‘விடுதலை' விளைச்சல் விழா - காணொலிமூலம்
வாசகர் கேள்விகளுக்கு ‘விடுதலை' ஆசிரியர் அளித்த பதில்
சென்னை, ஜூலை 1- நான் எப்பொழுதுமே பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன். சொந்த புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாதவன். பெரியார் தந்த புத்தி என்பது, எந்தவிதமான சோதனைகள் வருகின்ற பொழுதும், தடங்கல்கள், தடைகள் வருகின்றபொழுது இன்னும் வேகமாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘விடுதலை' வாசகர்களின் கேள்வியும் -
ஆசிரியரின் பதிலும்!
கடந்த 1.6.2020 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே உரையாற்றி முடித்ததும், வாசகர்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக் குப் பதில் அளித்தார்.
அக்கேள்வி - பதில் விவரம் வருமாறு:
டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ,
நான் அய்யா அவர்களை முதன்முதலில் நேரில் சந்தித்தது 1963 சிந்தாதிரிப்பேட்டை ‘விடுதலை' அலு வலகத்தில்தான். நாற்காலி, மேசை எங்கே பார்த்தாலும் கருப்பு மைதான் என் கண்முன்னே தோன்றுகிறது. இதிலிருந்துதான் இந்தப் பூகம்பம் வெடிக்கின்றதா என்று நான் அயர்ந்துவிட்டேன். அந்தப் பயணம் இன்று உலகெங்கும் பரவி, நமது மக்களை இணைத்து, நம் உடன்பிறப்புகள் நம்மை எதிர்த்தாலும், வசைபாடினாலும் அவர்களுக்காகவும் சேர்ந்து உழைக்கும் இந்த உழைப் பிற்கு ஈடு இணை உலகத்திலே நான் எங்குமே கண்ட தில்லை. வாழ்க, பெரியார், வளர்க பகுத்தறிவு!
ஆசிரியர் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து, ‘விடுதலை'யை மேலும் மேலும் சிறப்பிக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!
‘விடுதலை' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற ஒரு தன்னம்பிக்கையை யார் கொடுத்தது?
துரை.ராயப்பன், அபுதாபி
கேள்வி: அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம் நடத்திய மாநாட்டில் தமிழர் தலைவரோடு, நானும் கலந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. ‘விடுதலை' நாளிதழை ஒரு லட்சம் பேரைப் படிக்க வைக்கவேண்டும் என்று சொன்னார்கள். உண்மையிலேயே ஒரு லட்சம் பேரை படிக்க வைக்கவேண்டும் என்பதைவிட, அத்தனை பேரிட மும் நம்முடைய கருத்தை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், மற்ற பத்திரிகைகளைப் போல் வரி விளம்பரத்திற்காக பத்திரிகை நடத்தவில்லை. தந்தை பெரியார் அவர்கள், ‘‘நானே அச்சடித்து, நானே படித்து, நானே பாக்கெட்டில் வைத்துக் கொள்வேன்'' என்று சொன்னதுபோல, எந்த ஒரு பத்திரி கையையுமே உலகத்தில் இதுபோன்று நடத்துவார்களா என்று தெரியவில்லை.
இந்தக் கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபடும் காலத்தில், நிறைய பேர் ‘விடுதலை'யைப் படிக்க ஆரம் பித்திருப்பார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
அய்யா, இந்த வறுமையான ஒரு சூழ்நிலையிலும், உங்களால் மட்டும் எப்படி ‘விடுதலை' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற ஒரு தன்னம்பிக்கையை யார் கொடுத்தது?
ஆசிரியர்: நான் எப்பொழுதுமே பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன். சொந்த புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாதவன்.
பெரியார் தந்த புத்தி என்பது, எந்தவிதமான சோதனை கள் வருகின்றபொழுதும், தடங்கல்கள், தடைகள் வருகின்ற பொழுது இன்னும் வேகமாக இருக்கும். அந்த வகையில்தான் அந்தப் புத்தி பயன்பட்டது.
எனவே, எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல.
தந்தை பெரியாருடைய உறுதி, பெரியாருடைய சிந்தனையிலேயே வளர்ந்த எனக்கு, நான் அமர்ந்திருக் கின்ற இடத்தில் வேறு யார் அமர்ந்திருந்தாலும், பெரியாரி டம் பாடம் கற்றவர்களாக இருந்தால், இந்த முடிவைத்தான் அவர்கள் எடுப்பார்கள்.
எனவே, இது எனக்கு மட்டும் உரிய தனித்தன்மையல்ல. இது பெரியாரின் தத்துவத்தின் சிறப்பு. பெரியாரைச் சுவாசிப்பதனால் ஏற்படுகின்ற துணிவு, ஒரு நல்ல ஆரோக் கியமான முடிவு.
நண்பர் ராயப்பன் அவர்களே, நீங்கள் இன்னொன்றை யும் சொன்னீர்கள். அதாவது, எவ்வளவு பேர் ‘விடுதலை'யைப் படிக்கிறார்கள் என்பதைவிட, எவ்வளவு பேர் நம்முடைய கருத்தை ஏற்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும் என்று.
முதலில் நம்முடைய சரக்கு உள்ளே போய்விட்டால், கருத்து உள்ளே நுழைந்துவிட்டால், அந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும். நிச்சயமாக அதில் பலர் பயன்படுவார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
தன்னந்தனியராகத்தான் இந்த இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கினார். ஆனால், இன்று ‘‘பெரியார், பெரியார்'' என்று அவருடைய மண்டைச் சுரப்பை உலகு தொழக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது அல்லவா -ஆகவே, அந்த நம்பிக்கை நமக்கு உண்டு.
நம் கொள்கையின்பால் இளைஞர்களை ஈர்க்கவேண்டும்!
ரவி, குடவாசல்
கேள்வி: நாம் முன்னெடுத்துச் செல்லக்கூடிய பாதை யில், நமக்கான ஆதரவு என்பது தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் சிறுகச் சிறுகக் குறைந்து வருவதாக நான் அறிகிறேன்.
ஒரு சில அரசியல் இயக்கங்கள், தங்களின் சுயநலம் கருதி, தம் சமுதாய மக்களுடைய பாதிப்பை உணராமல், திராவிட இயக்கங்களைத் தூற்றுவதிலேயே தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருப்பது வருத்தமான ஒரு நிகழ்வு.
நம்முடைய களப்பணி என்பது, இளைஞர்களை எந்த அளவிற்கு நம்மோடு ஈர்த்து, வரவழைக்கவேண்டும் என்பதிலே அதிக ஆர்வம் காட்டவேண்டும் என்று அய்யா அவர்களையும், இயக்கத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள இயக்கத் தோழர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர்: நீங்கள் சொன்ன கருத்து ஏற்கக்கூடிய ஒன்றுதான். இளைஞர்கள் எப்பொழுதுமே கொஞ்சம் அரசியல் ஈர்ப்பு உள்ளவர்கள்தான். பயிரை அறுவடை செய்து களத்து மேட்டுக்குக் கொண்டு வரும்பொழுது சில சேதாரங்கள் ஏற்படத்தான் செய்யும்.
நம்முடைய கொள்கை, மிகவும் ஆழமான கொள் கையாகும். இந்தக் கொள்கையை பலர் புரிந்துகொண்டு தான், நம்முடைய இயக்கத்திற்கு வருகிறார்கள். இளைஞர் களின் புதிய வரவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனாலும், நம்முடைய தோழர்கள் அவர்களைத் தெளிவுபடுத்த, ஆங்காங்கே பயிற்சிப் பாசறைகள், கொள்கை விளக்கங்கள் நிகழ்ச்சிகள் இந்தக் கரோனா காலகட்டத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உங்களுடைய கருத்தைக் கவனத்தில் கொண்டு, இயக்கச் செயல்பாடுகளை வகுப்போம்.
தந்தை பெரியார் அவர்கள் பாராட்டிய
அறிக்கை எது? கலைஞர் அவர்கள்
பாராட்டிய அறிக்கை எது?
தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி
கேள்வி: அய்யாவினுடைய அறிக்கைகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. 9 ஆயிரம் வருமான உச்சவரம்பாக இருந்தாலும், ஆணவப் படுகொலைகள் நடைபெறும் பொழுது பெற்றோர்களுக்காக ஒரு அறிக்கை கொடுத் தீர்கள் அந்த அறிக்கைகள் எல்லாம் மிகப்பெரிய வரலா றாகும்.
கவிஞர் அய்யா அவர்கள்கூட கலந்துரையாடலில் உரையாற்றும்பொழுது, விழுப்புரம் மாவட்டத்திற்கு சங்கராச்சாரியார் பெயர் வைக்கப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அதனைக் கண்டித்து ‘விடுதலை'யில் அறிக்கை எழுதியதும், அது தடுக்கப்பட்டது என்கிற வரலாற்றைச் சொன்னார்.
ஆசிரியர் அய்யாவினுடைய அறிக்கையிலேயே தந்தை பெரியார் அவர்கள் பாராட்டிய அறிக்கை எது? அதேபோல், கலைஞர் அவர்கள் பாராட்டிய அறிக்கை எது? அய்யா?
ஆசிரியர்: பாராட்டியதையெல்லாம் நான் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. அந்தத் தகவல்கள் எல்லாம் ‘விடுதலை'யைப் பார்த்தால் தெரியும்.
யாராவது தாக்கியிருக்கிறார்களா? என்று கேட்டால், அந்தத் தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டிருப் பேன். பாராட்டு என்பது உற்சாகப்படுத்துவதற்கான பணிதான், அதை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல வேண்டிய அளவிற்கு இல்லை. அது அவ்வப்பொழுது மறக்கப்படவேண்டிய ஒரு செய்திதான்.
அதைவிட, நம்முடைய எதிரிகள் எப்படி நம்மை கணிக்கப் போகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அது நாம் செய்யவேண்டிய பணிகளுக்கு அஸ்திவாரமாக இருக்கவேண்டும்.
நீங்கள் சொன்னதில் மிக முக்கியமான ஒரு கருத்து என்னவென்றால்,
ஏற்கெனவே, நம்முடைய பெரியார் பேருரையாளர் இறையனார் இருக்கும்பொழுதும், கு.வெ.கி. ஆசான் ஆகியோர் இருக்கும்பொழுதும் ‘விடுதலை'யில் வருகின்ற அறிக்கைகளிலேயே முக்கியமான அறிக்கைகளை தொகுத்தார்கள்.
அந்த அறிக்கைகளை ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது என்பது மிகவும் முக்கியம். வரலாற்றுக் குறிப்பு களுக்கும், அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது மிகவும் பயன்படும்.
அந்தப் பணி முன்பு தொடங்கப்பட்டு, நிறுத்தப்பட்டு இருக்கிறது. மீண்டும் அது புதுப்பிக்கப்பட உங்களுடைய கருத்து உதவிகரமாக இருக்கும்.
‘விடுதலை'யில் வருகின்ற முக்கியமான அறிக்கைகள் ஒரு நூலாகக் கொண்டு வரப்படும். அந்த நூல் பயனுள்ள தாக இருக்கும்.
நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தவன்; இந்த இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டேன்!
வனவேந்தன், ஓசூர்
கேள்வி: தந்தை பெரியார் அவர்களைப் பார்க்காத எங்களைப் போன்றவர்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு வருவதற்கு, ‘விடுதலை' வாயிலாக இந்த இயக்கத்திற்கு நான் வருவதற்குக் காரணமாக இருந்த ‘விடுதலை' யினுடைய ஆசிரியராக இவ்வளவு காலம் தாங்கள் தொடர்ந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி.
அய்யா அவர்கள் நீண்ட காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.
நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தவன். இந்த இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டேன் என்று சொன்னால், ‘விடுதலை'தான் காரணம் என்பதை நான் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
ஆசிரியர்: வனவேந்தன், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் உங்களு டைய அனுபவம் என்ன? ஏன் அந்த இயக்கத்திலிருந்து வந்தீர்கள்?
வனவேந்தன்: நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்வரை அந்த இயக்கத்தில் இருந்தேன்.
ஆசிரியர்: அந்த இயக்கத்தில் புரிந்து இருந்தீர்களா? புரியாமல் இருந்தீர்களா? எப்படி அந்த இயக்கத்தல் சேர்ந்தீர்கள்?
வனவேந்தன்: விளையாட்டுத் துறை சம்பந்தமாகத்தான் நான் அந்த இயக்கத்தில் சேர்ந்தேன். பிறகு இந்த இயக்கத் திற்கு வந்த பிறகுதான், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினைப்பற்றி நான் தெரிந்துகொண்டன். இவ்வளவு பெரிய அபாயகர மான அமைப்பில் இருந்தோமே, அதிலிருந்து விலகி வந்தது மிகப்பெரிய வாய்ப்பு. அதற்காக ‘விடுதலை'க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்: பரவாயில்லை, உங்களை விடுதலை செய்து விட்டார்கள். விடுதலை பெற்றுவிட்டீர்கள்.
இட ஒதுக்கீடு அனைவருக்கும் சென்று சேரவில்லையே...!
சோமசுந்தரம், அரக்கோணம்
கேள்வி: இன்றைய தினம், மருத்துவ உயர்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பூஜ்ஜியம் என்ற அளவிற்கு அவர்கள் துணிச்சலாகச் செய்கிறார்கள். உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வர்கள் என்று சொல்லிக் கொண்டு, அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்கிறார்கள்; அந்த சமூக அநீதியை எதிர்ப்பதற்கு, இந்தக் கரோனா தொற்று காலகட்டத்தில் போராட்டமோ, கிளர்ச்சிகளையோ நடத்த முடியாமல் இருக்கிறோம்.
மண்டல் கமிஷனை அமல்படுத்த வேண்டும் என்ப தற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியதுபோல, இப்போது நடத்த வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
இட ஒதுக்கீடு அனைவருக்கும் சென்று சேரவில் லையே என்ற ஒரு கவலை எனக்கு இருக்கிறது. அதை நாம் எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம்?
ஆசிரியர்: நண்பர் சோமசுந்தரம் அவர்களுக்கு ஒரு தகவலைச் சொல்லிக் கொள்கிறேன்.
மருத்துவக் கல்விப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு பூஜ்ஜியம் என்ற செய்தி ‘விடுதலை'யின் மூலமாகத்தான் - அறிக்கையின் மூலமாகத்தான் வெளி யில் வந்தது.
உடனடியாக, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலை வர்கள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், மற்ற தோழமைக் கட்சி உணர்வாளர்களும் தெளிவாக அதைப் புரிந்து கொண்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்கள்.
நேற்று நடைபெற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட முதல் தீர்மானமாக இந்தத் தீர்மானம்தான் போடப் பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சினை உத்தரப்பிரதேசம், பீகார் வரை சென்றிருக்கிறது என்றால், நாம் எடுத்த முயற்சியினால்தான்.
தோழர் கோ.கருணாநிதி போன்றவர்கள், அவருடைய அமைப்பின் மூலமாகவும் சரி, திராவிடர் கழகத்தின் மூலமாகவும் சரி இந்தச் செய்திகள் எல்லாம் வெளியில் கொண்டு வந்தவுடன், இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டு இருக்கிறது; உயர்நீதிமன்றத்திலும் வழக்குப் போடவிருக்கிறோம். தெளிவான ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம்.
இந்தக் கரோனா காலகட்டத்திலும், இந்தக் கருத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்குக்கூட பரவியிருக்கிறது. வடநாட்டிலும் இந்த உணர்வு எழுந்திருக்கிறது.
இந்த அநீதியை அவர்கள் துணிவாகச் செய்கிறார்கள் என்றால், ஆட்சி அவர்களிடம் இருக்கிற காரணத்தினால் தான். ஒரு பக்கத்தில் நீதிமன்றங்களையும் தங்கள் வயப்படுத்திக் கொண்டோம் என்ற ஓர் அசாத்தியத் துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டித்தான் நாம் எதிர்நீச்சல் அடித்தாக வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
ஆகவேதான், மக்கள் மன்றம் இறுதியான தீர்ப்பை அளிக்கும் என்பதற்காக நம்முடைய பிரச்சாரத்தைச் செய்து கொண்டு இருக்கிறோம்.
எனவேதான், போராட்டத்தை நடத்த வேண்டிய காலகட்டத்தில் போராடுவோம்; அதற்கு முன்பு, வாதாட வேண்டிய இடங்களில் வாதாடி, வெற்றி பெறுவோம்.
இப்பொழுதே நாம் பெரிய அளவில் ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பது முதல் கட்டம்.
இந்த முதல் கட்டத்தில் நாம் வெற்றியடைந்திருக்கிறோம். அடுத்த கட்டத்தை நோக்கி நாம் செல்லவேண்டும். அதற்கு ‘விடுதலை'யும் காரணமாக இருந்தது. அதன் மூலம்தான் இந்தப் பிரச்சாரமே மிகத் தெளிவாக, மற்ற கட்சித் தலைவர்களுடைய கருத்துகளைக்கூட பெற்று, நேற்று விரிவான அளவிற்கு முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, நிச்சயமாக இதற்குரிய பலன் கிடைக்கும். நம்முடைய போராட்டத்திற்கு எப்பொழுதும் கொஞ்சம் காலம் தாழ்ந்தாவது விடியல் கிடைக்கும், விடை கிடைக்கும், வெற்றி கிடைக்கும் - இதுதான் அதனுடைய அடிப்படையாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment