* கலி. பூங்குன்றன்
பெரியார் -அம்பேத்கர் - மார்க்ஸ் படிப்பு வட்டத்தின் சார்பாக நேற்று (2.7.2020) நடைபெற்ற நூறாவது நாள் காணொலி நிகழ்ச்சியில் உலகத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, புதிய குரல் ஓவியா, பேராசிரியர் சுந்தரவள்ளி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி குடந்தை அரசன், ஊட கவியலாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றி னார்கள். தோழர் லூர்துசாமி ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ''இந்தியாவுக்கே வழிகாட்டும் தந்தை பெரியாரின் சமூகப் பார்வை” என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
நூறு காணொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தொய்வு இல்லாமல் நடத்தும் படிப்பு வட்டத்திற்குத் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரி வித்துத் தன் உரையைத் தொடங்கினார்.
திரைப்படங்கள் கூட நூறு நாள் வெற்றி விழா என்ற நிலை மாறி நூறு காட்சிகள் நடந்தாலே வெற்றி விழா எனும் கால கட்டத்தில், காணொலி மூலம் நூறு கருத்தரங்குகளை நடத்தியிருப்பது உண்மையிலேயே பெரிய சாதனைதான் என்றும் குறிப்பிட்டார்.
சுயமரியாதை இயக்கம் ஏதோ தமிழ்நாட்டோடு நின்று விடக் கூடியதல்ல. இதைப்பற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?
”இன்றைக்கு, இப்பொழுது தொடங்கப்பட்டுள்ள எங்கள் இயக்கம், இந்த மக்களுக்காக இந்த இடத்தில் தொடங்கப்படுகிறது என்று நினைக்கலாம்; ஆனால், நாளைக்கு இது இந்தியா முழுவதையும் ஒரு கலக்கு கலக்கப்போகிறது. இந்தியாவையும் தாண்டி உலகம் முழுமைக்கும் ஆளப் போகிறது” என்று தந்தை பெரியார் கூறியதை கழகத் தலைவர் முத்திரை அடியாகப் பதித்தார்.
தந்தை பெரியார் வட மாநிலங்களுக்கு ஆறு முறை சென்றுள்ளார். தனது பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளார். (1940, 1942, 1944, 1954, 1959, 1968 ஆண்டுகளில்)
மும்பையில் தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர், முகம்மது அலி ஜின்னா ஆகியோரின் சந்திப்பு 1940இல் நடந்ததுண்டு.
1968இல் லக்னோவுக்குச் சென்றபோது ஜனசங்கத் தினர் எதிர்ப்பைக் காட்டினர். ராஜ்நாராயணன் உடன் இருந்த எதிர்ப்பாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
லக்னோ பல்கலைக் கழகத்திலும் தந்தைபெரியார் பேசினார். தொடக்கத்தில் மாணவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றத் தொடங்கி, தொடர்ந்து பேசியபோது அந்த பேச்சின் சிறப்பை உணர்ந்து அமைதியானார்கள். தந்தை பெரியார் பேச்சை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தேன். இராமயணத்தைப் பற்றி எல்லாம் தந்தை பெரியார் அங்கே பேசியது சாதாரணமானதல்ல. தந்தை பெரி யாரின் இராமாயணப் பாத்திரங்கள் (“Ramayana - A True Reading”) என்று ஆங்கிலத்தில் வெளிவந்தது. இந்தியில் மொழி பெயர்க்க லலாய் சிங் யாதவ் அனுமதி கேட்டுப் பெற்றார்.
இந்தியிலும், ‘சச்சி இராமாயண்’ என்ற பெயரில் வெளிவந்தது. உ.பி. அரசு தடை செய்தது. மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் தடையை நீக்கியது. அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றத்தில் தடை செல்லாது என்று நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தீர்ப்புக் கூறினார். (அந்தத் தீர்ப்பை நெருக்கடி நிலை காலத்தில் ‘விடுதலை’யில் வெளியிட தணிக்கைக் குழு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது).
வட மாநிலங்களுக்குச் சென்றது போலவே அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டு சுற்றுப் பயணம் செய்தார் தந்தை பெரியார். ருசியா செல்வதற்கு முன்பே தந்தை பெரியாருக்குப் பொதுவுடைமை சிந்தனை இருந்ததுண்டு.
ருசியா செல்லும் முன்பே மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார். இந்தியாவிலேயே முதன் முதலாக அந்த அறிக்கை வெளிவந்தது தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால்தான்.
மற்ற மற்ற நாடுகளில் வர்க்க பேதம் உண்டு. ஆனால் இந்தியாவில்தான் பிறப்பின் அடிப்படையிலான வருணபேதம் உண்டு.
பொதுவுரிமை இல்லாத நாட்டில் பொதுவுடைமை பூப்பது கடினம். பொதுவுடைமை என்பது சம பங்கு, பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பது தந்தைபெரியாரின் கணிப்பு. ஜாதி என்பது பிறப்பினால் உள்ளது, வகுப்பு என்பது தொழிலில் வருவதாகும்.
பிறப்பின் அடிப்படையிலான வருண பேதத்தில் இந்நாட்டின் பெரும்பாலான மக்களான பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்வி உரிமை கிடையாது. மனுதர்மம்தான் இந்த நாட்டின் எழுதப்படாத சட்டமாக இருந்தது எனலாம். மனுநீதிப்படி அரசர்கள் ஆண்டார்கள். சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்றது மனுதர்மம்.
அதனால்தான் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், மனுதர்மத்தைக் கொளுத்தினார்கள்.
இந்தியாவில் சென்னை மாநிலத்தில்தான் நீதிக்கட்சி ஆட்சியில்தான் முதன்முதலாக 1928இல் வகுப்புவாதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் அந்த ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறி விட்டது.
தமிழ்நாடே தந்தை பெரியார் தலைமையில் கொந்தளித்து எழுந்தது. அதன் காரணமாகவே முதல் அரசியல் சட்டத்திருத்தம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் வெடித்த மக்கள் போராட்டத்தைச் சுட்டிக் காட்டி, பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் பேசினார். அப்பொழுது சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர்.
சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து அவர் பேசியபோது - நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுகிறேன். ஆனால் அந்தத் தீர்ப்பை மதிக்கத் தயாராக இல்லை என்று கம்பீரமாகக் கூறிய மாமனிதர் அண்ணல் அம்பேத்கர் என்று சிறப்பாகக் குறிப்பிட்டார் கழகத் தலைவர்ஆசிரியர்.
முதல் சட்டத் திருத்தத்தால் பலன் பெற்றது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே பலன் பெற்றனர்.
அதுபோலவே மத்திய அரசுத்துறைகளில் பிற்படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு. 1950 ஜனவரியில் குடியரசு ஆகி சட்டம் அமலானாலும் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
(1940 ஆகஸ்டு 24ஆம் தேதி திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்க (நீதிக்கட்சி) 15ஆம் மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 19ஆம் தீர்மானம்:
தற்போதுள்ள வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ எண் ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப்பதால் ஜன சங்கியைக்கு ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டு மென்றும் அவ்விகிதப்படி உத்தியோகங்கள் அடைந் திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.
இந்த முறை அகில இந்திய சர்க்கார் உத்தியோகங் களிலும் கையாளப்பட வேண்டுமென்று இந்திய சர்க்காருக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் வரப்போகும் சீர்திருத்த சட்டத்திலேயே இது குறிக்கப்பட வேண்டு மென்றும் தீர்மானிக்கிறது)
1940இல் திராவிட இயக்கமாகிய நீதிக்கட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 1990இல்தான் 50 ஆண்டுகாலம் கழித்து விடியல் கிடைத்தது.
ஜனதா அரசில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது - அப்போதைய உள்துறை அமைச்சர் சரண்சிங் முயற்சியால்தான் மண்டல் குழு அமைக்கப் பட்டது (1978). இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து அருமையான, தேவையான பரிந்துரைகள் அடங்கிய மண்டல் குழு அறிக்கை பிரதமர் இந்திரா காந்தியிடம் அளிக்கப்பட்டது (1980).
ஆனால், செயல்பாட்டுக்கு வரவில்லை; அதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. இன்றைக்கு மத்தியில் அமைச்சராக இருக்கக் கூடிய ராம் விலாஸ் பஸ்வான் போன்றவர்கள் எல்லாம் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகளில் பங்கேற்றதுண்டு.
சென்னையில் பெரியார் திடலுக்கே மண்டலும், குழு உறுப்பினர்களும் வந்தனர். கூட்டத்தில் பி.பி.மண்டல் பேசினார். பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் எங்கள் பரிந்துரைகளை செயல்படுத்த வைக்க வேண்டும் என்றாரே!
(தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பங்கேற்கும் பிஜேபியைச் சேர்ந்தவர்கள், வீரமணிக்கும், கருணா நிதிக்கும் மண்டல் குழுப் பரிந்துரை நிறைவேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்று 22 காரட் பொய்யை ஜமக் காளத்தில் வடிகட்டுவதுதான் பரிதாபமும், வேடிக்கையு மாகும்! உண்மையைச் சொல்லப்போனால் மண்டல் குழுப் பரிந்துரையை அமலுக்குக் கொண்டு வந்த தனாலேயே வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி. என்பது நினைவில் இருக்கட்டும்)
பிரதமர் வி.பி. சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் குழு பரிந்துரைப்படி வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடங்களை ஒதுக்குவதுபற்றி தெரிவித்த போது (7.8.1990) மறக்காமல் பாரத ரத்ன அம்பேத்கர், கிரேட் பெரியார், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் கனவு நனவா யிற்று என்று பெருமிதமாக அறிவித்தாரே!
பிரதமரின் இந்த அறிவிப்பை அப்படியே உச்சநீதி மன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் மண்டல் குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பதிவு செய்தார். மண்டல் குழுப் பரிந்துரையை நிறைவேற்றச் செய்ததால் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் பலன் அனுபவிக்கின்றனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நிர்வாகம், நாடாளுமன்றம் (சட்டமன்றம்), நீதித்துறை மூன்றும் (Executive, Legislature, Judiciary) முக்கியம். இந்த மூன்றிலும் தந்தை பெரியாரின், அண்ணல் அம்பேத் கரின் தாக்கம் உண்டு - விளைவுகளும் உண்டு.
இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 விழுக்காடு சட்டப்படி உறுதி செய்யப்பட்ட மாநிலம் தமிழ்நாடே! இந்த 69 விழுக்காட்டுக்கான இடங்கள் நிலைபெற சட்ட உதவியைச் செய்து கொடுத்தது திராவிடர் கழகம்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஆகிய மூன்று பார்ப்பனர்களையும் பயன்படுத்தி 69 விழுக்காடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டது - 76ஆவது சட்டத் திருத்தம் என்பது இதுதான். வரலாற்றில் முதல் சட்டத் திருத்தம் என்றால் தந்தை பெரியார் பெயர் நினைவில் நிற்கும். இந்த 76ஆம் சட்டத் திருத்தம் என்றால் தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகம்தான் நினைவிற்கு வரும்.
இன்றைக்கு ‘நீட்’ என்ற கொடுவாள் ஒடுக்கப்பட்ட மக்களை, கிராமப்புற மக்களைப் பதம் பார்க்கிறது. இதற்கும் நாம் முடிவு கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
வி.பி.சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு கிடைக்க வழி செய்தார் என்றால், காங்கிரஸ் ஆட்சியில் (திமுக இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்) கல்வியிலும் அது விரிவுப்படுத்தப்பட்டது - 93ஆவது சட்டத் திருத்தமாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அவர்கள் அதனை முன்மொழிந்தார்.
சட்டப்படி இடஒதுக்கீடு இப்போது இருந்தாலும் அதற்குப் பல வகைகளிலும் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் மறுக்கப் படுகின்றன.
சட்டரீதியான போராட்டம் ஒரு பக்கம் நடைபெற்றாலும் சித் தாந்த ரீதியான போராட்டங்களும், பிரச்சாரங்களும் கண்டிப்பாகத் தேவை.
நீதிமன்றங்கள் குடைசாய்ந்தாலும், மக்கள் மன்றம்தான் அதனைச் சரி செய்ய முடியும். அதற்கு சித்தாந்த ரீதியான பிரச்சாரம் மக்களிடம் சென்றாக வேண்டும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மாமனிதர் மார்க்ஸ் பேரால் ஒரு படிப்பு வட்டம் உருவாக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்த மூவர் சிந்தனைகள்தான் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை மீட்டுத் தரும் வல்லமை படைத்தவை.
மக்களிடம் போவோம்! அவர்களிடம் கொண்டு செல்லுவோம்!
உங்கள் முயற்சி வெல்லட்டும் - வாழ்த்துகள் என்று கூறி முடித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
பெரியார் தேவைப்படுகின்றார்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரும் பொது வுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியுமான தோழர் ஹிரேன் முகர்ஜி எம்.பி. அவர்களும், தோழர் ஈ.வெ.கி. சம்பத் எம்.பி. அவர்களும் உரையாடிக் கொண்டு இருந்தபோது, தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள சுயமரியாதைத் திருமணம் பற்றித் தெரிவித்தபோது அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
பொதுவுடைமை இயக்கவாதியான நான் என் வீட்டில் என் மகளுக்குத் திருமணம் செய்வதாக இருந்தாலும் புரோகிதரைத்தான் அழைக்கும் நிலை. ஆனால், தமிழ்நாட்டில் புரோகிதர் இல் லாமல் சீர்திருத்தத் திருமணம் நடைபெறுகிறது - அதற்குக் காரணம் தந்தைபெரியார் என்று நினைக் கிறபோது மகிழ்ச்சிஅடைகிறேன். அவருக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன் (Salute) என்று சொன்னதை தோழர் ஈ.வெ.கி. சம்பத் கூறியதுண்டு.
அதேபோல் தோழர் கே.டி.கே. தங்கமணி அவர் களும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் ஹிரேன்முகர்ஜியிடம் பேசிக் கொண்டு இருந்தபோது தோழர் கே.டி. கே.தங்கமணியிடம் ஹிரேன் முகர்ஜி கேட்ட கேள்வி: இந்தியாவிலிருந்து 500 ஆண்டுகளுக்குப்பின் யார் நினைவு கூறப் படுவார்? என்பதாகும். தோழர் கே.டி.கே அவர்கள் பல பெயர் களைச் சொல்லிக் கொண்டே வந்த போது, அந்தப் பெயர்களை எல்லாம் ஹிரேன் முகர்ஜி ஏற்றுக் கொள்ளாமல்
ஒருவர் பெரியார்
இன்னொருவர் ம. சிங்காரவேலர்
என்று அவரே விடை கூறினார்.
இதனைத் தோழர் கே.டி.கே. தங்கமணி தெரிவித்ததுண்டு.
தந்தை பெரியாரின் சிந்தனை முன்பைவிட இந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டைத் தாண்டி எங்கெங்கும் தேவைப்படுகிறது.
- காணொலியில் ஆசிரியர்
No comments:
Post a Comment