நாவலர் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் சூளுரை!
நமது சிறப்புச் செய்தியாளர்
சென்னை, ஜூலை12 தாம் ஏற்றுக்கொண்ட பகுத் தறிவுக் கொள்கையில் கடைசிவரை உறுதியாக நின்றவர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள். அவர் விரும்பிய தந்தை பெரியாரின் ஜாதி ஒழிந்த பகுத்தறிவு சமுதாயத்தை உருவாக்க உழைப்பதே நாவலர் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்கும் உறுதிமொழி என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
‘நடமாடும் பல்கலைக் கழகம்' என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (11.7.2020) மாலை 6 மணியளவில் கொண்டாடப் பட்டது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் தொடக்கவுரையாற்றி அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
ஏன் இந்த விழா?
நாவலருக்கு விழா எடுப்பதன் நோக்கமென்ன?
எந்தக் கடவுள், மத மூடநம்பிக்கைகள், சடங்கு களுக்கு எதிராக நாவலர் பாடுபட்டாரோ, பட்டி தொட்டியெல்லாம் முழங்கினாரோ, எந்தப் பகுத் தறிவு சமுதாயத்தை தந்தை பெரியார் உருவாக்கப் பாடுபட்டாரோ, எதற்காக நாவலர் அவர்களும் பிரச்சாரம் செய்தாரோ - அந்த எண்ணம் ஈடேற விரிவடையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துக் காகக் கொண்டாடப்படுவதுதான் இந்த விழா.
நாவலரைப் பொறுத்தவரை குடும்ப ரீதியாக சுயமரியாதை இயக்கத்தின்பால், திராவிடர் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். அவர் தந்தையார் இராசகோபால் அவர்கள் பட்டுக்கோட்டையில் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக இருந்தவர் - பகுத்தறிவாளர் - சுயமரியாதைக்காரர்.
மூத்த மகன் சவுரிராஜன் - இவர் இங்கர்சால் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து, பச்சை அட்டைக் ‘குடிஅரசில்' இடம்பெறச் செய்தவர். இரண்டாவது மகன் தான் நமது நாவலர்; மூன்றாவது மகன்தான் சீனிவாசன் என்ற இரா.செழியன். அடுத் தவர் இராமதாஸ். இவர்களுக்கு சகோதரிகளும் உண்டு.
இவர்கள் எல்லாம் அவர்களின் தந்தையாரால் பகுத்தறிவு வழியில் வார்த்து எடுக்கப்பட்டவர்கள். இந்த வாய்ப்பு எல்லாம் எங்களைப் போன்றவர் களுக்குக் கிடைக்கவில்லை.
11 வயது முதல் எனக்குத் தொடர்பு
என்னைப் பொறுத்தவரை எனது 11 வயது முதல் நாவலரையும், பேராசிரியர் அன்பழகன் அவர் களையும் அறிவேன்.
அவர்கள் எல்லாம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவர்களை எல்லாம் கடலூருக்கு அழைத்து வந்து அடிக்கடி கூட்டங்களை நடத்து வோம்; அவர்களை வரவேற்று தங்க வைத்து வழியனுப்பி வைக்கும் வேலை எங்கள் மாணவர் பட்டாளத்தைச் சேர்ந்தது - எங்கள் ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் எங்களுக்குப் பணித்த வேலை அது.
‘இளந்தாடி' நெடுஞ்செழியன்!
அப்பொழுதெல்லாம் இளந்தாடி நெடுஞ்செழியன் என்று பெயர். அவர் உரை கேட்போர் எவரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும். கூன னையும் நிமிரச் செய்யும். புரட்சிக்கவிஞர் பாடல் களை அவர் பொதுக் கூட்டங்களில் பயன்படுத்தி யதுபோல், வேறு யாரும் பயன்படுத்தியது கிடை யாது. அவற்றை உணர்ச்சிகரமாக அவர் குரலில் கேட்கவேண்டுமே - கேட்போரிடம் வெப்பம் ஏறச் செய்யும்.
பல்கலைக் கழகப் படிப்பை முடித்த நிலையில், தந்தை பெரியார் அழைப்பை ஏற்று கழகப் பிரச் சாரத்தில் ஈடுபட்டார்; அதன்பின் கோவையில் ஜி.டி.நாயுடு அலுவலகத்தில் மேலாளராகப் பணி யாற்றினார். மறுபடியும் இயக்கப் பணியில், குறிப் பாகப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்.
தொடக்கக் காலகட்டத்தில் அவர் பின்பற்றிய பேச்சு முறை பிற்காலத்தில் மாற்றம் பெற்றது. குரலை ஏற்றியும், இறக்கியும், கிண்டலும், கேலியும் செய்யும் முறையே அலாதியானது.
‘மகாவிஷ்ணு அமெரிக்காவில் ஏன் அவதாரம் எடுக்கவில்லை?'
மகாவிஷ்ணு 10 அவதாரம் எடுத்தாரே எல்லாம் இந்தியாவுக்குள்தான் எடுக்கவேண்டுமா? ஏன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான், அமெ ரிக்கா முதலிய நாடுகளில் எடுக்கவில்லை. அமெ ரிக்க நாடுகளில் ஒரே ஒரு அவதாரமாவது எடுக்கக் கூடாதா? என்று அவர் பேசும்போது கேட்போர் சிரிப்பர், சிந்திப்பர். அவர் விவாத முறையே அலாதி யானது.
ஒரு கேள்வியைக் கேட்பார் - அந்தக் காலத்தில் நெருப்பைப் பற்ற வைக்க தீப்பெட்டி கிடையாது. இறந்தவர்களைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று கொள்ளி வைக்க நெருப்புத் தேவை - சக்கி முக்கிக் கல்லில்தானே தீப்பற்ற வைப்பார்கள். இந்த நிலையில், பிணத்தைத் தூக்கிச் செல்லும்பொழுது வீட்டிலேயே ஒரு கலயத்தில் மரத்துண்டுகளைக் கொண்டு நெருப்புத் தயாரித்து, அதை எடுத்துச் செல்லுவார்கள். கலயம் கையைச் சுடாமல் இருக்க வாழைப் பட்டையை அதன் கீழே வைத்து எடுத்துச் செல்லுவார்கள். அந்தக் காலத்துக்கு அது சரி - இப்பொழுதுதான் தீப்பெட்டி எல்லாம் கண்டு பிடித்தாயிற்றே - இப்பொழுதும் கலயத்தில் நெருப்பை எடுத்துச் செல்லுகிறானே - அதுவும் மின்சார சுடுகாடு எல்லாம் வந்துவிட்ட இந்தக் காலத்தில் - இப்படி இருக்கிறானே - இவன் எப்படி உருப்படுவான்?
படிப்பிற்கும் பகுத்தறிவிற்கும் சம்பந்தம் இல்லையே!
சயின்ஸ் படிக்கிறான், புவியியல் படிக்கிறான், சூரிய கிரகணம் என்று சொல்லிக் கடற்கரைக்குச் செல்லுகிறானே என்று பேசுவார்.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த பிறகு, தேனியில் ஒரு பொதுக்கூட்டம் - நாவலர் மீது தாக்குதல்; திராவகத்தை வீசத் திட்டம் - பாறாங்கல்லைக் கூடப் பயன்படுத்தினர் - அவர் உயிர் தப்பியதே ஆச்சரியம்.
கட்சிப் பிரிந்துவிட்டதே என்று தந்தை பெரியார் சும்மா இல்லை - சென்னையில் கண்டன ஊர்வலம், பொதுக்கூட்டம் - தந்தை பெரியாரே தலைமை தாங்கி நடத்தினார்.
‘‘திராவிடர் இயக்க வரலாறு'' என்ற அரிய நூலை எழுதினார் நாவலர். அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் எழுதி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆயிற்று; ஆனாலும், வெளியிடவில்லை. ஓர் ஆண்டு கழித்துத்தான் 1996 ஜூலை 11 ஆம் தேதி நாவலர் பிறந்த நாளில், சென்னை பெரியார் திடலில் எனது தலைமையில் வெளியிடப்பட்டது. நான்தான் அந்நூலை வெளியிட்டேன்.
அந்நூல் வெளியீட்டு விழாவை தஞ்சை, கோவை, ஈரோடு முதலிய ஊர்களில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்தது - அதன்மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. நாவலரும் பங்கேற்று உரையாற்றினார்.
தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சி
அந்நூலில் தந்தை பெரியாரிடம் தாங்கள் பெற்ற பயிற்சியை விளக்கிக் கூறியுள்ளார். கட்டுப்பாடு, கடமை உணர்வு, கண்டிப்பு இவைதான் எங்களை வார்த்தெடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
‘சிக்கனவாதி' என்று தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்டவர் நமது நாவலர்.
பெரியாரிடமிருந்து பகுத்தறிவுக் கொள்கையை மட்டுமல்ல, சிக்கனத்தையும் சிக்கெனப் பிடித்துக் கொண்டவர் அவர் என்று நாவலரைப்பற்றி எடுத்துக் கூறிய கழகத்தின் தலைவர் - நாவலர் வீட்டில் நடைபெற்ற அவர் சகோதரியின் திருமணத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றை நினைவுப்படுத்தினார்.
நாவலர் வீட்டில் நடந்த சுவையான நிகழ்வு!
தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திருமணம் அது. மணமகள் தாலி கட்ட மறுத்துவிட்டார். மணமகன் ஆவுடையப்பன் வீட்டாரோ தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினர். நாவலரும் தாலி கூடாது என்று பிடிவாதமாக இருந்தார். கடைசியில் தந்தை பெரியாரிடமே பிரச்சினை சென்றது. ‘‘இப்போதைக்குக் கட்டிக் கொள்ளுங்கள் - தெளிவு ஏற்பட்ட பிறகு எடுத்துவிடலாம் அல்லவா'' என்று கூறி வழிபடுத்தினார்.
நாவலருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நாவலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தந்தை பெரியார் இந்த நிகழ்ச்சியை நினைவுப்படுத்திப் பேசினார்.
‘‘கீதையின் மறுபக்கம்'' என்று நான் எழுதிய நூலின் வெளியீட்டு விழாவில் நாவலர் பங்கு கொண்டு பேசினார். அவரின் உரை சிறு நூலாகக் கழகம் வெளியிட்டுள்ளது. (அந்த நூலை எடுத்துக்காட்டினார் கழகத் தலைவர்).
அந்த விழாவில் நாவலருக்கே உரித்தான தனித்த ஆய்வுச் சிந்தனையோடு சில கேள்விகளை எழுப்பியதோடு - வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு சில உண்மைகளை எடுத்துக் கூறினார். நாவலர் எதைப் பேசினாலும், குறிப்பு இல்லாமல் பேசவே மாட்டார் - எதையும் ஆதாரத்துடனேயே பேசும் பழக்கம் உடையவர்.
மகாபாரதத்தில் கீதை எப்படி நுழைந்தது?
மகாபாரதத்தில் பகவத் கீதை உண்டா? என்ற கேள்வியை எழுப்பினார். சரி, தமிழ் இலக்கியங்களிலாவது பகவத் கீதைபற்றிக் குறிப்பு ஏதும் உண்டா? இல்லை, இல்லவே இல்லை என்றார்.
தொல்காப்பியத்தில் உண்டா? அகநானூற்றில் உண்டா? புறநானூற்றில் உண்டா? பரிபாடலில் உண்டா? சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளதா? மணிமேகலை, தேவாரத்திலாவது காணப்படுகிறதா? ஏன்? வைணவர்களின் ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும்' இல்லையே! எந்தத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெறாத ஒன்று இந்தக் கீதை.
அதைவிட முக்கியம், பாரதத்தைத் தமிழில் எழுதிய வில்லிபாரதத்தில்கூட இடம்பெறவில்லையே என்ற கேள்வி ஆழமானது.
எவனோ ஒருவன் கிறுக்கி, ஏமாந்த காலத்தில் கீதையை மகாபாரதத்தில் உள்ளே தள்ளியிருக்கிறான்.
கீதை என்றால் கீதம் - பாட்டு - அது எப்படி உபதேசம் ஆகும்? போர்க்களத்தில் கிருஷ்ணன் பாட்டுப் பாடிக்கொண்டு இருந்தானா?
புரட்சிக்கவிஞரும் - நாவலரும்!
புரட்சிக்கவிஞர் எழுதியதை நாவலர் பேசும்போதுதான் அதன் வீரம், வீரியம், உணர்ச்சியின் அருமை புரியும் (பேராசிரியர் ந.இராமநாதன் புரட்சிக்கவிஞர்பற்றியும், அவர் படைப்புக் குறித்துப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். புரட்சிக்கவிஞரே அதனை இரசிப்பார் என்பதையும் ஆசிரியர் கூறினார்).
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பணியாற்றிய பள்ளி- அதில் பணியாற்றும் சிலர் புரட்சிக்கவிஞருக்கு எதிரப்பானவர்கள் - அப்பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்குக் கவர்னர் வருகை தந்தார். அந்த நிகழ்ச்சியில் புரட்சிக்கவிஞரும் பேச ஏற்பாடு. புரட்சிக்கவிஞருக்கு ஆகாதவர்கள் ஒரு சூழ்ச்சியைச் செய்தனர். பாரதிதாசன் எப்படியும் அவர் கொள்கையைப் புகுத்துவார். அது அனேகமாக கவர்னருக்குப் பிடிக்காமல் போகும் - அதனால், பாரதிதாசனின் வேலை பறிபோகும் என்ற திட்டத்தில், பாரதிதாசன் எழுதியதை ஆளுநர் புரிந்துகொள்ள பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்க்கவேண்டும் என்று கூறினர் - அவ்வாறே மொழி பெயர்க்கவும் பட்டது.
அந்தப் பாடல்,
வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை
வரவிடவில்லை குருக்களின் மேடை
(இதைப் பாரதிதாசன் சொல்லிக் கொண்டிருந்தபோதே ஆளுநர், ‘‘போந்தினியே - போந்தினியே'' - மேலே பேசு பேசு என்று பொருள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்) .
கடைசி வரி,
நறுக்கத் தொலைந்தது
அந்தப் பீடை
நாடெல்லாம் கல்வியின் ஓடை
என்பது அந்தப் பாடல்.
இந்தப் பாடல் வரிகளை நமது நாவலர் கழக மேடைகளில் பேசுவதைக் கேட்கும் எவரும் சுவைத்துக் கரவொலி எழுப்புவர்.
நாவலரின் திருக்குறள் உரை
நாவலரின் படைப்புகளில் திருக்குறள் உரை மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும். பகுத்தறிவுச் சிந்தனையில் அருமையாக எழுதப்பட்டதாகும்.
அந்த நூலைப் பரப்பிட 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு.
நாவலரிடம், திருக்குறளுக்கு மு.வ. எழுதியதுபோல, பொழிப்புரை ஒன்றை எழுதவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டபோது, ‘நல்ல யோசனை - அதனை முடிப்பேன்' என்றார், முடித்தும் கொடுத்தார். அதைத் திராவிடர் கழகமே வெளியிட வேண்டும் என்றும் கூறியது உண்டு.
நாவலரின் இறுதி உரை பெரியார் திடலில்!
எப்படியோ அவரது இறுதி உரை மிகப்பொருத்தமாக பெரியார் திடலிலேயே அமைந்தது. நாவலரைப் பொறுத்தவரை அவரின் பலமும், பலவீனமும் பிடிவாதம்தான்!
பகுத்தறிவுக் கொள்கையில் கொஞ்சமும் கூட சமரசம் இல்லாத பகுத்தறிவாளர் நாவலர்.
உறுதி ஏற்போம்!
அவரின் புகழைப் பரப்பும் அதேநேரத்தில், அவர் எந்த திராவிட இயக்கக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ - எந்தப் பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சு அடங்கும்வரை முழங்கினாரோ, அவற்றை நாமும் தொடர்ந்து பரப்புவோம் - தந்தை பெரியார் காண விரும்பிய ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயத்தைப் படைக்க உறுதி எடுப்போம்! என்று உரையாற்றினார் கழகத் தலைவர்.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், பெரியார் போல் பேசி நன்றி கூறினார்.
நாவலர் உரை ஒலிபரப்பு!
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் நாவலர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து, நாவலர் பெரியார் திடலில் இறுதியாக ஆற்றிய உரை தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.
நாவலரின் நூல்கள் - நமது வெளியீடுகள்
* மொழிப் போராட்டம்
* மதமும் மூடநம்பிக்கையும்
* சமூகநீதிப் போர்
* சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்
* பகுத்தறிவு முழக்கம்
* திருக்குறளும் மனுதர்மமும்
* பகவத் கீதை - & ஏன்? எதற்காக?
* நாவலர் நெடுஞ்செழியன் இறுதிப் பேருரை
No comments:
Post a Comment