ஊடகத் துறை அழிக்கப்படுவதற்கு அரசுகள் உதவக் கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 2, 2020

ஊடகத் துறை அழிக்கப்படுவதற்கு அரசுகள் உதவக் கூடாது!

ஏ.எஸ். பன்னீர்செல்வம்


'இந்து' நாளிதழின் வாசகர்களின் ஆசிரியர்


கோவிட்-19 தொற்று நோய்  ஊடகத்துறையை அழிக்கும் ஒரு நிகழ்ச்சி என்று பஸ்பீட் (Buzzfeed) செய்தி நிறுவன ஆசிரியர் கிரெய்க் சில்வர்மேன் (Craig Silverman) விவரித்துக் கூறியுள்ளார். ஊடக செய்தித் தொழிலில் தனது சுதந்திரத்துக்கும், பத்திரிகை யாளர்கள் தங்களது பாதுகாப்புக்கும் எதிரான அச்சுறுத் தல்களை எதிர் கொண்டு வருகின்றனர். தொடர்ந்த டிஜிட்டல் குறுக்கீடுகளை எதிர்கொள்வது மட்டுமன்றி, இந்த ஊடக செய்தித் தொழில், அதன் வருவாய்க்கான வழிகள் வறண்டு போனதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவையும் சந்திக்க நேர்ந்துள்ளது. கோவிட்-19 நோய் அச்சுறுத்தல் காரணமாக, பல செய்திப் பத்திரிகை அலுவலகங்கள் மூடப்பட்டன; பலவற்றில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது; பல வற்றில் செய்தியாளர்கள் நீண்ட விடுப்பில் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் இணைய வழி கலாச்சாரம் செய்தித் துறையின் சுற்றுச் சூழல் மீது ஒரு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.


முன் எப்போதுமே இல்லாத அளவு அழுத்தத்திற்கு  ஊடக செய்தித் துறை உட்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அதன் மீது புதிய சுமைகளை அரசு ஏற்றாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதேயாகும். தற்போது நாம் சிக்கியுள்ள கோவிட்-19 தொற்று நோய் நெருக்கடியை எதேச்சதிகாரிகள் தவறாகப் பயன் படுத்திக் கொள்வதாகவும்,  ஜனநாயக நாடுகள் அவர் களைப் பின்பற்றக் கூடாது என்றும்  "அயல்நாட்டுக் கொள்கை (Foreign Policy)"  என்ற தங்களது ஆழ்ந்த உள்நோக்கு கொண்ட கட்டுரையில் ஜெஃப்ரி ஸ்மித்தும் (Jefrey), நிக் சீஸ்மேனும் (Nic Cheeseman)  கூறியுள்ளனர். முடிவே இல்லாமல் வெளியாகும் துணிவான தலைப்புச் செய்திகள் என்னும் நீர்ப் பெருக்கு, உலக அளவில் மக்கள் தங்களுக்குள் இயல்பாகப் பொதிந்துள்ள உயிர் பிழைப்பதற்கான செயல்திறனைத் தூண்டிவிட்டுக் கொண்டும், தங்களின் நெருக்கமானவர்களின் நல்உடல்நலம் மற்றும் பாது காப்பு முயற்சிகள் மீது கவனம் செலுத்திக் கொண்டும் வரச் செய்துள்ளது. இவ்வாறு இந்த நிச்சயமற்ற தன்மையினால் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தில், பெரும்பாலான நேரங்களில் உலகின் எதேச்சதிகாரத் தலைவர்கள் சவாரி செய்து வருவர் என்ற பேரச்சம் என்பதே பகுத்தறிவையும் காரண காரியங்களையும்  தோற்கடித்து விடும் என்று அவர்கள் எழுதியிருக் கிறார்கள்.


மிகுந்த கவலை அளிக்கும்


மூன்று நிகழ்வுகள்


இந்தியாவில் நடந்தேறியுள்ள மிகுந்த கவலை அளிக்கும் மூன்று நிகழ்வுகளை இப்போது நாம் பார்ப்போம். முதலாவது ஜம்மு-காஷ்மீர் மீதான புதிய ஊடகக் கொள்கை. ஊடகத் துறையின் செயல்பாட்டில் தொடர்ந்ததொரு பரப்புரையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த 53 பக்க ஆவணம். ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதில், அவற்றில் எவை சமூக விரோத மானவை, எவை  தேசவிரோதமானவை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் இந்தக் கொள்கையின் விதி களின்படி அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான "சத்தியத்துக்கான அமைச்சகம் (Ministry of Truth)"   தலையங்கத்தில், ஜனநாயகத்தை வெளிப்படையாக இழிவுபடுத்தும் இந்தக் கொள்கை, அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வமான செய்தியைத் தவிர்த்த வேறு எந்தக் கருத்துக்கும், குரலுக்கும் எவ்வாறு சற்றும் இடமளிக்காத சர்வாதிகாரச் சட்டமாக இருக்கிறது என்று விவரித்து உள்ளது.


இரண்டாவது ஸ்க்ரோல்.இன் (Scroll.in)    பத்திரி கையின் நிர்வாக இயக்குநர் சுப்ரியா சர்மாவுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில அரசால் குற்றம் சாட்டி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை.  பிரதம ரின் நாடாளுமன்ற தொகுதி வாரணாசியில் ஊரடங்கு சட்டம் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி அவர் எழுதிய கட்டுரை பற்றியதே அந்தக் குற்றச்சாட்டு. இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டை வன்மையாகக் கண்டித்துள்ள இந்திய பத்திரிகை ஆசிரியர் சம்மேளனம், இந்திய குற்றவியல் சட்டம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின அவமதிப்பு சட்டம்,  மற்ற வேறு பல சட்டப் பிரிவுகளில் உள்ள குற்றவியல் தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக் கப்படும் சற்றும் ஆரோக்கியமே அற்ற, வெறுத்து ஒதுக்கித் தள்ள வேண்டிய பழக்க வழக்கத்திற்கு எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இடமே இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறது. மேலும், இவ்வாறு அரசு அதிகாரிகளால் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப் படும் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருவது, ஜனநாயகத்தின் தூதுவனைக் சுட்டுக் கொல்லுவதற்கும், இந்திய ஜனநாயகத்தின் மிகமிக முக்கியமான ஒரு தூணை இடித்து வீழ்த்துவ தற்கும் ஒப்பாகும் என்று மிகவும் பொருத்தமாக அந்த தலையங்கம் முடிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரோல்.இன் பத்திரிகையில் வெளியான இந்த தலையங்கம் பத்திரி கைத் துறை வரலாற்றிலேயே மிகமிக அருமையாக எழுதப்பட்டதும்,  முக்கியமான ஜனநாயகப் பண்பு களில் நம்பிக்கை உள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்தொற்றுமையை அதற்கு ஆதரவாக வெளிப் படுத்துவதாகவும் அமைந்ததாகும்.


அடுத்தது இந்தியப் பத்திரிகையாளர் அறக்கட்டளை (PTI)  தான் அளித்து வரும் சந்தாவை விலக்கிக் கொள்ளப் போவ தாக அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி வெளியிட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். இந்திய பத்திரி கையாளர் அறக்கட்டளை அண்மையில் வெளியிட்ட செய்தி, "தேசநலன்களுக்கு எதிராகவும்", "இந்திய நாட்டின் புவியியல் இறையாண்மையை மறுப்பதா கவும்" இருந்தது என்பதே பிரசார் பாரதியின் குற்றச் சாட்டாகும். இதுவரை பல கோடி ரூபாய் அளவில் பிரசார் பாரதி. இந்திய பத்திரிகையாளர் அறக்கட்டளைக்கு சந்தா செலுத்தி உதவியிருப்பதாக அது கூறியுள்ளது. இந்திய பத்திரிகையாளர் அறக்கட்டளை ஒரு செய்தி நிறுவனமாகும். பெரும் ஊடக நிறுவனங்கள், கம்பெனிகள், பல அரசு மற்றும் அரசு அல்லாத அமைப்புகள் ஆகியவற்றுக்கு செய்தி சேகரித்து அளிக்கும் நிறுவனம் அது. அதன் மிகப் பெரிய சந்தாதாரர்களில் பிரசார் பாரதியும் ஒன்று.


பெரும் அளவில் பாதிக்கப்படும் நிலையில் ஊடகத் துறை இன்று உள்ளபோது, ஊடகத் துறையை பலவீனப் படுத்துவதற்கு அரசு பயன்படுத்தும் வழிகளின் பின்னால் ஒரு தேர்ந்தெடுத்த ஒழுங்கான  நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. நம்பத்தகுந்த செய்திகளை அளிக்கும் ஊடகத்துறை அவை பற்றி பல்வேறு கண் ணோட்டங்களுக்கும், கருத்துகளுக்கும் இடம் அளிக் கிறது. ஆனால் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள் தங்களது கருத்து ஒன்று மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.  தாங்கள் மிக உயர்ந்த அளவில் பெருமைப்பட்டுக் கொள்ளும் சாதனைகள் மட்டுமே வேதவாக்கு போன்ற உண்மை யானதாக, சத்தியமானதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அத்தகைய சாதனைகள் உண்மையானவையா என்று எவர் ஒருவரும் சரி பார்ப்பதற்கு எதிரான ஓர் ஒழுங்கு முறையிலான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தத் தாக்குதல் பல்முனைப்பட்ட தாக்குதலாகும். அரசுகள் முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தால், நாடெங்கும் பரவிக் கிடக்கும் அவர்களது சங் பரிவாரப் படை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஒழுக்கக்கேட்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் பணியில் ஈடுபடுகின்றன.  "20/20 மயோபியா பற்றிய உள்பார்வை (2020 ஜூன் 26)" என்ற தலைப்பிட்ட கட்டுரையில்  முன்னாள் அயல்துறை செயலாளர் சியாம் சரண், "அயல்நாட்டுக் கொள்கையும் கூட, மிகமிகக் குறுகிய, சிடுமூஞ்சித்தனம் நிறைந்த உள் நாட்டு அரசியலில் போட்டி போடும் அளவுக்கு தரம் தாழ்ந்து போனது மிகுந்த மன வருத்தத்தை அளிக் கிறது" என்று எழுதி இருக்கிறார்.


உண்மையின் அடிப்படையிலான பத்திரிகைச் செய்திகளை எளிதாகப் பெறுவது உள்ளிட்ட, ஜனநாயக சுதந்திரங்கள் மீது மனித இனம் கொண்டிருக்கும் பெருவிருப்பம் என்ற தீயை எப்போதுமே அணைத்து விட முடியாது என்பதை அரசுகள் உணர்ந்து கொள்வது மிகமிக முக்கியமானது.


நன்றி: 'தி இந்து', 29-06-2020


தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment