‘‘ஒப்பற்ற தலைமை-2'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை
சென்னை, ஜூலை 12- வயிற்றில் ஒரு அவயம் வீங்குவதைத் தெரிந்து கொண்டே பேசுகிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘ஒப்பற்ற தலைமை'
கடந்த 28.6.2020 மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் இரண் டாம் பொழிவினை காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே ஆற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தூத்துக்குடி கலவரம்
தூத்துக்குடி கலவரத்தைப்பற்றி சிறிது கவனிப்போம்.
தூத்துக்குடியில் காங்கிரசுக்காரர்களுக்குள் இரண்டு கட்சி, அது காங்கிரஸ் கமிட்டி தலைவர் தோழர் வீரவாகுப் பிள்ளைக்கும், காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி தோழர் கந்தசாமி பிள்ளைக்கும் ஏற்பட்ட கட்சியாகும். முன்னவர் சமதர்மக்காரர், பின்னவர் வருணாசிரம தர்மி. இருவருக்கும் பலமான கட்சி பிரதிக் கட்சியும் பின்பற்றுபவர்களும், கொஞ்ச காலமாகவே இருந்து வருகிறது. பத்திரிகையில் எழுதி இருக்கிறார். அதைக் கண்டித்து மற்றொரு கட்சியார் கூட்டம் போட்டு மறுக்கட்சி மீது அதாவது காங்கிரஸ் காரியதரிசி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தக் கலவரத்தைத் ‘தினமணியே' ஒப்புக்கொண்டு 10 ஆம் தேதி பத்திரிகையில் மேலால் எழுதிவிட்டு, கீழாக வம்பில் காரணகாரியமில்லாமல் சுயமரியாதைக்காரர்களை இழுத்து போட்டு ‘‘அவர்கள் இந்தப் பிளவை உபயோகித்துக் கொண்டு கேள்வி கேட் டார்கள்'' என்று எழுதி இருப்பதுடன், இந்த காலித்தனத் துக்குப் பயந்து காரியதரிசியும் மற்றொருவரும் ஓடி ஒளிந்து கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறது. மற்றும் காலிகள் விளக்கை உடைத்ததாகவும் சுயமரியாதைப் பேர்வழிகள் கொடியைப் பிடித்து கிழித்துவிட்டதாகவும் எழுதி இருக் கிறது. ஆனால், அதே தேதி அதே சேதிக்குக் கீழாக ‘‘நமது நிருபர்'' என்னும் பேரால் தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி கந்தசாமிப்பிள்ளை அவர்கள் ‘‘அந்த (குறிப் பிட்ட) கலகத்துக்கு காரணமானவர்கள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களான தோழர்கள் வி.எஸ்.சுப்பய்யர். ஜெ.பி. ரோட்ரிக்ஸ், எம்.சி.வீரவாகு பிள்ளை மற்றும் 26 காங்கிரஸ் தொண்டர்கள்'' என்று போலீசில் பிராது கொடுத்திருப்பதாய் ‘தினமணி' நிருபரே அனுப்பிய சேதி பிரசுரிக்கப்பட்டிருக் கிறது. போலீசில் சுயமரியாதைக்காரர்கள் பெயர் குறிப் பிடவே இல்லை. ஆகவே, ‘தினமணி' ஆசிரியருக்கு புத்தி கோளாறாக ஆகிவிட்டதென்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது. பார்ப்பனர் வலையில் சிக்கி பார்ப்பனக் கூலியான அவர் இனி கூடிய சீக்கிரத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிய நிலையடைந்து விட்டார் என்பதல்லாமல் மற்றபடி அவரை ஒரு அறிவுள்ள, சுதந்திரமுள்ள மனிதனாகக் கருதி விவரிப்பது மெனக் கெட்ட வேலை என்றே தோன்றுகிறது.
‘குடிஅரசு' தலையங்கம், 13.03.1938
இதுபோன்று, அந்தக் காலகட்டம் முழுவதும் எதிர்ப்பு கள். அரசாங்கம் ஒருபுறத்தில் அடக்குமுறை; இன்னொரு பக்கம் கூலிகளுக்குக் கள்ளு வாங்கிக் கொடுத்து, கேள்வி கேட்கச் சொல்லுவது; ஆபாசமான அருவெறுப்பான நிலைகள். இவ்வளவையும் தாண்டி, அய்யா அவர்கள் கூட்டம் நடத்தியதோடு மட்டுமல்ல, அவர் என்ன சொல்லி யிருக்கிறார் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சமுதாயப் புரட்சியாளர்
வேறு யார் இருக்க முடியும்
‘‘நன்றி சொல்லாமல் ஏதாவது கூட்டம் முடிந்ததை நிரூபித்தால் 1000 ரூபாய் நான் பரிசு கொடுக்கிறேன்"என்று சொன்ன தலைவர், இந்த நாட்டு வரலாற்றில், அதுவும் சமுதாயப் புரட்சியாளர் வேறு யார் இருக்க முடியும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அதற்கு அடுத்த எதிர்நீச்சல், நோயை எதிர்த்திருக்கிறார்.
அவருடைய வயிற்று வலி - அதுவும் சிறைச்சாலையில் - பெல்லாரி சிறைச்சாலையில். இரவெல்லாம் வயிற்று வலியால் அவதிப்படுகிறார். அதற்கு என்ன காரணம்? என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.
ஓரிடத்தில் தந்தை பெரியார் அவர்கள், ‘‘மொட்டை மரம்'' என்று சொன்னாரே, அந்த சங்கதியை மட்டும் நினை வில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து நாம் எவ்வளவு விரைவில் சந்திக்க முடியுமோ, (அடுத்த பொழிவில்) அந்தக் கருத்தை நாம் தொடரலாம்.
அது என்னவென்றால், 1933 இல், அன்னை நாகம் மையார் அவர்கள் மறைந்துவிடுகிறார்.
இனி 4, 5 வருஷத்திற்குமேல்
உயிருடன் இருக்கமாட்டேன்
1943 ஆம் ஆண்டில் ஓரிடத்தில் அய்யா அவர்கள் உரையாற்றும்பொழுது,
‘‘நான் பொதுவாழ்வில் இருந்து விலகி ஓய்வெடுத்துக் கொண்டு, நிம்மதியாய் பத்தியமாய் இருந்தாலொழிய, இனி 4, 5 வருஷத்திற்குமேல் உயிருடன் இருக்கமாட்டேன் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும். அப்படி இருந்தாலும், ஒரு வேலையும் செய்யாமல், செய்ய லாயக்கில்லாமல் உயிரோடு இருப்பதும் சரி, வேலை செய்துகொண்டே இருப்பதன்மூலம் சாவதும் சரி என்று கருதியே வேலை செய்கிறேன், அலைகிறேன். நோய்வாய்ப்பட்டு தொல்லைப்பட்டுக் கொண்டும் சுற்றுகிறேன். இப்பொழுது வயிற்றினுள் ஏதோ ஒரு அவயம் வீங்குவதைத் தெரிந்துகொண்டே பேசுகிறேன். இதன் காரணம் என்ன? இந்த இயக்கம் என் சொந்த சொத்து. இதற்கு என்னைத் தவிர வேறு யாரும், எனக்கு மேல் பொறுப்புக் கொண்ட வர்கள் இல்லை. ஆதலால், நான் சும்மாவாகவோ, அலட் சியமாகவோ அல்லது லாப நஷ்டம் பார்த்துக் கொண்டோ இருப்பது, துரோகமும், இழிதன்மையுமான காரியம் என்ற நிலையில்தான், நாம் இந்துக்களல்ல என்பதையும், நமக்கு திராவிட நாடு அமையவேண்டும் என்பதையும் உங்க ளுக்கு ஏகமனதாக ஒப்புக்கொள்ளும்படி செய்தேன். அதற்கு வேலை செய்யவோ, வழிகோலவோ வேண்டிய கடமையும், பொறுப்பும் என்னைவிட வேறு யாருக்கு அதிகம் இருக்கும் என்று கருதி, பொறுப்பை அவர்கள் தலையில் போட முடியும்.
ஆகவே, லட்சியத்தை ஈடேற்ற, என் உழைப்பும், பொறுப்பும் எனக்கு அதிக உரிமையைக் கொடுப்பது இயற்கைதானே! அந்த முறையிலேயே சொல்லுகிறேன், நாம் நம்முடைய லட்சியத்தை அடைந்தே தீரவேண்டும். நமது லட்சியம் ஒன்றே, நமக்கு, திராவிடர்களாகிய நமக்கு பிறவி காரணமாய் உள்ள இழிநிலை மாறவேண்டும் என்பதுதான், அந்த இழிநிலையிலிருந்து சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டு, மற்ற துறைகளில் கேட்டை அடைந்திருக்கிறோம். அதனை மாற்றவேண்டும் என்பது தான்'' என்று சொல்லுகிறார்.
காரணம் என்ன?
வயிற்றில் ஒரு அவயம் வீங்குவதைத் தெரிந்து கொண்டே பேசுகிறேன் என்று சொல்லுகிறார்.
இதை எப்படி நம்மால் கண்ணீர் விடாமல் படிக்க முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
1933 மே 11 ஆம் தேதியன்று அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்துவிடுகிறார். அதற்குப் பிறகு அவரைக் கவனிப்பதற்கு, வீட்டிலிருந்து போதிய உணவு, அந்தந்த நேரத்திற்கு மருந்துகள் கொடுப்பதற்கு எவரும் கிடையாது. எந்த ஒரு செயலாளரையோ, காரியதரிசியையோ அவர் வைத்துக் கொள்ளவில்லை.
மனக்கவலை, உடல்நோயை
அதிகப்படுத்துமா? இல்லையா?
அவரே கூட்டங்களில் பேசி, இரவு அவரே அந்தப் பேச்சை எழுதி, அவரே தலையங்கம் எழுதி, ‘குடிஅரசு' ஏட்டையும் நடத்திக் கொண்டு, அரசியல் கட்சியான- நீதிக்கட்சிக்குத் தலைமை தாங்கி அந்தப் பொறுப்பையும் பார்த்துக் கொண்டு, பார்ப்பனர்களின் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு, எதிர்ப்புகளையும் சந்தித்து, எதிர் நீச்சல் அடித்துக்கொண்டு, மனக்கவலை, இவையெல்லாம் உடல்நோயை அதிகப்படுத்துமா? இல்லையா? மன இறுக் கம் அவருக்கு இருந்திருக்குமா? இல்லையா? என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
அன்னை மணியம்மையார் அவர்களின் தொண்டறத்தை நாம் மறக்க முடியுமா?
அந்தக் காலகட்டத்தில்தான், 1944 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களின் வரவு இருக்கிறதே, அது அய்யாவைக் காப்பாற்ற, இயக்கத்தைக் காப்பாற்ற, கொள்கையை வளர்க்க, எந்த அளவிற்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அதற்குப் பிறகு பெரியார் எப்படி காப்பாற்றப்படுகிறார்? 4, 5 வருடங்கள்தான் உயிரோடு இருப்பேன் என்று சொன்ன தலைவரை, அதற்குப் பிறகு பல ஆண்டுகள் 1973 ஆம் ஆண்டுவரை வாழ வைத்த பெருமைக்குரிய அன்னை மணியம்மையார் அவர்களின் தொண்டறத்தை இந்த நேரத்தில் நாம் மறக்க முடியுமா? என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
திருமண ஏற்பாட்டினைச் செய்யும்பொழுது, அதற்கும் எதிர்நீச்சல் அடித்தார் பெரியார் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
நாட்டிற்கும் பயன்பட்டது -
சமுதாயத்திற்கும் பயன்பட்டது
பெரியாருடைய முன்யோசனை அவருக்கும் பயன் பட்டது - இயக்கத்திற்கும் பயன்பட்டது - நாட்டிற்கும் பயன்பட்டது - சமுதாயத்திற்கும் பயன்பட்டது என்பதுதான் இன்றைய உரையினுடைய ஒரு நிறைவு என்பதைக் கூறி, இன்றைய பொழிவை நிறைவு செய்கிறேன்.
தோழன், தொண்டனின் வேண்டுகோள்!
ஒரு செய்தி, ஒவ்வொரு நாளும் உச்சக்கட்டத்தை நோக்கி கரோனா தொற்று போய்க் கொண்டிருக்கின்றது என்ற ஆபத்தை, ஒவ்வொரு நாளும் செய்திகளில் பார்க் கின்றபொழுது மனம் தளர்ந்துவிடாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். முகக் கவசத்தை அணியுங்கள். நோய் எதிர்ப்புச் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; நல்ல ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அலட்சியம் காட்டாதீர்கள். வாழ்க்கை முறைகளை எப்படியெல்லாம் அமைத்துக் கொள்ளவேண்டும் - வருகின்ற மாதங்கள் மிகச் சிக்கலான மாதங்களாக, சோதனையான மாதங்களாக நமக்கு அமை யக்கூடும். அதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொண்டு, நம்முடைய வாழ்க்கை - திட்டமிட்ட வாழ்க்கை - தெவிட் டாத வாழ்க்கை; அது கொள்கை வாழ்க்கையாக இருந் தாலும் சரி, தனி வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பிறரு டைய நிலையைப் பார்த்து நாம் இரங்கக்கூடிய அளவில் இருக்கலாமே தவிர, நம்முடைய நிலையைப் பார்த்து பிறர் இரங்கக்கூடிய அளவில் இருக்கக்கூடாது என்பதையும் திட்டவட்டமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது ஒரு தோழன், தொண்டனின் வேண்டுகோளாக உங்களுக்கு வைத்து என்னுரையை முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment