தனியார் மயமாகும் ரயில்வே: இடஒதுக்கீட்டை ஒழிக்கும் புதிய முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 11, 2020

தனியார் மயமாகும் ரயில்வே: இடஒதுக்கீட்டை ஒழிக்கும் புதிய முயற்சி


எவ்வளவு மோசமான பொருளையும் விளம்பரம் செய்தால் விற்பனை செய்துவிடலாம் என்பதற்கேற்ப, மிக மோசமான நிலையில் தம்மாநிலத்தை நிர்வாகம் செய்த மோடியை வெற்று விளம்பரத்தால், கலப்படமற்ற பொய்களால் இந்தியாவிற்கே மாற்று இவர்தான் என்று மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கும் கொண்டுவந்தனர். அவ்வாறு அவரைக் கொண்டு வந்ததில், ஒரு புறத்தில் மதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலும், மறுபுறத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களும் இரண்டு தூண்களாக இருந்து செயல்பட்டனர்.


ஆட்சிக்கு வந்த நாள் முதல் கார்ப்பரேட்டுகளின் கொள்கையான பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதும், மக்கள் நலத் திட்டங்களை ஒழிப்பதும் ஒரு புறத்திலும்,  மதவெறி நஞ்சைப் பரப்புதல், பிற மதத்தவரின் மீதான வெறுப்பை உருவாக்குதல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல், பிறமொழி -பண்பாடுகளை அழித்தல் என ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து ராஷ்டிரக் கொள்கைகள் அரங்கேறி வருகின்றன.


அந்த வரிசையில் தற்போது ரயில்வேத்துறை வந்துள்ளது வேதனைக்குரியதாகும். மற்ற எந்தப் பொதுத்துறை நிறுவனத்தை விடவும், ரயில்வேத் துறை, மக்களுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது.


இரயில்வே அமைச்சகத்திற்கென்றே தனி நிதி நிலை அறிக்கை, தயாரிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட நிலையை மாற்றி, பொது நிதிநிலை அறிக்கையுடன் இணைத்ததே அவர்களின் சூழ்ச்சியின் தொடக்கம்.


ஆசியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம்


இந்தியன் ரயில்வே அமைச்சகம் என்பது எளிய மக்கள் மிக அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தான  ரயில் போக்குவரத்து தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை நிர்வகிக்கும் துறையாகும்.  இது ஆயிரக்கணக்கான ரயில் வண்டிகளையும், பல்லாயிரக்கணக்கான ரயில் நிலையங்களையும் கொண்ட  ஆசியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். ரயில் வண்டிகள், ரயில் வழி பாதை, ரயில் நிலையங்கள் என்பனவற்றை தாண்டி, ரயில்வே தொடர்பான உற்பத்தி நிறுவனங்களையும் நிர்வகிக்கும் அமைப்பாகவும் உள்ளது.


சென்னையில் உள்ள 'இன்டகிரேட்டட் கோச் பேக்டரி' (அய்.சி.எஃப்), பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள 'ரயில் கோச் ஃபேக்டரி', உத்தரப்பிரதேசம், ரேபரேலியில் உள்ள 'மாடர்ன் கோச் ஃபேக்டரி' ஆகியவை ரயில் பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.


மேற்குவங்கத்தில் உள்ள 'சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸ்', உத்தரப்பிரதேசம் வாரணாசியில் செயல்பட்டுவரும்' டீசல் லோகோமோடிவ் ஒர்க்ஸ்', பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இயங்கிவரும் 'டீசல் லோகோ மாடர்னைசேஷன் ஒர்க்ஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களும் ரயில் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுடன், பெங்களூரில் 'ரயில் வீல் ஃபேக்டரி' என்ற தொழிற்சாலை ரயில் சக்கரங்களைத் தயாரிக்கிறது. இவை அனைத்தையும் நிர்வகிப்பது இந்தியன் ரயில்வே அமைச்சகம்.


சமூகநீதிப் போராளி லாலுபிரசாத் யாதவ்


இந்த நிறுவனம், அறிவுத் திறமைக்காகவே பிறந்தவர்களாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கூட்டத்தால் நட்டத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு, ரயில்வே அமைச்சராகப்  பொறுப்பேற்ற சமூக நீதிப் போராளி லாலு பிரசாத் யாதவ் அவர்கள்,   லாபத்தில் நடத்திக் காட்டினார். அதன்மூலம் புதிய வழித்தடங்களை உருவாக்கினார். இந்தியாவில் அதற்கு முன்பும், பின்பும் இல்லாத அளவிற்கு,  10 ரூபாய் என்று இருந்த கட்டணத்தை, 7 ரூபாய் என்று குறைத்துக் காட்டினார். அவரை, அன்று கோமாளியாகக் காட்டிய ஆதிக்க சக்திகள் தான், இன்று ரயில்வே நிர்வாகத்தைத் திறம்பட நடத்த முடியாமல், நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, தனியாருக்கு விற்கும்  திறமையற்ற பேர்வழிகளைத் தலையில் வைத்து கூத்தாடுகிறது.


தனியார் கைகளில்  இரயில்வே நிறுவனப் பங்குகள்


ரயில்வே நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதன் சோதனை ஓட்டமாக தில்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு, தில்லி-லக்னோ வழித்தடத்தில் தனியார் ரயில் போக்குவரத்து தொடங்கிவிட்டன.


 நிதிஆயோக் தலைவர் அமிதாப் கண்ட், இது குறித்து ரயில்வே துறைக்கு எழுதியுள்ளஒரு கடிதத்தில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


நிதி ஆயோக் தலைவரின் கடிதம் கிடைத்த மறுநாளே, களத்தில் இறங்கிய ரயில்வே அமைச்சகம், இதற்கென சிறப்பு அதிகாரக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. விமான நிலையங்களை  ஒப்படைத்தைப் போன்று, ரயில் நிலையங்களையும் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கவிருக்கிறார்கள்.


இந்தியன் ரயில்வேயின் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதில் போட்டியின்றி செயல்பட்டு வரும் நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் 12.6% பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.


அதே போன்று, இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 5% பங்குகளும், ரயில் நிலையங்களில் இணைய இணைப்பு (WIFI) கட்டமைப்பை ஏற்படுத்தி வரும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் 10% பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருக்கின்றன.


தினசரி மாறும் கட்டண விலை


விவசாயத்தின் சீரழிவால் நாடு முழுவதும் துரத்தியடிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிச்செல்ல பெருமளவு உதவுவது ரயில்வே போக்குவரத்து தான்.  சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு அருகிலிருக்கும் சிறு நகரங்கள், கிராமங்களிலிருந்து தினசரி வந்து வேலை செய்து திரும்பும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இவற்றைத் தான் நம்பியிருக்கிறார்கள். இதுமட்டுமன்றி, நகரங்களில் இருந்து பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள், கல்விக்காகச் செல்லும் மாணவர்கள் என கோடிக்கணக்கான அடித் தட்டு மக்களின் வாழ்க்கையில் இரயில் வழிப் போக்குவரத்து பிரிக்க முடியாத அங்கமாக இருக்கின்றது. 



இப்படிப்பட்ட துறையை, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்படும்போது  கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். ரயில்வே வழித்தடங்களை வாங்கும் தனியார் நிறுவனங்கள் செய்யும் முதல் நடவடிக்கையாக இருக்கப்போவது முன்பதிவில்லாத (unreserved) பெட்டிகளை ஒழிப்பதுதான். இதனை  மத்திய அரசே ஆரம்பித்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வண்டிகளிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் என்பதே இல்லை.


அடுத்ததாக, பெட்டிகள் அனைத்தையும் குளிரூட்டப்பட்ட வசதி (கிநீ) செய்யப்பட்டவையாக மாற்றுவது, விமானக் கட்டணம் போல ஒவ்வொரு நாளும் மாறும் கட்டண (dynamic pricing) முறை கொண்டுவருவது என தனது நோக்கத்தைப் படிப்படியாக நிறைவேற்றிவருகிறது மோடி அரசு. இதன் மூலம், தரமான சேவை என்ற பெயரில், கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்டுவரும் உரிமைகள் அனைத்தும், சமையல் எரிவாயு திட்ட மான்யம் படிப்படியாக குறைக்கப்படுவது போல, குறைக்கப்பட்டு, மறைமுகமாக ஒழிக்கப்படவிருக்கிறது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ரயில் கட்டணச் சலுகைகளைத் தாமே முன்வந்து கைவிடும் திட்டத்தை அறிவித்திருக்கிறது மோடி அரசு.


சமூகநீதி அழிப்பு


இதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு கோணங்களில் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், "நாட்டு மக்கள் எளிமையான குறைந்த கட்டணத்தில் பயணம் செய்திடவும்,  ஏராளமானவர்கள் எளிதில் எங்கும் செல்லவும் வாய்ப்பான ரயில்வேயைத் தனியார்களுக்கும் - கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் விடுவது என்பது திடீரென்று இவர்களுக்குத் தோன்றிய யோசனையோ, திட்டமோ அல்ல; அரசுத் துறை - பொதுத்துறையை அறவே ஒழிக்கவேண்டும் - சமதர்மச் சிந்தனையையும், செயலாக்கங்களையும் படிப்படியாக நீக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியே, முதல்கட்டமாக இப்படிப்பட்ட முயற்சிகள் நாளொரு  மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த ஆட்சியில் - அதனிடம் உள்ள  மிருக பலத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது!" என அறிவித்துள்ளார்.


 சமூகநீதிப் பார்வையில் இந்தக் கருத்து மிகவும் கவனிக்கத்தக்கதாகும். இன்று கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு காரணமாக அரசின் அதிகாரத் துறையில் ஓரளவிற்கு அனைத்து சமூக மக்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.


இது பார்ப்பனர்களின் ராம(ஆரிய) சாம்ராஜ்யமாக உருவாக்க நினைக்கும் இந்து ராஜ்ஜியத்தில் வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கு பெரும் தடையாக உள்ளது.


எனவே, பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் பங்களிப்பைக் குறைத்து, அவர்களை அடிமைகளாக மட்டுமே ஆக்குவதற்கு தனியார் மயமாக்களே  சிறந்த வழி என்று முயற்சிக்கிறார்கள்.


இதனை பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் உணர்ந்து கூடுதலான கவனம் செலுத்தி, இந்த  சூழ்ச்சியை முறியடிக்க முன்வரவேண்டும்.


- வை.கலையரசன்


No comments:

Post a Comment