பரீட்சைக்குத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 12, 2020

பரீட்சைக்குத் தடை

 தந்தை பெரியார்



மத்திய திராவிட மாணவர் கழகத் தலைவர் தோழர் கே.ஏ.மதியழகன் அவர்கள், இந்த ஆண்டில் பி.ஏ. பரீட்சை எழுத வந்தார். அண்ணாமலை பல்கலைக் கழக வைஸ் சான்ஸலர் தோழர் ரத்தனசாமி அவர்களால் தடைப்படுத்தப் பட்டிருக்கிறார்.


பரீட்சை எழுதக்கூடாதென்பதற்கு ஏதாவது தகுந்த காரணம் கூறியிருக்கின்றாரா என்றால், அப்படியும் ஒரு காரணம்கூட காட்டவில்லை என்று அறிகிறோம்.


தோழர் மதியழகன், பஞ்சாங்கத்தையும், தருப்பை யையும் பாதுகாப்பாகக் கொண்டு ஊரார் உழைப்பை உறிஞ்சிய உஞ்சுவிருத்திக் கூட்டத்தை சேர்ந்தவரல்ல என்பதையும், வயிற்றையும், வாயையும் கட்டி எப்படி யாவது நம்ம பிள்ளை படிக்க வேண்டும், படித்துப் பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையால் உடல் வருந்த உழைத்து, உழைத்த பயனைப் பொறுக்கிக் கொடுக்கும் பெற்றோர்களையுடைய உழைப்பாளி இனமான திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்பதையும், அதாவது இந்தப் பரீட்சை எழுதுவதற்காக, கஷ்டப் பட்டுழைத்த உழைப்பிலிருந்து பல ஆயிரம் ரூபாய் களையும், பல வருஷங்களையும் செலவு செய்தவர் என்பதைச் சிறிதளவாவது நம் மதிப்பிற்குரிய வைஸ் சான்ஸலர் அவர்கள் எண்ணியிருப்பாரானால், இந்த அழிவு வேலையைச் செய்ய அவர் சற்று பின்வாங்கியே இருக்கவேண்டும்.


காரணமே இல்லாமல் அல்லது - காரணம் கூறாமல் ஒரு வைஸ்சான்ஸலர் ஒரு மாணவரை பரீட்சை எழுதுவதைத் தடை செய்கிறார் என்றால், அதற்கு என்ன காரணம்? அம்மாணவர் செய்த குற்றம் என்ன? அவர் திராவிட மாணவர் கழகத் தலைவர் என்கிற குற்ற வாளியே தவிர, வேறு என்ன காரணம் சொல்லுவதாயிருந்தால் சொல்ல முடியும் என்று கேட்கிறோம்.


5, 6 மாதங்களுக்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில மாணவர்கள், தேசியக் கொடியைக் கொளுத்தி விட்டார் கள் திராவிட மாணவர்கள் என்ற பொய்யான வதந் தியைக் கிளப்பி, திராவிடர் கழகக் கொடியை இறக்க பலவந்தமுயற்சி செய்ததையும், அதற்கு அங்குள்ள பார்ப்பன ஆசிரியர்களே உடந்தையாக இருந்ததையும், அதனால் இருதரப்பாரும் கைகலந்து, காயம்பட்டு காலித்தனம் செய்ததையும், அன்றிரவு நடுச்சாமத்தில், பார்ப்பன ஆசிரியர்களையும், போலிசையும் பாது காப்பாகக் கொண்டு, மூடியிருந்த கதவுகளைத் திறக்கச் செய்து திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை அடித்து இம்சித்து, அம்மணமாக் கியும், கத்தியால் குத்தி, கடைகெட்ட மிருகங்களிலும் கேவல மாக நடந்துகொண்டதையும் கண்டித்து நாம் அப் போதே எழுதியிருந்தோம்.


இவ்விருதரப்பு மாணவர்கள் மீதும் போலிசார் வழக்குத் தொடர்ந்திருக்க, காங்கிரசின் ஏகபோகச் சர்வாதிகாரப் போக்கினால், காங்கிரஸ் கட்சி மாண வர்கள் மீதுள்ள வழக்கை போலிசார் வாபஸ் வாங்கிக் கொண்டுவிட, திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த வர்கள்மீது மட்டும் வழக்கு நடந்துகொண்டிருக்கும் காலத்தில் இந்த அக்கிரமத்தில் என் பங்கு என்ன குறைச்சலா என்று கேட்பதைப் போல தோழர் ரத்தன சாமியவர்கள் தடை உத்தரவுகளைப் போட்டிருக் கிறார்கள்.


இந்தத் தடை உத்தரவு, நடந்துகொண்டிருக்கும் வழக்கையும் பாதிக்கும் என்பதைத் தோழர் ரத்தனசாமி யவர்கள் அறிந்திருக்கவேண்டும். அறிந்தே இந்த அட்டூழியத்தை - அவராலும் நீக்க முடியாத நிலையில் செய்திருக்கின்றார் என்றால், திராவிடர்கள் மன்னிக்க முடியாத ஒரு மாபாதகத்தைச் செய்திருக்கின்றார் என்று சொல்வதைத் தவிர வேறு நம்மால் என்ன சொல்ல முடியும்.


ஏதோ நடப்பது நடக்கட்டும். தீர்ப்புக் கூறும் நாள் உண்டு என்பதிலே அவர் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர் என்பதை நாம் அறிவோம்.


'குடிஅரசு' - துணைத் தலையங்கம் - 17.04.1948


No comments:

Post a Comment