கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று - டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் நூற் றாண்டு விழாவை திராவிடர் கழகம் எடுக்கும் என்று கழகத் தலைவர் அறிவித்தார். இடையில் ஏற்பட்ட நிகழ்வுகள், தவிர்க்க முடியாத சூழல் - கரோனா தொற்று முதலியவற்றின் காரணமாக அவ்விழாவை நடத்த இயலாத நிலை ஏற்பட் டாலும், நூற்றாண்டு நிறைவு விழாவை இன்று நடத்துகிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடத்தப்படவேண்டிய விழா, கரோனா காரணமாகக் காணொலி மூலம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாவலருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் அருகிவிட்ட காலகட்டம் இது. அந்த வகையில், அவரை தனது சிறுவயது முதற்கொண்டே அறிந் தவர், பழகியவர் நமது கழகத் தலைவர்.
அவர் தலைமையில் இந்த விழா நடை பெறுவது பொருத்தமானது.
நாவலர் அவர்கள் அமைச்சராக இருந்த நிலையிலும்கூட, தனது பகுத்தறிவுக் கொள்கை யைச் சிறிதும் விட்டுக் கொடுக்காதவர். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே அவரிடம் இடம் கிடையாது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் அமைச்சர வையில் நிதியமைச்சர் என்பதோடு - இந்து அற நிலையத் துறையையும் நாவலர் அவர்களுக்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஒதுக்கியி ருந்தார்.
அத்துறை அமைச்சர் என்ற முறையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அவர் சென்ற போது, அமைச்சரை வரவேற்று பிரசாதம் கொடுத்தனர் தீட்சதர்கள். அவற்றைப் பெற்றுக் கொண்ட நாவலர், திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளவில்லை.
இது அப்பொழுது பிரச்சினையாக்கப்பட்டது. அதற்கு நாவலர் சொன்ன பதில், அறநிலையத் துறை அமைச்சராகத்தான் இங்கே வந்தேன் - வழிபட அல்ல - நெடுஞ்செழியனுக்கு என்று தனித்த கொள்கை உண்டு. இந்து அறநிலையத் துறை அமைச்சரின் கடமை என்பது அய்ந்து மரக்கால் அரிசி என்றால், அது சரியாக அளந்து போடப்படுகிறதா என்று பார்ப்பதுதான் அமைச் சரின் வேலையே தவிர, மற்றபடி விழுந்து வழி படுவது அல்ல என்று கூறினார்.
அதுகுறித்து ‘‘சபாஷ்! சபாஷ்!! நெடுஞ்செழியன்!!!'' என்று தந்தை பெரியார் அவர்கள் பாராட்டி ‘விடுதலை'யில் எழுதினார்.
1971 இல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது - சேலத்தில் ராமன் படத்தை செருப்பாலடித்ததாகப் பார்ப்பனர்களால் பிரச் சாரம் செய்யப்பட்டது. தேர்தல் முடிவோ தி.மு.க.வுக்குப் பெரிய அளவில் அமைந்தது. 1967 இல் 138 இடங்களை வென்ற தி.மு.க. - ராமன் பிரச்சினையை வைத்துத் தேர்தல் பிரச்சாரம் கடு மையாக முடுக்கிவிட்ட நிலையில், மிகப்பெரிய வெற்றியை - 184 இடங்களை தி.மு.க. ஈட்டியது.
தேர்தல் முடிந்த நிலையில் ராஜாஜி, ‘கல்கி'யில் எழுதினார்.
‘‘இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்து விட்டது. இந்த நாட்டைவிட்டு வெளியேறி விடவேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்பட பலர் எண்ணத் தொடங்கிவிட்டார்கள்'' என்று எழுதினார்.
18.4.1971 அன்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் நாவலர் பேசிய பேச்சு முக்கியமானது.
‘‘ராஜாஜி ‘கல்கி'யில் எழுதியதை நண்பர் வீரமணி இங்கே எடுத்துக்காட்டினார். இந்த நேரத்தில் மூதறிஞர் ராஜாஜி அவர் களுக்கு என் அன்பான வேண்டுகோள். மகா புருஷர்கள் வெளியேற இருப்பதாகக் குறிப் பிட்டுள்ளீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்குக் கனிவான வேண்டுகோள். எந்தத் தேதியில், எத்தனை மணிக்குப் புறப்படப் போகிறீர்கள் என்று தெரிவித்தால், உங்களை எல்லாம் வழியனுப்பி வைக்க எங்களுக்கு வசதியாக இருக்கும்'' என்று நாவலர் குறிப்பிட்டார்.
‘‘மதம், சம்பிரதாயம், கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொண்டவரின் 'திருமுன்னரே' அவரது ஆசியும், அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக் கிறது தமிழக அரசு என்று எழுதுகிறார் ராஜாஜி. அவைகள் இல்லாத தந்தை பெரியார்தான் 93 வயது வாழ்கிறார் - தினம் தினம் சுற்றிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று பதிலடி கொடுத்தார்.''
அந்தக் கூட்டத்தில் முக்கியமாக இன்னொன் றையும் குறிப்பிட்டார் நாவலர்.
தேர்தலில் ஒரு இனம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை அடியோடு அழிக்கத் தடுக்கப் பார்த்து டெஸ்ட் பண்ணினீர்களே என்ன ஆயிற்று? மூட்டி விட்ட தீ இன்று எங்கே போய் நின்று இருக்கிறது? என்ற வினாவையும், பொறுப்புணர்ச் சியோடு கேட்டார். இன்றும் அந்த நிலைதானே! என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment