இடங்களில் அவர் பங்கேற்று பேசும் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.


எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதை நுணுக்கமாக அறிந்தவர் அவர். பொன்னேரியின் பக்கத்தில் ஓர் இடத்தில் நாங்கள் இருவரும் பேசினோம்.


நான் பேசிய பேச்சு அந்த மக்களிடத்தில் எடுபடவில்லை. ஆனால் நன்னன் அவர்களோ - அந்த கிராம மக்களின் நிலையறிந்து எளிமையான முறையில் பேசியது இன்னும் என் நினைவில் நிற்கிறது.


நாங்கள் கடவுள் வேண்டாம் என்றா சொல்லுகிறோம்? அப்படி ஒரு கடவுள் இல்லையே என்பது எங்கள் கவலை.


உண்மையிலேயே கடவுள் என்ற ஒருவர் இருந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? நல்லவனை வாழச் செய்ய வேண்டும். கெட்டவனைத் தண்டிக்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது? கெட்டவன்தானே வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறான்? என்று நன்னன் அவர்கள் சொன்ன போது அந்த கிராம மக்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.


1944இல் நன்னன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தந்தை பெரியாரோடு ஒரு கூட்டத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.


முரட்டுத்தனமாக நான் பேசினேன் என்றார் நன்னன். தந்தை பெரியார் முதுகில் தட்டிக் கொடுத்து நல்லா பேசுனீங்க. ஆனால் இப்படியெல்லாம் கடுமையாகப் பேசக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார். நன்னன் அவர்கள் சொன்னதுண்டு.


நன்னன் அவர்கள் பேசும் கூட்டத்தில் விழிப்பாகப் பேச வேண்டும். பேசி முடித்து வந்தபிறகு தவறுகளைத் திருத்துவார்.


அவரைப் பொறுத்தவரை தந்தை பெரியார்பற்றிப் பேசியதோடு அல்லாமல், பெரியார் கொள்கை வழி நடந்து காட்டினார் என்று குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment