‘‘ஒப்பற்ற தலைமை-2'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை
சென்னை, ஜூலை 10-- எதிர்ப்புகளை நல்ல உரமாக்கிக் கொண்டு, கொள்கைப் பயிரை வளர்த்தவர் தந்தை பெரியார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘ஒப்பற்ற தலைமை'
கடந்த 28.6.2020 மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் இரண் டாம் பொழிவினை காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே ஆற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அவமானம் உங்களுக்கே தவிர,
எனக்கில்லை!
அன்றைய கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசும்போது, ‘‘எனக்கு எத்தனையோ இடங்களில் வர வேற்பு அளித்தார்கள். மாவிலைத் தோரணம், இன்னும் பிற தோரணங்கள் கட்டி வரவேற்று இருக்கிறார்கள். அவையெல்லாம் சாதாரணம். ஆனால், இந்த ஊரில் எனக்கு வரவேற்பு என்பது மிகவும் சிறப்பானதாகும். ஏனென்றால், இவ்வளவு பழைய செருப்புகளை காங்கிரஸ் காரர்கள் தேடித்தேடிக் கொண்டு வந்து, அதையெல்லாம் ஒன்றாகத் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள் எனக்காக, அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்து என்னை வரவேற்று இருக்கிறார்கள் என்றால், அதைச் சுலபமாக அறுத்துப் போட்டுவிடலாமா? அந்த செருப்புத் தோரணம் கட்டினால், நான் அவமானப்படுவேன் என்று நினைத் தார்கள் அல்லவா - அந்த செருப்புதானே உங்கள் நாட்டை 14 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது. ராமன் செருப்பை வைத்துத்தானே ஆண்டிருக்கிறார்கள். ஆகவே, அப்படி ஆண்ட செருப்புத்தான் தோரணமாக வரிசையாகத் தொங் குகிறது. அதனால் என்னை நீங்கள் அவமானப்படுத்தி விட்டீர்கள் என்று நினைக்கவேண்டாம்; அவமானம் உங்களுக்கே தவிர, எனக்கில்லை'' என்றார்.
இன்னொரு செய்தி, பல பேருக்குத் தெரியாத செய்தி. இராஜபாளையத்தில் காங்கிரஸ்காரர்கள் எல்லாம் சேர்ந்து, திராவிட இயக்கம் உள்ளே நுழையக்கூடாது என்று நினைத்தார்கள். அங்கே காரைக்குடி என்.ஆர்.சாமி, சிவ கங்கை சண்முகநாதன் போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து அய்யாவை அழைத்துக் கூட்டம் போடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ்காரர்கள் அந்தக் கூட்டத்தில் கலவரம் செய்யலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால், அவர் களால் முடியவில்லை. மக்கள் ஆதரவு மிகப்பெரிய அள விற்கு இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டார்கள் என்கிற ஆத்திரத்தில், காங்கிரஸ்காரர் கள், அய்யாவினுடைய வேன் எந்த வழியில் செல்லுகிறது என்று பார்த்து, அய்யாவைத் தாக்குவதற்கான ஏற்பாடு களை செய்தார்கள்.
எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளானார்கள்
கழகத் தோழர்கள்!
திருக்கை மீன் வாலைக் கொண்டு தாக்கினால், மிகப்பெரிய அளவிற்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டும். அந்தத் திருக்கை மீன் வாலை வைத்துக்கொண்டிருந்த ஒரு ரவுடிக் கூட்டத்தை தயாராக வைத்திருந்தார்கள்.
அய்யா அவர்கள் எப்பொழுதும் எந்த வழியாகச் சென்றால், பெட்ரோல் மிச்சமாகும் என்று பார்ப்பார். ஒரு இரண்டு மைல் குறைவாகும் என்று சொன்னால், அந்த வழியே செல்லுங்கள் என்பார் ஓட்டுநரிடம்.
அய்யா, இந்தப் பாதையில் சென்றால், வேகமாகச் சென்றுவிடலாமே என்பார் ஓட்டுநர்.
பரவாயில்லை, இரண்டு மைல் குறைவாக இருக்கிறதே, அந்த வழியில் சென்றால் பெட்ரோல் மிச்சமாகுமே" என்றார் அய்யா.
ஆகவே, பெரியார் சொன்ன வழியில் சென்றதால், இன்னொரு பாதையில் பெரியாரைத் தாக்குவதற்குக் காத்திருந்த எதிரிகளால், பெரியாரைத் தாக்க முடியவில்லை. ஆனால், கூட்டம் முடிந்து கழகத் தோழர்கள் அந்த வழியே சென்றவர்கள் எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளா னார்கள்.
திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. சின்னாளப்பட்டி சேலை என்றால், மிகப் பிரபலம். அங்கே கைத்தறிவு நெசவுத் தோழர்கள், தேவாங்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். காங்கிரசில் இருந்துகொண்டு, பெரியார் பேசிய கூட்டத்தில் கல்லெறிந்தனர். அந்தத் தாக்குதலால், அய்யா அவர்களின் கைகளில் அடிபட்டது. கடைசிவரைக்கும் கை முட்டியில் வலி இருந்தது.
இயக்கக் கோட்டையாக மாறிய
சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பொழுது எதிர்ப்பு ஏற்பட்டு, பிறகு அந்த ஊரே பெரியா ருக்கு வேண்டிய ஊராக, பெரியார் அவர்கள் தத்தெடுத்த ஊராக, இயக்கத்திற்கு ஒரு பெரிய கோட்டையாக பின்னா ளில் மாறியது. சின்னாளப்பட்டித் தோழர்கள் எந்த ஊரில் இருந்தாலும், பெரியாரிஸ்டுகளாக இருந்தார்கள்.
ஆகவே, எத்தனை வகையான எதிர்ப்புகளைச் சந்திக்க முடியுமோ, அத்தனை வகையான எதிர்ப்புகளை யும் சந்தித்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
எதிர்ப்புகள்தான் மிகப்பெரிய அளவிற்குப் பெரியாரை வாழ வைத்திருக்கிறது
அதுமட்டுமல்ல, அன்னை நாகம்மையார் அவர்களைப் பற்றியும், மணியம்மையார் அவர்களைப்பற்றியும் சுவற்றில் கொச்சையாக எழுதிப் போடுவார்கள். ‘‘ராமசாமி கழுதை செத்துவிட்டது'' என்று எழுதி வைப்பார்கள். அதைப்பற்றி யெல்லாம் அய்யா அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
பொதுவுடைமை ஆக்குவீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்பார்கள். பெரியார் அதற்குப் பொறுமையாக பதில் சொல்வார்.
ஆகவே, எதிர்ப்புகள் என்பது இருக்கிறதே, அது மிகப் பெரிய அளவிற்குப் பெரியாரை வாழ வைத்திருக்கிறது.
இன்னுங்கேட்டால், அடிக்கடி நாம் சொல்கிறபடி, ஒரு சங்கதி.
எதிர்ப்புகளை நல்ல உரமாக்கிக் கொண்டு, கொள்கைப் பயிரை வளர்த்தவர் தந்தை பெரியார்
பெரியாருடைய நிலத்தில், கொள்கைப் பயிர் விளை யக்கூடிய அந்த நிலத்தில், அந்த எதிர்ப்புகள் எல்லாம், அசிங்கங்கள் எல்லாம், குப்பைகள், மலங்கள் எல்லாம் போடப் போட அந்த நிலத்திற்கு நல்ல உரமாகும் அவை. நல்ல உரம் போட்டால், நன்றாகப் பயிர் வளரும். அது போன்று, எதிர்ப்புகளை நல்ல உரமாக்கிக் கொண்டு, கொள்கைப் பயிரை வளர்த்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
அன்றைக்கு அவர்கள் போட்ட பாதையில், இன்றைக்கு நாம் செல்லும்பொழுதே, இவ்வளவு எதிர்ப்புகள் இருக் கின்றன. அய்யா அவர்கள், ஈரோட்டுப் பாதையைப் புதிதாக போட்டார். கரடு முரடாக இருந்த பாதையை மாற்றி, புதிதாகப் பாதை போட்டார். அதனால், அவர் சந்தித்த சங்கடங்களைப்பற்றி கவலைப்படாமல், தனி மனிதராக இருந்து கொண்டு அதனைச் செய்தார்.
எதிர்ப்புகளைப்பற்றி
கவலைப்படவில்லை!
அதன் காரணம் என்ன? நான் ஏற்கெனவே சொன்னதுபோல, உண்மையின்மீது, நேர்மையின்மீதுதான் இந்த அஸ்திவாரம் கட்டப்பட்டு இருக்கிறது என்பதுதான். ஆகவே, அவர் எதிர்ப்புகளைப்பற்றி கவலைப்படவில்லை.
அரசாங்கத்தில் நிறைய எதிர்ப்புகள் இருந்தன; ஒரு பகுதியை மட்டும் சொல்கிறேன்.
‘குடிஅரசு' களஞ்சியம் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். அதில் எவ்வளவோ செய்திகள் இருக் கின்றன. இப்பொழுது அந்தப் பதிப்புகளையெல்லாம் பாதி விலைக்கே கொடுத்திருக்கிறோம்.
1938 ஆம் ஆண்டு
‘குடிஅரசு' களஞ்சியம்!
1938 ஆம் ஆண்டு ‘குடிஅரசு' களஞ்சியத்தில் உள்ள ஒரு செய்தியை மிக முக்கியமாக உங்களுக்குச் சுட்டிக் காட்டவேண்டும்.
கொலை செய்வோம் என்று கூட்டங்களில் சொல் கிறார்கள்; ‘தினமணி' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சொக்கலிங்கம், பொறுப்பான காங்கிரஸ்காரர் பேசுகிறார். ‘‘இனிமேல், சுயமரியாதைக்காரன்கள் பிரச்சாரம் செய்தார் கள் என்றால், பேசவேண்டாம்; கொலையில் இறங்கலாம்; காரணம் என்னவென்றால், தற்காப்புக் கொலை செய் யலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கிறது'' என்று பேசிய தற்குப் பெரியார் அவர்கள் பதில் எழுதுகிறார்.
நமக்கு ரத்தம் கொதிக்கிறது;
கண்கள் கலங்குகின்றன
அதில் பல சம்பவங்களைச் சொல்கிறார்; அதைப் படிக்கும்பொழுது, நமக்கு ரத்தம் கொதிக்கிறது; ஒரு பக்கத்தில் கண்கள் கலங்குகின்றன.
அய்யா அவர்கள் நெருப்பாற்றில் நீந்தி இருக்கிறார், கடுமையான சோதனைகளையெல்லாம் வென்றிருக்கிறார். ஒரு பக்கம் காவல்துறை - இன்றைக்கு எப்படி நமக்கு ஒத்துழைக்காமல் இருக்கிறார்களோ, இதைவிட பன்மடங்கு அன்றைக்கு இருந்திருக்கிறார்கள்.
எனக்குப் பொதுவாழ்க்கையில் பயமில்லாமல் ஆன தற்குக் காரணமே, எங்கள் ஊரிலே நடந்த பொதுக் கூட்டங்கள், தோழர் அறிவுக்கரசு அவர்களுடைய அப்பா காலத்திலிருந்து, அவர் அப்பொழுது இளைஞராக இருந்தார்; ஒரு சில சம்பவங்கள் அவருக்கு நினைவில் இருக்கலாம். செட்டிக்குளம் போன்ற பகுதியில், நம்முடைய கூட்டம் என்றால், கல்லு விழும், எதிர்த்துக் கூச்சலிடு வார்கள்; திருநாகேசுவரத்தில் கல்லு விழும், சாணி எடுத்து அடிப்பார்கள். எங்களுடைய காலத்திலே அப்படியென் றால், பெரியாருடைய காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
முட்டையில் மலத்தை
நிரப்பி அடிப்பார்கள்!
கோழி முட்டையால் அடிப்பார்கள், வெறும் கோழி முட்டையல்ல; அதில் மலத்தை நிரப்பி, அய்யா மேல் அடித்திருக்கிறார்கள், கடலூரில் நடைபெற்ற கூட்டத்திலே அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. அப்பொழுதுகூட தன்னுடைய உரையை நிறுத்தாமல், சால்வையைப் போர்த்திக் கொண்டு, உரையைத் தொடர்ந்திருக்கிறார்.
‘‘வரவேற்கிறோம்
கொலையை வரவேற்கிறோம்!''
சென்னை காங்கிரஸ் கூலி கேடிப் பத்திரிகை ஒன்று தனது மார்ச் 10 ஆம் தேதி பத்திரிகையில் சுயமரியாதைக் கட்சியின் மீது அபாண்டமாக முழுப்பொய்யான விஷயங் களைக் கற்பித்து எழுதி அதை ஒரு சாக்காகப் பயன் படுத்திக் கொண்டு ‘‘தற்காப்புக்காக கொலை செய்யலாம் அது குற்றமாகாது'' என்று மக்களைக் கொலை செய்யத் தூண்டிவிட்டு, மக்களுக்கு மேலும் தைரியம் வரும்படியாக “கொலை செய்தவர்கள் சர்க்காரால் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்'' என்று ஏதோ ஒரு கோர்ட் ஜட்ஜிமெண்டையும் எடுத்துக்காட்டி தூண்டிவிட்டிருக்கிறது.
இதைப்பற்றி சிறிதும் நாம் கவலைப்படவில்லை. உண்மையிலேயே அப்படிப்பட்ட நிலைமையை வரவேற் கிறோம். இந்த நாட்டில் உள்ள சுயமரியாதைக்காரர்களில் 10 பேர்களோ அல்லது 20 பேர்களோ அல்லது 100 பேர்களோ தான் இந்தத் தூண்டுதலால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இதனால் சுயமரியாதைக்காரர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமென்றோ, சுயமரியாதைக்காரர்களது உணர்ச்சி மாறி தங்கள் தொண்டில் அடங்கிவிடுவார்கள் என்றோ நாம் சிறிதும் கருதவில்லை .
மற்றும் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுவது எது வெற்றி பெறுகிறது, எது நிலை நிற்கிறது, எது பொக்கி கோழைக்கூட்டம் என்பது புலனாவதற்கு ஒரு சரியான பரீட்சையுமாகும்.
காங்கிரஸ் இதுவரை ஏதோ ஒரு மகத்தான பொறுமை யுடன் இருந்து ‘‘அஹிம்சா தர்மம்'' என்பதைக் கடைபிடித்து வந்திருப்பதாகவும், அதில் அது தோற்றுவிட்டதாகவும், ஆதலால் தற்காப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு ஹிம்சை முறையில் அதுவும் கொலை செய்யும் துறையில் இறங்கவேண்டும் என்றும், கூத்தி மகன் வீரம் பேசுவது போன்ற அயோக்கியத்தனமான பேச்சு வேறு இல்லை என்றே சொல்லுவோம்.
காங்கிரசின் "பொறுமையும்" “அஹிம்சா தர்மமும்" யாரையும் விட நமக்கு நன்றாய்த் தெரியும். காங்கிரசின் சரித்திரத்தில் அஹிம்சை என்ற பேச்சு வந்து புகுந்தது முதல் நாளது வரை எந்தச் சந்தர்ப்பத்தில் தங்களுக்குத் திருப்பி அடிக்கச் சக்தியிருந்த காலத்தில் அஹிம்சை தர்மத்தைக் காட்டிவந்தது என்று ஏதாவது ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக்காட்டுமா? என்று கேட்கின்றோம். சண்டித்தனத்துக்கு உதை விழுந்தால் நிமிர்ந்து பார்க் கக்கூட திறமில்லாத காலத்தில் கண்ணை மூடிக்கொண்டு, எந்த சந்தர்ப்பத்தில் சக்தியிருக்க பொறுமை காட்டப்பட்டி ருக்கிறது என்று மறுபடியும் கேட்கின்றோம்.
இதுவரை சுயமரியாதைக்காரர்கள் சுமார் 3000, 4,000 பொதுக் கூட்டங்கள் கூட்டி 500 முதல் 20,000 ஜனங்கள் கொண்ட கூட்டம் வரையில் பேசியிருக்கலாம். இவற்றுள் காங்கிரஸ்காரர்கள் வந்து காலித்தனம் செய்யாத, செய்ய முயற்சித்துப் பார்க்காத செய்து பார்க்கலாமா என்று எண்ணாத கூட்டங்கள் ஒரு 10 அல்லது 20 கூட இருக்காது என்று சொல்லலாம். மற்றபடி காலித்தனங்கள் செய்ய நேர்ந்த ஒவ்வொரு கூட்டத்திலும் கல்லு, மண்ணு, கோழி முட்டை, சாணி எறியப்பட்டதும், குடிகாரர்களுக்குக் கள்ளு வாங்கிக் கொடுத்து கூப்பாடு போடச் செய்ததும் சிறு பிள்ளைகளை விட்டு 'ஜே!' போடச் செய்து கலவரம் செய்தும் அநாவசியமான கேள்விகள் - தாடி ஏன் வளர்க்கப்படுகிறது? மீசை ஏன் நரைத்துப் போச்சு? நீ ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பன போன்ற அசட்டுக் கேள்விகள் கேட்டு காலித்தனம் செய்வதும், சுயமரியாதைக் கூட்டம் நடக்குமிடத்தில் பக்கத்தில் வேறு கூட்டம் போட்டு, கூப்பாடு போடுவதும், பக்கத்தில் தப்பட்டை, மேளம் அடித்து தொல்லை விளைவிப்பது. சமீபத்தில் நின்று கொண்டு ஜனங்களைக் கூட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்துத் திருப்பி அனுப்புவதும், துண்டு நோட்டீசுகளைக் கொண்டுவந்து கூட்டங்களில் விநியோ கித்து கலாட்டா செய்வதுமான மற்றும் பல அற்பத்தனமான காரியங்களும், எப்படிப்பட்ட இழிமகனும் செய்யத் துணி யாத கேவல செய்கைகளும் செய்துதான் வந்திருக் கிறார்கள்; என்றாலும் இந்த 3,000, 4,000 கூட்டங்களில் ஒரு கூட்டமாவது கலவரத்தினால் கலைக்கப்பட்டுவிட்ட தென்றோ, பேச்சுக்கள் முடிந்து தலைவர் முடிவுரை நடந்து தலைவருக்கும், கூட்டத்துக்கும் வந்தனோபசாரம் (நன்றி யுரை) சொல்லி முடிக்கப்படாத கூட்டம் ஏதாவது ஒன்றை ருஜூவு செய்தால் ரூ.1000 சன்மானம் கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்கின்றோம். வேண்டுமானால் ஒரு உதாரணம், பட்டி வீரன்பட்டிக்கு அடுத்த அய்யம்பாளை யத்தில், போலீஸ்காரர் 'கூட்டம் கூட்டப்படாது' என்று ஆரம்பத்தில் தடுத்து நிறுத்திவிட்டார்கள். அதுவும் அன்றே அங்கேயே தோழர் ராமசாமி சொன்னதுபோல், இந்த 15 வருட காலத்துக்கு ஒரே ஒரு கூட்டம்தான்; அதுவும் போலீசாரால் நிறுத்தப்பட்டது என்பதாகும். மற்றபடி எவ்வளவு பெரிய காலித்தனமானாலும் கடைசி வரை நின்று பேசி, கூட்டத்தை நடத்தி விட்டுத்தான் சென்று இருக்கிறார்கள்.
முன்சொன்னபடி சுயமரியாதைக் கூட்டங்களில் எவ்வளவு காலித்தனமும், கலாட்டாவும் நடந்திருந்தாலும், சுயமரியாதைக்காரர்கள் ஒரு ஆளையாவது, ஒரு சிறு பையனையாவது அடித்தார்கள், கையால் தொட்டுத் தள்ளினார்கள் என்றாவது நிரூபித்துவிட முடியாது. ஏனெனில் தோழர் ஈ.வெ.ரா. இருக்கும் கூட்டங்களில் எல்லாம், தோழர் ஈ.வெ.ரா. எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டாலும் சமாளித்து, சுயமரியாதைக்காரர்களையே கண்டிப்பதன்மூலம் எதிரிகள் வெட்கப்படும்படி செய்து, அடக்கி காரியம் முடித்து வரப்பட்டிருக்கிறது.
உதாரணமாக இந்த ஒரு மாத காலத்தில் 3, 4 இடங்களில் சுயமரியாதைக் கூட்டங்களில் காங்கிரஸ் காலிகள் கலகம் நடத்தி இருக்கிறார்கள். அவைகள் காங்கிரஸ் பத்திரிகை களிலேயே வந்திருக்கின்றன, காஞ்சிபுரத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அண்ணாத்துரை ஆகியவர்கள் பேசும்போது காங்கிரஸ்காரர்கள் காலித்தனம் செய்தார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பக்கத்திலேயே இருந்தார். அவரிடம் சொன்னதற்கு, அவர் பிராமணாளைக் குறை கூறினால், ஜனங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? என்று நம்மவர்களுக்கு சமாதானம் சொன்னாரே தவிர, காலித்தனத்தை அடக்கவில்லை. அப்புறம் ஒரு சாயபு இன்ஸ்பெக்டர் வந்து சப்-இன்ஸ்பெக்டரை ஒரு ஏத்து ஏத்தினார். பிறகு காலித்தனம் அடங்கிற்று. தெரிந்தோ என்னமோ காங்கிரஸ் ராஜ்யம் அந்த சாயபை உடனே மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக ஒரு அய்யரையே போட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மகாநாட்டின் போதும், காங்கிரஸ் காலிகள் கொட்டகைக்கு வெளியில் இருந்து கூப்பாடு போட்டு, ஜனங்கள் நடவடிக்கைகளைக் கவனிக் காமல் இருக்கச் செய்தார்கள். போலீசார் சரியாக கவனிக்க வில்லை. இதன் மீது தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர் கள் போலீசாரை அறைகூவியழைத்தார். அதாவது உங் களால் காலிகளை அடக்க முடியுமா? முடியாதா? அல்லது நாங்கள் அடக்கலாமா? என்றார். உடனே போலீஸ் ஓடிற்று. காலிகள் பறந்தார்கள்.
- தொடரும்
No comments:
Post a Comment