மருத்துவ நிபுணர் விலகியது ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 9, 2020

மருத்துவ நிபுணர் விலகியது ஏன்

நோய் தொற்றுவியல் மற்றும் அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ககன்தீப் காங், இந்தியாவின் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவ அறிவியலாளர் ஆவார் - அவர் ஒரு முக்கிய கால கட்டத்தில் பணியிலிருந்து விலகுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


குழந்தைகளைத் தாக்கும் ரோட்டோ வைரஸ் தடுப்பூசி கண்டு பிடிப்பில் இவரது பங்கு மிகவும் முக்கியமானது ஆகும்.  இவரும் இவரது குழுவினரும் 25 ஆண்டுகளாக பாடுபட்டு 2014-ஆம் ஆண்டு கண்டுபிடித்த ரோட்டோ வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பை அதன் பிறகு ஆட்சிக்கு வந்த மோடி 2015-ஆம் ஆண்டு தனது அரசின் சாதனைபோல் காண்பித்து 9.3.2015 அன்று டில்லியில் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது இந்த தடுப்பூசியை 25 ஆண்டுகளாக அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த ககன்தீப் காங் குழுவினர் புறக்கணிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


மருத்துவர் ககன்தீப் காங், லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தேர்வாகி இருந்த முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர். கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவிட் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக டாக்டர் காங் தலைமையில், அண்மையில்தான் குழு அமைக்கப்பட்டிருந்த நிலை யில், அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.


தனது சொந்தக் காரணங்களுக்காகவே, நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ள இவர், வேலூரில் உள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரியில், இரைப்பை குடல் அறிவியல் துறை பேராசிரி யராக பணியாற்றி வருகிறார். மாற்று சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியில், மருத்துவர் ககந்தீப் காங், கடந்த 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.


இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சி யில், மருத்துவர் ககன்தீப் காங், அண்மைக் காலமாக ஈடுபட்டு வந்தார். தற்போது இவர் பதவி விலகியுள்ளதால்  கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


பன்னாட்டு அளவில் அதிக கரோனா பாதிப்பு உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா, ரஷ்யாவை முந்தி 3ஆவது இடத்தை பிடித்து உள்ளது. இன்னும் சில வாரங்களில் முதலிடம் வரும் அளவிற்கு நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துகொண்டெ வருகிறது. பரிதாபாத்தில் உள்ள மாற்று சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், கரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனைக்காக பரிதாபாத் ஈஎஸ்அய் மருத்துவமனையில், மருத்துவர் ககன்தீப் காங் தலைமையில் குழு அமைத்து இயங்கிவந்தது. இந்த மருத்துவமனையில், கோவிட் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக, ஆன்ட்டிஜென் சோதனைகள் மேற்கெள்ளப் பட்டு வந்தன.


இந்த நிலையில் இவருக்கே தெரியாமல் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்தவர்களால் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் தனித்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  ஒரே இடத்தில் இரு குழுக்கள் ஒரேவிதமான சோதனைகள் அவர்களுக்கே தெரியாமல் நடைபெற்று வந்த நிலையில், மருத்துவர் ககன் தீப் காங் பதவி விலகியுள்ளார்.


தான் பதவி விலகியதால் தனது தலைமையிலான குழு கலைக்கப் பட்டு விட்டதாக  தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, மீண்டும் வேலூருக்குச் சென்று  அங்கு மருத்துவப் பணிகளை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.


மருத்துவர் ககன் தீப் காங் பதவிக்காலம், 2021 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளதாக மாற்று சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் சியுலி மித்ரா தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "இந்தியாவில் ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் மருத்துவர் ககன்தீப் காங்கின் பங்கு முக்கியமானது. காலரா, டைபாய்டு உள்ளிட்டவைகளுக்கான தடுப்பு மருந்துகள் அவற்றின் மேம்பாட்டுத்திறன் உள்ளிட்ட ஆராய்ச்சி களை, மருத்துவர் ககன் தீப் காங் தலைமையிலான குழுவே மேற் கொண்டிருந்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மருத்துவர் ககன்தீப் காங், உலக சுகாதார நிறுவனம், வெல்கம் டிரஸ்ட், இன்டர்நேசனல் வாக்சின் இன்ஸ்ட்டியூட், இன்டர்நேசனல் சென்டர் ஆப் ஜெனிடிக் இஞ்ஜினியரிங் அண்ட் பயோடெக்னாலஜி உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.


இவர், தொற்று நோய்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையிலான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தலை ஊக்குவிக்கும் நார்வே நாட்டை தலைமையிடமாக கொண்ட அமைப் பான Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)  அமைப்பின் துணைத் தலைவராக தற்போது பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஆரம்பத்தில் இவருக்கு கரோனா தொற்று தொடர்பான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியை ஒதுக்கிய மத்திய அரசு பிறகு அதை விரைவாக முடிக்குமாறு தனியார் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, முக்கியமான ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்தை வெளியிடவேண்டும்  என்றும், மோடியின் ஆகஸ்ட் 15 உரையின் போது தனது தலைமையிலான  இந்தியா கரோனாவிற்கான தொற்று மருந்தை கண்டுபிடித்துவிட்டது என்று அவர் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவர் ககன் தீப் காங் ஏற்கவில்லை என்றும், இது குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டிய பணி என்று கூறியும் மத்திய அரசு இவரது பேச்சிற்குச் செவிமடுக்காமல் புதிய குழு ஒன்றை ஆரம்பித்தும் தனியாருக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்ததால் இவர் பதவிவிலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


ரோட்டோ வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்க 25 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகே அந்த நோயை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி அறி முகப்படுத்தப்பட்டது, ஆனால் இந்த அரசு அவசரகதியில் கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க ஆய்வாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் பல முக்கிய மருத்துவர்கள் பதவி விலகி வருகின்றனர்.


இது உண்மையாக இருக்குமேயானால் இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, ஒரு துறையில் நிபுணத்துவமும், அனுபவமும் கொண்டவர் களைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.


மக்கள் உயிருக்கு அஞ்சி ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில் அரசின் அணுகுமுறையில் உள்ள குறைபாட்டால் நிபுணர்கள் வெளியேறும் ஒரு சூழலை ஏற்படுத்தலாமா? இது ஒரு நல்ல நிர்வாகத்துக்குத்தான் அழகாகுமா?


மத்திய அரசு மறுபரிசீலனை செய்யட்டும்!


No comments:

Post a Comment