மின்சாரம்
கேள்வி: அமெரிக்காவில் உள்ள இனவெறி, நமது நாட்டில் உள்ள ஜாதிவெறி - ஒரு ஒப்பீடு செய்க!
பதில்: ஜாதிகள் நூற்றுக்கணக்கில் இருப்பதால், ஜாதி வெறி கரைந்து, குறையும் வாய்ப்பு இருக்கிறது; குறைந் தும் வருகிறது. நிறம் இரண்டே இருப்பதால், நிறவெறி குறையவும் இல்லை, குறையும் வாய்ப்புமில்லை.
('துக்ளக்' 24.6.2020, பக்கம் 22)
ஆகா, என்ன கண்டிபிடிப்பு!
முதல் வரியே அண்டப்புளுகு. இந்தியாவில் ஜாதிகள் நூற்றுக்கணக்கில் மட்டும்தான் இருக் கின்றவா? 40 ஆயிரம் ஜாதிகள் இருக்கின்றன.
பார்ப்பனர்களுக்குள்ளேயே எண்ணற்ற பிரிவுகள் உள்ளனவே! பிரிவுக்குள்ளே பிரிவுகள் இருக் கின்றனவே!
அய்யங்காருக்குள்ளேயே வடகலை - தென்கலைச் சண்டைகளின் களேபரம் சாதாரணமானதுதானா?
சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள்வாரா?
வெறி என்பது வெறும் எண்ணிக்கை விளையாட்டா - எண்ணத்தில் பதிந்திருக்கும் விஷத்தின் விபரீதமா?
எந்த வெறியும் ஒழித்துக் கட்டப்பட வேண்டியதே நிற வெறியைக் காட்டி ஜாதி வெறியைக் காப்பாற்றும் யுக்தியில் இறங்குகிறது 'துக்ளக்.
சரி, 'துக்ளக்' குருமூர்த்திகள் சொல்லும் விவாதப் படியே பார்ப்போம்.
அவர் கூறுவதுபடி நூற்றுக்கணக்கில் இருப்பதால் ஜாதி வெறி கரைந்து விட்டதா? குறைந்து விட்டதா? முதலில் 'துக்ளக்' கூட்டத்தின் கருத்து - ஜாதி இருக்க வேண்டும் என்பதா? ஒழிக்கப்பட வேண்டும் என்பதா?
அவாளின் மகா பெரியவாள் ஜாதியையும் தாண்டி, தீண்டாமை க்ஷேமகரமானது - அது ஒழிக்கப்படவே கூடாது என்று சொல்றாளே! இதுவரை துக்ளக் அதைப் பற்றியெல்லாம் குறைந்தபட்சம் முணுமுணுத்ததுதான் உண்டா?
இன்னும் பூணூலை அணிந்து கொண்டு திரிகிறார்களே அதற்கென்று ஒரு நாளையே ஒதுக்கி (ஆவணி அவிட்டம்) பூணூலை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே! பூணூல் என்ன ஜாதி ஒழிப்பின் விளம்பரப் பெயர்ப் பலகையா?
குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாரே - அது குறித்து பூணூல் 'துக்ளக்' ஒரே ஒரு வார்த்தை கண்டித்து எழுதியதுண்டா?
குறைந்தபட்சம் இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்று அறிவிக்கத் தயாரா? ஒத்துக் கொள்ளத் தயாரா?
எல்லா ஜாதியினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் இது முடியாத காரியம் என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூற வில்லையா? மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது என்று கூறியவரும் அவர் தானே - இதனை அன்றைக்கே 'விடுதலை' வெளியிட்டு (8.3.1982) வெளுத்து வாங்கியதே.
தாழ்த்தப்பட்டவரான அம்பேத்கர் இந்திய அர சியல் சட்டக் குழுவுக்குத் தலைவராக இருந்ததால்தான் 540 குறைபாடுகள் இருந்தன என்று பூரி சங்கராச்சாரியார் கூறினாரா? இல்லையா? ('இண்டியன் எக்ஸ்பிரஸ்' 23.6.1988 பக்கம் 1)
இந்த யோக்கியர்கள் எவ்வளவு பம்மாத்துடன் பதில் அளிக்கிறார்கள்.
நிறவெறி அமெரிக்காவில் இருப்பது உண்மைதான் - ஆனால், தொட்டால் தீட்டு என்று எந்த வெள்ளைக் காரனும் சொல்லுவதில்லையே - தொட்டு விட்டால் 'ஸ்நானம்' பண்ணுவதில்லையே!
வெள்ளைக்கார துரை வீட்டில் ஒரு கருப்பர் சமையல்காரராக இருக்க முடியுமே - ஒரு சவுண்டி வீட்டில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமல்ல - ஒரு பார்ப்பனர் அல்லாதார் சமையல் பணியில் ஈடுபட முடியுமா?
சர்ச்சுக்குள் கருப்பர்கள் நுழையக் கூடாது என்ற தடையில்லையே!
கருப்பர்கள் 'ப்ரீஸ்ட்' ஆகக் கூடாது, அப்படியானால் அவர்களின் கடவுள் தீட்டுப்பட்டு விடுவார் ஏன் - செத்தே போய் விடுவார் என்று நீதிமன்றத்தில் படியேறிக் கூறவில்லையே!
சு.சாமி சங்கர மடத்துக்குள் சென்றால் சங்கராச் சாரியின் பக்கத்தில் சரிசமமாக நாற்காலியில் அமரலாம்; ஒரு அப்துல்கலாமோ, மத்திய அமைச்சர் ஒரு பொன்.இராதா கிருஷ்ணனோ Ôதரை டிக்கெட்டுÕதானே தரையில்தானே!
இதுதானே இந்து மதத்தில் - பார்ப்பனீயத்தின் மனித விரோத குரோத - குரூரப் புத்தி!
சங்கரமடத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்காத -கால் வைக்காத ஒரே குடியரசுத் தலைவர் மாண்பமை கே.ஆர். நாராயணன்தானே. ஏன்? அங்கு போய் அவர் அவமானப்பட விரும்பவில்லை.
குருமூர்த்திகளே, 'தினமலர்களே', 'துக்ளக்', 'விஜய பாரதங்களே, எழுதுங்கள் - எழுதுங்கள் - இன்னும் எழுதுங்கள் இந்த வகையில் எழுதிக் கொண்டே இருங்கள்.
அப்பொழுதுதான் உங்களின் கந்தல் புராணத்தின் குடலைப் பிடுங்கும் துருநாற்றம் என்ன என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்க எங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள் - எழுதுவதை நிறுத்திக் கொண்டு விடாதீர்கள்!
No comments:
Post a Comment