பாடச்சுமை குறைப்பா - பா.ஜ.க. அஜண்டாவா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 11, 2020

பாடச்சுமை குறைப்பா - பா.ஜ.க. அஜண்டாவா

பாடச்சுமை குறைப்பா - பா.ஜ.க. அஜண்டாவா?


நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்த தடையானது பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்தும். எனவே, கல்வி நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.


கரோனா வைரஸ் அசாதாரண நிலைமை காரணமாக 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.)  அறிவித்திருந்தது.


மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சுமையைக் குறைக்கிறோம் என்ற பெயரில்  சி.பி.எஸ்.இ. அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.


இந்த அறிவிப்பினையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.சி. மாற்றியமைத்துள்ளது.


இதில் 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து மேற்கண்டவை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் அரசு எனும் தலைப்பிலான அத்தியாயத்திலிருந்து 'எங்களுக்கு ஏன் உள்ளூர் அரசாங்கங்கள் தேவை?' மற்றும் 'இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி' என்கிற இரு அலகுகள் நீக்கப்பட்டுள்ளன.


12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து, தற்கால உலகில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள், பிராந்திய அபிலாஷைகள் ஆகியவற்றை சி.பி.எஸ்.இ. முற்றிலுமாக நீக்கியுள்ளது.


திட்டமிடப்பட்ட அபிவிருத்தி அத்தியாயத்திலிருந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையை மாற்றுவது, திட்ட ஆணையம், அய்ந்தாண்டு திட்டங்கள் ஆகிய அலகுகள் அகற்றப்பட்டுள்ளன.


இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த அத்தியாயத்திலிருந்து பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் என்கிற பகுதியும் கைவிடப்பட்டுள்ளது.


9 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து இந்திய அரசமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்ட மைப்பு பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த அத்தியாயம் பொருளா தாரப் பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.


10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, ஜாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயகத்திற்கு சவால்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.


இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் மாறுதல் நிலை,  இந்தியாவில் சமூக விடுதலைக்காகப் போராடிய இயக்கங்கள்,  மற்றும் மோடி அமல்படுத்திய  பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


மத்திய அரசு ஏற்கெனவே தனது  புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்கின்ற இந்துத்துவக் கொள்கையை செயல்படுத்த  தீவிரமாக இருக்கிறது. இதன் துவக்கமாக கரோனா தொற்றைப் பயன்படுத்தி, எந்த ஓர் எதிர்ப்பும் இன்றி மெல்ல மெல்ல தனது திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. பிள்ளைகள் படிக்கும் பாடங்களில் கூட மதச் சார்பின்மை என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது என்ற பாசிச சிந்தனை பா.ஜ.க. அரசுக்கு வந்திருக்கிறது.


இந்த முடிவை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது; பிள்ளை களுக்கு, மாணவர்களுக்குப் பாடச் சுமை குறைக்கப்பட்டுள்ளது என்று ஏமாந்து விடவும் கூடாது.


குறிப்பாக மதச்சார்பின்மை என்ற பாடம் ஏன் நீக்கப்பட வேண்டும்- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே இடம் பெற்றுள்ள ஒன்றைக் காதும்காதும் வைத்தாற்போல ஏன் நீக்கிட வேண்டும்?


மதச் சார்பின்மை என்ற வார்த்தையே பிஜேபி - ஆர்.எஸ். எஸ். சங்பரிவார் வட்டாரத்துக்கு ஒவ்வாமை தரும் சொல்லாகும்.


மிகவும் நல்லவர் என்று அவர்கள் வட்டாரத்தில் பேசப்படும் பாரத ரத்னா வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது புனாவில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜியின் 325ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட போது என்ன பேசினார்?


Mr. Vajpayee said chatrapathi was secular to the True sense as Aganist today’s ‘Distorted Secularism’ for he paid Equal Respect to all religions and Never Discriminated on the Ground of Religion ('The Hindu' 27.6.1988, page  8)


சத்ரபதி சிவாஜி இப்பொழுதுள்ள உருக்குலைக்கப்பட்ட மதச் சார்பின்மை போன்ற ஒன்றைக் கடைப்பிடிக்கவில்லை; எல்லா மதத்தினரையும் மரியாதையாக நடத்தினார் என்று 'நல்லவர்' வாஜ்பேயியே பேசினார் என்றால் இந்தக் காலத்து இந்துத்துவா வாதிகள் பற்றிக் கேட்கவா வேண்டும்?


பாலினம், ஜனநாயகம், கூட்டாட்சி போன்றவை  நீக்கப்பட்டு இருப்பது சங்பரிவாரின் ஒரே நாடு, ஒரே கலாச்சாரத் தத்துவத்துக்கு எதிரானவையாயிற்றே!


கரோனா நேரத்தில் சந்தடி சாக்கில் நடைபெறும் இந்தக் 'கழுத்தறுப்பு வேலையை' நாடு அனுமதிக்கப் போகிறதா?


No comments:

Post a Comment