'மகா பெரியவாளை’க் காண்கிறபோது மட்டற்ற மகிழ்ச்சி ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

'மகா பெரியவாளை’க் காண்கிறபோது மட்டற்ற மகிழ்ச்சி ஏன்

கலி.பூங்குன்றன்


இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்களுக்காக முண்டியடித்துக் கொண்டு, முண்டா தட்டிக் கொண்டு, மூக்குப் புடைக்க கோதாவில் குதிப்பவர் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்திதான்.


‘துக்ளக்‘ இதழ் இவர் கைவசம் எப்படி வந்தது என்பது எல்லாம் தனிக் கதை.


ஒரு கேள்வி பதில்:


கேள்வி: மஹா பெரியவாளைக் காண்கிறபோது, கிடைக்கும் மகிழ்ச்சி மற்ற எந்த விஷயங்களில் கிடைக்கும்... அந்த நேரம் எரிச்சலூட்டுகிற விஷயமும் எது?


பதில்: அவருடைய உபன்யாசங்களைக் கேட்கும்போது, அவருடைய கருத்துகள் தொகுக்கப்பட்ட தெய்வத்தின் குரலைப் படிக்கும்போது... எரிச்சலூட்டும் விஷயம் அப்போது வரும் தவிர்க்க முடியாத டெலிஃபோன்.     (‘துக்ளக்‘ 8.7.2020 பக்கம் 21)



உண்மைதானே! ‘மஹா பெரியவாள்’ என்று அவர்கள் குறிப்பிடுவது மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைத்தான். மிகவும் ஜாக்கிரதையாக மறைந்த ஜெயேந்திரரை குருமூர்த்தி தவிர்த்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.


இப்படி எழுதுவதால் மறைந்த பெரியவாள் பரிசுத்தம், ஜெயேந்திரர் கீழ்மட்டம் என்று கருதிவிடக் கூடாது. முதலாமவர் ஆபத்தானவர் என்றால், இரண்டாமவர் அபத்தம் என்று சொல்லி விடலாம்.


மகா பெரியவாள்மீது இந்தப் பார்ப்பனர்களுக்கு அப்படியென்ன ப்ரீதி!


ஆம். அவர்தான் பச்சையாக வருணாசிரம தர்மத்துக்கு வக்காலத்து வாங்குகிறார். அவர்தான் ஜாதி - தப்பு இல்லை என்று ஜாஸ்தியாகப் பேசுகிறார்.


அதையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கொஞ்சம்கூடத் தயக்கமின்றி ‘தாம்தூம்‘ என்கிறார்.


அவர்தான் பிரதமர் இந்திரா காந்தி விதவைப் பெண் என்கிற காரணத்தால் கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார வைத்துப் பேசினார்.


தீண்டாமை ஒழிப்புக்கு ஆதரவு கேட்டு வந்த காந்தியாரையே மாட்டுக் கொட்டகையில் வைத்துப் பேசி அனுப்பினார்! (பாலக்காடு-16.10.1927). பிடி கொடுக்காமல் தீண்டாமையை வலியுறுத்திப் பேசினார்.


பால்ய விவாஹம் அவசியம் என்று பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்.


‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) சரியானது என்று சாதிக்கிறார். சமபந்தி போஜனம் கூடாது என்கிறார்.


அவர்தான் கம்யூனல் ஜி.ஓ.வைக் கண்டிக்கிறார்.


அவர்தான் பிராமணர்கள் என்ன குற்றம் செய்தாலும் ஜெயிலுக்கு அனுப்பக் கூடாது என்று கூக்குரல் போடுகிறார்.


அவர்தான் பிராமணர்களுக்காக ‘கம்யூனலாக’ - பேசுகிறேன் என்று தனது பார்ப்பனப் புத்தியைப் பச்சையாக பிசிறு இல்லாமல் தெரிவிக்கிறார்.


அவர்தான் தமிழை நீஷப் பாஷை என்று நினைக்கிறார்-செயலிலும் காட்டுகிறார்.


இவ்வளவு Ôகல்யாணத் திருக்குணங்களைÕக் கறாராகக் கடைபிடிக்கக் கூடியவரை குருமூர்த்திக் கூட்டம் கோயில் கட்டி கும்பிடாமல் என்ன செய்யும்? அவரின் குரலை “தெய்வத்தின் குரல்” என்று தெரிவிக்காமல் இருப்பார்களா?


சரி, ஒட்டு மொத்தமாக பொத்தாம் பொதுவாகச் சொன்னால் போதுமா?


கற்காலத்தைத் தற்காலத்துக்குப் புதுப்பிக்கும் வகையில் அந்த மஹா பெரியவாள் அப்படி என்னதான் கூறியிருக்கிறார்?


இதோ சில எடுத்துக்காட்டுகள்:


“யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும்கூடப் பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்து போய் எல்லாம் ஒன்றாகி விட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிற்பாடுதான், இப்படி மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.


(தெய்வத்தின் குரல், முதல் பாகம் - பக்கம் 162)


எல்லாம் ஒன்றாகி விடக் கூடாது - பழைய பிராமணத் திமிரும், அகந்தையும் தொடர வேண்டுமாம். இதுதானே இன்றைய குருமூர்த்திகளின் குரூரப் புத்தியும் எதிர்பார்ப்பும்.


“நம் தேசத்தில்கூட பண்புக் குறைவான போக்கு - கிளர்ச்சி டெமான்ஸ்ட்ரேஷன்கள் - புரட்சி ஆகிய எல்லாம் கடந்த 40, 50 வருஷங்களாகத்தான் உண்டாகி இருக்கின்றன. அதாவது, மற்ற தேசங்கள் மாதிரி நாமும் வெளியில் சமத்துவம் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்த பிறகுதான் உண்டாகியிருக்கின்றன”


-‘கல்கி’ (4.4.1976)



ஆக சமத்துவம் கூடாது- பழைய சனாதனப்படி பிறப்பில் மேலோன் - கீழோன் என்ற நிலை மீண்டும் வர வேண்டும், அதனை யாரும் எதிர்க்கக் கூடாது என்று சந்திரசேகரேந்திரர் சொல்லுவதுதானே குருமூர்த்திகளுக்குக் கற்கண்டு போல் இனிக்கும்.


“குணம், மனப்பான்மையை வைத்துத் தொழில் என்பது வெறும் புரளி என்கிற மாதிரியேதான். Equality of Opportunity  (எல்லோருக்கும் ஸமமான வாய்ப்பு) இருக்க வேண்டும் என்பதும் நடைமுறை சாத்தியமே இல்லை”


(‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் பாகம், பக்கம் 1017)


“Equality Before Law  என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை”


(தெய்வத்தின் குரல், மூன்றாம் பாகம், பக்கம் 870).


சட்டத்தின் முன் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம வாய்ப்பு எல்லாம் புரளியாம் - அப்படியானால் உலகத்தையெல்லாம் துறந்ததாகக் கூறிக் கொள்ளும் இந்த சங்கரமடத்தின் உள்ளத்தில் குடி கொண்டிருப்பது பாழ்படுத்தும் பார்ப்பனத்தனம்தானே! பார்ப்பனக் குருமூர்த்திகளுக்கு இதைவிட பால் பாயாசம் - அருள்வாக்கு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?


“குற்றவாளிக்கு ராஜ தண்டனையே பிராயச்சித்த கர்மா ஆகிறது என்றேன். “பிராமணன்” வேத மந்திர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன், ஒருநாள்கூட அவனை விட்டு, இந்த வாழ்க்கை ஆசாரம் போகக் கூடாது. அப்படிப் போனால், அது தேச க்ஷேமத்துக்குக் கெடுதல். ஜெயிலில் போட்டால் அவன் எப்படித் தன் ஆசாரங்களுக்கு பங்கமில்லாமல் மந்திர ரஷணை பண்ண முடியும்?”


(தெய்வத்தின் குரல், மூன்றாம்பாகம், பக்கம் 870)


பார்ப்பான் எந்தக் குற்றம் செய்தாலும், அவனை ஜெயிலுக்கு அனுப்பக் கூடாது என்கிற அளவுக்கு பார்ப்பன வெறி தலைக்கு மேல் வழியும் ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் குருநாதரின் குதிகால் மண்ணை எடுத்து குருமூர்த்திகள் பூஜிக்க மாட்டார்களா?


“பிராமணன் கெட்டுவிட்டான், ‘வேத அத்யயனத்தையும் சர்யானுஷ்டானத்தையும் விட்டான்... கிராப் வைத்துக் கொண்டான், ஃபுல்ஸர்ட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப் படிப்பை விட்டு, வெள்ளைக்காரனின் வைதிகப் படிப்பில் போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான்” (தெய்வத்தின்குரல் முதல் பாகம்) என்று  மூக்கால் அழும் அதே Ôமகா பெரியவாள்Õ வேறு ஓரிடத்தில் என்ன சொல்லுகிறார்?


கம்யூனல் ஜி.ஓ.வை கண்டிக்கிறார். ரிடையர் ஆனவர்கள் பிராமணர்களுக்கு உதவ வேண்டும் என்கிறார்.


இதோ:


“மற்ற சமூகங்களில் நிராதரவான இளைஞர்களை ஆதரிக்க அந்தந்த சமூகத்தில் வசதியுள்ளவர்கள் நிரம்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். பிராமணர்களுக்குத்தான் அந்த ஸ்பிரிட் இல்லை. காலேஜ் அட்மிஷன், உத்தியோகம் பெறுவது எல்லாவற்றிலுமே  கம்யூனல் ஜி.ஓ. வந்த நாளாக “பிராமணப் பசங்கள்” அதிகக் கஷ்ட திசையில் இருக்கிறார்கள். இப்போதும் அந்த சமூகத்தில் சவுகர்யமுள்ளவர்கள் இதைக் கவனிக்காமலிருப்பது நியாயமில்லை.


ஒரு காலத்தில் பிராமணன் தலையில் கை வைத்தது பரவிப் பரவி இப்போது “ஃபார்வர்ட் கம்யூட்டி”  என்று பேர் வைக்கப்பட்ட சமூகங்களிலும் இது பரவி, காலேஜ் அட்மிஷன், சர்க்கார் உத்தியோகம் எல்லாவற்றிலும் பின்னால் தள்ளப்படுவதில் முடிந்திடுகிறபடியால், இவர்கள் எல்லோரும் எதிர்கால தலைமுறை விஷயத்தில் விழிப்போடு ஏற்பாடு செய்ய வேண்டும்.


சில வகுப்பார்க்கு உரியதையும் புறக்கணித்த, சர்க்காரே பிற்பட்ட வகுப்பார்க்கு அதிகப்படி சலுகை காட்டுவதால்தான் இந்த விஷயத்தில் மட்டும் நான்  கொஞ்சம் கம்யூனல் பேஸிஸில் (வகுப்பு அடிப்படையில்) பேசியாக வேண்டியிருக்கிறது. நான் சொல்லுவது எல்லார்க்கும்தான் என்றாலும் “பிராமணர்”களில் வசதியுள்ள பென்சனர்களுக்கு இதைக் குறிப்பாகச் சொல்லுகிறேன்”


எந்த அளவுக்குப் போகிறார் ஜெகத்குரு? பிராமணர்களுக்காக வக்காலத்து வாங்க ‘கம்யூனலாக’ப் பேசுகிறேன் என்று பச்சை ஜாதி வெறியராக, வருணாசிரம வெறியராக ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்து விட்டாரே! அதுமட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வளவு ஆத்திரத்தைக் கொட்டுகிறார்? சங்கர மடத்தில் காணிக்கை கொட்டும் பிற்படுத்தப்பட்டோர் இந்த இடத்தில் சிந்திக்கட்டும்!


இதைத்தான்-இதைத்தானே குருமூர்த்திக் கூட்டம் வலியுறுத்தி கோஷ்டி கானம் பாடுகிறது; உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை போர்க்கால வேகத்தில் நிறைவேற்றி செயல்படுத்தியும் காட்டி விட்டது.


சங்கர மடம் நடத்தும் அய்ந்து டிரஸ்டுகள்: வேத ரக்ஷண நிதி டிரஸ்ட், ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட், கலவை பிருந்தாவன டிரஸ்ட், வேதமாட நிதி டிரஸ்ட், கன்னிகா தான டிரஸ்ட் (தெய்வத்தின் குரல்)


இந்த டிரஸ்டுகள் எல்லாம் யார் பயனடைய? சங்கராச்சாரியார் வாயாலேயே கேட்கலாம்.


“மற்ற ஜாதிகள் “பிராம்மணர்களைÕÕப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தகைய வரதக்ஷ்ணை கொடுமையோ, பெண்கள் இத்தனைப் பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்தியோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படி “தண்ணி தெளித்து” விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆகையால் ஏழை “பிராம்மண”ப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது”


எல்லாம் கடந்தவராம் இவர் - ஆனாலும் கன்னிக் கழியாமல் இருக்கும் பிராமணப் பெண்களைப் பற்றி மட்டும் கவலைப்படுவாராம் - குருமூர்த்திகள் கொண்டாடாமல் இருப்பார்களா?


Òநாஸ்திகனுக்கு வைத்யம் பண்ணி ஆயுஸை நீடிக்கப் பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாவத்தை விருத்தி செய்து கொள்ள இடம் தருவதாக ஆவதால் அவனுக்கு வைத்யம் பண்ணாதே என்று ஆயுர்வேத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது”


(“தெய்வத்தின் குரல்” மூன்றாவது பாகம், பக்கம் 148-


தெய்வப் பணியும், மக்கட்பணியும்)


கவுதம புத்தர் முதல் தந்தை பெரியார் வரை காட்டிய மனிதாபிமானத்தையும், நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்ற சங்கராச்சாரியாரின் குரூரப் புத்தியையும் சீர்தூக்கிப் பார்த்துதான், காஞ்சி பெரியவாள் கூறுவதுதான் சாலச் சிறந்தது என்று முடிவுக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள் - காஞ்சி மடத்துக்குச் சென்றால்  அவாளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி பீறிட்டுக் கிளம்புவது ஏன் என்று இப்பொழுது புரிகிறதா?


சங்கராச்சாரியாரின் Ôஅருள்வாக்கானÕ பழமையைத் தூக்கிப்பிடிக்கும் விஷ வித்துகள் அடங்கிய தெய்வத்தின் குரல் அவாளுக்கு கசக்கவா செய்யும்?


“சங்கராச்சாரி-யார்?” எனும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் நூலினை மீண்டும் படிப்பீர்!


No comments:

Post a Comment