பெரியார் அறக்கட்டளையை முடக்கிய வழக்கில் வெற்றி பெற்றது இமாலயச் சாதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 5, 2020

பெரியார் அறக்கட்டளையை முடக்கிய வழக்கில் வெற்றி பெற்றது இமாலயச் சாதனை!

காணொலிமூலம் வாசகர் கேள்விகளுக்கு ‘விடுதலை' ஆசிரியர் அளித்த பதில்



சென்னை, ஜூலை 5- நான் எப்பொழுதுமே பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன். சொந்த புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாதவன். பெரியார் தந்த புத்தி என்பது, எந்தவிதமான சோதனைகள் வருகின்ற பொழுதும், தடங்கல்கள், தடைகள் வருகின்றபொழுதும் இன்னும் வேகமாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


‘விடுதலை' வாசகர்களின் கேள்வியும் -


ஆசிரியரின் பதிலும்!


கடந்த 1.6.2020 அன்று மாலை  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே உரையாற்றி முடித்ததும், வாசகர்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக் கும் பதில் அளித்தார்.


அக் கேள்வி - பதிலின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


நமக்கென்று ஒரு தொலைக்காட்சியைத் தொடங்குவீர்களா?


பன்னீர்செல்வம்


கேள்வி: வணக்கம் அய்யா. கலைஞரின் வரலாறு, ‘‘நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் தொலைக்காட்சியில் தொடராக வருவதுபோல, பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றையும், திராவிடர் கழகம் நடத்திய போராட்டத் தால், சாதித்த சாதனைகளை மக்களுக்கு, இன்றைய இளை ஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அய்யாவின் அடிச் சுவட்டில் பயணிக்கும் ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியார் பெயரில் தொலைக்காட்சியை ஆரம்பித்து, அந்தத் தொலைக்காட்சியில், நம்முடைய ஆசிரியரின் குரலையும், நம்முடைய வாழ்வியல் சிந்தனையின் குரலைக் கேட்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்று உங்கள் மாணவனாகிய பன்னீர்செல்வம் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஆசிரியர்: பெரியார் வலைக்காட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி, ஒரு தொலைக்காட்சியினுடைய முழு பயன் எப்படி கிடைக்குமோ, அதுபோன்று செய்யக் கூடிய பணிகளை யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.


தனியாகத் தொலைக்காட்சியை நடத்த முடியாது. அதில் பொருளாதாரச் சிக்கல்கள் மட்டுமல்ல, பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.


ஆகவே, பெரியார் வலைக்காட்சியை விரிவாக்கி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அதில் உங்களுடைய கருத்துகள் நிச்சயமாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.


பெரியார் அறக்கட்டளையை முடக்கிய வழக்கில்


வெற்றி பெற்றது இமாலயச் சாதனை!


வழக்குரைஞர் அமர்சிங், தஞ்சாவூர்


கேள்வி: நாம் ‘விடுதலை' நாளிதழை விளம்பரம் இல்லாமல் நட்டத்தில்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம், பெரியாருடைய அறக்கட் டளைதான். அந்த அறக்கட்டளையை எமர்ஜென்சி காலகட்டத்தில் முடக்குவதற்காக, பார்ப்பன ஆதிக்கம், அது தனியார் வருமானம் என்று சொல்லி முடக்கினார்கள். அதற்காக வழக்குத் தொடுத்து, நம் அறக்கட்டளை வெற்றி பெற்றது என்பது மிகப்பெரிய இமாலய சாதனை. அய்யா அவர்கள் அந்த வழக்கில் எப்படி சந்தித்து, வெற்றி பெற்றீர்கள் என்பதை விளக்கமாகச் சொன்னால், இயக்கத் தோழர்களுக்குப் பயன்படும். நான் மிகுந்து பாராட்டுவது, வியப்பது அதுதான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆசிரியர்: மிக முக்கியமான ஒரு காலகட்டம் அது. திட்டமிட்டு அன்றைக்கு பெரியார் அறக்கட்டளை முடக்கப்பட்டது.


அய்யா காலத்தில், 15 லட்சம் ரூபாய் வரி போட்டார்கள். இரண்டு வகையில் வரி போட்டு அறக்கட்டளையை அழிக்கவேண்டும் என்று நினைத்தார்கள்.


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அய்யா பெயரில் ஒரு வரி விதித்தார்கள். இன்னொன்று, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனம் என்ற பெயரில் வரி விதித்து, இரண்டு வரிகளை விதித்தார்கள்.


அதற்குக் காரணம், ஒரு வழக்கிலிருந்து வெளியே வந்தாலும், இன்னொரு வழக்கு நிற்கும் என்று நினைத் தார்கள். அய்யா காலத்தில் 15 லட்சம் ரூபாய் வரி என்றும், அம்மா காலத்தில் 30 லட்சம் வரி போட்டார்கள்.


15 லட்சம் வரி போட்டதும், ‘உண்மை' முதல் இதழில் அய்யா அவர்கள், மன சங்கடத்தோடு எழுதியிருப்பார்கள்.


மீண்டும் அம்மா காலத்தில் 60 லட்சம் ரூபாய் வரி என்றாக்கி, நான் பொறுப்பேற்ற காலத்தில் 80 லட்சம் ரூபாய் வரி போட்டார்கள்.


நெருக்கடி காலத்தில், நம்முடைய சொத்துக்களை எல்லாம் முடக்கினார்கள் வருமான வரித்துறையினர்.


அந்தத் துறையில் உள்ள பார்ப்பன அதிகாரி ஒருவர் மிக சாமர்த்தியமாக என்ன சொன்னார் தெரியுமா?


‘‘நீங்கள் இந்த வழக்கில் வெற்றி பெறவேண்டும் என்றால், ‘விடுதலை'யை நிறுத்திவிடுங்கள்; கல்வி நிறு வனங்களை மட்டும் நடத்துங்கள்'' என்றார்.


இதிலிருந்து, அந்தப் பார்ப்பனருடைய நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரிந்தது.


பெரியார் அறக்கட்டளையின் நோக்கம் என்னவோ அதைத்தான் நாங்கள் செய்வோம் என்றோம்.


வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்பொழுது, வேடிக்கை யான ஒரு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வைத்தான் கேட்கிறார் என்று நினைக்கிறேன், நம்முடைய அமர்சிங் அவர்கள்.


டிரிபியூனல் என்பது அய்க்கோர்ட்டிற்கு முன்கட்டம். மூன்று, நான்கு கட்டம் தாண்டி, எல்லா கட்டத்திலும் உறுதி செய்துவிட்டார்கள். வாடகையை அட்டாச் செய்தார்கள்.


கடைசியாக டிரிபியூனல் வழக்கு வரும்பொழுது, டிபார்ட்மெண்ட் வழக்குரைஞரை வைக்காமல், வெளியி லிருந்து ரங்கசாமி அய்யங்கார் என்ற வழக்குரைஞரைக் கொண்டு வந்தார்கள்.


விசாரணைக்கு வந்த டிரிபியூனல் உறுப்பினர்கள் இரண்டு பேருமே உயர்ஜாதிக்கார பார்ப்பனர்கள். இருந் தாலும் நேர்மையாக நடந்துகொண்டார்கள்.


வழக்கு தொடங்கியதும், எங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி இருந்தது.


இரண்டு பார்ப்பன நீதிபதிகள் அமர்ந்திருக்கிறார்கள். வருமான வரித்துறையின் சார்பாக, நமக்கு எதிராக வாதாடக் கூடிய பிரபல சீனியர் வழக்குரைஞர் ரங்கசாமி அய்யங்கார் அவர்கள்,


பெரியாருடைய கடைசிப் பேருரை - தியாகராயர் நகரில் ஆற்றிய பேருரையில், ‘‘கடவுள் ஒழிக, பார்ப்பான் ஒழிக, காந்தி ஒழிக, காங்கிரஸ் ஒழிக'' இந்த அய்ந்து கொள்கையும் சுயமரியாதைக் கொள்கைகள் என்று பெரியார் பேசியதை, நாம் போட்ட புத்தகத்தை எடுத்துச் சொல்லி, இது எப்படி அறக்கட்டளையாகும் என்றார்.


நமக்காக வாதாட வந்த வழக்குரைஞர் பெயர்


உத்தம ரெட்டி என்பவர். அவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக இருந்து, பிறகு பிரபல வழக்குரைஞராக இருந்தவர். ஆந்திராவில், நாகிரெட்டிக்குச் சொந்தக்காரர். அவர் தெலுங்கர் என்பதால், தமிழ் மொழி அவருக்கு அதிகமாகத் தெரியாது.


அய்யாவைபற்றியோ, நம்முடைய இயக்கத்தைப் பற்றியோ அதிகமான விவரம் அவருக்குத் தெரியாது.


டில்லியில் இருந்தார், சென்னைக்கு வந்தபொழுது, நம்முடைய இயக்கத்தைப்பற்றி தெரிந்துகொண்டார். என்னைப்பற்றியும் அவருக்கு முழுமையாகத் தெரியாது. அவருடைய கிளையன்ட் என்ற முறையில்தான் தெரியும்.


வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபொழுது, அவர் என்னிடம், இதுபோன்ற புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறீர்களா? என்றார்.


ஆமாம் என்றவுடன்,


ஏன் அப்படி போட்டீர்கள்? நம்முடைய வழக்கே அடிபட்டுப் போய்விடுமே! நீதிபதிகள் இரண்டு பேருமே பார்ப்பனர்களாயிற்றே என்று சொன்னார்.


இப்படியெல்லாம் பேசினாரா? பெரியார் என்று கேட்டார்.


ஆமாம் என்றவுடன்,


அவர் மனம் சோர்ந்து போய், வழக்கில் நாம் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்தார்.


வழக்கு விசாரணையின்போது, ஒரு பிரேக் இருந்தது. அப்பொழுது நாங்கள் டிபன் சாப்பிடுவதற்காக டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றோம். சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும்பொழுது நான் சொன்னேன்,


அவர் ஒரு பிரபல வழக்குரைஞர் - அவரிடம் நான் மிக அடக்கமாகச் சொன்னேன்.


பெரியார் பேசியது உண்மைதான். அவர் திராவிடர் கழகத் தலைவர் என்ற முறையில் பேசியிருக்கிறார். பல விஷயங்களில், பல ரோல்கள் உண்டு. நமக்கு வேண்டியது என்னவென்றால், பெரியார் ஒரு தேசியத் தலைவர். சுதந்திரப் போராட்டத்திலும், ஜாதி ஒழிப்புப் போராட்டத் திலும் பங்கேற்றவர்.


மத்திய அரசாங்கம் பெரியாரைப்பற்றி


என்ன நினைக்கிறது?


நூற்றாண்டு விழாவிற்காக அஞ்சல் தலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய பணிகள், பெண் கல்வி, ஜாதி ஒழிப்புப் பணி - இதுதான் பெரியாரைப் பற்றி மத்திய அரசாங்கத்தினுடைய கருத்து.


வெளியில் அவர் ஆயிரம் பேசுவார். அது வேறு தளம்; இது வேறு. அதையும், இதையும் போட்டுக் குழப்பக் கூடாது.


உடனே அந்த வழக்குரைஞர், ‘‘ஸ்டாம்ப் போட்டு இருக்கிறார்களா? அந்த ஸ்டாம்ப் இருக்கிறதா?'' என்று கேட்டார்.


இருக்கிறது என்றவுடன்,


சரி, மாலையில் அதுபற்றி பேசுவோம் என்றார்.


பிறகு, ஸ்டாம்ப்பை எடுத்துக் கொடுத்தோம்.


இந்தக் கோணத்தில்தான் பெரியாரைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் அய்யா என்றேன்.


பெரியாரைப்பற்றி மத்திய அரசாங்கம் என்ன கருத்து வைத்திருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். அன் றைக்கு மத்தியில் இருந்தது ஜனதா அரசு.


பெரியார் அவர்கள், யார் பணம் கொடுத்தாலும், அவரு டைய டைரியில் எழுதி வைப்பார். அதை வங்கியில் போடுவார். ஆகையால், பெரியார் அவர்கள், வருமா னத்தை மறைத்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றேன்.


பெரியாருடைய டைரியில் இருந்த குறிப்புகளை யெல்லாம் எடுத்துக் கொடுத்தேன்.


மறுநாள் வழக்கு விசாரணையின்போது, இவர் விளக் கிச் சொன்னார். நீதிபதிகளும் காது கொடுத்து கேட்டார்கள்.


பெரியார் அவர்கள் கல்யாணத்தில் ஒரு மாதிரி பேசுவார்; நீத்தார் நினைவு நாளில் வேறு மாதிரி பேசுவார். இது ஒரு பொதுக்கூட்டம், அதில் ஒரு கருத்தோடு பேசுகிறார். அதை இங்கே சொல்லக்கூடாது.


அதிகாரப்பூர்வமாக மத்திய அரசினுடைய கருத்து என்ன? என்று நீதிபதி கேட்டார்கள்.


பெரியார் ஒரு தேசியத் தலைவர் என்பதால், பெரியார் அவர்களுடைய நூற்றாண்டில், மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு இருக்கிறார்கள்.


5 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் என்று நன்கொடை வாங்கியதைக்கூட அவருடைய டைரியில் எழுதியிருக் கிறார் என்று பெரியாருடைய டைரியைக் காண்பித்தார் வழக்குரைஞர்.


அந்த டைரியைப் பார்த்த நீதிபதிகள், கையெழுத்துப் புரியவில்லையே என்றார்கள்.


உடனே நம்முடைய வழக்குரைஞர், ‘‘பெரியாருடைய செகரட்டரி இருக்கிறார்; அவர் விளக்கிச் சொல்வார்'' என்றவுடன்,


என்னை அழைத்துப் பேசச் சொன்னார்கள். நான் அந்த டைரியைப் பார்த்து விளக்கிச் சொன்னேன். தொண் டர்கள் நன்கொடை கொடுப்பார்கள். கல்யாணத்திற்கு அழைக்கும்பொழுது, 50 ரூபாய் என்றால், 25 ரூபாயை முன் பணமாகக் கொடுத்துவிடுவார்கள்; கல்யாணம் முடிந்ததும், மீதி 25 ரூபாயைக் கொடுப்பார்கள். அதை யெல்லாம் பெரியார் அவர்கள் டைரியில் எழுதி வைத் திருக்கிறார். வங்கியில் போடப்பட்ட பண விவரத்தையும் இந்த டைரியில் எழுதி வைத்திருக்கிறார் என்று விளக்கிச் சொன்னவுடன்,


நீதிபதிகள், வழக்குரைஞரைப் பார்த்து, வருமானத்தை மறைத்திருக்கிறார் என்று வருமான வரித்துறை சொல் கிறதே? என்றார்கள்.


எப்பொழுது பெரியார் அவருடைய தொழிலை விட்டார் என்று கேட்டார்கள்.


1920 ஆம் ஆண்டிலேயே வியாபாரத்தை விட்டு விட்டார் என்றேன்.


அப்படி இருப்பவரைப்பற்றி, வருமானத்தை மறைத் தார் என்று வருமான வரித்துறை சொல்வது தவறு என்று நீதிபதிகள் சொன்னார்கள்.


அப்பொழுதுதான் நம்முடைய வழக்குரைஞருக்கும் நம்பிக்கை வந்தது.


வழக்கு விசாரணை முடிந்தவுடன், அவர்களுடைய தீர்ப்பில், 80 லட்சம் ரூபாய் என்று வரி விதித்ததை தள்ளுபடி செய்து, இது அறக்கட்டளைதான் என்று முடிவு செய்தார்கள்.


அவர்களுடைய தீர்ப்பின் முதலில், மத்திய அரசு ஸ்டாம்ப் போட்டதைப் பதிவு செய்திருந்தனர். பெரியார், ஆயிரம் சொல்லியிருப்பார், அதைப்பற்றியெல்லாம் கருத்துத் தேவையில்லை என்று தெளிவாகச் சொல்லி, இது அறக்கட்டளைதான் என்று தெளிவாக எழுதினார்கள்.


அதற்குமேல் அய்க்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை முயற்சி செய்த பொழுது,


இராசரத்தினம் அய்யா போன்றவர்கள் அங்கே அதிகாரிகளாக இருந்தார்கள். அவர்கள், ‘‘இந்த வழக்கு சட்டபூர்வமாக வெற்றி பெறாது; தோல்வி அடைவீர்கள்'' என்று வருமான வரித்துறைக்குச் சொன்னார்கள்.


அய்க்கோர்ட்டில் அவர்களுடைய வழக்கை அனுமதிக்கவில்லை. பிறகு, அதே கிரவுண்டில், திருப்பிப் போட்டுவிட்டார்கள்.


ஆகையால், நமக்கு வெற்றி வந்தது!


நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா, ‘விடுதலை'யில் துரோகம் என்று. பழைய ஆசிரியர் குருசாமி, வேதாசலம் போன்றவர்கள்தான் வருமான வரித்துறைக்கு எழுதிப் போட்டவர்கள். அதிலிருந்துதான் அந்த நடவடிக்கையே தொடங்கியது. அதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு வந்தது.


அதுதான் அய்யா காலத்தைத் தாண்டி, அம்மா காலத்தைத் தாண்டி, என்னுடைய காலத்தில் வந்தது.


நான் இன்றைக்கும் மனப்பூர்வமாக ஏதோ ஒரு சிறிய காரியத்தை முடித்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியடைகிறேன் என்றால், இந்த அறக்கட்டளையைக் காப்பாற்றியதுதான்.


இன்றைக்கும்கூட பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார் கள் என்றால், பெரியார் அறக்கட்டளையை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.


அதற்குரிய பணிகளை சட்டபூர்வமாக, தெளிவாக, நேர்மையாக நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதன் சார் பாகத்தான் ‘விடுதலை' நாளிதழ் வெளிவந்து கொண்டிருக் கிறது. ஆகவே, அந்த வருமானம் இல்லையென்றால், ‘விடுதலை'யினுடைய நட்டத்தைச் சமாளிக்கமுடியாது.


பெரியாருடைய சிந்தனை எவ்வளவு ஆழமான சிந்தனை என்றால், இராமச்சந்திர குகா என்ற வரலாற்றுப் பேராசிரியர் எழுதியிருக்கிறார்.


மற்ற தலைவர்களுக்கும், பெரியாருக்கும் என்ன வேறுபாடு என்று சொன்னால்,


பெரியார் மிகத் தெளிவான அளவிற்கு, ஓர் அமைப்பை உருவாக்கினார். வெறும் கொள்கைகளை மட்டும் சொல்லவில்லை. அந்தக் கொள்கைகளைப் பரப்பு வதற்கு ஓர் அமைப்பை உண்டாக்கினார்.


எனவே, கொள்கை - தலைவர் - அமைப்பு. அந்த அமைப்புக்கு ஆதாரம் - பொருளாதாரம் மற்றவைகள்.


வருமான வரித்துறை வாடகையை அட்டாச் செய்து, நெருக்கடி காலத்தில் நமக்குத் தொல்லை கொடுத்தபோது, நாங்கள் வெளியே வந்ததும், அதிகாரிகளைப் போய்ச் சந்தித்து சொன்னோம்.


நீங்கள் பெரியார் அறக்கட்டளையை முழுமையாக எடுத்துக்கொண்டாலும், மக்களிடம் சென்று துண்டை விரித்துப் போட்டு, வசூல் செய்தாவது நடத்துவோமே தவிர, ‘விடுதலை'யை நிறுத்திவிடமாட்டோம்.


இதில் கைவைத்துவிட்டால், எல்லாம் முடிந்துபோய் விட்டது என்று நினைக்கவேண்டாம்.


எளிய மக்களுடைய ஆதரவுடன், ஒரு ரூபாய் வசூல் செய்துகூட ‘விடுதலை'யை நடத்துவோம் என்கிற உறுதியைக் காட்டினோம்.


ஆகவே, அந்த உறுதிதான், நாளைக்கும் நமக்கு நிற்கக்கூடியது.


பல காலகட்டங்களை, பல நெருக்கடிகளை நாம் தாண்டியிருக்கிறோம் என்பதற்கு இதுதான் அடை யாளம். இன்றைக்கு நம்முடைய பயணம் தொடர்ந்து நடக்கிறது  - நாளைக்கும் இதுபோன்ற சங்கடங்கள் வரலாம் - அதையும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம்.


(தொடரும்)


No comments:

Post a Comment