ஒற்றைத் தனி மனித இராணுவமாக இருந்தவர் தந்தை பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 9, 2020

ஒற்றைத் தனி மனித இராணுவமாக இருந்தவர் தந்தை பெரியார்!

‘‘ஒப்பற்ற தலைமை-2'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை



சென்னை, ஜூலை 9- ஒற்றைத் தனி மனித இராணுவமாக இருந்தவர் தந்தை பெரியார்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


‘ஒப்பற்ற தலைமை'


கடந்த 28.6.2020 மாலை 5.30 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் இரண் டாம் பொழிவினை காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே ஆற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


அய்யா அவர்கள் தன்னுடைய கருத்திலே, நிலையாக, உறுதியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று சொன்னால், எனக்கு உண்மையிலே மிகுந்த ஈடுபாடு. உண்மையை நம்புகிறவன். என்னுடைய கொள்கையிலே உண்மை இருக்கிறது.


நேற்றுகூட குழந்தைகள் நிகழ்ச்சியில் நான் ஒரு உதா ரணத்தைச் சொன்னேன்.  தான் போட்ட கையெழுத்தை மறுத்துவிடுங்கள் என்று சொன்னதற்கு தந்தை பெரியார் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.


தந்தையினுடைய கையெழுத்தை, மண்டிக் கடைக் காகப் போடுகிறார், 1903 ஆம் ஆண்டில் அதை கிரிமினல் போர்ஜரி என்று சொல்கிறார்கள், சட்டப்படி! அதற்காக சிறைச்சாலைக்குப் போகவேண்டும் என்பதற்காக, அவர் பயிற்சி எடுத்துக் கொள்கிறாரே தவிர, அதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது என்று அவர் பயிற்சி எடுக்கவில்லை. அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்க்கைக்கே வரவில்லை.


பெரியார் ஒரு பிறவித் தலைவர்!


‘‘பெரியார் அவர்கள் மண்ணை மணந்த மணாளர்'' என்று வ.ரா. அவர்கள் சொன்னதைப்போல, இயல்பாகவே அவர்  ஒரு பிறவித் தலைவர் என்று தொடக்கவுரையாற்றிய அறிவுக்கரசு அவர்கள் சொன்னதைப்போல, உண்மையை அவர் மறுத்ததில்லை. நான் கையெழுத்துப் போட்டேன், அது உண்மை. அதை ஏன் நான் மறுக்கவேண்டும்? அதற்காக தண்டனையா, அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். குறுக்குவழியில் நான் போவதற்குத் தயாராக இல்லை."


இந்தத் துணிவு ஒரு தனி மனிதனுக்கு, அதுவும் வியாபாரியாக இருக்கிறவருக்கு இருந்தது என்றால், அது எவ்வளவு பெரிய பண்பாகும்.


வியாபாரி என்றால், வியாபாரத்திற்காகப் பொய் சொல்லலாம்; வழக்குரைஞர் என்றால் பொய் சொல்லலாம் என்று சமுதாயத்தில் ‘லைசென்ஸ்' கொடுத்திருக்கின்ற ஒரு காலகட்டத்தில், பொய் சொல்வதற்குத் தான் தயாரில்லை என்றார் தந்தை பெரியார் அவர்கள்.


ஒற்றைத் தனி மனித இராணுவமாக இருந்தவர் தந்தை பெரியார்!


தன்னுடைய கொள்கையில் அவர் இவ்வளவு உறுதியாக இருப்பதற்கு என்ன காரணம். இரண்டு, மூன்று செய்திகளை நாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த எதிர்நீச்சல் அடிக்கக்கூடிய, எதிர்ப்புகளைச் சந்திக்கக் கூடிய, எதிரிகளைத் தோற்கடிப்போம் என்ற துணிவோடு, ஒற்றை தனி மனித இராணுவமாக இருந்த தந்தை பெரியார் அவர்கள். எப்படி களத்தில் நின்றார்கள்? ஒரு களம், அடுத்த போர்க் களம், சலிப்பில்லாது அதை எப்படி அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதைத் தான் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


ஒரு மாமருந்தாக, ஒரு வாய்க்காலாக, வழித்துணையாக அமையவேண்டும்!


நான் பல இடங்களில், அய்யாவினுடைய கருத்து களைத்தான் உங்களுடைய மத்தியில் வைத்திருக்கிறேன். என்னுடைய கருத்துகளே அல்ல. பெரியாரைப் பேச விட்டுக் கேட்கவேண்டும். பெரியாருடைய சிந்தனைகளை நாம் இன்றைக்குக் கேட்டுக் கேட்டு, நம் நெஞ்சில் உரம் ஏற்றிக் கொள்ளவேண்டும். நம்முடைய பக்குவத்தை நாம் உயர்த்திக் கொள்ளவேண்டும்; அதற்கு இந்த உரைகள் ஒரு வாய்ப்பாக, ஒரு மாமருந்தாக, ஒரு வாய்க்காலாக, வழித்துணையாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சிகளையே எடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதையெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி.


நவில்தொறும் நூல் நயம் போலும் - படிக்கப் படிக்க இன்பம்; தோண்டத் தோண்ட ஊற்றுக் கிளம்புவதுபோல, அறிவு ஊற்றுக் கிளம்பிக் கொண்டே இருக்கிறது. அது நம்முடைய அறிவுத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது.


ஒரு சமுதாயப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்கள். அவர் பொய் பேசவேண்டிய அவசியமில்லை. ஒருமுறை அய்யா அவர்கள் நகைச்சுவையாகப் பேசினார்.


நான்  பேசுவது "மரண வாக்குமூலம்". மரண வாக்குமூலம் என்றால் செல்லுபடியாகும் என்று சொல்வார்கள் சட்டத் தில். ஏன் அது செல்லும் என்றால், மரணம் அடையும் தருவாயில், பொய் சொல்லமாட்டார்கள் என்பதற்காகத் தான்.


‘‘நாங்கள் சொல்வது மரண வாக்குமூலம் தான், உண்மையைத்தான் பேசுவோம்!''


‘‘நாங்கள் சொல்வது மரண வாக்குமூலம்தான், உண்மையைத்தான் பேசுவோம்'' என்று கூட்டத்தில் சொன்னார்.


"நான் பொய் பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனென்றால், உண்மையைச் சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லை. பிறகு ஏன் நான் பொய்ச் சொல்லப் போகிறேன்" என்று அழகாக எடுத்துச் சொன்னார்.


அவர் தன்னுடைய கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதற்கு அடையாளம், இதைக் கேளுங்கள்.


அய்யா பேசுகிறார், கேட்போம்!


‘‘எனக்கு உண்மையின்மீது மட்டும் மிகப் பற்று உண்டு. ஒழுக்கத்திற்கே மதிப்புக் கொடுப்பவன். ஒழுக்கத்திற்கு மரியாதை கொடுக்க நான் தவறுவதில்லை. இன்றைக்கு இல்லையானாலும், என்றைக்காவது உண்மையின் மேன் மையை மக்கள் உணரத்தான் போகிறார்கள்.''


ஒரு சமுதாயப் புரட்சியாளர், பலத்த எதிர்ப்பைச் சந்திக்கின்ற நேரத்தில்கூட, தன்னுடைய கருத்தை ஓர் இம்மியளவுகூட, ஓர் எள்மூக்கு முனையளவிற்குக்கூட மாற்றிக் கொள்ளாத ஒரு தலைவர் சொல்கிறார்.


‘‘என்றைக்காவது உண்மையின் மேன்மையை மக்கள் உணரத்தான் போகிறார்கள். எனவே, என்னைப் பொறுத்த மட்டிலே நான் ஒழுக்கத்தோடு நடந்தால்தான், உண் மையை ஒளிக்காமல், எதையும் நேர்மையுடன் கடைபிடித் தால், அதற்குத் தனி சக்தி உண்டு என்று நம்பிக்கை உள்ளவன்.''


இந்த இயக்கம் ஏன் வெற்றி பெறும்? இந்த இயக்கம் ஏன் தோல்வி அடையாது? என்று உறுதியாகச் சொல்கிறார். ஏனென்றால், அதனுடைய அஸ்திவாரம் அவ்வளவு பலமானது. அந்த அஸ்திவாரம் எதன்மீது கட்டப்பட்டது - உண்மையின்மீது கட்டப்பட்டது - நேர்மையின்மீது கட்டப்பட்ட உழைப்பு அது. ஆகவே, எதிர்நீச்சல் அடிப்பது என்பது எங்களுக்குச் சாதாரணமான ஒரு வேலை.


‘‘எதையும் நேர்மையுடன் கடைபிடித்தால், அதற்குத் தனி சக்தி உண்டு. நான், என்னுடைய மனதில் தோன்றி யதை, யாருடைய தயவு தாட்சண்யத்திற்கும் பயப்பட்டு, கூறுகிறவன் அல்லன். எது உண்மை என்று தோன்றுகிறதே, அவைகளை மறைக்காமல், அப்படியே வெளியிட்டு விடுவேன். என் நோக்கங்கள் பல பேருக்கு இடையூறாக இருக்கலாம்; பல பேர்களின் வாழ்க்கைக்கு வழி என்றே செய்துகொள்ளலாம். அதனால்தான், ஆரம்பத்தில் பெரும் எதிர்ப்புகளெல்லாம் இருந்து, இப்போது ஓரளவிற்கு யாவரும் நம்பி ஆதரவு தரும் நிலைக்கு வந்துவிட்டது.


நான் ஒரு பிறவித் தொண்டன். தொண்டிலேயே எனது உற்சாகமும், ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை என்பது எனக்குத் தெரியாது.''


பெரியாருக்குப் பயமும் இல்லை,


பலகீனமும் இல்லை!


ஒரு மனிதனை விலைக்கு வாங்க, ஒரு மனிதனை வளைக்க, அவன் பாதையிலிருந்து திருப்ப, அவனை அச்சுறுத்த, அவனை சபலத்திற்கு ஆளாக்க, அவனுடைய பலகீனங்கள் பயன்படும். பெரியாருக்கு அந்த பலகீனங்கள் எதுவுமே இல்லை. பயமும் இல்லை, பலகீனமும் கிடையாது.


அதுமட்டுமல்ல நண்பர்களே, 21.10.1934 ஆம் ஆண்டு, அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்து ஓர் ஆண்டு தான் ஆகிறது. தந்தை பெரியார் அவர்கள் எழுதுகிறார்,


‘‘நான் மொட்டை மரம். என்னை மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்குக் கிடையாது. உத்தியோகமோ, பணமோ வயிற்றுச் சோற்றுக்கு வழியோ, ஒரு பெருமையோ, கவுர வமோ எதிர்பார்த்து நான் பொதுவாழ்க்கையில் இறங்க வில்லை. நான் ஆறு, ஏழு முறை ஜெயில் பார்த்தாகிவிட்டது. சிவில், கிரிமினல் இரண்டுமே பார்த்தாகிவிட்டது. பார்ப் பனர்கள் தொல்லைகளையும், அவர்களால் கூடியமட்டில் செய்து பார்த்தாகிவிட்டதை அனுபவித்தும் ஆகிவிட்டது. காடு வா, வா என்கிறது; வீடு போ, போ என்கிறது.


நான் செத்தால், எனக்காக அழுபவர்கள்கூட யாரு மில்லை. நான் ஒற்றை ஆள். நின்றால், நெடுஞ்சுவர்; விழுந்தால் குட்டிச்சுவர்; மூழ்கி வர ஓரளவிற்குச் சரியில்லை. எலக்ஷன் முடிந்த எட்டாம் நாளே, நான் நாளைக்கு அரசு விருந்தாளியாகப் போகப் போகிறேன்.''


தந்தை பெரியார் அவர்கள் அடக்குமுறையை எதிர்த்து துணிச்சலாக சந்தித்தவர்.


தந்தை பெரியார் அவர்கள் ஒரு சிந்தனையாளர், புரட்சியாளர். சுயமரியாதை வாழ்வு என்பது இருக்கிறதே, அது எவ்வளவு பெரிய சுகவாழ்வு. அந்தத் தத்துவத்தை நாம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், பெரியாரை நாம் பின்பற்றக் கூடியவர்களாக இருந்தால், நமக்கு அது எவ்வளவு பயன்படக் கூடியது என்பதை நாம் இங்கே ஆழமாகச் சிந்திக்கவேண்டும்.


இன்னொரு பகுதியில் தந்தை பெரியார் சொல்கிறார்,


‘‘உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை. என்றாலும், எப்பொழுதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும்.''


நான் நேற்றுகூட இளம்பிள்ளைகளுக்குச் சுட்டிக்காட்டி னேன். 50 ஆண்டுகாலமாக நடைபெறும் பெரியாருடைய பத்திரிகைக்கு என்ன பெயர் என்று கேட்டேன். ‘‘உண்மை'' என்று அழகாக பதில் சொன்னார்கள்.


‘‘உண்மை விளக்க அச்சகம்''


பெரியார் ஆரம்பித்த அச்சகத்திற்கு என்ன பெயர் என்றால், ‘‘உண்மை விளக்க அச்சகம்'' என்றுதான்.


‘‘உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை. என்றாலும், எப்பொழுதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு இருப்பதுபோலவே பெரும் பாலான மக்கள் என்றென்றைக்கும் அறிவீனர்களாகவும், முட்டாள்களாகவும், உண்மைக்கு மதிப்புக் கொடுக்காமல் இருப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று கூற முடியாது.''


அறிவு வரும், இருட்டு விலகும்; இரவு முடியும்; பொழுது விடியும் என்பதுதான் மிக முக்கியம்.


‘“ஆதலால், உண்மை வெளிப்பட்டு, அதுதான் அதிக நாள் நீடிக்கும். இன்றைக்குள்ள பொய்யும், புரட்டும், அதற்கு மதிப்புக் கொடுக்கும் அறியாமைத் தன்மையும், துரோகத்தால், நன்றி மறத்தலால் பிழைக்கும் தன்மையும் அதிக நாள் நீடிக்காது.''


இதுதான் தந்தை பெரியாருடைய தத்துவம்.


என்னுடைய பணியை


நான் செயதுகொண்டுதான் இருக்கிறேன்


இன்னொரு இடத்தில் தந்தை பெரியார் சொல்கிறார்,


‘‘நான் என்னையே நம்பி இருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என் பதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன். வருகிறவர் களையும் வரவேற்க மாட்டேன்; போகிறவர்களை வழிய னுப்புவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பல பேர் என்னுடைய தலைமையைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று என் காதுக்கு வருகிறது. அதைப்பற்றி நான் கவலைப்பட வில்லை. என்னுடைய பணியை நான் செயதுகொண்டுதான் இருக்கிறேன்" என்றார்.


இந்தக் காலகட்டத்தில், எதிர்ப்பு என்பதைப்பற்றி சொல் கிறேன். எதிர்ப்புகளில் இரண்டு வகை. இன எதிரிகளின் எதிர்ப்பு; இன்னொன்று அரசாங்கத்தினுடைய எதிர்ப்பு.


பெரியாருடைய எதிர்ப்பில்,


அவர் மிகவும் கவலைப்படுவது...


அரசாங்க எதிர்ப்பில் மிகவும் முக்கியமானது, இயக் கத்தை நேரிடையாகப் பாதிக்கக்கூடியது என்னவென்றால், பெரியாருடைய எதிர்ப்பில், அவர் மிகவும் கவலைப்படுவது என்னவென்றால், அவருடைய ஏடுகள் - ‘குடிஅரசு,  ‘விடுதலை' இவை இரண்டும் பெரிய ஆயுதங்கள். அந்த ஆயுதங்களின்மீது அரசாங்கத்தில் வழக்குப் போடு கிறார்கள். ஜாமீன் கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள். யாருடைய பெயரில் பத்திரிகை இருக்கிறதோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். கண்ணம்மாள்மீது வழக்கு; கட்டுரை எழுதியதற்காக ஜீவானந்தம் மீது வழக்கு. பெரியார்மீது 124-ஏ என்று சொல்லக்கூடிய ராஜ துவேஷ வழக்கு. குடிஅரசுப் பதிப்பாளர் என்ற முறையில் வழக்கு.


இந்தி எதிர்ப்புக் கட்டுரை எழுதியதற்காக மூன்று வழக்குகள் போடப்பட்டன. ஜாமீன் தொகையாக 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும் என்ற நிலை.


பெரியார் சந்தித்த எதிர்ப்பு என்பது இருக்கிறதே, அவை சாதாரணமான எதிர்ப்புகள் அல்ல.


ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இந்தி எதிர்ப்பில் அய்யா அவர்களைத் தண்டிக் கிறார்கள். அதைப்பற்றி அய்யா கவலைப்படவில்லை.


என்ன செய்தால், தந்தை பெரியாரை அடக்கலாம் என்று நினைத்து, அவர் நடத்துகின்ற பத்திரிகைகளின்மீது கை வைக்கலாம் என்று நினைத்தார்கள். பத்திரிகைகளை நடத்தவிடாமல் செய்யவேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில், மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்று சொன்னால்,


‘‘மூன்றாம் மாதம் ஆரம்பம்!''


1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தந்தை பெரியார் அவர்கள் மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருக்கிறார்.


1938 டிசம்பர் 6 ஆம் தேதி அய்யா தண்டிக்கப்படுகிறார். ஒவ்வொரு 6 ஆம் தேதி அன்றும் கூட்டம் போடுகிறார்கள். (பெரியார் சிறையில் இருக்கும் போது) ‘‘மூன்றாம் மாதம் ஆரம்பம்'' என்ற தலைப்பில் ‘குடிஅரசு' இதழில் ஒரு தலையங்கம் எழுதுகிறார்கள்.


எதிர்நீச்சல் அடித்த பெரியார் அவர்கள், தன்னைப்பற்றி கவலைப்படவில்லை. தன்னுடைய உடல்நலத்தைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இயக்கத்தைப்பற்றி கவலைப்பட்டார். இயக்கப் பிரச்சாரம் குன்றாமல், குறை யாமல் வேகமாக நடைபெறவேண்டும் என்பதைப்பற்றிக் கவலைப்பட்டார்.


அதை அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடுகிறார்கள்:


‘‘இந்தி எதிர்ப்பு இயக்கம் தோல்வியுற்றால், இன்னும் குறைந்தபட்சம் 200 ஆண்டுகாலம் தமிழர்கள் தலைநிமிர முடியாதென்பது அவருடைய திடமான அபிப்பிராயம். இந்திப் போர் வெற்றியிலேயே தமிழர்களுடைய எதிர்கால வாழ்வு அடங்கியிருக்கிறது என்பது அவருடைய உறுதி யான நம்பிக்கை".


‘விடுதலை'யும், ‘குடிஅரசும்' பெரியாரின் இரு கண்கள்; அம்மட்டோ, உயிர்நாடி என்றாலும் மிகையாகாது. தமிழர் இயக்க வெற்றிக்கு ‘விடுதலை'யும், ‘குடிஅரசும்' இன்றிமை யாப் போர்க் கருவிகளாகும். ஆகவே, அவ்விரு பத்திரிகை களும் செவ்வனே நடைபெறுவதற்கு தேவையான உதவி கள் செய்யவேண்டியது தமிழ் மக்களின் நீங்காத கடமை.


காங்கிரஸ் சர்க்காரால் அவ்விரு பத்திரிகைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் இடையூறுகள் சொல்லும் தரத்தக்கன வல்ல. 3 ஆயிரம் ரூபாய் ஜாமீன் கட்டி, இரு பத்திரிகைகளும் நடைபெறுகின்றன. ராஜத் துரோகச் சட்டத்தின்படியும் (124-ஏ), வகுப்பு துவேஷ சட்டத்தின்படியும் (153-ஏ) போடப்பட்ட வழக்குகளில், ‘விடுதலை'யின்மீது போடப்பட்ட ராஜ துரோகக் குற்றம் தள்ளுபடியாகிவிட்டது. வகுப்பு துவேஷ குற்றத்திற்காக அளிக்கப்பட்ட தண்டனைமீது சென்னை அய்க்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருக்கிறது'' என்று அதில் குறிப்பிடுகிறார்.


பெரியார் அவர்கள் சிறைச்சாலைக்குப் போவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்ப தற்கு அடையாளமாக இங்கே ஒரு செய்தியை உங்களுக் குச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.


தனிப்பட்ட முறையில் பெரியார் அவர்கள்மீது கூட்டங் களில் நடத்தப்பட்ட எதிர்ப்புகள்பற்றியெல்லாம் உங்களுக் கெல்லாம் தெரியும். உதாரணமாக, கடலூரில் அவர்மீது செருப்பு போட்டார்கள்; செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைத்தது என்பதும் உங்களுக்குத் தெரியும்.


சிவகங்கையில், தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் திறந்த காரில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற நேரத்தில், அன்றைய காங்கிரஸ்காரர்கள், பழைய செருப்புகளைத் தோரணங்களாகக் கட்டியிருந்தார்கள். இதைப்பார்த்த கழகத் தோழர்கள் ஆத்திரமடைந்து அதைக் கழற்றி எறிவதற்காக ஓடினார்கள்.


உடனே அய்யா அவர்களை அழைத்து, அதைக் கழற்றவேண்டாம்; நான் கூட்டத்தில் பேசிக் கொள்கிறேன் என்றார்.


- தொடரும்


No comments:

Post a Comment