* கலி. பூங்குன்றன்
மருத்துவக் கல்வியில் சமூகநீதி எனும் பொருளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நேற்று (5.7.2020) மாலை 90 மணித்துளிகள் பல்வேறு தகவல்களையும், வரலாற்று ரீதியாக எடுத்துக் கூறி முடிவாக நான்கு முத்திரைக் கோரிக்கைகளை முன் வைத்து இவற்றைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
(1) இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாத சமூகத்திலிருந்து ஏராளமாக டாக்டர்கள் வந்திருக்கிறார்கள். என்றாலும் இப் பொழுதும் பல வகைகளில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டுதான் வருகின்றன.
என்றாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தி லிருந்து மருத்துவர்கள் தோன்றியிருக்கிறார்கள் - இந்த நிலை சாதாரணமாக வந்ததல்ல! எத்தனை எத்தனையோ போராட் டங்களையும் செயற்பாடுகளையும் கடந்துதான் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.
(2) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது எத் தனைப் பேருக்குத் தெரியும்? இன்றைக்குப் படித்து டாக்டர் களாக இருக்கும் நம்மவர்களில் எத்தனைப் பேருக்கு இந்த உண்மை தெரியும்?
(3) தந்தை பெரியார் குரல் கொடுத்து, பனகல் அரசர் (இராமராய நிங்கர்) சென்னை மாநிலப் பிரதமராக இருந்த போதுதான் அந்தத் தடையை நீக்கினார்.
இந்த நிபந்தனையில் பின்புலத்தில் உள்ள சூழ்ச்சி எத் தகையது? பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்று ஆக்கப்பட்ட சமுதாயத்தில் இப்படி யொரு நிபந்தனை என்றால் ஒட்டு மொத்த டாக்டர்களும் பார்ப்பனர்களாக மட்டுமே தானே வர முடியும். அதை உடைத்தது திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சியே! பனகல் அரசர் சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(4) நம்முடைய அரசர்கள் காலத்தில் மனுதர்மம்தான் கோலோச்சியது. நமது அரசர்கள் ஏற்படுத்திய கல்விக் கூடங்கள் எல்லாம் சமஸ்கிருதம் படிக்கவே வழியையும் வசதியையும் செய்து கொடுத்தன. இந்த நிலையில் நம் மக்களுக்குக் கல்வி வாய்ப்பு என்பது அறவேயில்லை.
(5) வரலாற்றில் திராவிட இயக்கம்தான் நோய் நாடி நோய் முதல் நாடி அதற்கான தீர்வுக்குப் பாடுபட்டது.
டாக்டர் சி. நடேசனார், பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர் போன்ற பெருமக்களின் தொண்டும் பணியும் அளப்பரியன.
சென்னையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க டாக்டர் நடேசனார் திராவிடன் விடுதியை ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தாம் பிற்காலத்தில் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி பிள்ளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பிற்காலத்தில் வந்த சிவசுப்பிரமணியம் நாடார், இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக வந்த சுயமரியாதை இயக்க வீரர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்றவர்கள் ஆவார்கள்.
(6) 1916இல் தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) 1920 முதல் 1937 ஆம் ஆண்டுவரை பெரும்பாலும் சென்னை மாநில ஆட்சியில் அமர்ந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், சமுதாய மாற்றத்திற்கும் ஆக்கரீதியான சட்டங்களையும், திட்டங் களையும் வகுத்தது.
(7) மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்குச் சமஸ்கிருதம் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கிய நீதிக்கட்சி ஆட்சி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிக் கமிட்டிகளை அமைத்தது.
(8) கல்லூரி க்கமிட்டிகள் அமைக்கப்பட்ட பிறகு பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் அதிகம் சேர்ந்து படிக்க ஆரம்பித்த நிலையில், அதுவரை முழுச் சுளையையும் விழுங்கி ஏப்ப மிட்ட பார்ப்பனர்கள் எதிர்க்க ஆரம்பித்தனர். கல்லூரிக் கமிட்டி என்ற முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
(9) 1938ஆம் ஆண்டில் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக வந்த நிலையில், முதலில் அவர் செய்த காரியம் பனகல் அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்லூரிக் கமிட்டியை ஒழித்துக் கட்டினார். கல்லூரி முதல்வர்களே மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள லாம் என்று மீண்டும் கல்லூரிகளை பார்ப்பனமயமாக்கிட வழி செய்து கொடுத்தார்.
(9) கல்லூரிக் கமிட்டியை ராஜாஜி கலைத்துவிட்ட நிலையில் 1940ஆம் ஆண்டில் (ஆகஸ்டு 24) திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் அதனைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (தீர்மானம் எண் 7: “உயர்தரக் கல்விக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காரியத்தில் சகல வகுப்பு மக்களையும் சேர்த்துக் கொள்ளச் சவுகரியம் இருக்கும்படியாக ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலேஜ் கமிட்டி என்பதைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து எடுத்துவிட்டதை இம்மாநாடு வன்மையாய்க் கண்டிப்பதோடு, இப்போது ஆட்சியில் இருந்து வரும் கவர்னர் பிரபு சர்க்காரும் அந்த முறையையே பின்பற்றித் திராவிட மக்களை அனாதரவு செய்ததற்கு வருத்தத்தோடு கண்டிப்பதுடன், உடனே ஒரு தக்க காலேஜ் கமிட்டி ஏற்படுத்த வேண்டுமென்று சர்க்காரை இம்மாநாடு வலியுறுத்துகிறது” என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்)
(10) 1946 இல் ஆட்சி மாற்றத்தின் போது மீண்டும் கல்லூரி கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
(11) இதற்கிடையில்1928ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த நீதிக்கட்சி ஆதரவு பெற்ற அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்கள் அரும்பெரும் முயற்சியால் வகுப்புவாரி உரிமை ஆணை நிறைவேற்றப்பட்டது. (G.O. Ms.No. 1880 Education, Dated 15.9.1928).
(12) இந்த ஆணையின்படி அரசு நியமனம் செய்ய 12 இடங்கள் என்றால் பார்ப்பனர் அல்லாதாருக்கு 5 இடங்கள், பார்ப்பனர்களுக்கு 2 இடங்கள், முகம்மதியர்களுக்கு 2 இடங்கள், கிறிஸ்தவர்களுக்கு 2 இடங்கள், ஆதி திராவிடர் களுக்கு 1 இடம் என்ற வரையறை செய்யப்பட்டது.
(13) 1946ஆம் ஆண்டுகளில் ஆந்திரப் பார்ப்பனரான பிரகாசம் தலைமையில் சென்னை மாநில ஆட்சி அமைந்தது. அந்த அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ருக்மணி லட்சுமிபதி என்ற பார்ப்பன அம்மையார் (மறைந்த நரம்பியல் அறுவை மருத்துவர் பி. இராமமூர்த்தியின் மாமியார்). தனது பார்ப்பனத் தன்மைக்கே உரித்தான தன்மையில், தகுதி (Merit Quota) அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு 20 சதவிகித மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்ற ஓர் ஆணையைப் பிறப்பித்தார்.
இதன் மூலம் பார்ப்பனர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வழி செய்யப் பட்டு விட்டது. மெரிட் கோட்டாவில் 47 இடங்கள், ஏற்கெனவே உள்ள இடஒதுக் கீட்டின் அடிப்படையில் 49; ஆக 96 இடங்களைப் பார்ப்பனர்கள் தட்டிப் பறித்து விட்டனர்.
(14) 1946ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் 403 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் மெரிட் கோட் டாவில் 14 இடங்களையும், இடஒதுக்கீடு அடிப்படையில் 122 இடங்களையும் பார்ப்பனர்கள் பெறும் நிலை ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து சென்னை - ‘விடுதலை’ அலுவலக வளாகத்தில் 23.12.1940 அன்று ஜஸ்டிஸ் மகாலில் நடை பெற்ற மாநாட்டில் (சீர்திருத்தத் தொண்டர் மாநாடு) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(15) சென்னை மாநில முதல் அமைச் சராக இருந்த பிரகாசத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கடுமையாக வந்த நிலையில் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சரானார் (1947 டிசம்பர்).
(16) ஓமாந்தூரார் என்ன செய்தார்? பார்ப்பனர் பிரகாசம் அமைச்சரவையில் திணிக்கப்பட்ட மெரிட் கோட்டாவை ரத்து செய்தார். பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி ஒதுக்கீட்டையும் கொண்டு வந்தார்.
(17) சென்னை மாநில உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக பார்ப்பனர் அல்லாதாரான என்.சோமசுந்தரம் அவர்கள் நீதிபதியாக வரக் காரணமாக இருந்தார். பார்ப்பனர் ஒருவரைக் கொண்டு வர ராஜாஜி முயற்சி செய்து பிரதமர் நேரு வரை பிரச்சினை சென்றது, என்றாலும் ஓமாந்தூரார் உறுதியாக இருந்தார்.
(18) அவ்வளவுதான் இவர் தாடியில்லாத ராமசாமி நாயக்கர் என்கிற அளவுக்குப் பார்ப்பனர்கள் பிரச்சினை கிளப்பினர். காந்தியார் வரை புகார் மூட்டையைத் தூக்கிச் சென்று மூக்கறுப்பட்டனர் பார்ப்பனர்கள்.
(19) ஓமாந்தூரரரின் சாதனைகளைப் பாராட்டி ‘விடுதலை’ எழுதியபோது ‘விடுதலை’யில் என்னைப் பாராட்டி எழுத வேண்டாம். வேண்டுமானால் கண்டித்து எழுதச் சொல்லுங்கள் என்று ஒரு தூதுவர் மூலம் சொல்லி அனுப்பினார்.
(20) தந்தை பெரியாரை ஓமாந்தூரார் சந்திக்க விரும்பினார் (தந்தை பெரியாரிடத்தில் தொண்டர் என்று சொல்லும் அள வுக்கு இருந்தவர் ஓமாந்தூரார்) ஆனால் தந்தை பெரியாரோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல் அமைச்சரை நான் சந்திப்பதுதான் முறை என்று கூறி முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வ வீடான கூவம் ஹவுசில் சந்தித்தார்.
‘நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்!” என்று ஓமாந்தூரார் சொன்னபொழுது, ‘அப்படி சொல் லாதீர்கள், நான் முதல் அமைச்சர் பதவியில் இருந்தால் அது உங்களுக்கும் கிடைக்காது, எனக்கும் கிடைக்காது’ என்றார் தந்தை பெரியார்.
(20) ஓமாந்தூராருக்குப்பிறகு குமாரசாமி ராஜாவும், அவருக்குப் பிறகு 1952 முதல் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) மேலவை (கொல்லைப்புற வழியாக) வழியாக நுழைந்து முதல் அமைச்சர் ஆன நிலையில் ஆறாயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலை மாணவர்கள் செய்ய வேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார் (1938இல் வந்தபோதும் 2500 பள்ளிகளை மூடிய ‘புண்ணிய வான்’ இவர்)
குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. அதன் காரணமாக ஆச்சாரியார் முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகும்படி நேர்ந்தது. அந்தக் குலக்கல்வித் திட்டம் மட்டும் ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால், இப்படி நீங்கள் மருத்து வர்களாக மருத்துவக் கல்லூரி மாணவர்களாக இவ்வளவுப் பேர் கூடியிருக்கிறீர்களே, இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.
(21) ராஜாஜி இன்னொரு காரியத்தையும் செய்தார். மருத்துவக் கல்லூரி போன்ற தொழிற்கல்லூரிகளில் சேர நேர்முகத் தேர்விற்கு 150 மதிப்பெண்கள் என்று ஓமாந்தூரார் நிர்ணயித்திருந்தார். அதனை ராஜாஜி 50 ஆகக் குறைத்தார் இதன் காரணமாக அந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 318 இடங்களில் பார்ப்பனர்களுக்கு 63 இடங்கள் கிடைத்தன.
(22) குலக்கல்வித் திட்ட எதிர்ப்பால் பதவியை விட்டு ஆச்சாரியார் வெளியேறிய இடத்தில் காமராசர் முதல் அமைச்சரானார் (அதற்குக் காரணம் தந்தை பெரியாரே!)
வந்த வேகத்தில், குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்த துடன் ஆச்சாரியார் மூடிய பள்ளிகளைத் திறந்ததுடன் மேலும் 12 ஆயிரம் பள்ளிகளைப் புதிதாகத் திறந்தார்.
நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்களை மீண்டும் 150 ஆக உயர்த்தினார். செய்தியாளர்கள் முதல் அமைச்சர் காம ராசரை சந்தித்து ‘ராஜாஜி 150லிருந்து 50 ஆகக் குறைத்தார். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்களை ஏன் 150ஆக உயர்த்தினீர்கள்?’ என்று கேட்டபோது, 'ராஜாஜி என்ன காரணத்துக்காக 150அய் 50 ஆகக் குறைத்தாரோ, அதே காரணத்துக்காகத்தான் 50அய் 150 ஆக உயர்த்தினேன் போ” என்று பதில் கூறினார்.
தகுதி, திறமைபற்றி காமராசர் கூறிய கருத்து முக்கியமானது. “பறையனைப் படிக்க வைத்தேன் - டாக்டரானான் -அவன் ஊசி போட்டதால் எந்தப் பிள்ளை செத்தது? இன்ஜினிய ராக்கினேன் - அவன் கட்டிய எந்தப் பாலம் இடிந்தது சொல்' என்று முழக்கமிட்டவர் காமராசர்.
(23) அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது - நீதிபதி சோமசுந்தரம் தலைமையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குக் குழு அமைக்கப்பட்டது. இடம் கிடைக்காத பார்ப்பன மாணவர் நீதிமன்றம் சென்றார்.
அப்பொழுது நீதிமன்றத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை குழுவின் தலைவர் நீதிபதி சோமசுந்தரம் கொடுத்த பிரமாண அறிக்கையில் சம்பந்தப்பட்ட மாணவர் கெமிஸ்ட்ரி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுதிய பதிலை வைத்து அதே கேள்வியைக் கேட்ட போது அந்த மாணவன் அதற்குரிய பதிலைச் சரியாக சொல்லவில்லை என்று சொன்ன பிறகு அடங்கி விட்டார்கள்.
(24) இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகமான எண் ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளை நடத்தினால், மருத்து வக் கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை 50 விழுக்காடு தூக்கிச் செல்லுவது - அபகரிப்பது என்ன நியாயம்?
(25) ‘நீட்’ எதற்காக? உச்சநீதிமன்றம் Ôநீட்Õ செல்லாது என்று திட்டவட்டமாகக் கூறிய நிலையில், பி.ஜே.பி. ஆட்சியில் திணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் அனிதாக் களையும் சுபஸ்ரீகளையும் நாம் இழக்க வேண்டுமா? இதனை எதிர்த்து நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
(26) தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து நாம் முறியடிக்கவில்லையா? அதே போல இந்த நீட்டையும் முறியடிப்போம்!
(27) மாநில அரசுகள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பது என்ன நியாயம்? நாம்தான் முதலில் குரல் கொடுத்தோம் - இப்பொழுது தமிழ் நாட்டில் மட்டுமல்ல - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இராகுல் காந்திவரை அதனை ஆதரித்துக் குரல் கொடுக் கிறார்களே - நமக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது.
(28) தந்தை பெரியார் என்பவர் ஒரு ஜீவ நதி. எல்லா வற்றையுமே அடித்துத் தள்ளி தன் பயணத்தை அது தொடர்ந்து கொண்டே இருக்கும். சூழ்ச்சிகள் ஜலசமாதியாகும் இப்படி வரலாற்றுத் தகவல்களை நேர்த்தியாக அடுக்கடுக்காகக் காணொலி மூலம் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கடைசியாக நான்கு முத்திரையான பிரச்சினைகளை வலியுறுத்தினார்.
(1) ‘நீட்’ ரத்து செய்யப்பட வேண்டும்.
(2) தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு அவசியம்
(3) கரோனா போன்ற தொற்றுகள் அச்சுறுத்தும் இந்தக் கால கட்டத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
(4) அனைவருக்கும் மருத்துவம் என்பது அடிப்படை உரிமை (Right to Health) ஆக்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவருக்குக் கிடைக்கும் அதே மருத்துவ உதவியும் வசதியும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவத்துக்காக (GDPயில்) இப்பொழுது ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கப் படுகிறது. அது 3 முதல் 6 விழுக்காடு வரை அதிகரிக்கப்பட வேண்டும்.
பல நாடுகளிலும் குடிமக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பது அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் கூறினார் கழகத் தலைவர்.
ஏராளமான மருத்துவக் கல்லூரி இருபால் மாணவர்களும், மருத்துவர்களும் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல - வெளி நாடுகளிலிருந்தும்கூட இந்தக் காணொலிக் காட்சியில் பங்கேற்று கழகத் தலைவரின் கருத்துக் கனிகளைச் சுவைத்தது தனிச் சிறப்பாகும்.
கலந்து கொண்டவர்கள்
திராவிட மாணவர் கழகம் நடத்திய மருத்துவக் கல்வியில் சமூக நீதி எனும் தலைப்பிலான காணொலி கருத்தரங்க நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் நாத்திகன் வரவேற்புரை ஆற்றினார். இமாச்சலப் பிரதேசம், சிம்லா இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர் உ. இரா. மானவீரன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா குணசேகரன், பெரியார் மருத்துவக் குழும இயக்குனர்கள் இரா.கவுதமன், சி.மீனாம்பாள், பெரியார் மருத்துவர் அணி மாநில செயலாளர்கள் கோ.ச.குமார், பழ.ஜெகன் பாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவர் .இளம்பரிதி, பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் க.கதிரவன், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மருத்துவர் மேல மெஞ்ஞானபுரம் செ.கௌதமி, சவிதா பல் மருத்துவமனை மருத்துவர் ம. கயல், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சி.தமிழருவி, பிலிப்பைன்ஸ் தவாவோ மருத்துவக் கல்லூரி மருத்துவர் இர.க.அறிவுச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, பெரியார் பன்னாட்டு அமைப் பின் இயக்குனர் மருத்துவர் சோம. இளங்கோவன் தொடக்கவுரை ஆற்றினர். சென்னை, பாலாஜி மருத் துவக் கல்லூரி மாணவர் வீ.பாவேந்தன் நன்றி கூறினார்.
பிரபல இதய நோய் மருத்துவர், ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் ஆண்டப்பன் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். பெரியார் மருந் தியல் கல்லூரி ,திராவிட மாணவர் கழக மாணவர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்காணொலிக் கருத்தரங்கில் "ஜூம்" வழியில் மட்டும் 455 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டவர்கள்
திராவிட மாணவர் கழகம் நடத்திய மருத்துவக் கல்வியில் சமூக நீதி எனும் தலைப்பிலான காணொலி கருத்தரங்க நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் நாத்திகன் வரவேற்புரை ஆற்றினார். இமாச்சலப் பிரதேசம், சிம்லா இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர் உ. இரா. மானவீரன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா குணசேகரன், பெரியார் மருத்துவக் குழும இயக்குனர்கள் இரா.கவுதமன், சி.மீனாம்பாள், பெரியார் மருத்துவர் அணி மாநில செயலாளர்கள் கோ.ச.குமார், பழ.ஜெகன் பாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவர் .இளம்பரிதி, பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் க.கதிரவன், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மருத்துவர் மேல மெஞ்ஞானபுரம் செ.கௌதமி, சவிதா பல் மருத்துவமனை மருத்துவர் ம. கயல், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சி.தமிழருவி, பிலிப்பைன்ஸ் தவாவோ மருத்துவக் கல்லூரி மருத்துவர் இர.க.அறிவுச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, பெரியார் பன்னாட்டு அமைப் பின் இயக்குனர் மருத்துவர் சோம. இளங்கோவன் தொடக்கவுரை ஆற்றினர். சென்னை, பாலாஜி மருத் துவக் கல்லூரி மாணவர் வீ.பாவேந்தன் நன்றி கூறினார்.
பிரபல இதய நோய் மருத்துவர், ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் ஆண்டப்பன் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். பெரியார் மருந் தியல் கல்லூரி ,திராவிட மாணவர் கழக மாணவர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்காணொலிக் கருத்தரங்கில் "ஜூம்" வழியில் மட்டும் 455 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment