நீதிக்கட்சி நூற்றாண்டின்போது உரையாற்றியதுபோல் - இப்போதும் தொலைக்காட்சியில் உரையாற்றுவீர்களா?
காணொலிமூலம் வாசகர் கேள்விகளுக்கு ‘விடுதலை' ஆசிரியர் அளித்த பதில்
சென்னை, ஜூலை 6- நான் எப்பொழுதுமே பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன். சொந்த புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாதவன். பெரியார் தந்த புத்தி என்பது, எந்தவிதமான சோதனைகள் வருகின்ற பொழுதும், தடங்கல்கள், தடைகள் வருகின்றபொழுதும் இன்னும் வேகமாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘விடுதலை' வாசகர்களின் கேள்வியும் -
ஆசிரியரின் பதிலும்!
கடந்த 1.6.2020 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே உரையாற்றி முடித்ததும், வாசகர்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக் கும் பதில் அளித்தார்.
அக் கேள்வி - பதிலின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
உங்களுடைய மனநெகிழ்ச்சி
எப்படி இருந்தது அய்யா?
வெங்கட இராசா, மா.பொடையூர்
கேள்வி: ‘விடுதலை'க்கு அகவை 86. அதன் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அகவை 87. அதற்காக புரட்சிகர மான வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
‘விடுதலை' நாளிதழ் வாட்ஸ் அப்பின்மூலம், நான் குறைந்த பட்சம் இயக்கத் தோழர்களுக்கு அப்பாற்பட்ட வர்களுக்கு ஏறத்தாழ 250 பேர்களுக்கு அனுப்பி வருகி றேன். அவர்கள் எல்லாம் ‘விடுதலை' நாளிதழ் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சி.
பெரியார் அவர்கள் ‘விடுதலை' நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிற்கு உங்களை அமர்த்தியவுடன், உங்கள் பெயரைச் சொல்லி, ஏக போக உரிமைக்கு ‘விடுதலை'யை நான் விட்டுவிட்டேன் என்று சொன்னபொழுது, உங்களு டைய மனநெகிழ்ச்சி எப்படி இருந்தது அய்யா?
ஆசிரியர்: மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. இன்னுங்கேட்டால், எனக்குப் பயமாக இருந்தது. பெரிய பொறுப்பை நம்மிடம் ஒப்படைக்கும்பொழுது, நாணயமாக, கவனமாக அந்த நம்பிக்கையைக் காப்பாற்றவேண்டும் என்ற பயமும், கவலையும்தான் இருந்தது. மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அது மிகக் குறைச்சல்.
ஆனால், பொறுப்பு, கவலை, பயம் இதுதான் அதிகம்.
ஆனால், அந்தப் பொறுப்பை ஓரளவிற்கு நன்றாக செய்திருக்கிறோம் என்ற மனநிறைவு நீங்கள் எல்லாம் சொல்வதிலிருந்து ஏற்பட்டு இருக்கிறது.
நீதிக்கட்சி நூற்றாண்டின்போது உரையாற்றியதுபோல் - இப்போதும் தொலைக்காட்சியில் உரையாற்றுவீர்களா?
சி.சாமிநாதன், பல்லாவரம்
கேள்வி: நீதிக்கட்சியினுடைய நூற்றாண்டு விழா
2012-2013ஆம் ஆண்டு நடந்தபொழுது, தினந்தோறும் தொலைக்காட்சியில் உரையாற்றுவீர்கள். மறைந்த பேராசிரியர் நன்னன், அவ்வை நடராசன் போன்றோரும் அதைத் தொடர்ந்தார்கள்.
அதிலிருந்து எங்களுக்கு நீதிக்கட்சியினுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய இயக்கக் கொள்கையின்மீது ஓர் ஈர்ப்பு ஏற்படுவதற்கும் ஓர் எழுச்சியாக அது அமைந்தது அய்யா.
அந்தத் தூண்டுதலை நிறுத்திவிடாமல், எப்பொழுதும் அதைத் தொடர்வதற்காக, ஏதாவது ஒரு தொலைக் காட்சியில் 10 நிமிடம் நீங்கள் பேசினால், இன்றைய இளைஞருக்கு அந்த வரலாறுகள் தெரியும்.
நான், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது, மாணவப் பருவத்திலேயே ஆசிரியர்கள், இயக்க உணர்வை, கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு, பெண் விடுதலை என்று நம்முடைய கொள்கைகளைப்பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். என்னுடைய பள்ளியில் உள்ள ஆசிரியர் கள் 90 சதவிகிதம்பேர், நம்முடைய சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, பெரியாரின் தொண்டர் களாக இருந்தார்கள்.
மாணவர்களுக்கு இளம்பருவத்தில், நம்முடைய கருத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்பொழுது, பசுமரத் தாணி போல அவர்களின் மனதில் பதிந்துவிடும்.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், ஆசிரியரணியை பலப்படுத்தி, அந்த ஆசிரியர்களின் மூலமாக, சிறு வயதுப் பிள்ளைகளுக்கு நம்முடைய பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்படுவதற்கு ஏதாவது ஓர் ஏற்பாட்டினை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் அய்யா.
ஆசிரியர்: பெரியார் பகுத்தறிவு ஆசிரியரணி என்ற அமைப்பைப் பலப்படுத்துகிறோம். அதை இன்னும் விரிவாக்கி பலப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் வந்தால், அதுபோன்ற ஆசிரியர்கள் கிடைப்பார்கள். அதை நாம் செய்யக்கூடிய சூழல்கள் இருக்கின்றன.
இரண்டாவதாக, அன்றைக்குக் கலைஞரே அந்த ஏற்பாடுகளைச் செய்து, தொலைக்காட்சியில் உரையாற்றச் சொன்னார்கள்.
இன்றைக்கு பெரியார் வலைக்காட்சியிலேயே நீங்கள் சொல்லுகின்ற கருத்தையெல்லாம் சொல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
ஊரடங்குக் காலகட்டம் முடிந்தவுடன், பெரியார் வலைக்காட்சியை விரிவாக்கக் கூடிய திட்டத்தில், ஏற்கெனவே தோழர்கள் சொன்ன திட்டங்களை முடிந்த அளவிற்குத் தாராளமாகச் செய்யலாம்.
உங்களுடைய இளமை, சுறுசுறுப்பு உற்சாகத்தின் ரகசியம் என்ன?
மருத்துவர் சோம.இளங்கோவன், சிகாகோ
கேள்வி: அய்யா வணக்கம். உங்களுடைய இளமை, சுறுசுறுப்பு உற்சாகத்தின் ரகசியம் என்ன?
ஆசிரியர்: உங்களைப் போன்றவர்கள் உற்சாகப் படுத்துவது; பேட்டரி சார்ஜ் ஆவதுதான். வேறு எதுவும் இல்லை.
வேறு எந்தப் பழக்கமும் இல்லாமல், இந்த ஒரே கொள்கைதான். இளமையில் இருந்தே, இந்தக் கொள் கையின் உறுதிப்பாட்டோடு வந்தாயிற்று.
பல்வேறு சோதனைகள், பல்வேறு கசப்பான அனுப வங்கள், பல்வேறு அவதூறுகள், அவமானங்களை எல்லாம் சந்தித்திருப்பதால், எதிர்நீச்சல் அடித்து அடித்து, அது நல்ல அளவிற்குப் பயிற்சியாக இருக்கிறது.
எது இளமை? எது முதுமை? என்று எனக்குத் தெரியாத அளவிற்கு இருக்கிறது.
நான் இளமைக் காலத்திலேயே சிறிய வயதினரோடு பழகியதில்லை. முதுமையானவர்களோடுதான் பழகியிருக்கிறேன்.
ஆகவே, என்னைப் பொறுத்தவரையில் என்றைக்கும் ஒரே மாதிரியான உணர்வுதான் இருக்கிறது.
சில நேரங்களில், உடற்கூறுகளில் மாற்றம் ஏற்படும் பொழுது, அந்த நினைவுகள் வருகிறதே, தவிர வேறொன்று மில்லை.
தோழர்கள் அனைவரும் காட்டுகின்ற அன்பு இருக் கிறதே, உலகம் முழுவதும் நம்முடைய குடும்பங்கள் இருக்கிறது - அது ஈடு இணையற்றது. எவ்வளவு பெரிய சம்பாதனையாளனுக்கும் இந்த வாய்ப்பு இருக்காது. என் குடும்பத்தை மிரட்டுகின்ற நேரத்தில் நான் சொன்னேன், என் குடும்பம் அடையாறில் இருக்கும் குடும்பம் அல்ல; என்னுடைய குடும்பம் உலகம் முழுவதும் இருக்கிறது என்றேன்.
அந்த உற்சாகம் இருக்கிறதே, அது கடைசிவரைக்கும் நம்மை வேலை செய்யத் தூண்டும்.
ஆகவே, நமக்கு ஏற்பட்ட ஈடுபாடு, உறுதிப்பாடு இரண்டும் அய்யாவிடமிருந்து வந்தது.
அய்யாவிற்கு சலிப்பு ஏற்பட்டிருந்தால் என்னாகும்?
பெரியார் தந்த புத்திதான் இவ்வளவுக்கும் அடிப்படை. அந்த அடிப்படையில்தான், அலுப்பு சலிப்பின்றி, உங்களைப் போன்றோர்களின் ஒத்துழைப்பைப் பார்க் கின்றபொழுது, இந்த நிகழ்ச்சியால் என்னுடைய பேட்டரியை சார்ஜ் ஆக்கியிருக்கிறது.
இவ்வளவு தோழர்களின் கேள்விகளுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறதே தவிர, எனக்கு களைப்பே ஏற்படவில்லை.
ஒருவேளை கேள்வி கேட்கின்ற உங்களுக்கு களைப்பு ஏற்பட்டாலும் ஏற்பட்டிருக்கலாம்.
இதில் ஒன்றும் ரகசியம் கிடையாது.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தோழர்களின் கேள்விகளுக்கு ‘விடுதலை' ஆசிரியர் அவர்கள் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment