மக்களாட்சித் தத்துவத்தில் மனித உயிர்களுக்குப் பாதுகாப்பு தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

மக்களாட்சித் தத்துவத்தில் மனித உயிர்களுக்குப் பாதுகாப்பு தேவை!

* என்.எல்.சி.யில் 2 ஆம் முறை விபத்து - உயிர்ப்பலி கண்டிக்கத்தக்கது!


* காலங்கடந்துபோன இயந்திரங்களைப் புதுப்பிக்காதது ஏன்?


* பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயும் - வேலைவாய்ப்பும் தருக!


* கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த தோழர்கள் 4 பேர் பலி - வேதனைக்குரியது!



நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கொதி கலன் வெடித்து 6 பேர் பலி; 15 பேர் படுகாயம் என்பது கண்டிக்கத்தக்கது. காலாவதியான காலங்கடந்த இயந்திரங்களைப் புதுப்பிக் காதது ஏன்? இலாபம் தரும் ஒரு தொழில் நிறு வனம் இப்படி அலட்சியமாகச் செயல்படலாமா? அதேபோல, தூத்துக்குடியருகில் கழிவு நீர்த் தொட்டியில் இறங்கிச் சுத்தம் செய்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்கு தொழி லாளர்கள் விஷ வாயு தாக்கி மரண மடைந்துள்ளனர். அவ்வப்போது நிவாரணத் தொகை வழங்கிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது - மக்களாட்சித் தத்துவத்துக்கு மாறானது - இதுபோன்ற தவறுகள்  - பலிகள் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்வது மத்திய - மாநில அரசுகளின் கடமை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2 ஆவது அனல்மின் நிலையத்தில், 6 ஆவது உற்பத்திப் பிரிவில் கடந்த ஜூலை முதல் தேதியன்று பாய்லர் வெடித்து ஏழு தொழிலாளர்கள் இறந் துள்ளனர். சுமார் 15 பேருக்குமேல் படுகாய மடைந்துள்ளனர்.  அண்மையில் சில மாதங் களுக்குள் இந்த பாய்லர் வெடிப்பு இரண்டாவது முறையாக நடைபெறுவது மிகப்பெரிய கொடுமையாகும்.


மத்திய அரசின்கீழ் இயங்கும் இந்தப் பொதுத் துறை நிறுவனம் லாபம் ஈட்டும் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும்.


ஏன் தொடர்கதை?


அங்கே இப்படி அடிக்கடி விபத்துகள் நடை பெற்று நமது தொழிலாளர்களின் உயிர்களைப் பலி வாங்குவது ஏன் தொடர்கதையாகத் தொடரவேண்டும்?


இதுபற்றி அத் துறையின் மேலதிகாரிகள், துறையின் அமைச்சகம் உள்பட ஆழமாக விசாரித்து - ஒருமுறை ஏற்பட்ட விபத்தும்,  பல உயிர்கள் பலியும் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நிரந்தரமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?


இதற்குரிய மூலகாரணத்தைக் கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்து, பணியாற்றும் தொழி லாளர்களின் உயிருக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் அலட்சியம் காட்டலாமா?


இதுபோன்ற பாய்லர் வெடிப்புகளுக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுவது, அந்த பாய்லர்களுக்குரிய உழைப்பு, கால வரம்புக்கும் தாண்டி, அவற்றை மாற்றிடாமல், பழையவற்றையே தொடர்ந்து பயன்படுத்து வதுதான் என்று கூறப்படுகிறது.


வேதனைக்கும்,


கண்டனத்திற்கும் உரியது!


30 ஆண்டுகள் பழைமையான மின் நிலை யத்தின் முக்கியக் கருவிகள் - பாய்லர் போன் றவை புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும்; அல்லது ஆண்டுக்கொருமுறை முறையாக பழுது பார்த்து சீரமைப்பு செய்திருக்கவேண்டும். இவற்றை செய்யாமல், வெறும் உற்பத்திப் பெருக்கம், லாபம் குவிப்பது இவற்றை மட்டுமே நிர்வாகம் மய்யப்படுத்தி வந்ததால், விலை மதிப்பற்ற அந்தத் தொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்புக்கு அதிக கவலை எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை என்பது வேத னைக்கும், கண்டனத்திற்கும் உரியது! அக் குடும் பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறோம்.


உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அந்தத் தொழிலாளர்களை நம்பி வாழுபவர்கள். அவர் கள் நாளை நடுத்தெருவில் நிற்கும் நிலைமை ஏற்படலாமா? அவர்களுக்கு நெய்வேலி நிறுவனம் - மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பும் தந்து, வருங்காலத்தில் இப்படி விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நிறைந்த பாய்லர்கள் - கருவிகளை நிறுவி நிரந்தர ஏற்பாடுகளைச் செய்திட முன்வரவேண்டும்.


விஷ வாயு தாக்கி


நான்கு பேர் பலியான கொடுமை!


அதுபோலவே, தூத்துக்குடி அருகே கீழ் செக்காரகுடியில் 4 துப்புரவுத் தொழிலாளத் தோழர்கள் ஒரு வீட்டிலுள்ள கழிவு நீர் தொட்டியைச் சுத்தப்படுத்த, தொட்டியின் அடியில் படிந்துள்ள கழிவுகளை அகற்றிட தொட்டியின் மேல் உள்ள சிறிய பாதைமூலம் உள்ளே இறங்கிய சிறிதுநேரத்தில், விஷ வாயு தாக்கி, மயங்கி உடனே இறந்துள்ளனர். நான்கு பேரும் பலியான கொடுமை நெஞ்சை உலுக்கு கிறது.


இதுபோன்ற விஷ வாயு தாக்கி மரண மடைவோர் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவர்.


ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டாமா?


மனிதக் கழிவுகள்மூலம் உண்டாகும் விஷ வாயுத் தாக்குதல்களை இயந்திரங்கள்மூலம்  தடுத்து, மனிதர்கள் போதுமான பாதுகாப்புடன் இயக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் வேலை இழக்காமலும், அதேநேரத்தில், உயிர்ப் பாதுகாப்புடனும் பணியாற்றும் நிலையை மத்திய - மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என்ற கோரிக் கைகள் திரும்பத் திரும்ப வைக்கப்பட்டாலும், ஏனோ செயல் திட்டத்தில் இறங்காமல் வெற்று அனுதாபம், உடனே ஏதோ ஒரு தொகை கொடுத்து அந்த நேரத்தில் மட்டும் சரி செய்தல் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல!


இத்தகையவர்களை நம்பித்தானே அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது? அவர்களின் கதிபற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டாமா?


நிரந்தரப் பரிகாரமும்,


பாதுகாப்பும் தேவை!


மக்களாட்சியின் மாண்பு இத்தகைய அடித் தட்டு மக்களின் உயிர்களுக்கும் நிரந்தரப் பாதுகாப்புத் தரும் வகையில், எதிலும் பழுதில் லாமல் இருந்தால்தான், பழுதுபடாத ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும். உடனே ஓர் இழப்பீடு மட்டும் அறிவித்து, அப்போதைய நிகழ்வை முடிப்பதும், பிறகு அது மீண்டும் வெடிப்பதுமான நிலை கூடாது. எதற்கும் நிரந்தரப் பரிகாரமும், பாதுகாப்பும் தேவை!


 


கி.வீரமணி,


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


3.7.2020


No comments:

Post a Comment