பிற இதழிலிருந்து...
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக?
செல்வ புவியரசன்
பெரிய ஒரு அடி விழுந்திருக்கிறது பிற்படுத்தப் பட்டோருக்கு! ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிறு வனங்களில் ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான’ இடஒதுக்கீட்டை ரூ.8 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட உயர் வருமானப் பிரிவினர் தற்போது பெற முடியாது. இந்த வருமான வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உயர் வருமானப் பிரிவினருக்கான வரம்பு உயர்த்தப்படுவதால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மேலும் பலருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறும் தகுதி கிடைக்கலாம் என்று தோன்றலாம். ஆனால், உயர் வருமானப் பிரிவினரைத் தீர்மானிப்பதற்கான குடும்ப வருமானத்தில் ஊதியத்தை யும் உள்ளடக்கப்போவதாகக் கூறுகிறது ஒன்றிய அர சின் அறிவிப்பு.
இந்தப் புதிய நடைமுறையைப் புகுத்துவதன் வாயி லாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடம் இட ஒதுக் கீட்டுக்கான தகுதி பரவலாகப்போவதில்லை, மாறாகச் சுருக்கப்படுகிறது. குறிப்பாக, கீழ் மத்திய தர வர்க்கத் தினர் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். பெற்றோர் அரசில் உயர் பதவிகளை வகிக்கிறார்களா என்ற அடிப் படையில் நிர்ணயிக்கப்பட்டுவந்த உயர் வருமானப் பிரிவினர் என்ற அளவுகோல், இப்போது அவர்கள் ஊதியத்தை மட்டுமே கணக்கில் கொள்வதாக மாறினால், பெற்றோர் இருவரும் மாத ஊதியம் பெறும் சாதாரணப் பணியாளர்களாக இருந்தாலே அவர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீட்டு வாய்ப்பை இல்லா மலாக்கிவிடும்.
இந்திரா சஹானி வழக்கு
மண்டல் கமிஷன் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் தான் ‘க்ரீமிலேயர்’ என்று அழைக்கப்படும் உயர் வரு மான வகுப்பினர் எனும் அளவுகோலை உருவாக்கி, அவர்களை இடஒதுக்கீட்டுக்கு வெளியே நிறுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. 1992இல் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த அந்தத் தீர்ப்பின் அடிப் படையில், அடுத்த ஆண்டில் விதிமுறைகள் உருவாக் கப்பட்டன. விளைவாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர் வருமானம் கொண்டவர்கள் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற முடியாது என்ற நிலை உருவானது. ஊதியம் மற்றும் விவசாய வருமானம் நீங்கலாக ஆண்டொன்றுக்கு ரூ.1 லட்சம் குடும்ப வருமானம் கொண்டவர்கள் உயர் வருமான வகுப்பினர் என்று தீர்மானிக்கப்பட்டார்கள். இந்த வருமான அளவானது விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு அவ்வப்போது உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.8 லட்சம் என்ற அளவில் உள்ளது. பாஜக அரசு இதை ரூ.12 லட்சமாக உயர்த்தவுள்ளது; ஆனால், கூடவே ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து, குடும்ப வருமானத்தில் தனிநபர் ஊதியத்தையும் அது சேர்க்க விரும்புகிறது. இப்படிச் செய்யும்போது, சாதாரண குடும்பங்கள்கூட இடஒதுக்கீட்டுக்கு வெளியே தள்ளப் பட்டுவிடும்.
அரசால் நியமிக்கப்பட்ட ஷர்மா கமிட்டியின் அறிக் கையின்படியே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும், வருமானத்தைக் கணக்கிடுவதை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறை என்றும் இந்தத் திருத்தத்துக்குக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தத் திருத்தங்களுக்குத் தொடக்கத்தில் கடுமையான ஆட்சேபணையைத் தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான ஆணையம் தெரிவித்துவந்தது; ஆனால், இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆணையத்தில் உள்ளவர்களுக்கு பாஜக கொடுத்த அழுத்தமும் நிர்ப் பந்தமுமே இதற்குக் காரணம் என்று செய்திகள் வெளி யாகியுள்ளன.
பிரித்தாளும் கொள்கை
உயர் வருமான வகுப்பினர் யார் என்பதைத் தீர்மா னிப்பதற்குப் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்ற அறிவிப்பின் பின்னணியில் பிஹாரில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே ராஷ்ட்ரிய ஜனதா தளத் தின் முக்கிய வாக்கு வங்கி என்னும் நிலையில், உயர் வருமான வகுப்பினருக்கான வரம்பை உயர்த்துவது, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் ஆதரவைப் பெற்றுத்தரும் என்பது பாஜகவின் தேர்தல் கணக்கு.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே அரசியல் ரீதி யான ஒருங்கிணைப்பைத் தகர்த்து, அவர்களிடையே பொருளாதார நோக்கத்தில் ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாட்டை வளர்க்கும் நோக்கம் இதன் பின்ன ணியில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உயர் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ள மிகச் சிலரே பிற்பட்ட வகுப்பினரிடையே பொதுக் கருத்தை உருவாக்குபவர்களாக இருந்துவருகிறார்கள். மாதாந்திர ஊதியத்தைக் காரணம் காட்டி, அவர்களைச் சமூகத்திட மிருந்து பிரிக்கிற திட்டமாகத்தான் இந்தப் புதிய நடை முறை உருவாக்கத் திட்டமிடுகிறது. மேலும், மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் வாங்கும் ஒரு அய்ஏஎஸ் அதிகாரியின் குடும்பத்தையும், சென்னை போன்ற நகரில் முதல் தலைமுறைப் பின்னணியில் தனியார் நிறுவன ஊழியர் களாகக் கணவன் - மனைவி இருவருமாகச் சேர்ந்து மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் ஒரு குடும்பத்தையும் ஒரே வருமானம் என்ற அடிப்படையில் எப்படி ஒரே தட்டில் நிறுத்த முடியும்? இருவரின் குழந்தைகளுக்கு மான வாய்ப்பை எப்படி ஒருசேர நிராகரிக்க முடியும்?
சலுகையல்ல உரிமை
எல்லாவற்றுக்கும் மேல் இடஒதுக்கீடு என்பது சமூக நிலையிலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கானது என்றே இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்புச் சட்டத்தின் எந்தக் கூறிலும் பொருளாதார நிலை அதற்கான தகுதி என்று கூறப்படவில்லை. ஆனால், மத்தியில் தற்போது ஆளும் அரசு இடஒதுக்கீட்டைப் பொருளாதாரத்தின் அடிப்படையிலானதாக மாற்றியமைக்கும் முயற்சியைத் தான் தொடர்ந்து செய்துவருகிறது. முற்பட்ட வகுப்பின ருக்குப் பொருளாதார இடஒதுக்கீடு வழங்க முடி வெடுத்த ஒன்றிய அரசு, மருத்துவ மேற்படிப்புகளில் வழக்கு விசாரணையில் இருப்பதைக் காரணம் காட்டி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைத் தவிர்த்து வருகிறது என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
சமூக, பொருளாதார அடிப்படையிலான ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டு வாய்ப்புகளை உயர் வருமான வகுப் பினர் என்ற காரணத்தைச் சொல்லிப் பறிப்பது நியாய மானது அல்ல. தற்போது ஒன்றிய அரசின் 89 துறைச் செயலர்களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்தவர் இல்லை. மத்திய அரசின் உயர் பதவிகளில் இன்னமும்கூட பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படு வதில்லை. இப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அத்தகைய உயர் பதவிகளை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளை ஆரம்ப நிலையிலேயே இழக்கப் போகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக, உயர் வருமானப் பிரிவி னர் என்ற வரம்பின் காரணமாக அய்ஏஎஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு வாய்ப்பை இழக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கவலை கொள்ள வேண்டியது. இந்நிலையில், வருமானத்தைக் கணக்கிடும் முறையை மாற்றியமைக்கும் ஒன்றிய அர சின் முயற்சி, சமூக அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கு கிறது. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்ட மல்ல, அது உரிமை மறுக்கப்பட்ட சமூகங்களுக்கான மறுவாய்ப்பு.
- நன்றி: 'இந்து தமிழ் திசை', 10.7.2020
No comments:
Post a Comment