முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
தமிழர் தலைவர் ஆசிரியர் தந்தை பெரியாரின் தலைமைத்துவம் பற்றிய சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நிகழ்த்திய போது தந்தை பெரியாரின் தலைமைத்துவத்தை மட்டுமல்ல, எத்தனை எத்தனை துன்பங்கள், துயரங்கள், காட்டாறுகள், கடும்புலிகள் வாழும் காட்டைக் கடப்பது போல், கல்நெஞ்சக்காரர் களின் கல்லடி, சொல்லடி, அழுகிய மூட்டை வீச்சு. அதில் அசிங்க மனிதர்கள் அசிங்கத்தை வைத்து வீசி யது, செருப்பு மாலைகளைத் தோரணமாகக் கட்டியது, வீசியது இத்தனையும் சகித்துக்கொண்டு, பொறுத்துக் கொண்டு தொண்டு செய்து பழுத்த பழம் அவர் என் பதை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்தோம்.
ஆசிரியர் தாம் உரைத்தவை அத்தனையும் உண்மை விளக்கங்கள் என்பதை அடுக்கடுக்கான ஆதார வெளிச்சம், விளக்கொளி கொண்டு மெய்ப் பித்தார்.
1926இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில் அக்கொள்கையைப் பரப்புவதற்கு அவர் மேற்கொண்ட கடின உழைப்பை வேறு எவராலும் செய்திட இயலாது என்பதற்கான - தமிழர் தலைவரின் சுவையான கருத்துக்கு அடிநாதமாக விளங்கும் சான்று ஒன்றைக் காண நேரிட்டது.
1959இல் தந்தை பெரியார் காலத்திலேயே 'நான் கண்ட பெரியார்' எனக் குடந்தை ஆர்.சி.வெங்கட்ராமன் எழுதிய நூலில் கிடைத்தது. அந்தச் சான்று:
தான் மேற்கொண்ட எந்தக் கொள்கையும் தன் காலத்திலேயே நிறைவேறிடக் கண்டு மகிழ்ந்த மூத்த தலைவர் - தன் போராட்டம் வெற்றி பெறக் கண்ட உலகிலேயே ஒரேதலைவர் தந்தை பெரியார் தவிர வேறு எவரும் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலத்தில் சைமன் கமிஷன் எனும் ராயல் கமிஷனுக்கு இந்தியாவின் மற்றையப் பகுதிகளில் எதிர்ப்பலை பலமாக வீசிய வேளையில், சென்னை மாநிலத்தில் அதை ஒன்றுமில்லாமல் வரவேற்பலையாக மாற்றியவர் பெரியார். சைமன் கமிஷன் எதிர்ப்பை எப்படி உறுதியாகத் தனிமனிதராய்ப் பெரியார் முறியடித்தார் எனும் வரலாற்றுச் செய்தி இது.
சைமன் கமிஷனை வரவேற்கக் கூடாதென காங் கிரசுக் கட்சியினரும் சுயராஜ்யக் கட்சியினரும், கிளர்ச்சி செய்து கொண்டிருந்த வேளை அது.
தந்தை பெரியார் அன்றையக் காங்கிரசுக் கூட்டத் தைத் துணிவுடன் எதிர்த்துச் சைமன் கமிஷனை வர வேற்று வாக்கு மூலமும் நாம் கொடுக்க வேண்டுமெனக் கிளர்ச்சி தொடர்ந்தார்.
சென்னையில் கூட்டங்களைக் கூட்டிச் சொற்பொழி வாற்றினார். அத்துடன் தம் சொந்தச் செலவில் பல துண்டு வெளியீடுகளை அச்சடித்து வழங்கினார்.
தந்தை பெரியார் சைமன் குழுவை ஏன் எதிர்க்க வில்லை என்பதற்கான விளக்கத்தை இளைய தலை முறையினர்க்கு இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்த மாக அமையும். காங்கிரசு இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களைத்தான் எதிர்த்தார். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் எதிர்த்தது. ஆனால் இந்திய விடுதலையை எதிர்க்கவில்லை.
உண்மையில் தன் மனைவி, தங்கையுடன் விடுதலைப் போரில் பங்கேற்ற தலைவர் ஆவார். 1925இல் காங்கிரசை விட்டு வெளிவந்த பின்பும் கூட காந்தியை 1927இல் பெங்களூரில் சந்தித்து அவர் வர்ணாசிரமத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை விடவில்லை என உணர்ந்து அதன் பின்னே காந்திய ஆதரவைக் கைவிட்டவர் அவர்.
1930இல் தெளிவாகச் சொன்னால் "வெள்ளைக் காரர்கள் நாளைக்கு இந்த நாட்டை விட்டுப் போக வேண்டும் என்று சொன்னால் இன்றைக்கே போக வேண்டும் என்று சொல்கிறவர்கள் நாங்கள்" என இந்திய விடுதலை வேட்கையை எவரையும் விடத் தீவிரமாக வெளியிட்டவர் அவர்.
ஆனால் இந்த உண்மைகளை முற்றிலுமாக மறைத்து விட்டு, ஒளித்து விட்டுச் சங்கிகள், எச்சைகள், வரலாறு தெரியாததுகள் தந்தை பெரியார் விடுதலைக்கு எதிரானவர், வெள்ளைக்காரர் நாட்டை விட்டுப் போகவேண்டாம் என்று சொன்னவர், ஆங்கிலேய அடிவருடி, வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர் என்று பச்சைப் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனர். இவை திட்டமிட்டுப் பரப்பிய உண்மைக்கு மாறான அவதூறுகள். அவற்றில் ஒன்றுதான் சைமன் கமிஷனை வரவேற்றார், ஒத்துழையாமையைச் சட்ட மறுப்பை எதிர்த்தார் என்பதான குற்றச்சாட்டுகள்.
ஆனால் அவற்றை ஏன் எதிர்த்தார்? அந்த எதிர்ப்பிலும் அதீத ஆர்வம் காட்டினார். காமா சோமா என்று ஒப்புக்கு எதிர்க்கவில்லை. நியாயமான காரணங் களின் அடிப்படையிலானவை. அவை ஆங்கிலேய ருக்கு ஆதரவு காட்ட அன்று! எனவே அவை குறித்து விளக்கமாகப் பதிவு செய்ய வேண்டியது என் போன்ற வரலாற்று ஆய்வாளர் பொறுப்பு.
1920இல் மாண்டேகு செம்சு போர்டு சீர்திருத்தங்கள் செயல்முறைக்கு வந்தன. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பின் இவை குறித்து ஆய்ந்திடக் குழு ஒன்று அமைத்திடுவர் எனக் கூறியிருந்தனர். எனவே 1927இல் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு விலகிய பின் சர். ஜான் சைமன் என்பார் தலைமையில் எழுவர் கொண்ட குழுவை இங்கிலாந்து அரசு அமைத்தது. இந்திய விடுதலையின் போது இங்கிலாந்தின் தலைமை அமைச்சராக விளங்கிய அட்லியும் அந்த எழுவரில் ஒருவர். அந்தக் குழுவினர்தான் இந்திய நிலைமைகளை ஆய்வு செய்ய 1928 பிப்ரவரி 3ஆம் நாள் கப்பலிலிருந்து பம்பாய்க்கு வந்து இறங்கினர்.
அந்தக் குழுவை அண்ணல் காந்தியும், அவருடைய காங்கிரசும் மிகக் கடுமையாக எதிர்த்தனர். 'சைமனே திரும்பிப் போ', 'SIMON GO BACK' என முழங்கினர். இம்முழக்கத்தை இந்தியாவெங்கும் பரப்பினர். சைமன் குழுவை எதிர்ப்பது என்பது அன்றைய நாளின் தேச பக்திக்கு அணியும் அடையாள அட்டை போன்ற அறிவிப்பாயிற்று.
ஏன் எதிர்த்தார்கள்? அந்த எழுவரில், இந்திய நிலைமையை ஆய்வு செய்ய வந்த குழுவில் எவரும் இந்தியர் இல்லை என்பதே முதன்மைக் காரணம் என்றனர். பார்த்தால் இன்றும் கூட நியாயமானது என்று தோன்றலாம். ஆனால் அக்காரணம் நியாயமானது இல்லை, முட்டாள்தனமானது என்று கண்டுபிடித்த ஒரே அறிவாளி தந்தை பெரியார். ஈரோட்டுக் கண் ணாடி எதையும் தெளிவாக ஆராயக் கூடியது என்பது இதிலும் வெளியாகும் உண்மையே ஆகும். இன்னொரு தலைவர் என்று காட்ட வேண்டுமாயின் அண்ணல் அம்பேத்கர்.
சைமன் குழுவை ஏன் எதிர்க்கக்கூடாது அல்லது எதிர்த்திட வேண்டியதில்லை என்பது குறித்துத் தந்தை பெரியார் ஒன்றல்ல, இரண்டல்ல பல கட்டுரைகள் தீட்டினார். ஆங்கிலேய அரசின் ஏகபோகத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் அமைத்துள்ள சைமன் குழுவை மட்டும் எதிர்ப்பதென்பது கொஞ்சமும் பொருளற்றது என்னும் உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு டைத்தார். இதைப் பார்ப்பன அரசியல் தந்திரம் எனப் பகன்றார்.
"இந்தப் பார்ப்பன அரசியல் தந்திரத்தையும் பின் பற்றுவதும் அவர்களது இயக்கங்களை நாம் பின்பற்று வதும், பார்ப்பனர் அல்லாத சமூகத்தின் தற்கொலையே ஆகும்" என்று தெளிவு பட உரைத்தார் எனில் அதை எதிர்க்க எவ்வளவு உழைப்பைக் சிந்தியிருப்பார், சிந் தினார் என்று காட்டுகிறது குடந்தை ஆர்.சி.வெங்கட் ராமன் அளிக்கும் தகவல்.
தந்தை பெரியாரின் இக் கூற்று புனைவோ, மிகைப் படுத்தியதோ அன்று, மிகப் பேரளவு உண்மையின் பாற்பட்டது.
காங்கிரசுக் கட்சி 1930 வரையிலும், நேரு தீர்மானம் வரும் வரையில் எந்த ஒரு மாநாட்டிலும் இந்தியாவிற்கு விடுதலை வேண்டும், கொடுங்கள் விடுதலை, நாட்டை விட்டுச் செல்லுங்கள் என்று கேட்கவேயில்லை. இங்கி லாந்து அரசியை, இங்கிலாந்து அரசைப் பாராட்டிப் பலப்பல மாநாடுகளில் காங்கிரசு தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறது. ஆங்கிலேய அரசுக்கு அடங்கிய சுயாட்சி தான் காங்கிரசு தோன்றிய அடிநாள் முதல் எழுப்பிய கோரிக்கை. அதாவது ஆங்கிலேயர் ஆளட்டும் என் பதுதான் அவர்கள் ஏற்றது.
அப்படி இருக்கையில் அவர்கள் ஒரு குழுவை அனுப்பியதில், அதில் இந்தியர் இல்லாததில் எதிர்ப்ப தற்கோ, ஏமாற்றம் அடைவதற்கோ என்ன இருக்கிறது? என்பதே பெரியாரின் சிந்தனை ஆகும்.
தொடரும்
No comments:
Post a Comment