படங்களில் உள்ள பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மதராஸ் மாகாணத்திற்கு சிறப்பான பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவருக்கும் சென்னைக்கும் தொடர்பு உண்டு. எங்கெங்கோ இருந்து இங்கு வந்து சேர்ந்து நமக்காகப் பணியாற்றியவர்கள், நம் மண்ணின் பெண்கள் என இரு தரப்பு பெண்களும் இந்தப் படத்தில் அடக்கம். பெண்ணாக வாழ்வதே இங்கு பெரும் சோதனை தான். அதையும் தாண்டி தடைகள் உடைத்து இங்கு மாற்றம் கொண்டு வந்திருப்பவர்கள் இவர்கள்.
இந்தப் பெண்மணிகள் எல்லோரும் மதராஸ் மாகாணத்துடன் தொடர்புடையவர்கள். எதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையை இவர்களது பணி தொட்டிருக்கிறது. பெருமைப்படுத்தி இருக்கிறது.
மேல் வரிசை: 1. டாக்டர் மேரி ஸ்கார்லீப் - மாகாணத்தின் முதல் பெண்களுக்கான கோஷா மருத்துவமனையை அரும்பாடு பட்டுத் திறந்தவர்.
- கிருபாபாய் சத்தியநாதன் - மருத்துவப் படிப்பு முடிக்க முடியாமலேயே காசநோயால் இறந்து போனவர். இவரது சகுணா, கமலா நாவல்கள் பெண்களின் அன்றைய நிலையின் கண்ணாடி.
- டாக்டர் மெட்டில்டா மக்ஃபெயில் - வடசென்னையில் முதல் பெண்களுக்கான மருத்துவமனை, ரெயினி மருத்துவமனையை தோற்றுவித்தவர்.
- பிளாரன்ஸ் நைட்டிங்கேல் - செவிலியரான நைட்டிங்கேல் இந்தியாவைக் கண்ணால் காணாமலே கறுப்பர் நகருக்கான சுகாதார வசதிகள் கேட்டு 40 ஆண்டுகள் போராடியவர். மதராஸ் மாகாணத்தின் சுகாதாரக் கட்டமைப்பு இவரது நெடுநாள் கனவு. (கடிதங்கள் மூலம்)
கீழ் வரிசை: 1. டாக்டர் ஐடா ஸ்கட்டர் - புகழ்பெற்ற வேலூர் சி. எம்.சி. மருத்துவமனையை நிறுவியவர், பெண்களுக்காக மருத்துவப் பணியாற்றிய மிஷனரிகளில் முதன்மையானவர்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் நிறுவனர், பள்ளிகளில் பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை தொடங்கி மகளிர் காவலர் வரை மதராஸ் மாகாணத்தின் முக்கிய சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தியவர்.
- டாக்டர் ஹில்டா மேரி லாசரஸ் - வேலூர் சி.எம்.சி.யின் முதல் இந்திய இயக்குனர், தென்னிந்தியாவின் முதல் கிறிஸ்துவப் பெண் மருத்துவர், வேலூர் கல்லூரியை இந்த நிலைக்கு வளர்த்தெடுத்தவர்.
- டாக்டர் அபுஷா பீபி மரைக்காயர் - நாட்டின் முதல் இஸ்லாமியப் பெண் மருத்துவர், இந்திய மருத்துவப் பணிகளின் முதல் பெண் இயக்குனர், 40 ஆண்டுகாலம் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை திட்டமிட்டு வழிநடத்திய பெண்.
- நிவேதிதா லூயிஸ்
No comments:
Post a Comment