பெரியாரை வார்த்தையால் கடக்கக் கூடாது; வாழ்க்கையால் கடக்க வேண்டும்! என்னை வளர்த்த தாய் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 6, 2020

பெரியாரை வார்த்தையால் கடக்கக் கூடாது; வாழ்க்கையால் கடக்க வேண்டும்! என்னை வளர்த்த தாய் பெரியார்!

முனைவர் சுந்தரவள்ளி



பெரியாரை வார்த்தையால் அல்ல; வாழ்க்கையால் கடக்க வேண்டும் என்றும், என் சிந்தனையை வளர்த்த தாய் பெரியார் என்றும் முனைவர் சுந்தரவள்ளி பேசினார்.


தஞ்சாவூர், திருவாருர் மண்டலத் திராவிடர் கழக மகளிரணி சார்பில் "பெண்ணுரிமைப் போராளி பெரியார்" எனும் காணொலி கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:


பெரியார் கொடுத்த அடி அப்படி!


பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் பெயரைச் சொன்னாலே பாண்டேக்களும், பா.ஜ.க. வினரும், நாம் தமிழர் தம்பிகளும் அலறி, புலம்பி, ஓடி, ஒழிந்துக் கொள்ளுகிறார்கள். சிலையை உடைக்கிறார்கள், கருத்தைத் திரிக்கிறார்கள், இன்னும் என்னென்னமோ செய்கிறார்கள், ஒன்றும் முடியவில்லை.காரணம் பெரியார் கொடுத்த அடி அப்படி! சமூகத்திற்குப் பெரியார் செய்து விட்டுப் போன செயல்கள் அப்படி! பெருந்திரள் இளைஞர் கூட்டம் பெரியாரை  அதிகமாய் நெஞ்சில் சுமந்து வலம் வருகிறது!


கலக்கம் கொண்ட பாண்டேக்கள் பெரியார் நூல்களை வரி,வரியாகப் படிக்கிறார்கள், ஏதேனும் திரிக்க முடியுமா என ஏங்குகிறார்கள். அணு, அணுவாய் வாசித்தவர்களுக்கு அய்யாவை நன்கு தெரியும்! கருவில் இருக்கும் போதே மகான் என்கிற கதையெல்லாம் நாங்கள் கூறவில்லை. தன் னைத் தானே செதுக்கிச் செதுக்கிப் பெரியார் ஆனவர் அவர்!


முப்பாட்டன் வள்ளுவர்!


அப்பத்தா அவ்வையார்!


பெரியார் தான் எங்களைப் படிக்க வைத்தாரா? எங்கள் தாத்தன், முப்பாட்டன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படித்தார்களே எனக் கேட்கிறார்கள்?


முப்பாட்டன் திருவள்ளுவரும், அப்பத்தா அவ்வை யாரும் படித்தவர்கள் தான்! அதன்பிறகு 2 ஆயிரம் ஆண்டுகள் நாம் ஏன் படிக்கவில்லை? நம் தாத்தாக்கள் கோவணத்தோடு இருந்தது ஏன்? நம் அப்பத்தாக்கள் இரவிக்கை போட முடியாதது ஏன்?


இன்றைக்குப் போலித் தமிழ்த் தேசியம் பேசும் தலை வர்கள் நிறைய வந்திருக்கிறார்கள். ஒரு வார்டு உறுப்பினர் ஆக முடியாதவர்கள் முதல்வர் கனவில் பேசுகிறார்கள். மக்களை நேசிக்கிற தலைவர்கள் தான் எங்களுக்குத் தேவை. அதேநேரம் பெரியாரை எதிர்க்கிற யாராலும் நல்ல ஆட்சியைத் தரமுடியாது என்று சொல்வேன். இன்றைக்கு சனாதனத் தத்துவத்திற்கு எதிராக, கொள்கை அடிப் படையில் நேருக்கு நேர் நிற்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எங்கள் தலைவர் பெரியார். அரசியல் களத்தில் கூட பெரியாரைத் தூக்கிப் பிடிப்பவர்கள் தான் எங்களுக்கு வேண்டும்; தூக்கி எறிபவர்கள் எங்களுக்கு வேண்டாம்!


எங்களின் தாய் பெரியார்!


ஒரு பெண்ணின் தேவை இன்னொரு பெண்ணுக்குக் கூட தெரியாது. எது விடுதலை? என்ன செய்தால் அது கிடைக்கும்? அதற்கான வழிமுறைகள் என்ன என்பது கூட தெரியாமல் இருந்தது. அப்படியான சூழலில் எங்க ளுக்கு விடுதலை பெற்றுத் தந்தது எங்களின் "தாய் பெரி யார்" எதையும் அறிவியலோடு கற்றுத் தந்தவர். பெண்ணுரி மைக் கருத்துகளைப் பார்த்து, பார்த்து வடித்துத் தந்தவர்.


தமிழ்ச் சமூகத்தில் பிற்போக்கு மரபும் உண்டு! முற் போக்கு மரபும் உண்டு! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்", என்று எழுதியதற்காகவே இலட்சக்கணக்கில் திருக்குறளை விற்றவர் பெரியார். அதேநேரம், "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை", என்று எழுதியதற்காக அக்குறளைக் கடுமையாக எதிர்த்தவர். "முகத்தாட்சயண் பாரு தாயி" எனக் கிராமத்தில் சொல்வார்கள். ஆனால் தவறைத் தவறு என்று கூறி, சமரசமற்ற கொள்கைப் போராளியாகத் திகழ்ந்தவர் பெரியார்.


எங்கள் முதுகில் அடித்து விரட்டியவர்!


கற்பில் தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைசிக்கற்பு என்கிறார்கள். சங்க இலக்கியத்தில் தெய்வக் கற்பு என்றும் இருக்கிறது. இவற்றைக் காலம் காலமாக ஏற்றுக் கொண்டது இந்தச் சமூகம். பெரியார் தான் ஆண்களை அழைத்தார், இங்க வாங்க! பெண்களுக்கு மட்டும் கற்பு இருக்கிறதே, உங்களுக்கு எங்கே? என்று கேட்டார். ஒரு ஆணுடன் பிடித்து வாழ்வது வேறு! பிடித்துக் கட்டி விடுவது வேறு.


பாலியல் பலாத்காரம் தவறில்லை என நான்கு நாட்க ளுக்கு முன் கருநாடக உயர்நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி யுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் ஏன் வேலைக்குப் போக வேண்டும் என்றும் கேட்டுள்ளது?


பெண்கள் இரவுப் பணிக்குச் செல்வது என்பது இயல்பான ஒன்று. உட்கார்ந்த இடத்தில் "குத்துக் கல்லாக" இருந்த பெண்களைத் தன் கைத்தடியால் முதுகில் அடித்து, 'படிக்கப் போ, வேலைக்குப் போ' என விரட்டி அடித்தவர் பெரியார்.


இன்றைக்குப் புதிது, புதிதாக நாம் சிந்திக்கிறோம். ஆனால் 1920, 1930 களிலே எல்லாவற்றையும் பெரியார் பேசிவிட்டார். ஆண்மையை உடைத்தெறி என்றவர், கர்ப்பப்பையை வெட்டி எறி என்றும் கூறியிருக்கிறார்.


கர்ப்பிணி பெண்களின் உளவியல்!


இன்றைக்கு "குஜராத் வளர்ச்சி" என்கிறார்கள். ஆனால் அங்கு தான் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய் அதிகம் இருக்கிறார்கள். வெளிநாட்டுத் தம்பதியர்கள் இதற்காவே மருத்துவச் சுற்றுலா வருகிறார்கள். அங்கே ஒரு பெண் 7 முதல் 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொடுப் பதாகச் சொல்கிறார்கள்.


அதேநேரம் 1930ஆவது ஆண்டிலே கர்ப்ப ஆட்சி மற்றும் கருப்பை நீக்கம் குறித்துப் பெரியார் பேசினார். கர்ப்பிணித் தன்மையின் உளவியலை அப்படியே பதிவு செய்தவர். காலத்தின் கண்ணாடியாக வாழ்ந்தவர் பெரியார். முழு  வரலாறையும் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்.


பெரியார் பேசியது வார்த்தை அல்ல: வாழ்க்கை!


பெரியார் என்பவர் நுட்பமானவர், அறிவியலோடு செயல்பட்டவர். உலகில் சமூக விடுதலைக்கு யார் பாடுபட் டாலும் அவர்களை மக்கள் மன்றத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர்.


இந்த நூலில் கூட இங்கிலாந்து நாட்டின் நீதிபதியாக இருந்த மெக்கார்டி அவர்களின் தீர்ப்புகள் குறித்து எழுதி யுள்ளார். கருக்கலைப்புச் செய்வது கிறிஸ்தவ மதத்தில் குற்றமாகப் பார்க்கப்பட்டது. கடவுளுக்கு எதிராகவும் கருதப்பட்டது.


இந்நிலையில் கருக்கலைப்புச் செய்யப்பட்ட ஒரு பெண்மணி மீது வழக்குத் தொடரப்படுகிறது. விசாரித்த நீதிபதி இறுதியில் தீர்ப்பு எழுதினார். "கருக்கலைப்புச் செய்தது சட்டப்படி தவறு. அப்படியெனில் சட்டத்தை மாற்ற வேண்டும். இந்தப் பெண்மணியை என் சொந்த "ஜாமீனில்" விடுதலை செய்கிறேன்" என எழுதினார்.


இச் செய்தியைப் பெரியார் அந்நூலில் பதிவு செய்து உள்ளார். அவர் சொல்லாவிட்டால் நமக்கு ஏது இந்த வரலாறுகள்? கர்ப்பம் தரிப்பதும், மூடநம்பிக்கையும் ஒன் றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்கிறார் பெரியார். கரு உருவானது தொடங்கி, குழந்தை பிறந்து வளர்வது வரை எத்தனை எத்தனைச் சடங்குகள்? நான் அடிக்கடிச் சொல்லுவேன், பெரியாரை வார்த்தையால் கடக்கக் கூடாது; வாழ்க்கையால் கடக்க வேண்டும்!


சிங்கம் போல கர்ஜித்தவர்!


ஒரு பெண் தன்னைத் தானே விடுதலை செய்து கொள்ள கல்வி முக்கியம் என்றவர் பெரியார். இன்றைக்குச் சனாதனவாதிகளுக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் பெண்கள் நிறைய வந்து விட்டார்கள். சமூகத்தில் பெண் களின் உரையாடல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரு கிறது!  பெண்கள் கல்வி கற்றால் என்னென்ன மாற்றங்கள் வரும் எனப் பெரியார் நினைத்தாரோ அது  நடந்து வருகிறது.


அதேநேரம் அவரின் சமகாலத்தில் வாழ்ந்த பால கங்காதர திலகர் பெண்களுக்குக் கல்வி கொடுப்பது குரங் கின் கையில் பூ கொடுப்பது போல என்றார். இன்றைக்கு வல்லபாய் படேலுக்கு மிகப் பெரிய சிலை வைத்திருக் கிறார்கள். பெண்களுக்குக் கல்வி கொடுத்தால் குடும்பங் களே சிதைந்து விடும் என்றவர் அவர். ஆனால் பெண் கல்விக்காக வாழ்நாள் முழுக்க சிங்கம் போல கர்ஜித்தவர் பெரியார்!


பழங்குடி சமூகத்தில் பிறந்த என் பாட்டி ஆசிரியர் ஆனதற்கும், என் அம்மா ஆசிரியர் ஆனதற்கும், நான் பேராசிரியர் ஆனதற்கும் எங்களின் தாயும், தந்தையுமாக  இருந்த பெரியாரே காரணம் என்று கூறி முடிக்கிறேன்! நன்றி வணக்கம்!


No comments:

Post a Comment