காணொலியில் தமிழர் தலைவர் "மதுரையைக் கண்டு பயந்தோமா - துணிவும், வீரமும் கொண்டு எழுந்தோமா?"
* கலி. பூங்குன்றன்
"ஒப்பற்ற தலைமை" எனும் தலைப்பின் மூன்றாம் சொற்பொழிவைக் காணொலி மூலம் நேற்று மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் உரை 75 மணித் துளிகள்.
அவர் உரை: தந்தை பெரியார் சந்தித்த எதிர்ப்புகள்-அவர் நடத்திய மாநாடுகள் - அன்றைய காங்கிரஸ் காரர்கள் காலிகளை ஏவிவிட்டு நடத்திய வன்முறைகள் - அந்த நேரத்திலும் அவரின் நிதானம் இழக்காத தலைமை- தொண்டர்களை வழி நடத்திய பாங்கு - எதிர்ப்புவரினும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பாங்கு - ஏற்ற தண்டனைகள்- சிறைச்சாலையில் அனுபவித்த துன்பங்கள் - எதிர்ப்பு வந்தால்தான் இயக்கமும், கொள்கையும் வளரும் என்ற உண்மையை நடை முறையில் நடத்திக் காட்டிய துணிவு - இவைதான் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேசு பொருளாக கருத்து மய்யமாகச் சுழன்றது.
I. எதிர்ப்புகள் - எதிர் நீச்சல்கள்
சின்னாளப்பட்டி பொதுக்கூட்டம் - கூட்டம் தொடக்கம் முதல் கல்லெறிகள் - கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்ற நோக்கத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் குறிப்பிட்டார்.
மிகப் பெரிய பொதுக்கூட்டம் அது, பெண்களே 600 பேருக்கு மேல் கூடியிருந்தனர்.
கல்லெறிந்தாலும் கவலைப்படாமல் பேசிக் கொண்டே இருந்தார் தந்தை பெரியார்; சால்வையை எடுத்து முண்டாசு கட்டிக் கொண்டார், கூட்டத்துக்கு வந்தவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளச் சொன்னார்.
கலவரம் கட்டுக்கடங்காத நிலையில், காவல் துறையினர் மேடைக்கு வந்து தந்தை பெரியாரிடம் கெஞ்சினார்கள் வணங்கிக் கேட்டுக் கொண்டனர். இது நடந்தது 1946ஆம் ஆண்டு என்றால் இதற்கு முதல் ஆண்டு 22-7-1945இல் புதுச்சேரி மாநாட்டில் கலவரம். காலை மாநாடு சிறப்பாகவே நடைபெற்றது. பகல் 12 மணி வரை பிரச்சினையில்லை. 12 மணி அளவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தை பாவலர் பாலசுந்தரம் திறந்து வைத்து புரட்சிக் கவிஞரின் சிறப்புகளை அவர் படைப்புகளின் மேன்மையை விளக்கிப் பேசும்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. புரட்சிக் கவிஞரைப் பிடிக்காத சில உள்ளூர்க்காரர்கள் கலவரத்தை ஆரம்பித்தனர்.
(காலையில் மிகப் பெரிய ஊர்வலம் 3000 பேர் கலந்து கொண்ட எழுச்சி - அப்பொழுதெல்லாம் எவ்விதப் பிரச்சினையும் இல்லை)
கலவரம் கட்டுக்கடங்காத நிலையில் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து அனுமதி ரத்து செய்யப் படுவதாகக் கூறினர். புதுச்சேரியின் ஆட்சி நிர்வாகம் வேறுபட்டது. அங்குள்ள சட்டத்திட்டத்தின்படி காவல் துறை அப்படி உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உண்டு.
நிகழ்ச்சி முடிந்து புரட்சிக்கவிஞர் ரிக்ஷாவில் சென்ற போது அவரை வழிமறித்துத் தாக்கினர். இளைஞரான திருவாரூர் மு. கருணாநிதி (கலைஞர்) சிக்கிக் கொண்டார் காலிகளிடத்தில். அடித்துத் துவைத்துவிட்டனர்.
வரலாற்றில் சுழற்சியைக் கவனியுங்கள். அதே புதுச்சேரியில் தந்தை பெரியாரின் சிலையை - அன்று காலிகளால் தாக்கப்பட்ட கலைஞர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்து திறந்து வைத்தார்.
அன்று காலிகளால் தாக்கப்பட்ட புரட்சிக் கவிஞரின் இல்லம் இப்பொழுது நினைவில்லமாக அரசால் அறி விக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படுகிறது.
அந்தப் புதுச்சேரியில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி யில் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்றது.
ஒரு கட்டத்தில் எதிர்ப்புகளைக் கடந்து வந்த இயக்கம் இன்னொரு கட்டத்தில் வெற்றிக் கொடியை நாட்டி வந்திருக்கிறது.
மதுரைக் கருப்புச் சட்டை மாநாடு
1946 மே 11,12 ஆகிய நாட்களில் மதுரையில் முதலாவது மாகாண கருஞ்சட்டைப் படை மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. வைகை ஆற்று மணலில் மிகப் பெரிய பந்தலில் அது நடைபெற்றது. 20 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்களின் அணிவகுப்பு - நடிகவேள் எம்.ஆர். இராதாவும், பாவலர் பாலசுந்தரமும் இராணுவக் கருப்புடையில் குதிரையில் அமர்ந்து அணிவகுப்பை வழி நடத்தினார்கள். இரட்டைக் குதிரைச் சாரட்டில் தந்தை பெரியார், அர்ச்சுனன், அறிஞர் அண்ணா முதலிய தலைவர்கள் அமர்ந்து வந்தனர். மாநாட்டுத் தலைவர் தந்தை பெரியார்.
கருஞ்சட்டைக் கடலின் எழுச்சியைக் கண்ட பார்ப்பனர்களுக்குப் பொறுக்குமா? அப்பொழுதெல்லாம் கட்சி ரீதியில் எதிர்ப்பு என்றால் காங்கிரஸ்தான். மதுரையின் பிரபல வக்கீல் பார்ப்பான் வைத்தியநாதய்யர் கூலிகளை ஏற்பாடு செய்து கலவரத்தை மூட்டினார். மதுரை நகரில் தென்பட்ட கருஞ்சட்டை அணிந்த ஆண்களும், பெண்களும் தாக்கப்பட்டார்கள்.
பொதுமக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரத்தைக் கிளப்பி விட்டார்கள். கருஞ்சட்டையினர் மீனாட்சிக் கோயிலுக்குச் சென்ற பெண்களைக் கேலி செய்தார்கள்; கோவிலுக்குள் செருப்புக் காலுடன் சென்றார்கள், கடவுள் சிலைகளைத் தொட்டார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பொதுமக்களையும் தூண்டி விட்டனர். நடிகவேள் எம்.ஆர். இராதா தங்கி இருந்த வீட்டைச் சூழ்ந்து தாக்க ஆரம்பித்தனர்.
போலீஸ்காரர் உதவியுடன் நகருக்குள் சென்று நம் தோழர்களை மீட்டு வரலாம் என்று சென்ற நம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான
ஆ.திராவிடமணி (மற்றொரு பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா) வழிமறித்துத் தாக்கப்பட்டார்.
வன்முறைச் செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. யாரும் பந்தலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று தந்தை பெரியார் கட்டளை யிட்டார்.
காவல்துறையினரும் வந்து சாப்பாட்டுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் - யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். காலிகள் என்ன செய்தார்கள் உணவுக் கடைகளை எல்லாம் அடித்து நொறுக்கினர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, மாநாட்டுப் பந்தலுக்கே தீ வைத்தனர்.
நினைத்துப் பாருங்கள் - இந்த இயக்கம் எப்படி யெல்லாம் எதிர் நீச்சல் போட்டு வீறு கொண்டு எழுந்திருக்கிறது. இது குறித்து Òஎனது மரண சாசனம்" என்ற தலைப்பில் திராவிட நாடு இதழில் அறிஞர் அண்ணா எழுதினார்.
(மதுரைமாநாட்டில் நடைபெற்ற வன்முறைகுறித்து விசாரிக்க அரசால் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்-அவர் ஒரு பார்ப்பனர்- இதனைக் கண்டித்து குடிஅரசு எழுதியது)
பிற்காலத்தில் அதே மதுரையில் தந்தை பெரியார் சிலை கம்பீரமாகத் திறக்கப்பட்டதே! கறுப்புச் சட்டை மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதே! அன்று எரிக்கப் பட்ட கருப்புச் சட்டை மாநாட்டில் பங்கு கொண்ட மதுரை முத்துதான் - அப்பொழுது மேயர் - அய்யா சிலைதிறப்பு விழாவில் பங்கேற்று சங்கநாதம் செய்தாரே - மணலி கந்தசாமி கர்ச்சனை செய்தாரே!
எதிர்ப்பு என்னும் எருவில் வளர்ந்ததுதான் இந்த இயக்கம் என்பதற்கு இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் போதாதா?
மதுரை மாநாடு முடிந்த ஒரு வாரத்திலேயே 1946 மே 18,19 ஆகிய இரு நாள்களிலும் கும்பகோணத்தில் முறையே தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாநாடும், சுயமரியாதை மாநாடும் எழுச்சியுடன் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
II. போராட்டக் களங்களும்-சிறைத் தண்டனைகளும்
தந்தை பெரியார் கண்ட களங்கள் - நடத்திய போராட்டங்கள்- அனுபவித்த தண்டனைகள் வேறு எந்தத் தலைவராலும் சந்தித்திருக்கப்பட முடியாதவை.
காங்கிரசில் இருந்தபோதே - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே இன்னொரு மாநிலத்தில் தாண்டவமாடிய தீண்டாமையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கினாரே!
அங்கு இரண்டு முறை சிறைத் தண்டனை பெற்றார். அதில் திருவாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் அனுபவித்த கொடுமைகளை இன்று நினைத்தால்கூட இரத்தக் கண்ணீர் வரும் (தனியே காண்க).
தந்தை பெரியாரின் நண்பரான சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார், பெரியார் சிறையில் கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
பெரியாரின் சமூக மதிப்பைத் திருவாங்கூர் அரசாங்கம் அறியச் செய்தார். ஆனாலும் அதன் விளைவைப்பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தந்தை பெரியார் திருவாங்கூர் சிறையில் படும் துயரங்கள் குறித்து ராஜாஜி குறிப்பிட்டதாவது,
"தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரகக் கைதியாய் இருக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் உணவு, தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரகச் சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிகிறது. இவ்வ ளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகி இருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வவளத்தில் மகிழ்ச்சிகளையும், பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல - உண்மையிலேயே" என்று தந்தை பெரியார் பற்றி ராஜாஜி குறிப்பிட்டதை (1924) கழகத் தலைவர் எடுத்துச் சொன்ன ஆதாரக் குறிப்பு பலருக்கும் புதிய செய்தியே! (தோழர் பழ.அதியமான் "வைக்கம் போராட்டம்" எனும் நூலிலை அரிய விலை மதிக்கப்பட முடியாத புதையலாக, அரும்பாடுபட்ட உழைப்பால் கொண்டு வந்துள்ளார். அந்நூலில் இதுபோன்ற அரிய தகவல்களை அணி அணியாக, அலை அலையாகக் காணலாம்).
III.1938 இந்தி எதிர்ப்புப் போரும் - தந்தை பெரியாரும்
(1938 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி படம்)
தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வு என்பது பிரச்சாரம், போராட்டம் என்ற இரு அசைவுகளைக் கொண்டது. தத்துவத்தை உருவாக்கியவர் - அதற்கான இயக்கத்தைத் தோற்றுவித்தவர் - தத்துவத்தைப் பிரச்சாரம் செய்தவர் - அதற்காக களங்களை அமைத்தவர் - அந்தக் களங்களில் நேரிடையாகவே ஈடுபட்டு சிறைத் தண்டனைகளைச் சிரித்த முகத்துடன் ஏற்றவர் என்ற எல்லா வகையான பரிமாணங்களைக் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் - கூடுதலாக ஒரு செய்தி. தமக்குப் பிறகும் தம் கொள்கையும், இயக்கமும் உறுதியான கட்டமைப்புடன் செயல்படுவதற்கான தொலைநோக்குப் பார்வையும், செயல் திட்டத்தையும் வகுத்து அதிலும் வெற்றி கண்டவர் என்பதுதான். தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும், மற்ற தத்துவவாதிகளுக்கெல்லாம் இல்லாத செயலாக்கம் கொண்ட தத்துவவாதியாகவும் வரலாற்றில் ஒளி வீசுகின்றார்.
பல்வேறு போராட்டங்களை பெரியார் நடத்தியிருந்தாலும் 1938ஆம் ஆண்டு அவர் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகவும் முக்கியமானது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்படுகிறார் அவர்மீது வழக்குப் பாய்கிறது.
சர். ஏ.டி. பன்னீர் செல்வமும், குமாரராஜா முத்தையா செட்டியாரும் எதிர்த்து வழக்காடியே தீர வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும், வற்புறுத்தியும் தந்தை பெரியார் ஏற்றாரில்லை.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் நோக்கம் தமது கொள்கை ஆகியவற்றை விளக்கும் அறிக்கையோடு தம் கடமை முடிந்து விட்டதாகக் கூறிவிட்டார்.
சென்னை ஜார்ஜ் டவுன் போலீசார் கோர்ட்டில் நீதிபதி முன் தந்தை பெரியார் என்ன சொன்னார்?
"இந்தக் கோர்ட் காங்கிரஸ் மந்திரியார் நிர்வாகத்திற்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன (மாதவராவ்) வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லையென்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டுமென்றும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டும் கனம் முதல் மந்திரியார் கடற்கரைக் கூட்டத்திலே பேசியிருக்கிறார். எனவே, இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது எனது கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்களில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக் காரத்தனம். இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் (Demonstration) ஆகச் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, அதில் எவ்வித நிர்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லையென்று தெரிவித்துக் கொள்ளுகிறேன் - இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்தின் கொள்கையில் சட்டம் மீறக் கூடாதென்பது முக்கிய காரியமாகும். நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும் - எதுவும் சட்டப்படி, சட்டத்திற்கு உட்பட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அக்கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய பேச்சு பூராவையும் படித்துப் பார்த்தால் இது விளங்கும்.
ஆகவே, கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனையைக் கொடுக்க முடியுமோ, அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்புக் கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்."
இவ்வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டில் 4ஆவது நீதிபதி திரு. மாதவராவ் அவர்கள் முன்னிலையில் நடந்தது. நீதிபதி வழக்கில் முடிவு கூறினார். “இவர் செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை. இரண்டு தண்டனைகளையும் இரண்டு தனித்தனி காலத்தில் அடைய வேண்டும்" இதுவே தீர்ப்பின் கருத்து. பின்னர், அரசாங்கத்தாரால் கடுங்காவல் வெறுங்காவலாக மாற்றப்பட்டது.
ஏ.டி. பன்னீர்செல்வம் போன்றவர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர்.
தந்தை பெரியாரின் நண்பர் திரு.வி.க. அவர்கள் அப்பொழுது 'நவசக்தி' ஏட்டில் எழுதியதைப் படிப்போர் யாவராயினும் அவர்களை நெக்குருகச் செய்யும். (தனியே காண்க).
தந்தை பெரியார் சிறைப்பட்டார் என்று கேட்ட தமிழ்நாட்டு மக்கள் ஆறாத் துயருற்றனர். அவர் சிறை சென்ற ஒவ்வொரு ஆறாம் தேதியும் கண்டனக் கூட்டங்களை நடத்தினர்.
சிறையில் தந்தை பெரியார் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அதிலும் பெல்லாரி சிறை என்பது கடும் வெப்பம் நிறைந்த ஒன்று. தனது டைரியில் தந்தை பெரியார் எழுதி வைத்திருந்ததைத் தமிழர் தலைவர் ஆசிரியர் படித்தபோது கேட்டோர் மனம் சங்கடப்பட்டது.
உடல்வலி, இளைப்பு, மயக்கம், களைப்பு, வாய்க்கசப்பு, வெளிக்குப் போகவில்லை, பல்தொந்திரவு, மார்பு படப்படப்பு, வாந்தி, தூக்கமின்மை என்று எழுதியுள்ளார். (இவற்றைவிட ஒருவருக்கு வேறு எந்த வகையில்தான் துன்பமும், தொல்லையும் ஏற்பட முடியும்?).
சர். ஏ.டி. பன்னீர்செல்வமும், கி.ஆ.பெ. விசுவநாதமும், பெல்லாரி சிறையில் தந்தை பெரியாரைப் பார்க்கச் சென்றபோது கொண்டு சென்ற திராட்சையைக்கூட சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம். என்னே கொடுமை!
தண்டனை பெற்றவர்களைத் தண்டிப்பதற்காகவே உள்ள சிறைதான் பெல்லாரி ஜெயில் என்று தன்னை சந்திக்க வந்தவர்களிடம் தந்தை பெரியார் கூறியிருக்கிறார் என்றால் தெரிந்து கொள்ளலாமே!
தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக திருவாங்கூர் சிறையில் இருந்தபோது அனுபவித்த கஷ்டங்களுக்காக எந்த ராஜாஜி 1924இல் வருந்தி எழுதினாரோ, (அப்பொழுது தந்தைபெரியாருக்கு வயது 45) அறிக்கை வெளியிட்டாரோ அதே ராஜாஜி முதல் அமைச்சராக இருந்தபோது தன் அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு 15 ஆண்டுகளுக்கும் பிறகு - பெரியாருக்கு வயது 60 அய் நெருங்கும் நிலையில் இப்படி கொடுமையான பெல்லாரி சிறையில் தள்ளி மகிழ்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று கழகத் தலைவர் ஒப்பிட்டுச் சொன்னார்.
தந்தை பெரியார் எந்தக் கால கட்டத்திலும் இலட்சியத்தை ஈட்டுவதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பவர் என்பதையும், இன எதிரியான ராஜாஜியோ (நண்பர் என்று சொல்லிக் கொண்டே) தந்தை பெரியாரைப் பழி தீர்க்கிறார் என்பதும் இதன்மூலம் விளங்கவில்லையா?
உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் ஏதாவது நேர்ந்தால் விளைவு மோசமாகும் என்று தெரிந்த மாத்திரத்தில் சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பெரியார் என்பதும், உதவிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதும் எந்த வகையைச் சேர்ந்தது?
190 பவுண்டு எடையோடு சிறை சென்ற பெரியார் 166 பவுண்டு எடையோடு 167 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு, கடைசியாக கோவை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தந்தை பெரியாருக்கு இரவு நேரத்திலும் மிகப் பெரிய வரவேற்பு காத்திருந்தது (1939 மே 22). அப்பொழுதுகூட தந்தை பெரியார் என்ன சொன்னார்?
"மீண்டும் சிறை செல்வதற்காகவே நான் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன் - நான் இங்கு எதைப் பார்க்கிறேன்? என்னுடன் சிறை சென்ற தமிழர்களைப் பார்க்க முடியவில்லையே. நான் சிறையிலேயே இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன். அப்படி நான் இருந்திருப்பேனேயானால் நமது இயக்கம் மிகவும் ஓங்கி உச்சநிலை அடைய வழி ஏற்பட்டிருக்கும்" என்றார்.
சிறைப்பறவை என்று திரு.வி.க.வும், சிறைக்கஞ்சா சிங்கம் என்று தமிழர்களும் தந்தை பெரியாரைப் போற்றுவதற்கான பொருள் இங்கே விளங்கவில்லையா!
தமிழர் தலைவரின் காணொலி கருத்துரை சில முக்கிய கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக கழகத்தினருக்கு கழகப் பொறுப்பாளர்களுக்குக் கையேடாகும்.
1) கழகத்திற்கு எதிர்ப்பு வரும், தொல்லைகள் பல வரும், கலகங்களை எதிர்நோக்க நேரிடும்; அந்தக் கால கட்டத்தில் நிதானத்தை இழக்கக் கூடாது - பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும், கழகத்தவர்களை கட்டுப்படுத்திட வேண்டும்.
எதிர்ப்பு வளர வளர நம் இயக்கம் பலம் பெறும். கொள்கை வளரும்.
2) இலட்சியத்திற்காக எந்த விலையையும் கொடுக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் - தந்தை பெரியார் அவ்வகையில் வாழ்ந்து காட்டி- நடந்துகாட்டி சென்றுள்ளார்.
3) எதிர்ப்புகளையும், தொல்லைகளையும் சந்திக்க நேர்ந்தால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
மதுரை கருப்புச்சட்டை மாகாண மாநாட்டுப் பந்தல் எதிரிகளால் தீக்கிரையாக்கப்பட்டபோது அந்தச் சூழலில், கால கட்டத்தில் தந்தை பெரியார் என்ன சொன்னார் - என்ன எழுதினார்.
"மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம்தான் நாம் மனிதத்தன்மையைப் பெற்று திராவிடத்தைப் பெறப் போகிறோம். ஆகவே, நாம் செய்ய வேண்டியது யாவரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும், எங்கும் கருப்புக் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும், உடையிலும் கருப்புக் கொடி சின்னம் தொங்க வேண்டும். இந்தக் காலம்தான் நாம் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும், வீரமும், கொண்டோமா என்பதை உறுதிப்படுத்தும்" என்று தந்தை பெரியார் கொடுத்த அறிக்கைதான் - சமூகப் புரட்சி இயக்கமான நமது கழகத்துக்கு நமக்குச் சரியான வழிகாட்டும் கலங்கரை விளக்காகும்.
தமிழர் தலைவரின் காணொலி உரை இத்தகு அரும்பெரும் கருத்துகளையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட உன்னத உரையாகும்.
அவர்தான் அன்னையார்!
தந்தை பெரியார் அவர் களுக்கு வயிற்றுவலி நீண்ட காலமாக இருந்து வந்த ஒன்று. அது அவரைப் பல தொல்லைகளுக்கு ஆளாக் கியது. அதுவும் பெல்லாரி சிறைவாசம் அவருக்கு மேலும் தொல்லையாயிற்று. அது மாதிரியான ஒரு கால கட்டத்தில்தான் அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தார்.
அவரின் திருமணத்தைக் காரணம் காட்டி, பிரிந்து சென்ற அண்ணா அவர்களே, தந்தை பெரியார் இவ்வளவுக் காலம் வாழ்வதற்கே காரணம் அம்மா தான் என்று பிற்காலத்தில் மனந்திறந்து பாராட்டியதை இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும்.
அம்மா அவர்களின் சாதனையில் மற்றொன்று முக்கியமானது தந்தை பெரியார் இயக்கப் பிரச்சாரத் துக்காக ஏராளமான அளவு நூல்களை அச்சிட்டு மூட்டைமூட்டையாகக் கட்டி வைத்திருந்தார்.
காங்கிரசில் இருந்தபோது, தந்தை பெரியார் எப்படி கதர் மூட்டையைச் சுமந்து சென்று ஊர் ஊராக விற்றாரோ, அதேபோல்தான், தந்தைபெரியார் கட்டி வைத்த அந்தப் புத்தக மூட்டைகளை மக்களிடம் கொண்டு சென்று விற்றவர் அம்மா அவர்களே! பொதுக்கூட்டங்களில் இயக்க நூல்களை விற்பது என்ற முறையை, முறையாக உண்டாக்கியதும், தொடக்கத்தினைக் கொடுத்ததும் அன்னை மணியம்மையாரே!
- காணொலியில் கழகத் தலைவர்
திருவாங்கூர் சிறைச்சாலையில் பெரியார்
வைக்கம் போராட்டத்தில் சிறை பிடிக்கப்பட்டவர்களில் பாரிஸ்டர் கேசவமேனன் ஒருவராவார். தமது சிறைவாசம் எப்படி இருந்தது என்பதுபற்றி எழுதுகிறார்.
"சுற்றிலும் தாழ்வரையுள்ள விசாலமானதொரு அறை யில் மாதவனுக்கும், எனக்கும் படுத்துறங்கக் கட்டில்கள் போட்டிருந்தார்கள். குளியலறையும், எழுதுவதற்கும், படிப்பதற்கும் வசதியுள்ள இடமும், நடப்பதற்கு முற்றமும் இருந்தன. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற விருப்பமான உணவு கிடைத்தது. எங்களுக்கு வேண்டியதை அறிந்து உடனுக் குடன் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் கருத்தாக இருந் தனர். செய்திப்பத்திரிகைகளும், புத்தகங்களும் எங்களுக் குக் கொண்டு வந்து தந்தார்கள். உறவினருக்கும், நண் பர்களுக்கும் கடிதங்கள் எழுதவும், அவர்களிடமிருந்து வரும் பதில் கடிதங்களைப் பெறுவதற்கும் அனுமதியளித் தனர். அன்றாடம் குறித்த நேரத்தில் எங்களைக் காண வருபவர்களுடன் பேசுவதற்கும் தடை ஏதுமில்லை. சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாது என்ற ஒன்றைத் தவிர மற்ற வாழ்க்கை வசதிகளைப் பொருத்து எங்களுக்குத் தேவைப்பட்ட எல்லாம் எளிதாகவே கிடைத்தன.” என்று கூறுகிறார் பாரிஸ்டர் கேசவ மேனன்.
அதே கே.பி. கேசவமேனன் திருவாங்கூர் சிறைச் சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட்டார்? அவர் அனுபவித்த கொடுமை என்ன என்பதையும் எழுதியுள்ளார்.
"கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்கு கின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை, இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலை காரர்களோடும், கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு 'ஜாதி இந்து' என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட் சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று. உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநி லத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண் டும் என்பதற்காக, தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலை வர் வந்தாரே, அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?"
- கே.பி. கேசவமேனன்
(மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108)
பெரியார்பற்றி
திரு.வி.க.வின் எழுத்து சிறைப்பிடிப்பு
சென்னை “நவசக்தி” இதழில் திரு.வி.கலியாண சுந்தரனார் 9-12-1938இல் தீட்டிய தலையங்கம் பல அரிய உண்மைகளை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது.
“6-12-1938-இல் திரு. நாயக்கர் கடுங்காவல் தண்டனை ஏற்று சிறைக்கோட்டம் நண்ணினார். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் திரு.நாயக்கர் சிறை புகுந்த காட்சி அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லார் உள்ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் அய்யமில்லை. முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்! அஃதும் ஓராண்டு! என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் குழைகிறது. திரு. நாயக்கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் மந்திரிப் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர் தம் மனமும் கசிந்தே இருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும்.
நண்பர் நாயக்கருக்கு சிறைவாசம் பழையது; மிகப் பழையது; புதியதன்று. முன்னே அவர் ஒரு ஒத்துழை யாமையில் ஈடுபட்டும் தீண்டாமையை முன்னிட்டும் சமதர் மத்தைக் குறிக்கொண்டும் பலமுறை சிறை சென்றுள்ளனர். இம்முறை அவர் இந்தி எதிர்ப்புக் காரணமாகச் சிறை நுழைந்திருக்கின்றனர். சிறைக்கோட்டம் நாயக்கருக்கு ஒருவிதத் தவக்கோட்டம் ஆயது போலும்!
"சிறைப்பறவை”யாகிய இராமசாமி நாயக்கர் வரலாற்றை விரித்துக்கூற வேண்டுவதில்லை. அவர்தம் வரலாற்றில் அறியக்கிடக்கும் நுட்பங்கள் பல. சிறப்பாகக் குறிக்கத்தக்கன இடையறாச் சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, தாட்சண்யமின்மை, உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்கும் திறன், கரவு சூழ்ச்சியின்மை முதலியன. இவை அவர்தம் வாழ்வாக அரும்பி மலர்ந்து காய்த்துக் கனிந்து நிற்கின்றன. இந் நேர்மைகள் திரு. நாயக்கரை அடிக்கடி சிறைபுகச் செய்கின்றன போலும்!
முதுமைப் பருவத்திலும் திரு. நாயக்கர் தலை சாய்த்துப் படுக்கையில் கிடந்து காலங்கழிந்தாரில்லை. அவர் தமிழ்நாட்டின் நாளா பக்கமும் சுழன்று சுழன்று இரவு பகல் ஓயாது கர்ச்சனை செய்து வந்தார். ஓய்வு என்பதை அறியாது வீர கர்ச்சனை புரிந்துவந்த கிழச்சிங்கம் இப் பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலை நிமிர்ந்து கிடக்கிறது. திரு. நாயக்கர் சிறையில் வதிவதால் அவர்தம் செல்வாக்குக் குறையுமென்று மந்திரிசபை நினைக்குமாயின் அவர் நினைவு, நாளடைவில் கனவாகவே முடியும். திரு. நாயக்கருக்குச் செல்வாக்கு ஓங்கியே நிற்கிறது.
நண்பரே! நாயக்கரே! தள்ளாத வயதில் சிறை புகுந்து இருக்கிறீர்! உம் வயது - உடல்நிலை முதலியவற்றை நினைந்து முதலமைச்சர் உம்மை விடுதலை செய்வாரென்று எதிர்பார்க்கிறோம்"
இதுவே திரு.வி.க.வின் நெகிழ்ச்சி தரும் படப்பிடிப்பு.
No comments:
Post a Comment