தமிழ்நாடு அரசு நியமித்த (புதிய) பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு வாழ்த்துகள்!
சுமார் 18 மாதங்களுக்குமேல் நிரப்பப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் - நாம் சில நாட்களுக்குமுன் சுட்டிக்காட்டி எழுதிய நிலையில், பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் - இது வரவேற்கத்தக்கது!
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் தணிகாசலம் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், அதன் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகளான திருவாளர்கள் பிச்சாண்டி, இராமநாதன், சந்திரசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டதோடு, வேறு சிலரும், அத்துறை பொறுப்பு அதிகாரிகள் (ex-officio) என்ற முறையிலும் நியமனம் ஆகியுள்ளார்கள். மூன்றாண்டுகள் இவர்கள் பதவி வகிப்பார்கள்.
அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் சட்டப்படி பெறவேண்டிய பங்கு குறித்து பெரும் சட்டப் போராட்டம் நடைபெறும் நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் தலைவரும், உறுப்பினர் பெருமக்களும் கமிஷன் சார்பில் தமது உரிய பங்களிப்பை அவசரமாக அளித்து சமூகநீதியை நிலை நாட்ட முன்வரவேண்டும்.
பொருளாதாரத்தில் - உயர்ஜாதியில் நலிவடைந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொள்கை அளவில் - தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று என்ற நிலையில், அதனை மறைமுகமாக உடைக்க உயர்ஜாதியினர் செய்யும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தடுப்பதும், விழிப்போடு செயல்படுதலும் கமிஷனின் இன்றியமையாத கடமையாகும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
12.7.2020
சென்னை
No comments:
Post a Comment