கொரோனாவை ஒழிக்க என்ன செய்கிறது மருத்துவ உலகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

கொரோனாவை ஒழிக்க என்ன செய்கிறது மருத்துவ உலகம்

முனைவர் சி.தமிழ்ச்செல்வன்


உயிர் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை



கொரோனா வைரஸ் என்பது நம் மூக்கு மற்றும்  தொண்டையில் தொற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு வகையான பொதுவான வைரஸ் ஆகும். பெரும்பாலான கொரோனா வைரஸ்கள் ஆபத்தானவை அல்ல. ஆனால், சீனாவின் டிசம்பர் 2019-ற்கு பிந்தைய நிகழ்வான SARS-CoV-2 தொற்று மற்றும் உலகின் 2020- ஆம் ஆண்டின் முற்பகுதி நிகழ்வான SARS-CoV-2 தொற்றினை  உலக சுகாதார நிறுவனம், ஒரு புதிய வகை கொரோனா வைரஸாக அடையாளம் கண்டது.


சார்ஸ்-சி.ஓ.வி.-2 (SARS-CoV-2) என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலமாகவோ அல்லது வைரஸ் ஒட்டியுள்ள ஒரு பொருளையோ, இடத்தையோ தொட்டுவிட்டுப் பிறகு, முகத்தைத் தொடும் போதோ உடலில் நுழைகிறது. முதலில் தொண்டை அருகே உள்ள செல்களில் தொற்றிக் கொள்ளும் இவ்வைரஸ், பிறகு  சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்குச் சென்று,  அங்கு பல்கி பெருகும். பின்னர்,   இவை அதிக செல்களில் தொற்று  ஏற்படுத்தும். தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தெரிவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது,  அய்ந்திலிருந்து ஏழு நாட்கள் என்ற அளவில் உள்ளதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது. .


காய்ச்சலும், இருமலும் தான் கொரானா நோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. உடல் வலி, தொண்டை வறட்சி மற்றும் தலைவலி கூட இதன் அறிகுறிகளாகும். காய்ச்சலும், சோர்வும் தொற்று பரவியதற்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் ஆகும்.  உடலின் பிற நோய் எதிர்ப்பு  செல்கள், சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை இந்த வைரஸ்களுக்கு எதிராக உற்பத்தி செய்யும். இதுதான் நோய் எதிர்ப்பாற்றலாகச் செயல்படும்.  இருப்பினும் சிலருக்கு, தீவிர கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்படும் காரணம் என்னவெனில், நோய் எதிர்ப்புக் குறைபாடேயாகும். வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் தீவிரமாகச் செயல்படும்போது, இது நோயாக உருவாகிறது. நோய்த் தடுப்பு  எதிர்வினைச் செயல்பாட்டில், சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. மேலும், அளவுக்கு அதிகமான உடல் அயர்ச்சியையும்  உண்டாக்குகிறது.  தற்போது ஏற்பட்டுள்ள இந்தக்  கொடிய நோயைக் கட்டுப்படுத்துவது மனித சமுதாயத்திற்கு ஒரு மிகச் சவாலான நெருக்கடியாகும். இதற்கு அறிவியல் மூலமே தீர்வு காண முடியும் என்பதால், உலக நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. 


கொரோனா வைரசின்  (SARS-CoV-2) திடீர்த் தோற்றம் மற்றும் அதன் உலகளாவிய அதிவிரைவான பரவல், மிகப்பெரிய அச்சுறுத்தும் பொதுச் சுகாதாரச் சவாலை உருவாக்கியுள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருத்துவக் கண்டுபிடிப்புகள் அவசியமாகிறது.  தற்போதைய தொற்றுநோயைத் தணிக்க உதவுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்று நோய்களுக்கானத் தடுப்பு,  மற்றும் சிகிச்சை முறைகளைக் கண்டறிய அரசு, தனியார், கல்வி, மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்களிடையே ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. கோவிட் -19 குறித்த  ஆய்வானது  பாதுகாப்பான பயனுள்ள மருத்துவ முறைகளைக் கண்டறியவும் மற்றும் நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும். மேலும் கோவிட் -19  சம்பந்தப்பட்ட ஆய்வு, மனித உயிர் இழப்பைத் தவிர்க்க உதவும்.


தற்போது, COVID-19 நோய்க்கு சிகிச்சையளிக்க எந்த ஒரு மருந்தும் / சிகிச்சையும் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், இதுவரை எந்தத் தடுப்பூசியும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில்  பல அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் / ஆராய்ச்சியாளர்கள்/ தொண்டு நிறுவனங்கள்  கோவிட் -19 ஐ கட்டுப்படுத்தும்  மருந்து  / தடுப்பூசியைக் கண்டறிய இரவும் பகலும் பணியாற்றி வருகின்றனர். COVID-19 வைரஸ் தன்னுடைய நிலையை / தன்மையை அடிக்கடி மாற்றிக்கொள்வதால், அதற்கு எதிரான மருந்தினைக் கண்டறிவது சவாலாக உள்ளது.


உலக நாடுகள் கொரோனவைக் கட்டுப்படுத்த நான்கு வகையானத் திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்திக்கொண்டுள்ளன.


அமெரிக்காவின் நேஷனல்  இன்ஸ்டிடியூட்  ஆப்   அலர்ஜி  அண்ட்  இன்பெக்ஷஸ்  டிசீஸ்சஸ் (National Institute of allergy and infectious diseases-   (NIAID)  திட்டத்தின் படி, கொரோனா  ஆராய்ச்சியானது கீழ்கண்ட நான்கு படி நிலைகளில் சாத்தியமாகும். அவை,



  1. SARS-CoV-2 மற்றும் COVID-19 பற்றிய அடிப்படை அறிவை மேம்படுத்துதல்:


             இதில் வைரசின் குணாதிசயங்கள், பரவும் தன்மை, தோற்றம், மனித நோய் எதிர்ப்பு சக்தி, நோய்க்குறியியல், மரபியல் போன்றவை அடங்கும். மேலும், மனித நோய்களைப் பிரதிபலிக்கும்  சிறிய மற்றும் பெரிய விலங்கு மாதிரிகள் உருவாக்கமும் இதில் அடங்கும்.



  1. நோயறிதல் மற்றும் பகுப்பாய்வு முறைகளை மேம்படுத்துதல்:


இதில் ரத்த ஆய்வு மற்றும் மூலக்கூறு மற்றும் ஆன்டிஜென் அடிப்படையிலான  நோயறிதல் உள்ளடங்கும்.



  1. சிகிச்சை பகுப்பாய்வு :


இதில் பயன்பாட்டில் உள்ள  மருந்துகளைக்  கண்டறிதல் மற்றும் மதிப்பீடு உள்ளடங்கும். ஆன்டிபாடி அடிப்படையிலான சிகிச்சைகள் (பிளாஸ்மாவிலிருந்து  தருவிக்கப்பட்ட இம்யூனோகுளோபூலின் (IVIG) மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் உட்பட) பற்றிய மதிப்பீடு செய்யப்படும்.



  1. மருத்துவ பரிசோதனை (Clinical trials) உட்பட SARS-CoV-2 க்கு எதிராகப் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்குதல்


அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)  புதுடெல்லி, செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB)  ஹைதராபாத்)  விஞ்ஞானிகள் இந்தியாவில் கொரோனா வைரஸின் மரபணு ரீதியாக தனித்துவமான  ‘கிளாட் கி 3 ஐ மற்றும் கி 2 கி’ ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் நாள்தோறும் புதுப்புது விதமாக மாறிவரும் கோவிட் 19 வைரஸின் தோற்றம் மற்றும் வைரஸ் செயல்பாடு விஞ்ஞானிகளுக்குச் சவாலாகவும்,  மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும்  உள்ளது.


தேசிய சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பிரிவு கோவிட்- 19 நோய்த்தொற்று குறித்த இரண்டு சோதனை முறைகளை பரிந்துரைக்கிறது . ஒன்று வைரஸ் சோதனை, இது தற்போதைய தொற்றுநோயைப் பற்றியது, இரண்டாவது ஆன்டிபாடி (antibody) சோதனை, முந்தைய தொற்றுநோயைப் பற்றியது. ஆன்டிபாடி சோதனையால்  தற்போதைய நோய்த்தொற்றினை அறியமுடியாது.  ஏனென்றால், தொற்றுநோய்க்குப் பிறகு மனித உடலில் ஆன்டிபாடிகள் உருவாக ஒன்றிலிருந்து மூன்று வாரங்கள் ஆகும். எனவே, ரியல் டைம் பி.சி.ஆர் (RT-PCR)  சோதனை மூலம், ஆரம்பகாலத் தொற்றுநோயைக் கண்டறிவது ஒரு சிறந்த வழியாகும்.


இந்நோய்த் தாக்கத்தை விரைவாகக் கண்டறியும் முறையான ராபிட் கிட்டினை (Rapid kit) சீன நிறுவனம் உருவாக்கியது. ஆனால், இந்த கிட்டானது நோய் எதிர்ப்புச்  சக்தியை (Antibody) ஆதாரமாகக் கொண்டு செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டதால், இயல்பாகவே நோய் எதிர்ப்பு திறன் (Immunity) உள்ளவர்களுக்கு இது சாத்தியமற்றதாகிறது. எனவே இது நடைமுறையில் தோல்வியுற்றது.


இறுதியாக, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration - FDA) COVID-19 சிகிச்சைக்கு,   பிற நோய்களுக்குச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்த  அனுமதி வழங்கியுள்ளது, எனவே இந்த COVID- 19சிகிச்சைக்கு, தற்போதுள்ள வைரஸ் தடுப்பு மருந்து, ரெம்டெசிவிர் (remdesivir) ஐ  பயன்படுத்த  அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் சமீபத்தில் க்ளென்மார்க் பார்மா (Glenmark Pharma) ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்ட் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட  ஃபிளாவிபிராவிரை (Flavipiravir) மருந்தினை உருவாக்கி உள்ளது.  ஏற்கனவே இந்த மருந்து ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.


எந்த ஒரு மருத்துவக் கண்டுபிடிப்பும் உலக சுகாதார அமைப்பின் (World Health Organization - WHO) அனுமதி  மற்றும் அந்தந்த நாட்டின் அனுமதியினைப்  பெற, முக்கியமான மூன்று நிலைகளை, அதாவது Invitro னப்படும் ஆய்வுகூடப் பரிசோதனை, Preclinical எனும் ஆய்வுகூட  விலங்குகளுடனான பரிசோதனை, இறுதியாக கிளினிக்கல் டெஸ்ட் (clinical) எனும் மனிதர்களுடனான பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.  ஆனால் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், உலகமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நேரிடையாக கிளினிக்கல் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய மனித பரிசோதனைக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.


லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியர் ராபின் ஷட்டாக் குழுவினர், பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களிடம் (தன்னார்வலர்கள்)  பரிசோதிக்கும் ஆய்வினை   தொடங்கியுள்ளனர். முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதும், பயனுள்ள வகையில் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும்  ஏற்கெனவே மனிதர்களிடம் பரிசோதனையைத் தொடங்கிவிட்டனர். கொரோனாவுக்கு உலகின் பல இடங்களில் இது போல தனித்தனியாக சுமார் நூற்று இருபது (120) தடுப்பு மருந்து ஆராய்ச்சித் திட்டங்கள் நடந்து வருகின்றன. பிரிட்டனிலும், பிற நாடுகளிலும் இந்தத் தடுப்பு மருந்து, 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என்று அந்நாட்டு மருத்துவக்குழு அறிக்கை கூறுகிறது. இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழுவானது,  வைரஸை பலவீனப்படுத்தியோ அல்லது  மாற்றியமைத்தோ கட்டுப்படுத்தும் வழக்கமான முறையில் இல்லாமல்  புதிய முறையில் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது. அதன்படி வைரசின் ஆர்.என்.ஏ. (RNA) மரபியல் கூறுகளை இவர்கள் செயற்கையாக கட்டமைத்துள்ளார்கள்.  வைரஸைப் போலவே தோன்றும் இதனைச் சிறிதளவு உடலில் செலுத்துவதன் மூலம், கொரோனா வைரசை அடையாளம் காணவும், அதனை எதிர்த்துப் போராடவும் உடலின் நோயெதிர்ப்புத்திறனை மேம்படுத்தவும் முடியும்.  உருவாக்கப்பட்ட ஒரு லிட்டர் செயற்கை ஆர்.என்.ஏ. வானது 20 லட்சம் நபர்களுக்கு மருந்து தயாரிக்கப் போதுமானது என்கிறார் பிபிசி மருத்துவச் செய்தியாளர் ஃபெர்குஸ் வால்ஷ்.


ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுமென  நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக சிணிறிமி நிறுவனமானது, பிரிட்டன் நாட்டின்  மருந்து தயாரிப்பாளரான ஜி.எஸ்.கே (GSK) மற்றும் யு.க்யூ (UQ) இடையே ஒரு ஒப்பந்தத்தினை அறிவித்துள்ளது. Amgen and Adaptive Biotechnologies, Altimmune, BioNTech and Pfizer, CytoDyn, Gilead Sciences, GlaxoSmithKline, Heat Biologics, Inovio Pharmaceuticals, Johnson & Johnsonபோன்ற ஏராளமான உலகளாவிய மருந்து நிறுவனங்கள் சிளிக்ஷிமிஞி-19 ஆராய்ச்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. Zydus Cadila, Serum Institute, Biological E, Bharat Biotech, Indian Immunologicals, Mynvax  போன்ற இந்திய மருந்து நிறுவனங்களும் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன.


நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நாவல் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய சூழ்நிலையில், ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca’s) சோதனையானது  கோவிட் -19 தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் தொற்று 95 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4.8 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.


தென்னாப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் (Witwatersrand) பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  முதல் மருத்துவ பரிசோதனையைத் தொடங்கி உள்ளனர்.  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) என்ற நிறுவனமானது இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள   நாடுகளுக்கு தடுப்பூசி மருந்தை பெருமளவில் உற்பத்தி செய்ய 100 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. ஆக்ஸ்போர்டின் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட், தற்போதைய மருத்துவ ஆய்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் கூறுகிறார். சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமேயானால், ஆக்ஸ்போர்டு  குழு இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட் -19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது.  ஆக உலகம் முழுதும், பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சியானது முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றது.


இந்திய  உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் (Bharat Biotech) தனது கோவிட் -19 தடுப்பூசியானா கோவாக்சினை (Covaxin) மனிதர்களிடம் பரிசோதனை செய்ய  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் (Drug Controller General of India - DCGI) ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது உள்நாட்டு தடுப்பூசி சோதனைகளுக்குள் நுழைவதற்கான முதல் ஒழுங்குமுறை ஒப்புதலைக் குறிக்கிறது. இந்த அனுமதி அடுத்த மாதம் தொடங்கவுள்ள முதற்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட ஆய்வுகளை துவக்குவதற்கு உறுதுணையாக இருக்கும்.


இத்தகைய மருந்து நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்படும் மருந்தானது, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  Good Laboratory Practice (GLP) அந்தஸ்து  பெற்ற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்ட பின்னரே, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே, COVID- 19 மருந்து கண்டுபிடிக்கக் குறைந்தது ஒரு சில வருடங்கள் கூட   ஆகும். எனவே, தற்போதைய சூழலில் சரியான மருந்து இல்லாத நிலையில், முக கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் கொரோனா எனும் அரக்கனிடமிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.


COVID- 19 தொற்று நோயை விரைவாகக் கட்டுப்படுத்த பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை ஒரு சிறந்த வழியாகும் என்றும், மேலும் இது எந்த பக்க விளைவுகளையும் உண்டாக்காது என்றும் ஆயுஷ் (AYUSH) கூறுகிறது. எடுத்துக்காட்டாக, கபசுரக் குடிநீர்  பல  மூலிகைகள் அடங்கிய ஒரு பாரம்பரிய சித்த மூலிகை கலவை, இப்போது COVID-19 நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல நோய்களுக்கான, குறிப்பாக COVID-19 தொற்றுக்கு, மாற்று பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக  பல மூலிகை ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. DBT, DST, AYUSH, CSIR, ICMR போன்ற பல அரசு நிதி முகவர் திட்டங்கள் மூலம் நிதியளிக்கப்பட்டு வருகிறது. எனவே, கூடிய  விரைவில் COVID-19 நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.


மனிதனால் இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது, என்றாலும்  பகுத்தறிவு உள்ள மனிதனால் அதனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுபோல, இந்த கொரோனா என்னும் நோய்க் கிருமியைப் பகுத்தறிவோடு எதிர்கொண்டால் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.


COVID-19 நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம் என்ற நிலையில், பகுத்தறிவுச் சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும் அதனை வெற்றி கொள்வோம்.


No comments:

Post a Comment