எந்த நிலையிலும் பகுத்தறிவுக் கொள்கையில் மாறாத மாண்பாளர்
நூற்றாண்டு காணும் நாவலரின் புகழ் ஓங்குக!
மாணவர் பருவந்தொட்டு திராவிட இயக்கத்தால் ஈர்க்கப் பட்டு, கடைசி மூச்சு அடங்கும்வரை பகுத்தறிவுக் கொள்கை யில் மாற்றமில்லாத கொள்கை வீரர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அவர் புகழ் ஓங்குக! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் எழுதியுள்ள வாழ்த்து மடல்!
இன்று (11.7.2020) நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவாகும்.
தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சென்ற ஆண்டிலேயே நாவலரின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்புடன் நடத்தவேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாகவே கரோனா - தொற்று பரவல் - பல்வேறு நிகழ்வுகளை தள்ளிப் போடச் செய்ததின் காரணமாகவும், மற்ற பல காலதாமதங்களாலும், அது சரிவர நம்மால் ஏற்பாடு செய்ய இயலாததாக ஆயிற்று!
என்றாலும், இரண்டு நாட்களுக்குமுன் திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நாவலர் நூற்றாண்டு நிறைவை நினைவூட்டி தி.மு. கழகம் கொண்டாடும் என்று அறிக்கை விட்டிருந்தார்.
அரசுடைமை என்பதில் ஏனோ குழப்பம்?
ஆளும் அ.தி.மு.க. அதன் பிறகு நேற்று, ‘‘தமிழ்நாடு அரசு சார்பில் நாவலர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும்; சென்னை அரசினர் விருந்தினர் விடுதிக்கு முன்னால் நாவலருக்கு வெண்கல சிலை அமைக்கப்படும்'' என்றும் ஒரு பத்திரிகை குறிப்பு திடீரென்று வெளியிடப்பட்டது; அதில் நாவலரின் ‘கண்டதும் கேட்டதும்' என்ற நூல் அரசுடை மையாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (பொதுவாக ஒருவர் எழுதிய நூல்கள் அத்துணையும்தான் அரசுடைமை யாக்கப்படுவது வழமை; ஒரே ஒரு நூலை மட்டும்தான் அரசுடைமை என்பது ஏனோ குழப்பமாகவே இருக்கிறது).
தி.மு.க.வின் அறிவிப்பும், அதன் விளைவாக தொடர்ந்த அ.தி.மு.க.வின் அறிவிப்பும் - எல்லாம் வரவேற்க வேண் டியவை. காரணம், நாவலர் அவர்கள் திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர். மாணவப் பருவந்தொட்டே தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எம்.ஏ. பட்டம் பெற்று வெளியே வந்த பிறகும், திராவிடர் கழகத்தில் தீவிரமாக பணியாற்றி தந்தை பெரியாருடன் சுற்றுப்பயணங்களில் கலந்துகொண்டு தொண்டாற்றிய பிறகே, கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் நிறுவனத்தில் மேலாளராகப் பொறுப்பேற்றார் - சில காலம்.
இறுதி மூச்சடங்கும்வரை
ஒப்பற்ற பகுத்தறிவாளர்
அரசியலில் நாவலர், தி.மு.க., அ.தி.மு.க. என்றெல்லாம் மாறினாலும் அவர் அடிப்படையில் மாறாத, மாற்றப்பட முடியாத ஒப்பற்ற பகுத்தறிவாளராகவே தனது இறுதி மூச் சடங்கும் வரை திகழ்ந்தவர்.
திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து அவர் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் படித்த காலம் முதற்கொண்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பேராசிரியர், கலைஞர் ஆகியவர்களது நட்புக்கும், நல்லுறவுக்கும் தன்னை ஆட் படுத்திக் கொண்ட கொள்கையாளர்; தலைசிறந்த பேச்சாளர்; புரட்சிக்கவிஞரின் கவிதைகளை மேடைதோறும் உயிர்த் துடிப்புடன் முழங்கி, இளைஞர்கள் உள்ளத்தில் ‘இளந்தாடி நெடுஞ்செழியனாக' வலம் வந்த காலந்தொட்டே கொள்கைப் பாய்ச்சலை ஏற்படுத்தத் தவறாதவர்!
பகுத்தறிவாளர் நாவலர் என்பதில்தான்
தந்தை பெரியாருக்கு மகிழ்ச்சி!
பகுத்தறிவாளர் நாவலர் என்பதில் தந்தை பெரியாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாவலருக்கு முது முனைவர் பட்டம் (டாக்டர்) - பல்கலைக் கழகம் வழங்கியதற்காக நடந்த பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, நாவலரை மிகவும் பெருமைப் படுத்தினார் தந்தை பெரியார்!
நாவலரின் குடும்பமே பகுத்தறிவு சுயமரியாதைக் குடும்ப மாகும். அவரது தந்தையார் திரு.இராஜகோபால், அவரது சகோதரர்கள் மூத்தவர் சவுரிராஜன் தொடங்கி மற்றும் இரா.செழியன், இளஞ்செழியன் என்று அழைக்கப்பட்ட இராமதாஸ் மற்றும் சகோதரிகள் உள்பட பலரும் திராவிட இயக்கத்தவரே! (செழியன் ஒருவர்தான் அகில இந்திய அரசியலுக்கு மாறினார்).
நாவலர் நெடுஞ்செழியனின் ஆணித்தரமான வாதங்கள் - பகுத்தறிவு உரை வீச்சுகள் - காலத்தால் அழிக்கப்பட முடியாத கருத்துப் பெட்டகங்கள்.
அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தபோதும், பிறகுகூட, நாம் ஏற்பாடு செய்த பகுத்தறிவாளர் கழகக் கூட்டங்களில், மாநாடுகளில் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு மணிக்கணக்கில் மேடைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யத் தவறாதவர்.
திருக்குறளுக்கு நாவலர் எழுதிய உரை- சீரிய பகுத்தறிவு ஆய்வுரையாகும்.
வரலாற்றுப் புகழ் பெற்ற உரை
அவரது இறுதி உரையும்கூட புத்தாயிரம் (2000) தொடங்கும் போது, சென்னை பெரியார் திடலில்தான் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற உரை. அதுவே அவர் ஆற்றிய கடைசி உரையும்கூட! நாவலரின் உரைகளையும், நூல்கள் பலவற்றையும் நாம் வெளியிட்டுள்ளோம். ‘மன்றம்' என்ற இதழ் தொடங்கி, சில காலம் நடத்தியவர்.
பன்முக ஆளுமை உள்ள நாவலர் திராவிடர் இயக்கத்தின் நன்முத்துக்களாம் அறிஞர் அண்ணா, ‘மானமிகு சுயமரியாதைக்காரர்' கலைஞர் ஆகியவர்களுடனும், பிறகு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையிலும், பகுத்தறிவுக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாத மாண்பாளர்.
நூற்றாண்டு விழா நாயகரின் புகழ் ஓங்குக!
சென்னை தலைவர்
11.7.2020 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment