'வருணக் காப்பே அடிப்படை நோக்கம்'! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 9, 2020

'வருணக் காப்பே அடிப்படை நோக்கம்'!

பகவத் கீதைபற்றி கழகத் தலைவர் காணொலி சிறப்புரை - 3


* கலி. பூங்குன்றன்


பகவத் கீதையின் ஆய்வுச் சொற்பொழிவினை (3) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (8.7.2020) மாலை காணொலி மூலம் 40 மணித்துளிகள் ஆய்வுரை நிகழ்த்தினார்.



பகவத் கீதையில் சொல்லப்படும் தர்மம் என்பது தமிழர் பண்பாட்டுக்குரிய ‘அறம்‘ என்ற பொருளில் அல்ல! அவர்கள் கூறும் தர்மம் என்பது குலதர்மம் - வருணதர்மம் - சனாதன தர்மம் என்பவையே. புரியும்படி சொன்னால் - ஜாதி தர்மம் என்பதுதான். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த ஜாதி தர்மம் - எந்த ஜாதியில் ஒருவன் பிறந்தானோ  அந்த ஜாதிக்குரிய தொழிலைச் செய்வதுதான் சரியானது - அதில் மாற்றம் என்பதே கிடையாது - கூடாது என்பதுதான் பகவத் கீதை-அந்தத் தர்மத்தைச் சொல்ல வந்தவன்தான் கிருஷ்ணன்.


நான்கு வருணதர்மத்தையும் படைத்தவன் நான் - நானே என்று திருப்பித் திருப்பி அழுத்தி அழுத்தி அவர்கள் சொல்லுவது அதையேதான்.


வைணவரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் 1952ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது அந்த வருண தர்ம குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததை - இதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.


தந்தை பெரியார் அந்த ஜாதித் தர்மத்தை, வருண தர்மத்தை ஒழிக்கவே களத்தில் குதித்தார். இந்தப் போராட் டம் புத்தர் காலம் முதல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. ஆச்சாரியார் ஓரிடத்தில் பச்சையாகவே கூறுகிறார்.


‘Ôதேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டின் நிலை”


(திருவொற்றியூர் 18.9.1953) என்று கூறினாரே!


தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?


“தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதி முறையைக் கடவுளின் பெயரால் வலியுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண  பஜனையும் என்பது நினைவிருக்கட்டும்.


கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும், ஒழுக்கத் தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ளபோது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, ‘எல்லாம் பகவான் செயல்’ என்றோ, ‘நான் ஏன் பார்ப்பனன் என்பது கிருஷ்ண னிடம் கேட்டுத் தெரிந்துகொள்’ என்றோ சுலபமாகப் பதில் கூறிடலாம். ஆனால், குறளைப் படித்தாலோ, தர்மத்தின்படி நடக்க வேண்டும், பித்தலாட்டம் செய்ய முடியாது; பித்த லாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டி ருக்க முடியாது” என்று தந்தை பெரியார் கூறுகிறார் (‘விடுதலை’ 5.11.1948).


(ஆனால் பார்ப்பனர்கள் - ஏன் சங்கராச்சாரியார் உட்பட, கீதையின் தமிழாக்கமே திருக்குறள் என்று சொல்லுவது எத்தகைய பித்தலாட்டமும் முரண்பாடும்?)


குருச்சேத்திரப் போரின்போதுகூட என்ன நடந்தது?


படைகள் எதிரும் புதிருமாக நிற்கின்றன. போரிடுவதற்கு அர்ச்சுனன் தயங்குகிறான். எதிரே என் உற்றார், உறவி னர்கள் இருக்கிறார்களே, அவர்களை எப்படி நான் கொல்லுவது? என்று கூறும் போது பகவான் கிருஷ்ணன் என்ன சொல்லுகிறான், போரிடுவது சத்திரியனாகிய உனது யுத்த தர்மமே என்கிறான்.


போரில் ஆண்கள் மரணித்தால் பெண்கள் விதவை யாகி விடுவர் - பிறகு வர்ணக்கலப்பு ஏற்பட்டு விடுமே என்கிறான் - அர்ச்சுனன்.


இதைப்பற்றி கீதையில் அர்ச்சுனனுக்கும் - கிருஷ்ணனுக்கும் நடக்கும் உரையாடலைக் கழகத் தலைவர் ஆதாரத்துடன் எடுத்துக் கூறினார்.


‘‘குலம் அழிந்தால் புராதனமான குலதர்மங்கள் அழிந்து போகும். தர்மம் அழிந்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்ந்துவிடும்.’’ (அத்.1 - சுலோகம் 40)


“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப் பெண்கள்  கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ண சாங்கரியம் (குலங் களின் கலப்பு) ஏற்பட்டுவிடும்.’’ (அத்.1 - சுலோகம் 41)


‘’அவ்விதக் கலப்பு, குலத்தை அழித்தவர்களுக்கும் அந்தக் குலத்திற்கும் நரகத்தையே தரும். இவர்களுடைய பித்ருக்களெல்லாம் சிரார்த்த பிண்டமும் தர்ப்பண ஜலமும் அற்று நரகில் விழுவார்கள்.’’ (அத்.1 - சுலோகம் 42)


“வர்ணக் கலப்பை உண்டாக்குகின்ற குல பாதகர்களின் இத்தகைய தீங்குகளால் நிலையான ஜாதி தர்மங்களும், குல தர்மங்களும் அழிந்துபோகும்.’ (அத்.1 - சுலோகம் 43)


 “ஜனார்தனா! குலதர்மங்கள் அழியப் பெற்ற மனிதர் களுக்கு நிலையாக நரகவாசமே கிடைக்கும் என்பதைக் கேட்டிருக்கிறோமே!” (அத்.1 - சுலோகம் 44)


ஜாதி தர்மம், குல தர்மம் எல்லாம் காப்பாற்றப்படவேதான் போர் செய்ய விரும்பவில்லை என்று கூறும் அளவுக்கு ஜாதி  தர்மத்தைக் காப்பாற்ற அர்ச்சுனன் துவக்கிய இந்த கேள்விகளுக்கு சீதையின் கடைசி அத்தியாயமான


18-ஆவது அத்தியாத்தில் பகவான்  கண்ணனே பதில் கூறி முடிக்கிறார். 18-ஆவது அத்தியாயம்தான் உச்சக்கட்டமான 78 சுலோகங்களைக் கொண்ட நீண்ட அத்தியாயம் ஆகும்.


“எதிரிகளை தபிக்கச் செய்பவனே! (அர்ச்சுனனைக் குறிப்பிட்டு),


பிராம்மணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களுக்கு. சுபாவமாக உண்டான குணங்களைக் கொண்டே தர்மங்கள் வகுக்கப்பட்டன.


(அத்.18  - சுலோகம் 41)


“மனத்தை அடக்குதல், வெளிப்புலன்களை வெல்லுதல், தவம், சுத்தம், பொறுமை, நேர்மை, ஞானம், அனுபவம், ஆஸ்திகத் தன்மை இவை இயற்கையாக பிராம்மணனுக்கு உண்டான கர்மங்கள்.”


(அத். 18 - சுலோகம் 42)


‘’பராக்கிரமம், பிரதாபம், தைரியம், திறமை, போரில் புறங்காட்டாமை, தானம், ஆளும் சக்தி இவை இயற்கை யாக உண்டான ஷத்திரிய கர்மங்களாகும்.’’


(அத். 18 - சுலோகம் 43)


 “பயிர்த் தொழில், பசுக்களைக் காத்தல், வாணிபம் என்பவை வைசியனுக்கு இயற்கையாக உண்டான கர்மங் களாகும். சேவை புரிவதென்பது சூத்திரனுக்கு இயற்கை யாக உண்டான கர்மமாகும்.”


(அத். 18 - சுலோகம் 44)


இந்த உரையாடல் பற்றி கழகத் தலைவர் மேலும் கூறுவதாவது:


துவக்கத்தில் வைசியர்களிடமிருந்த பயிர்த் தொழில் பிறகு, சூத்திரர்களிடம் மாற்றப்பட்டது - காரணம் அது அதிகமான உடலுழைப்பு சம்பந்தப்பட்டது.


பிறருக்கு குற்றேவல் செய்வதே சூத்திரனுக்கு இயற்கையான கர்மம் என்பது அவன் அடிமையானபடியால் ஏற்பட்ட கடமையாயிற்று போலும்!


இந்த தர்மங்களை - ஜாதி தர்மக் கடமைகளை அறிவுறுத்திய கண்ணன் - தவறியும்கூட மற்றவருடைய தொழிலை இன்னொருவர் எவ்வளவு சிறப்பாகச் செய்யும் ஆற்றலைப் பெற்றவராயினும்கூட செய்யவே கூடாது என்பதையும் வற்புறுத்துகிறான்.


அதுமட்டுமா?


 “அயலாருக்கு விதிக்கப்பட்ட கடமையை தான் மேற்கொண்டு அதைக் குறைவறச் செய்வதைக் காட்டிலும், தனக்காக விதிக்கப்பட்ட கடமையை அரைகுறையாகச் செய்தலும் நல்லதே. இயற்கையாகத் தனக்கு அமைந்த கர்மத்தைச் செய்பவன் பாவத்தை அடையமாட்டான்.


அந்தத் தொழில் கேவலமானது, இழிவானது என்று பிறரால் கருதப்பட்டாலும்கூட அதைத்தான் அக்குலத்தில் பிறந்தவன் செய்து தீரவேண்டும். இதுவே ‘சுவதர்மம்‘ என்கிற கருத்தை அடித்துச் சொன்ன கண்ணன், மிக லாவகமாக, எட்டிக்கு இனிப்பு பூச்சு பூசி தருவதுபோல,


‘’குந்தி மகனே, தனக்கு இயற்கையாக ஏற்பட்ட கர்ம மானது தோஷத்துடன் கூடியதாயினும் அதை விடக் கூடாது. எல்லா கர்மங்களும் நெருப்பை புகை சூழ்ந்திருப் பதைப்போல் தோஷத்தால் சூழப்பட்டே இருக்குமன்றோ!’’


(அத். 18 - சுலோகம் 48)


கீதையிலிருந்து அர்ச்சுனன் கிருஷ்ணன் உரையாடலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டிய திராவிடர் கழகத் தலைவர், அர்ச்சுனன் தொடக்கத்தில் சொன்னதற்கும் - பிறகு சொன்னதற்கும் உள்ள முரண்பாட்டை எடுத்துக் காட்டினார்.


அர்ச்சுனன் முதலில் என்ன சொன்னான்?


எதிரே என்னுடைய உறவினர்கள் - அவர்களை எப்படி நான் கொல்லுவது என்று கேட்டும் அர்ச்சுனன் பிறகு என்ன சொல்லுகிறான்.


என் உறவினர்களாகிய ஆண்களைப் போரில் நான் கொன்று விட்டால், பெண்கள் எல்லாம் விதவையாகி விடுவார்களே - பிறகு வர்ணக் கலப்பு ஏற்படுமே என்று கிருஷ்ணனிடம் அர்ச்சுனன் கூறுவதை எடுத்துக்காட்டி முரண்பாட்டை விளக்கினார்.


வருண தர்மத்தைக் காப்பதில் ஆரியர்கள் எந்த அளவு குறியாக இருக்கிறார்கள் என்றால் இந்த வருண தர்மம் - இந்த ஜென்மத்தோடு விடாதாம்.


இதோ ஆதாரம்:


“நான்கு வருணம் பூலோகத்தில் மட்டும் இல்லையாம், அந்தப் பாகுபாடு அடுத்த லோகத்தில்கூட உண்டாம்.


“பிராமணன் இறந்த பின் பிரசாபத்ய என்னும் உலகை அடைவான். அரசன் இறந்தால் அய்ந்திர உலகம் செல்வான். வணிகன் (வைசியன்) இறந்தால் மாருத உலகம் செல்வான், சூத்திரன் இறந்தால் காந்தருவ உலகம் செல்வான் என்று விட்டணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.”


(“சாதிகளின் பொய்த் தோற்றம்“ - முனைவர் மதிவாணன்).


சங்கராச்சாரியார் மட்டுமா- ஜீயரும்தான்!


‘ஆனந்தவிகடன்’ மணியன் என்ற ஒருவர் இருந்தார். சீரங்கம் சென்று ஜீயரைப் பேட்டி கண்டார்.


கேள்வி: ’ஹரே கிருஷ்ணா’ என்ற ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிறதே. இந்தியாவில்கூட இவ்வியக்கத்தினர் சுற்றுகிறார்களே?


ஜீயர் பதில்: நாமம் இட்டுக்  கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, காவி உடுத்தி இங்கேயும் ஒருத்தன் வந்தான் - வாயெல்லாம் மந்திரங்கள், பெருமாள் பெயரையே சொல்லிக் கொண்டுதான் இருக்கான். பூணூல் போட்டி ருக்கான். உட்காரச் சொல்லி சாப்பாடு போட்டேன். உப சரித்து அனுப்பினேன்; அவ்வளவுதான் பூணூல் போட்ட தனால் மட்டுமே ஒருவன் பிராமணனாகி விட மாட்டான் அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம். நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக் கிறதனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான். (கல்கி 11.4.1982).


வைஷ்ணவர்களும், ஸ்மார்த்தர்களும் எவ்வளவுதான் சண்டை போட்டுக் கொண்டாலும் அந்த வருணத்தை, ஜாதியைக் காப்பதில் மட்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.


கழகத் தலைவர் தனது உரையில் இன்னொரு கருத்தை முக்கியமாகச் சொன்னார். கீதையை உலகம் முழுவதும் தூக்கிச் செல்லுகிறார்களே - அந்தக் கீதை எப்பொழுது வந்தது - கீதாசிரியன் என்கிறார்களே - அந்த கிருஷ்ணன் எப்பொழுது  வந்தான்? வேதத்தில் காணப்படுகிறதா? என்ற வினாவை எழு¢ப்பினார்.


 வேதங்களில் இவர்கள் கூறும் கிருஷ்ணன் என்ற பெய ராவது தென்படுகிறதா? கிருஷ்ணன் மட்டுமல்ல, சிவனும் இல்லை, துர்க்கையும் இல்லை, இராமனும் இடம் பெறவில்லை.


கால்டுவெல் எழுதிய “பரத கண்ட புராதனம்“ எனும் நூல் என்ன சொல்லுகிறது?


“இருக்கு வேதத்திலுள்ள ஆயிரத்து இருபத்தெட்டுப் பாட்டுகளிலும் சிவனென்கிற பெயர் இல்லை. பார்வதி, உமையவள், துர்க்கை, காளி முதலான பேர்களுடைய யாரும் அப்போதில்லை. அப்பொழுது பிள்ளையாரும் சுப்பிரமணியனும் இல்லை. வீரபத்திரனும், வயிரவனும், அய்யனாரும் அப்பொழுது இல்லை; அக்காலத்திலே லிங்கமும் தெரியாது. இராமனும், கிருஷ்ணனும் இல்லை. இலட்சுமியும் இல்லை, அனுமானும் இல்லை, விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அப்பொழுது தெரியாது, கயிலாயமும், வைகுண்டமும் அப்போதில்லை”


- கால்டுவெல் எழுதிய ‘பரத கண்ட புராதனம்‘ பக்கம் 19


கீதையைப்பற்றி உபந்நியாசம் செய்வோர் சூத்திரர் களும், வைசியர்களும் பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று இப்பொழுது பிரச்சாரம் செய் கிறார்களா - செய்ய முடியுமா! விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் சொல்லுகிறார் - இப்படி கிருஷ்ணன் சொல்லி யிருக்க வேண்டாம் என்கிறாரே - இது நமக்குக் கிடைத்த வெற்றிதானே!


23.3.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ‘இராமாயணம் - இராமன் - இராம ராஜ்ஜியம்‘ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்பொழுது ஒரு தகவலைக் கூறினார் ஆசிரியர்.


‘உத்தர ராமசரிதம்‘ என்னும் தலைப்பில் சமஸ்கிருத்தில் பவபூபதி என்பவர் எழுதிய சந்தானம் அய்யங்காரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் அது; அந்நூலுக்கு ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அதைத்தான் கழகத் தலைவர் அந்தச் சிறப்புக் கூட்டத்தில் எடுத்துக் கூறினார்.


“நாரதர் சொல்ல வால்மீகி இயற்றினார், இதில் ஒரு தவறும் இருக்க முடியாது. ஓர் எழுத்து விடாமல் எல்லாம் ஒப்புக் கொண்டே தீர வேண்டும் என்பதாயிருந்தால் எனக்கு ஒன்றும் சொல்ல இடமில்லை. அப்படியில்லை; உனக்குத் தோன்றியதைத் தோன்றியவாறு சொல்லலாம், குற்றமில்லை என்று பெரியோர் இடம் கொடுத்ததால், ராமாயண உத்தர கண்டத்தைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.


நான் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன் - சிறீராமன் உலகத்துக்கு வழிகாட்ட அவதரித்த கடவுள் - சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டபின் ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டு காட்டுக்கு அனுப்பி விட்டான் என்கிற கொடூரத்தை என் மனதுக்குச் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அன்புடனும், பக்தியுடனும் முயற்சி செய்திருக்கிறேன்.பெரியோர்கள் என்னை ‘நாஸ்திகன்’  ‘சூனா மானாக்காரன்’ என்று சொல்லக் கூடாது.


உண்மையில் இந்தக் கதையைச் சகிக்க என்னால் முடியவில்லை என்று எழுதினாரே! நேற்றைய சிறப்புப் பொழிவும் கழகத் தலைவர் சொன்னதுபோல வைதிகர் களைக்கூட நமது கழகப் பிரச்சாரம் சில நேரங்களில் சிந்திக்க வைத்திருக்கும். அதுவும் ராஜாஜியையே சிந்திக்க வைத்தது என்றால் நமக்குக் கிடைத்த வெற்றிதானே!


இந்து மதத்தில் பெண்கள் நிலை


* ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கட வுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத் தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.


* மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே - காம வேட் கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.


* பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே.


- பாரதம், அனுசான்ய பருவம்


பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.


ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர் களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். - பாகவத ஸ்கந்தம் 4.14.42


பெண்கள் பாப ஜென்மங்கள், அவர்களுக்கு ஒழுக்கம் கிடையாது என்பது இந்து மதத்தின் கருத்தாகும்.


இப்பொழுது சொல்லுங்கள் - பெண்களைக் கேவலப் படுத்தும், இழிவுபடுத்தும் இந்த இந்து மத சாஸ்திரங் களை எரிக்கவேண்டுமா - வேண்டாமா?


No comments:

Post a Comment