லக்னோ,ஜூலை3 உத்தரப்பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் குற்றவழக்கில் தொடர்புள்ளவரைக் கைது செய்ய திக்ரு கிராமத் துக்குள் சென்ற காவல்துறையினரை சுற்றிவளைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த எட்டுபேர் உயிரிழந்துள்ளனர்.
கான்பூர் மாவட்டம், சவுபேபூர் காவல்துறை சரகத்துக்கு உட்பட்டபகுதி திக்ரு கிராமத்தில்கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கொலைமிரட்டல் என 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்கு களில் விகாஸ் துபே என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் மிஸ்ரா தலைமையில் மூன்று காவல்நிலையங்களிலிருந்து காவல்துறை யின் குழு அமைக்கப்பட்டு, அக்குழு திக்ரு கிராமத்துக்குள் சென்றபோது, வீட்டின் மாடிமீதிருந்து பதுங்கி இருந்தவர்கள் காவல்துறையினர்மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். காவல் துறையினர் பதிலடி கொடுப்பதற்கு முன்னதாகவே சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவந்திர மிஸ்ரா, காவல்துறை ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், காவலர்கள் நால்வர் என 8 பேர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் நால்வர் காயமடைந்தனர்.
கான்பூரின் காவல்துறைத் தலைவர் தினேஷ் குமார் கூறிய தாவது, “குற்றவாளியைக் கைது செய்வதே எங்களது நோக்கமாக இருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவர்கள் காவ லர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இது திட்டமிட்ட தாக்குதல்.“ என்றார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறை டிஜிபி ஹெச்.சி.அஸ்வதி செய்தியாளர்களிடம் கூறுகையில் “குற்றவாளி விகாஸ் துபேயை கைது செய்யும் நோக்கில்தான் காவல்துறையினர் சென்றனர். ஆனால், துபேயின் ஆட்கள் வீட்டு மேல்மாடியிலிருந்து மறைந்திருந்து காவல்துறையினர்மீது துப்பாக்கியால் சுட்டுள் ளனர். காவல்துறையினர் இந்த கிராமத்துக்குள் நுழையாத வகை யில் வழியெங்கும் தடுப்புகளையும், தடைகளையும் உருவாக்கி இருந்தனர். தடைகளை அகற்றி காவல்துறையினர் முன்னேறிச் சென்றபோது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. குற்றவாளிகளிடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்திருக்கும் என்பதை காவல் துறையினர் கருதவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment